திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 20.11.2018 அன்று மாலை நடைபெற்றது.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் வரவேற்புரையாற்றினார். கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் இணைப்புரை வழங்கினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார்.
நூல் வெளியீடு
நீதிக்கட்சி, நீதிக்கட்சித் தலைவர்கள் குறித்த ஆறு நூல்கள் வெளியிடப்பட்டன.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர், அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் அ.இராமசாமி தலைமை வகித்து உரையும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் துணைத் தலைவர் பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் பெ.ஜெகதீசன் கருத்துரையும் ஆற்றினர்.
மதிமுக பொதுச்செயலாளர் திராவிட இயக்க போர்வாள் வைகோ அவர்கள், “ஏன் வேண்டும் திராவிடர் இயக்கம்?’’ என்னும் தலைப்பில் உணர்ச்சிமிக்க உரை நிகழ்த்தினார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
நன்னன் குடும்பத்தினருக்கு பாராட்டு
சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் குடும்பத்தின் சார்பில் பெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு ரூ.4 லட்சத்துக்கும் மேல் நன்கொடை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக் கருவிகள் நிறுவப்பட்டு செயல்படுத்தப் பட்டதையொட்டி அக்குடும்பத்தினரைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.
விழா முடிவில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய இணை செயலாளர் ஏ.தானப்பன் நன்றி கூறினார்.