இளைஞர்களின் விழிப்புணர்வு
மஞ்சை வசந்தன்
பெரியாரிய உணர்வாளர்கள் சற்றேறக்குறைய 150 அமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்து திருச்சியில் 23.12.2018 அன்று நடத்திக்காட்டிய கருஞ்சட்டைப் பேரணி பல்வேறு அடிப்படையில் பல கோணங்களில் வரலாற்றுச் சிறப்புப் பெற்றதாகும்!
* எழுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்தது மீட்சி!
* பெரியார் உணர்வாளர்கள் ஒன்றிணைந்த மாட்சி!
* எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காட்சி!
* இளைஞர் எழுச்சிக்கான சாட்சி!
* சனாதன சூழ்ச்சிகளுக்கு வீழ்ச்சி!
* இது தொடக்கமே என்பதால் இதன் எதிர்கால நீட்சி!
* கருஞ்சட்டை அணிவகுப்பின் கண்கொள்ளா காட்சி!
என்று எத்தனையோ சிறப்புகள் இந்த நிகழ்வுக்கு உண்டு.
தடையைத் தகர்த்து நடந்த பேரணி:
கருஞ்சட்டைப் பேரணிக்குக் காவல்துறை தடை விதித்திருந்தது. கருஞ்சட்டைப் பேரணி செல்ல இருந்த அதே சாலைகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்திருந்த காவல்துறை, கருஞ்சட்டைப் பேரணிக்குத் தடைவிதித்தது காவல்துறை காவிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்தது.
தடை செய்யப்பட்ட மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியும், கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இம்மண்ணின் இயக்கங்கள் இணைந்து நடத்தவிருந்த கருஞ்சட்டைப் பேரணிக்கு தடை விதித்ததன் மூலம் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி திராவிடக் கொள்கைகளை அடகுவைத்துவிட்ட அவலத்தையும் வெளிப்படுத்தியது.
ஆனாலும், நீதிமன்றம் சென்று தடையைத் தகர்த்து கருஞ்சட்டைப் படை அணி வகுக்க அனுமதி பெறப்பட்டது.
ஆசிரியர் கி.வீரமணி தொடங்கி வைத்தார்
23.12.2018 ஞாயிறு பிற்பகல் 3.45 மணிக்கு திருச்சி ஜே.டி திரையரங்கம் அருகில் பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் அணிஅணியாய் வந்துசேர்ந்தனர்.
கட்டுப்பாட்டுக்கு பெயர் பெற்றதல்லவா கருஞ்சட்டைப்படை! அடுத்தடுத்து பெரும்படை குவிந்தாலும், வரம்பு மீறாது ஒழுங்கு காத்தனர். கருஞ்சட்டைப் பட்டாளம் எதிர்பார்த்திருந்த இனத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெள்ளை முழுகால் சட்டை, கருப்பு மேல்சட்டை அணிந்து காலில் வெள்ளை ஷூவுடன் 86 வயதிலும் இளைஞர்போல வந்து சேர்ந்தார்.
பெரியார் பெருந்தொண்டர்களான வே.ஆனைமுத்து, சுப.வீரபாண்டியன், கோவை இராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் முன்னிலையில் பேரணியை நறுக்குத் தைத்தாற் போன்று நான்கு வாக்கியங்களில் இலக்கு, எதிரிக்குச் சொடுக்கு, இணைந்த கரங்களின் சிறப்பு ஆகியவற்றைத் தெரிவித்து பேரணியைத் தொடங்கிவைத்தார்.
ஆசிரியர் அவர்களின் தொடக்கவுரையை வே.ஆனைமுத்து அவர்கள் வழிமொழிந்து பேசினார். கருஞ்சட்டைப் பேரணி மாநாட்டு நிகழ்விடம் நோக்கிப் புறப்பட்டது.
பேரணியின் சிறப்பு
பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டையினர் கலந்துகொண்ட அந்தப் பேரணியில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என்று இரு பாலரும் அணிவகுத்து வந்தனர். பேரணியில் கலந்துகொண்ட பெரும்பாலோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் வரையறுத்து வழங்கப்பட்ட முழக்கங்களை மட்டுமே முழங்கிச் சென்றனர். அணிவகுப்பும் கட்டுப்பாடு கலையாமல், காவல்துறைக்கு வேலையின்றி கண்ணியமாய், கம்பீரமாய், மிடுக்காய், எழுச்சியாய் நடக்க, இரு மருங்கிலும் பொதுமக்கள் திரண்டு நின்று ஆதரவு தந்தனர்.
பேரணியின் முதல் அணி உழவர் சந்தை வந்தடைய, அதற்குப் பிறகு ஒரு மணி 45 நிமிடம் கடந்துதான் கடைசி அணி உழவர் சந்தையை அடைய முடிந்தது என்றால் பேரணியின் நீட்சியை, எண்ணிக்கையினை, பலத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
ஜே.டி திரையரங்கம் அருகிலிருந்து புறப்பட்ட எழுச்சிமிகு கருஞ்சட்டை பேரணி கரூர் புறவழிச் சாலையிலிருந்து அணிவகுத்து சாலை ரோடு, மாரிஸ் ரோடு, சாஸ்திரி ரோடு ஆகிய நான்கு சாலைகளைக் கடந்து அண்ணா நகர் வழியாக உழவர் சந்தையில் சங்கமமாயிற்று.
முழுப் பேரணியையும் திராவிடர் கழகத் தலைவர் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் மாநாட்டு திடலுக்கு சிறிது தூரத்திற்கு முன்பு உயரமான இடத்தில் நின்றபடி பார்த்தனர்.
பிரிந்து சென்றோர் சொரிந்த பாசம்
கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் சென்ற ஆண்டு ஆசிரியரின் 85ஆம் பிறந்த நாளின்போதே ஈரோட்டில் நேரில் ஆசிரியருக்கு வாழ்த்துச் சொல்லி தன் பாசத்தைக் காட்டினார். இந்தக் கருஞ்சட்டைப் பேரணியில், ஆசிரியரின் பாதுகாவலர்போல் தன் இரு கை விரித்து ஆசிரியரைக் கூட்டம் நெருக்கி விடாதபடி கவனத்துடன் ஊர்வலம் நெடுகச் செயல்பட்டு தன் பற்றை வெளிப்படுத்தினார்.
அதேபோல் பெரியவர் வே.ஆனைமுத்து, கொளத்தூர் மணி போன்றோரும் ஆசிரியர் பேசும்போது கூர்ந்து கவனித்து காட்டிய மெய்ப்பாடுகள் அவர்கள் ஆசிரியர் மீது கொண்ட அன்பைக் காட்டின. பிரிந்து சென்றோர் சொரிந்த அன்பு கண்டு இன எதிரிகள் வயிறு எரிந்து பதுங்கினர். “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள கருஞ்சட்டையினர் ஒன்றாதல் கண்டு’’ என்று தமிழினம் தலைநிமிர்ந்தது.
அதேபோல், ஆசிரியர் அவர்களும் அவர்கள் மீதான தன் அன்பை வெளிப்படுத்தியதோடு, “நாங்கள் சேரவேண்டிய நேரத்தில் சேர்வோம்’’ என்று கூறியது அவரது தாய்மை உணர்வை வெளிப்படுத்தியது.
திருமுருகன் காந்தி மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டித்து, “அவர் எங்கள் இரத்தம், எங்கள் வாரிசு! அவரை யார் என்று நினைத்தீர்?’’ என்று இன எதிரிகளை எச்சரித்து தன் பாசத்தை வெளிப்படுத்தினார் ஆசிரியர்.
பல்துறைச் சான்றோர் பங்கேற்பு
பெரியாரிய இயக்கத் தோழர்கள் மட்டுமின்றி பல்துறைச் சார்ந்த பெரியார் பற்றாளர்களும் பங்கேற்றது சிறப்புக்குரிய நிகழ்வாகும்.
உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் ஹரிபரந்தாமன், ஆய்வாளர் தொ.பரமசிவம், பொருளியல் வல்லுநர் ஜெயரஞ்சன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், கோபி நயினார் போன்ற பல்துறைச் சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு பெரியாரின் பிடிமானம் எங்கெங்கெல்லாம் வேரூன்றியுள்ளது என்று காட்டினர்.
பறையிசையும் வீரவிளையாட்டுகளும்
சிறுவர்கள் _ வாலிபர்கள் _ தமிழர்களின் வீரவிளையாட்டுகளை நடத்திக் காட்டிக் கொண்டே வந்தனர். சிலம்பாட்டத்தில், முத்திரை பொறித்தனர் இருபால் தோழர்கள். பறை முழக்கம் உணர்வேற்றி எழுச்சிபெறச் செய்தது.
பேரணி முழக்கங்கள்:
வீரவணக்கம் வீரவணக்கம்
தலைவர் தந்தை பெரியாருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்.
வெல்லட்டும், வெல்லட்டும்
கருஞ்சட்டைப் பேரணி வெல்லட்டும்!
வேரறுப்போம் – வேரறுப்போம்
காவிப் பயங்கரவாதத்தை
வேரறுப்போம் – வேரறுப்போம்!
மீட்டெடுப்போம் – மீட்டெடுப்போம்
தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம்!
சாய்ப்போம் – சாய்ப்போம்
ஜாதியினை சாய்ப்போம்!
காப்போம் காப்போம்
பெண்ணுரிமை காப்போம்!
அனுமதியோம் – அனுமதியோம்
ஜாதி ஆணவக் கொலைகளை அனுமதியோம்!
தமிழர் என்பது அடையாளம்
ஜாதி என்பது அவமானம்
ஜாதி பெருமை அவமானம்!
