அரசன்
‘ஜாதி’ என்னும் கொடிய சமூக நோயை எதிர்த்து சமத்துவ உலகைப் படைக்கும் பணியில் பெரியார் இயக்கம் பணியாற்றி வருகிறது. இப்பணியில் மிகப்பெரிய முன்னேற்றம் நிகழ்ந்துவரும் நிலையில், ஜாதியைக் காட்டி காதல் திருமணம் செய்தவர்கள் கொல்லப்படும் ஆணவப் படுகொலைகள் அவ்வப்போது நடைபெற்று நம்மை வேதனைக்கு உள்ளாக்குகின்றன.
ஒப்பீட்டு அளவில் மிகக் குறைந்த அளவில் நடைபெறும் இந்தக் காட்டுமிராண்டித் தனமான நிகழ்வுகளைக் காட்டி, ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்து கொள்ளும் அனைவரும் கொலை செய்யப்படவது போன்றும், ஜாதி மறுப்பு திருமணங்களை செய்து கொள்ள ஏற்ற சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்றும் சில ஊடகங்கள் ஒருவிதமான அச்சத்தை பரப்புகின்றன. பெற்றோரையும், காதலர்களையும் அச்சுறுத்துகின்றன.
பல்லாயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது 0.05 விழுக்காடு (பத்தாயிரத்தில் அய்ந்து) வாகனங்கள் விபத்துக்குள்ளாகி செய்தியாவதைப் போன்றதே இலட்சக்கணக்கான திருமணங்களில் இத்தகைய ஆணவக் கொலைகள். இவற்றையும் ஒழிக்கவே தொடர்ந்து போராடி வருகிறோம்.
நாள்தோறும் நடைபெறும் பல்லாயிரக்-கணக்கான திருமணங்களில் ஒப்பீட்ளவில் மிகக் குறைந்த விகிதத் திருமணங்கள் இத்தகைய விரும்பத்தகாத சூழலுக்கு ஆளாகின்றன.
கூற வேண்டுமெனில், சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய அலுவலகத்தில் மட்டுமே ஏராளமான திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் என்பது ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்ய விரும்பும் தோழர்கள் தங்கள் இணைகளைத் தேட உதவும். மய்யமாகத் தொடங்கப்பட்டது. ஜாதி மறுப்பு, விதவைத் திருமணம், மணமுறிவு பெற்றோர், மறுமணம் என அனைத்து பிரிவிற்கும் ஆயிரக்கணக்கானோர் தேர்வு செய்திட உதவினர்.
2012 நவம்பர் மாத ‘மன்றல்’ என்ற பெயரில் மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழாவை (சுயம்வரம் போன்றது) நடத்தியது. பல்லாயிரக்கணக்கான தோழர்கள் ஜாதி மறுப்பு இணையர்கள் உருவாக இந்நிகழ்வு உதவியது. தொடர்ந்து திருச்சி, நெல்லை, கோவை, நாமக்கல் என பல பகுதிகளில் நடத்தப்பட்டது.
இந்த நிலையத்தில் தாமாகவே இணை தேடி வரும் ஜாதி மறுப்பு காதலர்களுக்கு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு சிக்கனமான முறையில் திருமணங்களும் நடத்தி வைக்கப்-படுகின்றன. 1995 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் 212 ஜாதி மறுப்புத் திருமணங்களும் 5 மத மறுப்புத் திருமணங்களும் நடைபெற்றுள்ளன.
அதன்பின் 2015 முதல் 2018 வரை மூன்றாண்டுகளில் 217 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. பெரியார் சுயமரியாதைத் திருமணம் வழியாக அறிமுகம் செய்யப்பட்டு 58 திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
திருமண நிலையத்தில் நடந்த இந்தத் திருமணங்கள் தவிர கழகத் தலைவர் ஆசிரியர், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன, கழகப் பொதுச் செயலாளர்கள் மற்றும் பொறுப்-பாளர்களும் ஏராளமான திருமணங்களை தமிழகம் முழுமையும் நடத்தி வருகின்றனர். இவை தவிர தமிழ்நாடு முழுவதும் பதிவாளர் அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் சிறப்புத் திருமண சட்டப்படி நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவு சிக்கலாகும். திருமணங்களை வைத்து பெற்றோரையும், மக்களையும் அச்சுறுத்துவதன் மூலம் ஜாதி வெறியர்களுக்கு ஊக்கமளிக்காமல், நேர்மறையான சிந்தனைகளை ஊட்டும் விதத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வெற்றி பெற்றவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிட முன்வர வேண்டும்.
மேலும் நடைபெறும் ஆணவப் படுகொலை-களுக்குக் காரணமான ஜாதியை அடியோடு ஒழிக்கும் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்ய விரும்பும் இணையர்களைப் பாதுகாக்க தனி அணி அமைக்கப்படும் என்றும், அத்தகைய அணி கூலிப்படைகள் உட்பட அனைத்தையும் சந்திக்கும் வகையில் இருக்கும் என்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். அவருடன் இணைந்து நின்று ஆணவக் கொலைகள் தடுத்திட உறுதியேற்போம்.