எரிந்து சாம்பலானவன் எழுந்து வருவானா?
சிகரம்
“பிரகஸ்பதி தன் மகன் கச்சனை அழைத்து ‘மிருத சஞ்ஜீவனி’ வித்தையின் பெருமையைக் கூறி, “சுக்கிராச்சாரியாரிடம் குருகுலவாசம் செய்து வித்தைகள் கற்பிக்குமாறு வேண்டு, அவர் மறுக்கமாட்டார். அதே சமயம் வித்தைகளுடன் ‘மிருத சஞ்ஜீவனி’ வித்தையையும் கற்றுக்கொண்டு வா’’ என்று சொல்லி அனுப்பினார்.
அவனும் அழகன். பணிவு போன்ற நல்லொழுக்கங்கள் நிறைந்து குருவின் மனதை மட்டுமின்றி தேவயானியின் இதயத்தையும் கொள்ளை கொண்டான்.
இது அசுரர்களுக்குப் பிடிக்கவில்லை. பகைவனுடைய ஆள் என்பதால் அவனை ஒழித்துக் கட்ட உபாயம் செய்தனர். ஒரு நாள் கச்சன் காட்டில் மாடுகள் மேய்க்கச் சென்றபோது அரக்கர்கள் கச்சனைக் கொன்று ஒரு மரத்தில் தொங்க விட்டனர். மாடுகள் வழக்கம்போல் வீடு திரும்பின. ஆனால் கச்சனைக் காணவில்லை.
இதனைத் தேவயானி, தன் தந்தையிடம் கூற, அவர் தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்து கச்சனை உயிர்ப்பித்தார். இவ்வாறு சுக்கிரரால் உயிர்ப்பிக்கப்பட்ட கச்சனைக் கண்ட அரக்கர்கள் மேலும் கோபம் கொண்டு மறுபடியும் அவனை ஒழிக்க திட்டமிட்டனர்.
இம்முறை அவனை எரித்து அந்தச் சாம்பலை மதுவில் கரைத்து சுக்கிராச்சாரி-யாரைக் குடிக்க வைத்தனர். அவர் மயங்கி வீழ்ந்தார்.
கச்சனைக் காணாத தேவயானி தந்தையிடம் அது பற்றி கூற, மயங்கிக் கிடந்த அவர் பேசாதிருந்தார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிய தேவயானி அழுது கொண்டிருப்பதைக் கண்டு, செய்தி அறிந்து அவளிடம் “கச்சனை உயிர்ப்பித்தாலும், பகைவர்களான அரக்கர்கள் திரும்பத் திரும்ப அவனைக் கொல்லுவர். அவன் மரணமடைந்து தனியனாகட்டும்’’ என்று கூறினார்.
மது மயக்கம் முழுவதுமாக ஒழிந்து, சுக்கிரர் உலகெங்கும் தன் ஞானதிருஷ்டியால் கச்சனைத் தேடியும் எதுவும் அறிய முடியாமல் கடைசியில் நிகழ்ந்ததை உணர்ந்தார். மிருத சஞ்ஜீவனி வித்தையைப் பயன்படுத்தி, அவர் வயிற்றைக் கிழத்துக் கொண்டு அவனை வெளிவருமாறு அழைத்தார். அப்போது கச்சன் சுக்கிரரிடம் “தான் குருவின் வயிற்றைக் கிழித்து வெளி வந்தால் அவர் இறந்துவிடுவார். அதனால் குருஹத்யை, பிரம்மஹத்யை தோஷம் ஏற்படும். தாங்கள் மரணமடைந்தால் தங்களை உயிர்ப்பிக்கும் மார்க்கத்தை நான் அறியேன். எல்லா வித்தைகளும் கற்பிப்பதாகக் கூறிய தங்கள் வாக்குத்தானமும் நிறைவேறாது. அதனால் உங்களுக்கு மோட்சம் கிட்டாது. எனவே நான் உங்கள் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவரமாட்டேன்’’ என்றான்.
அப்போது சுக்கிராச்சாரியார், “பிரகஸ்பதி மகனான நீ இத்தனை விதமாக ஆலோசனை செய்வதில் வியப்பேதுமில்லை. எந்த வித்தையைக் கற்க நீ என்னிடம் சீடனாக வந்தாயோ அது உனக்குக் கிடைக்கும். அதற்கு அரக்கர்களே உனக்கு உதவினார்கள். உனக்கு நான் ‘மிருத சஞ்ஜீவனி’ வித்தையைப் போதிக்கிறேன். அக்கறையுடன் கற்றுக்கொள். வெளியில் வந்த பிறகு அதைப் பயன்படுத்தி என்னை உயிர்ப்பிக்கச் செய்’’ என்று கூறி, அந்த வித்தையைப் போதித்தார். கச்சன், சுக்கிரர் உடலிலிருந்து வெளிவந்து அவரை உயிர்ப்பித்து மகிழ்ந்தான்.
சுக்கிரரும் மனநிறைவுடன் கச்சனைப் பார்த்து “உனக்கு எல்லா வித்தைகளும் என்னருளால் கிடைக்கும். இனி நீ இங்கிருந்தால் உன்னைக் கொன்று விடுவர்’’ என்று கூறி ஆசிர்வதித்து அவனைப் போக-விட்டார் என்கிறது இந்துமதம். ஒருவனை எரித்து சாம்பலாக்கி அச்சாம்பலைக் குடித்தால் அது வயிற்றில் மீண்டும் ஆணாக மாறும் என்று மூடக்கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?
ஒருவர் ஆயுளில் பாதியை இறந்தவர்க்கு கொடுத்து எழுப்ப முடியுமா?
ருரு மகரிஷி, பிரமத்வரை என்ற பெண்ணைக் கண்டு அவள் மீது மோகங்கொண்டு காமதேவனின் கணைகளுக்கு ஆளாகி அவஸ்தைப்பட்டு உடல் இளைத்து அவர் நினைவை இழந்தவர்போல் சோர்ந்து கிடந்தார். அவரது தந்தை பிரமதர் அவரை நோக்கி “மகனே! நீ என்ன காரணத்தால் பிரக்ஞையற்றவனாகக் கிடக்கிறாய்?’’ என்று கேட்டார்.
தந்தையே தூலகேச முனிவரின் ஆசிரமத்தில் இருக்கும் பிரமத்வரை என்ற கன்னிப் பெண்ணை என் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வாடிக் கிடக்கிறேன் என்றார். உடனே பிரமதர் தன் புத்திரனின் ஆவலை நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்து, தூலகேசரிடம் விரைந்து சென்ற உமது ஆசிரமத்தில் வளர்ந்து வரும் அழகில் சிறந்தவளான பிரமத்வரையை என் குமாரன் ருருவுக்குத் திருமணஞ் செய்து கொடுக்க வேண்டும் என்று முகமலர்ச்சியோடு வேண்டினார். அதற்கு தூலகேசரும் ஒப்புக்-கொண்டார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
பர்ணகசாலை முற்றத்தில் கன்னிப்பெண் பிரமத்வரை விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு பாம்பானது தூங்கிக் கொண்டிருப்-பதைப் பாராமல் அந்தப் பெண் அந்தப் பாம்பை மிதித்துவிட்டாள். உடனே அந்தப் பாம்பு அவளைக் கடித்தது. அதனால் அவள் மடிந்தாள். அதைக் கண்ட முனிவர்கள் எல்லோரும் கூக்குரலிட்டு அழுதார்கள். தம் வளர்ப்பு மகள் பாம்புக் கடித்துச் செத்துக் கிடப்பதைக் கண்டு அவர் ஓவென்று புலம்பி அழுதார்.
மணமகனான ருரு ரிஷி அந்தக் கன்னியை மணப்பதற்காக ஆசையோடு வந்து கொண்டிருந்தார். பாம்பு கடித்து மாண்டு கிடக்கும் பாவையைக் கண்டதும் ருருவுக்கு வருத்தம் மேலிட்டது. அந்தப் பெண்ணைக் பிரிந்து நான் உயிருடன் இருக்க விரும்ப-மாட்டேன்!
ஏனெனில், அவளை நான் கட்டியணைத்து சுகம் பெறவில்லை! அவளைக் கல்யாணம் செய்து கொள்ளும் பாக்கியமும் பெறவில்லை! என்று ருரு ரிஷி குமுறினார். நான் நதிக்கரைக்குச் சென்று ஆற்றில் நீராடி, தூய்மையான ஈஸ்வராதனையும், குரு பூஜையும், ஓமங்களும், ஜெபங்களும், சூரிய ஆராதனையும் செய்யப்பட்டிருந்தால் அவை காரணமாக என் பிராணநாயகி பிரமத்வரை உயிர் பெற்றெழக் கடவாள்! என சபதமேற்கிறார்.
அவ்வழியில் வந்த யமதூதன் ஒருவன் அவரருகில் நெருங்கி, ‘பிராமணனே! செத்துப் போன நாயகி எப்படி உயிர் பிழைப்பாள்? செத்தவள் செத்தவள் தானே? ஏன் வீணாக இச்சை வைத்து அவள் உயிரைத் திரும்பவும் மீட்க நினைக்கிறாய்? என்று கேட்டான்.
‘ஏ யமதூதனே! நான் வேறொருத்தியை விரும்புவதாகவோ மணப்பதாகவோ இல்லை. இவள் உயிர் மீண்டும் பிழைத்து எழுந்தால் நானும் உயிர் பிழைத்திருப்பேன். இல்லையேல் நீ என் உயிரைக் கொண்டு செல்லலாம் என்றார் ருரு ரிஷி.
அவருடைய திடச் சித்தத்தைச் கண்டு காலதூதன் வியந்து, “ஓ பிராமணோத்தமனே! உன் மீது நான் மிகவும் அனுதாபப்படுகிறேன். அதனால் நான் ஓர் உபாயம் கூறுகிறேன். அதாவது நீ உன்னுடைய ஆயுளில் பாதியை உன் காதலிக்கு வழங்குவாயானால், அவன் விரைவில் உயிர் பிழைத்து எழுவாள்!’’ என்றான்.
என் ஆயுளில் பாதியை இவளுக்குத் தருவதற்குத் தயங்குவேனா? இப்போதே என் ஆயுளில் பாதியை இவளுக்குத் தத்தம் செய்து தந்துவிட்டேன்! எப்படியாவது என் காதலி உயிர்த்தெழுந்தால் அதுவே எனக்குப் போதும்! என்ற ஆவலுடன் கூறினார்.
பிரமத்வரையின் தந்தையான விசுவாவசு என்ற கந்தர்வன் சுவர்க்க லோகத்திலிருந்து அங்கு விரைந்து யமபுரத்துக்குச் சென்றான். யமதர்மராஜனைக் கண்டான். ‘தர்மராஜனே! அடியேனது விண்ணப்பத்தைக் கேட்டருள்-வீராக! என் குமாரியும் இந்த ருரு என்ற முனிவருக்குப் பத்தினியாக வேண்டிய கன்னிகை உயிர் மீண்டு எழுந்திருக்கும்படிக் கட்டளையிடு-மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றான்.
யமதருமனும் மனம் இறங்கி ‘ஓ தூதனே! இவளை உயிரெழுப்பிக் கொடுத்து விட்டு வா!’ என்றான்.
காலதூதன் விரைந்து பூலோகத்திற்கு வந்து பிரமத்வரை என்ற அந்தப் பெண்ணை உயிர்த்தெழச் செய்து அவளை ருருவிடம் ஒப்படைத்துவிட்டு விடைபெற்றுச் சென்றான்’’ என்கிறது இந்துமதம். ஒருவன் ஆயுளை இன்னொருவனுக்கு எப்படி கொடுக்க முடியும். அதுவும் இறந்துபோனவளுக்குக் கொடுத்து அவளை வாழச் செய்ய முடியுமா? இப்படி அறிவுக்குச் சற்றும் பொருந்தாத இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாக இருக்க முடியும்?
(சொடுக்குவோம்)