இடமில்லை இடமில்லை
மதவெறிக் காவிகளுக்கு
பெரியார் மண்ணில் இடமில்லை
மண்ணை அழிக்க மீத்தேனா,
மலையை அழிக்க நியூட்ரினோவா?
அனுமதியோம் அனுமதியோம்
தமிழா தமிழா ஒன்றுபடு
ஜாதி சழக்கை வென்றுவிடு.
எங்கள் ஆயுதம் பெரியாரே
எங்கள் கேடயம் பெரியாரே!
பார்ப்பனியத்தை விரட்டியடிக்க
ஆதிக்க ஜாதியை ஒழித்துக்கட்ட
பெண்ணடிமை விலங்கொடிக்க
எங்கள் ஆயுதம் பெரியாரே! பெரியாரே!
உள்ளிட்ட முழக்கங்கள் எழுச்சி முழக்கங்களாக எங்கும் எதிரொலித்தன.
மாநாட்டு நிகழ்ச்சி
தொடர்ந்து உழவர் சந்தையில் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
முன்னதாக மகஇக கோவன் கலைக் குழுவினர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் வரவேற்புரை யாற்றினார். தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் தலைமை தாங்கினார். தமிழ்புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன் தொடக்கவுரை யாற்றினார். இலால்குடி முத்துசெழியன், அறிவரசன், க.திருநாவுக்கரசு, குறிச்சி.கபிலன், இரணியன், இரா.இளவழகன், அ.சி.சின்னப்பத் தமிழர், நா.கருணாகரன், கடவூர் ப.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டின் நோக்க உரையை ‘மே 17’ இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
பங்கேற்றோர்
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் வே.ஆனைமுத்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், தியாகி இம்மானுவேல் பேரவையின் தலைவர் பூ.சந்திரபோசு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரீப், ஆய்வறிஞர் பேரா. க.நெடுஞ்செழியன், சொல்லாய்வு அறிஞர் அருளியார், பண்பாட்டு ஆய்வாளர் பேரா. தொ.பரமசிவன், பொருளியல் அறிஞர் பேரா.ஜெயரஞ்சன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர் முருகவேல்ராசன், புதிய குரல் அமைப்பின் தோழர் ஓவியா, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் சரஸ்வதி, கரும்பனை கலை இலக்கிய ஊடக தளத்தின் தோழர் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, மக்கள் அரசு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், வழக்கறிஞர் பாலமுருகன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் நிலவழகன், காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் மகேசு, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், சின்னத்திரை தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் தோழர் கவிதா பாரதி, டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தீபக், தமிழ்த்தேச நடுவத்தின் தோழர் கண.குறிஞ்சி, தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சு.நாகராஜன், நீரோடை அமைப்பின் தோழர் நிலவன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், தற்சார்பு விவசாயிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கி.வே.பொன்னையன், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கத்தின் தோழர் பாவெல், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சௌ.சுந்தரமூர்த்தி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தோழர் பார்த்திபன், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தோழர் வினோத், கீற்று இணைய ஊடக ஆசிரியர் நந்தன், தமிழ்தமிழர் இயக்கத்தின் தோழர் பரிதி, தமிழர் உரிமை இயக்கத்தின் தோழர் சுப்பு மகேசு, ஐந்திணை கலை பண்பாட்டு இயக்கத்தின் தோழர் காஞ்சி அமுதன், எழுத்தாளர் தோழர் பாமரன் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாளர்களாக பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை முன்மொழிந்து தமிழக மக்கள் புரட்சி கழகம் அரங்க.குணசேகரன் பேசினார்.
ஜாதி மறுப்புத் திருமணங்கள்
இம்மாநாட்டில் மணமக்கள் செ.இனியன் _ ஆ.சாரதா, சா.வசந்தி _ சு.முத்துகுமார், பா.ஆனந்தராஜ் _ க.பிரீத்தி ஆகிய மூன்று ஜாதி மறுப்பு திருமணங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்.
பெரியார்தான் விடை
கருஞ்சட்டைப் பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் எண்ணிக்கையும், மாநாட்டில் பங்குபெற்ற இளைஞர் கூட்டமும், தமிழர், தமிழ்நாடு, தமிழ்மொழி சார்ந்த சிக்கல்களுக்கும், ஆரிய ஆதிக்கம், சனாதன கொடுமைகளை ஒழித்து உருவாக்க வேண்டிய திராவிட இனத்தின் மீட்சிக்கும் பெரியாரே விடை என்ற விழிப்பு இளைஞர் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு சான்றாய் அமைந்தன.
பெரியார் யார்? என்பதை எதிரிகளுக்குக் காட்டிய கருஞ்சட்டை மாநாடு வரலாற்று வெற்றியில் நிலைக்கும் வெற்றியைப் பெற்றது என்பதே உண்மை!
ñ…¬ê õê‰î¡