பெண்ணால் முடியும்!

ஜனவரி 1-15 2019

சிலம்பாட்டச் செல்வி

ஆசிய சிலம்பாட்டப் போட்டி செப்டம்பர் மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. அதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 8 நாட்டு வீரர், வீராங்கனைகள் திறமை காட்டினர். அப்போட்டியில் தனிநபர் பிரிவில் முதலிடமும், நெருப்பு உமிழ்தல் மற்றும் இரட்டைக் கம்பு பிரிவுகளில் இரண்டாம் இடமும், அணிகள் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த யோக தீப்ஷிகா.

சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முதலாமாண்டு படிக்கிறார். அப்பா சங்கரபாண்டி ஆட்டோ டிரைவர். இவர் எருக்கஞ்சேரியில் பெற்றோருடன் வசிக்கிறார்.

இவர் தனது சிலம்பாட்ட சாதனைகள் பற்றி கூறுகையில்,

சிலம்பம் நமது பாரம்பரிய தற்காப்புக் கலை, உலகின் பல தற்காப்புக் கலைகளுக்கு அடிப்படையாக நமது சிலம்பம்தான் இருப்பதாகக் கூறுகிறார்கள். அந்தச் சிலம்பாட்டத்தில் வென்று, அந்தக் கலையை பிரபலப்படுத்தும் ஒரு பிரதிநிதியாக இருப்பதில் என் மனதில் மகிழ்ச்சி உண்டாகிறது.

“நான் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும்போதே தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்றேன். ஆனால், அந்த ஆண்டு தேசியப் போட்டி நடக்கவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு, டெல்லியில் நடைபெற்ற தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்றேன். அப்போது, சற்று இடைவெளிக்குப் பின் தமிழக அணி தேசியப் போட்டியில் பங்கேற்றது என்றபோதும், நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். 19 வயதுக்கு உட்பட்டோர் கம்புச் சண்டையில் நானும், 17 வயதுக்கு உட்பட்டோர் இரட்டைக் கம்பு பிரிவில் மற்றொரு தமிழக வீராங்கனையும், 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இன்னொரு தமிழக வீராங்கனையும் வென்றோம். தமிழக சி.பி.எஸ்.இ பள்ளி அணியையும் வென்று, இறுதிப் போட்டிக்கு சென்று, டெல்லி அணியை அவர்களது ஊரிலேயே வென்றது குறிப்பிடத்தக்க சாதனையாக எங்களை மாற்றியது.’’

மேலும், “எங்கள் சிலம்ப மாஸ்டர் பார்த்திபன் அவர்கள் என் மனோபலத்தை அதிகரிக்க வாயில் டீசலை வைத்து நெருப்பை உமிழக் கற்றுக் கொடுத்தார். இதை உரிய நுட்பத்துடன் செய்தால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை கற்றுக்கொண்டேன்’’ என்றார்.

இங்கு, “வளர் இளம் பெண்கள் மீதான சீண்டல்கள், அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அவர்கள் சிலம்பம் போன்ற தற்காப்புப் கலையைக் கற்றுக் கொள்வது அவசியம். அது அவர்களுக்கு மனோதிடத்தை வளர்க்கும்’’ எனக் கூறும் வேளையில், “விளையாட்டில் சாதனை படைத்திருந்தாலும் நான் படிப்பிலும் சிறந்த மாணவியாகவே இருக்கிறேன். பத்தாம் வகுப்பின்போதுகூட சிலம்பத்துக்கு ஓர் இடைவேளை விட்டு படிப்பில் கவனம் செலுத்தும்படி சில ஆசிரியைகள் அறிவுரை கூறினார்கள். இருப்பினும், நான் பயிற்சியையும் செய்துகொண்டு படிப்பிலும் சோடை போகாமல் பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சியும் பெற்றுள்ளேன்’’ என நம்பிக்கையுடன் கூறி அடுத்து, “உலக சிலம்பாட்டப் போட்டியில் வெல்ல வேண்டும் மற்றும் அய்.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று மக்களுக்கு நல்லது செய்யும் அதிகாரத்தைப் பெற வேண்டும்’’ என மேலும் தனது லட்சியக் கனவை பற்றித் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *