கூட்டணியில் குழப்பம் ஏதும் இல்லை!
கே: பார்ப்பனர்களிடையே உள்ள இன உணர்வு தமிழர்களிடையே இல்லாததற்குக் காரணம் என்ன?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: பார்ப்பனர்கள் மிக மிகச் சிறுபான்மையினர் (Microscopic Minority), ஒரே மொழி சமஸ்கிருதம் முதலியவற்றை வைத்து, தங்களின் வாழ்வுப் பாதுகாப்பு -_ ஒரே தன்மை (Microscopic Minority) அவர்களை ஒன்றுபட வைத்துள்ளது. உலகெங்கும் உள்ள மிகச் சிறுபான்மையினருள் ஒற்றை இனத்தவர் ஒற்றுமை என்பது அதன் அடி நீரோட்டத்தால் ஏற்பட்டுள்ளது. மிகப் பெரும்பான்மை-யானவர்களான திராவிடர் ஜாதி, மதங்களால், அதுவும் அடுக்கு ஜாதிமுறையினால் (Graded inequality), பலவாறாக (Heterogeneous) பிரித்திருப்பது-தான் மூலகாரணம். மூன்று (3%) ஒன்றாக உள்ளது. தொண்ணூற்று ஏழு (97%) தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1) ஒன்றாக இருப்பதால்தான் இந்த சிதறு தேங்காய் போன்ற பிரிவுக்குள் பிரிவு பிளவுக்குள் பிளவு! சமூகவியல் ரீதியானது இது!
கே: தி.-மு.க. தலைமையிலான கூட்டணி குழப்பம் தவிர்க்க தாய்க்கழகத்தின் வழிகாட்டுதல் என்ன?
– அ.பரமேஸ்வரன், திருவாரூர்
ப: தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் குழப்பம் ஏதும் உண்மையில் இல்லை. ஆனால், ஊடகவியலாளர்கள் கைங்கர்யம் இது! ஒன்றுமில்லாததை ஊதிப் பெருக்குகிப் பேனைப் பெரும் ஆள் போல் காட்டி ‘மாயமான்’ வேட்டை ஆடுகிறார்கள். உண்மையில் அப்படி இருந்தால் தாய்க் கழகம் தனது பங்கினைச் செய்து, ஒருங்கிணைப்பு ஏற்படுத்த ஒரு போதும் தயங்காது!
கே: இளைஞர்களை திசைதிருப்பும் ‘திராவிடமா? தமிழ்த்தேசியமா?’, ‘தாழ்த்தப்பட்டோருக்கு தி.க. எதுவும் செய்யவில்லையா?’ போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளை தமிழ்நாடு முழுக்க முக்கிய நகரங்களில் நடத்துவீர்களா?
– கோ.பொன்னிவளவன், வேலூர்
ப: நல்ல யோசனை! நடத்திடத் திட்டமிட்டுள்ளோம். புதிய சிறு வெளியீடுகளும் நூல்களாக வருகிறது!
கே: ‘திராவிடர்கள் திரள்வோம்’ என்று கூறி அதற்கான முயற்சியில் இறங்கியுள்ள சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் போன்றவர்களை நான்கு மாநிலங்-களிலும் அணி திரட்டுவீர்களா?
– வே.திருமுருகன், விழுப்புரம்
ப: நல்ல பந்தயக் குதிரை என்று உறுதியான பின்பே அதன் மீது பந்தயம் கட்ட முடியும்!
கே: கருநாடகாவில் மேக்கேதாட்டு அணை கட்ட முயலும் கர்நாடக அரசைத் தடுக்க மாநில அரசு முக்கியமாகச் செய்ய வேண்டியது என்ன?
– சந்தோஷ், இராஜாஅண்ணாலைபுரம்
ப: தீர்மானம் சட்டமன்றத்தில் போட்டால் மட்டும் போதாது. அனைத்து கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் திரட்டி சட்டப் போராட்டத்திற்கு அப்பால் மக்கள் போராட்டமாக ஒரே அணியில் நின்று நடத்துதல் வேண்டும்!
கே: தந்தை பெரியார் வெளியிட்ட பொது-வுடமை சார்ந்த நூல்கள் தொடர்ந்து வெளியிடப்படாதது ஏன்?
– கவிநிலவு, விக்கிரமங்கலம்
ப: தவறான புரிதலை, மாற்றிக் கொள்ளுங்கள். வெளியீடுகளை வரிசை வரிசையாக, கொத்துக் கொத்தாக வெளியிடுகிறோம். தொடர் பணி தொடரும். எந்த வேறுபாடும் இல்லை.
கே: பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் அண்மைக்காலமாக அவர்களது கூட்டங்களில்கூட பெரியாரைப் பற்றியே பேசும் நிலையில், தமிழ்த் தேசியம் பேசும் சிலர் தொடர்ந்து எதிர்ப்பது அறியாமையாலா? ஆதாயம் கருதியா?
– இன்பத்தமிழன், செந்துரை
ப: ஓட்டுக்காக இளைஞர்களை திசைதிருப்ப, சில அப்பாவிகளாக உள்ளவர்கள் ஓட்டு, பணத்தைப் பறிக்க _ விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் முகமூடி உட்பட பல ‘வியாபாரத் தந்திரங்களில் இதுவும் ஒன்று.’’
கே: சென்னையில் கடற்படைத் தளம் விரிவாக்கத்தின் நோக்கம் என்ன? தமிழகத்தை அழிக்கும் மறைமுகத் திட்டமா? பாதிப்பு என்றால் தடுக்க என்ன நடவடிக்கை?
– விநாயகம், தாம்பரம்
ப: எல்லாக் கோணத்திலும் பார்த்து, ஆராய்ந்த பிறகே கருத்துச் சொல்வோம். விரிவாக்கங்களை _ அடிப்படைக் கட்டுமான விரிவாக்கத்தை அவசரப்பட்டு எதிர்க்க மாட்டோம். அவசரப்பட்டு ஆதரிக்கவும் மாட்டோம்!