வை.கலையரசன்
பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த மறு நிமிடமே மனிதனின் அடிப்படை தேவையான உணவு உட்பட இந்துத்துவாக்களின் கோரத்-தாண்டவம் தொடங்கிவிட்டது. மாட்டி-றைச்சிக்கு தடையில்லை, ஆனால் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படக்கூடாது என்ற விசித்திரமான உத்தரவு பிறப்பிக்கப்-பட்டது. அதனை வாய்ப்பாக வைத்து கலவரத்தில் ஈடுபடுகிறது இந்துத்துவக் கும்பல். 2015 ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் தாத்ரி பகுதியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஏற்பட்ட வன்முறையில் முகமது அக்லக் என்னும் முதியவர் கொல்லப்பட்டார். முகமது அக்லக் படுகொலையில் தொடர்புடைய இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை எடுத்தவர் காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் ஆவார். மேலும் முகமது அக்லக் வழக்கை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகள் மீது குற்றப்-பத்திரிகை தாக்கல் செய்ய முக்கிய காரணமாக இருந்தார். அக்லக் வீட்டில் கைப்பற்றப்பட்ட மாமிசம் ஆட்டு மாமிசம் என்ற உண்மையையும் பரிசோதனை முடிவுகள் மூலம் வெளிக்-கொண்டுவர உறுதுணையாக இருந்தவரும் சுபோத்குமார் சிங் தான்! இவர்தான் அண்மையில் காவி வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.
அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் செத்துப்போன பசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்து அமைப்புகள் கொல்லப்பட்ட பசுவின் உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டக்காரர்களுடன் காவல்-துறையினர் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் போது திடீரென்று அந்தக் கும்பல்கள் காவல்துறையினரை தாக்கத் துவங்கினார்கள். இதில் காவல்துறை ஆய்வாளர் சுபோத்-குமார்சிங் மரணமடைந்தார். இது தொடர்பாக ஆய்வாளரின் ஓட்டுநர் ஆஸ்ரே கூறுகையில், “இரண்டாவது முறையாக சுபோத் குமார் மீது கலவர கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்பு நடந்த சம்பவத்தில் அவருக்கு காயம்தான் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றைக்கும் அவர் மீதும் கும்பல் தாக்குதல் நடத்தியது.’’ என்று கூறியுள்ளார்.
காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் கொல்லப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
கொலை செய்யப்பட்ட சுபோத் குமார் உடலில் ஒரு துப்பாக்கி குண்டு காயமும் இருந்ததாக உடற் கூறாய்வில் தெரிய வந்துள்ளது. அதைத் தவிர ஒரு கூரான பொருளால் அவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவரது மகன் அபிஷேக், “தனது தந்தை மதத்தின் பெயரில் சமூகத்தில் வன்முறையை தூண்டாத ஒரு நல்ல குடிமகனாக இருக்க விரும்பினார். இதன் காரணமாக தனது உயிரை இழந்துவிட்டார்’’ என்று தாங்கமுடியாத உணர்வோடு கூறியுள்ளார்.
மலேகான் குண்டு வெடிப்பை சரியான திசையில் விசாரணை செய்து, உண்மை குற்றவாளிகளான இந்து தீவிரவாதி கூட்டத்தின் சதிகளை வெளிகொண்டு வந்து கைது செய்த விஜய் சாலஸ்கர், அசோக் காம்டே, ஹேமந்த் கர்கரே மூவரும் 2008ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலை சாக்காக வைத்து தீர்த்துக் கட்டப்பட்டனர். அந்த வழியில் தற்போது சுபோத்குமார்சிங் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதவெறிக் கூட்டம் மனிதநேயர்களைக் குறிவைத்துத் தாக்கும் கொடுமைக்கு உடனடி தீர்வு வேண்டுமானால், நாடு முழுவதும் இதற்கான எதிர்ப்பு வலுப்பெற வேண்டும்!