குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்

அக்டோபர் 01-15

கொடுங்கலூரில் பரணித் திருவிழா  தகவல்

(கேரளாவில் உள்ள கொடுங்கலூர் எனும் ஊரில் மார்ச் மாதம் 23 ஆம் தேதி பரணி நட்சத்திரம் அன்று பரணித் திருவிழா எனும் ஓர் அநாகரிகத் திருவிழா நடைபெறுவது வாடிக்கை.  அத்திருவிழாவில் பாடும் பாட்டுக்கள் மனிதன் காதில் போவதற்குச் சாலாது.  ஆனால், இவ்விதம் செய்வது காளி எனும் பெண் தெய்வத்திற்குப் பெருத்த சந்தோஷமாம்.

இத்திருவிழாவில் ஆண்களும், பெண்களும் ஆயிரக்கணக்காக கூடி ஆடிவும், பாடவும் செய்வர்.  இந்த ஆபாசக் கூத்திற்கு அரசினர்கூட உடன்படுகின்றார் போலும்.  இத்திருவிழாவில் வரும் வருமானத்தை எல்லாம் வழக்கம்போல் பார்ப்பனர்கள் கொள்ளை அடிக்கின்றனர்.

இத்திருவிழாவில் ஏற்படும் வீண்செலவினைத் தடுக்கவும்.  இத்தீய செயல்களை மக்களிடமிருந்து அகற்றவும் அரசு ஆணையிட வேண்டும்.)

இந்த உற்சவமானது வருடா வருடம் மார்ச்சு – மாதம் 23 ஆம் தேதி பரணி நட்சத்திரத்தன்று நடைபெறும்.  இத்திருவிழா நடப்பது கொச்சின் ஸ்டேட்டில் இரிஞ்சாலக்குண்டவண்டியிறங்கி 22 மைல் தூரம் கால்நடையாகச் செல்ல வேண்டும்.

இத்திருவிழாவுக்குப் பாலக்காடு முதல் தென் மலையாளமும், மங்கலாபுரம் முதல் வட மலையாளமும், இன்னும் இதர தேசத்திலிருந்தும் இத்தனை ஜனங்கள் போகின்றனரென்பது கணக்கிலடங்காதது.

இவர்கள் போகும்போது கள், சராயம் முதலான வஸ்துக்களைக் கணக்கிலதிகமாக உபயோகித்துக் கொண்டு இரண்டடி நீளத்தில் ஆண்குறியைப்போல் செய்து அதற்கு வருணதினுசுகள் தகுந்த மாதிரியாகப் போட்டு அதின் தலையில் சதங்கைகளைக் கட்டி ஆடிக்கொண்டு ஆண்குறியையும், பெண் குறியையும் கொண்டு செய்யும் சம்போக முதலானதும் இன்னும் அதற்கிணங்கிய சிலவற்றையும் கொண்டு பாடும் பாட்டுக்களும், அதற்கிணையாகிய தெந்தினமும் மனிதன் காதில் போக நெருக்கடியானதாகும், இந்தவிதம் செய்வது காளி என்னும் அந்தப் பெண் தெய்வத்திற்குப் பெருத்த சந்தோஷமாம், இந்தத் திருவிழா எட்டு நாட்களுக்கு இருக்கிறது.

இத்தினங்களில் ஸ்திரீகளுக்கு ஊர்ப் பிராயாணத்திற்கு மிகவும் தடங்கல்கள், பெண்களைப் பார்த்தவுடன் பாடவும் ஆடவும் தொடங்குகின்றனர்.  இந்த ஆபாசச் சொல்லுக்குக் கவர்ன்மெண்டார்கூட உடன்படுகின்றார்போலும். கவர்ன்மெண்டு என்னும் இங்கிலீஷார்கூட தன் தெய்வத்திற்குப் பயப்படுகிறார்கள்!  என்னே இந்துக்களின் மடமை! இக்காலத்திலுங்கூட இவ்வித மனிதர் இருக்கிறார்களே!  ஆனால், இனிமேலாவது ஜனங்கள் எந்தவிதமான துர்விவகாரங்களுக்குச் செல்லாமலும், பணத்தை வீண் செலவு செய்யாமலும், அப்பணத்தை மக்களுடைய ஈடேற்றத்திற்குச் செலவு செய்யவும், வேண்டுமென்று நமது ஏழை மக்களிடம் கேட்பதுமன்றி கவர்ன்மெண்டார் இந்தத் தீய செயல்களை ஜனங்களிடமிருந்து எடுத்து விடும்படி உத்திரவிடுவாரென்றும் யோசனை செய்கிறேன்.  கவர்ன்மெண்டார் ஜனங்களின் இச்செய்கையை அடியோடு எடுக்கவேண்டு மென்றும் அதிக வணக்கமாய்க் கேட்கின்றேன்.

(குடிஅரசு – 05.04.1931 – பக்கம் – 17)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *