சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

டிசம்பர் 16-31 2018

நூல்: டாக்டர் கோவூரின்

பகுத்தறிவுப் பாடங்கள்

ஆசிரியர்: மொழிபெயர்ப்பு:

கவிஞர் கருணானந்தம்

வெளியீடு:

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-_600 007.

தொலைபேசி: 044-_2661 8161.

பக்கங்கள்: 176    விலை: ரூ.60/_

 

 

 

சாயிபாபா படத்திலிருந்து

விபூதி விழுவது எப்படி?

ஸ்ரீலங்கா பகுத்தறிவாளர் சங்க உறுப்பினரான திரு.லால்ஃபெர்னாண்டோ, பொது மருத்துவமனையில் புற்றுநோய்ச் சிகிச்சைக்காக அகநோயாளியாயிருந்த என்னைக் காண, ஒரு நாள் வந்தார். இலங்கை செல்வந்தரான இந்து ஒருவரின் வீட்டிலுள்ள சத்திய சாயிபாபாவின் படத்திலிருந்து விந்தையாக விபூதி (திருநீறு) கொட்டுவதாக, உரையாடியபோது அவர் என்னிடம் கூறியதோடு, அது சரிதானா என்ற காணச் சென்றபோது, தானே எடுத்துவந்த அந்தச் சாம்பலையும் காண்பித்தார். இது தொடர்பாக அந்தப் பெருமகனாருக்கும், எனக்குமிடையே நடந்த கடிதப் போக்குவரத்தை வெளியிடுவதால் வாசகர்கள் உண்மையறிதல் கூடும்.

– கொழும்பு பொது மருத்துவமனை, 29.7.1977

திரு. சி.கார்த்திகேசன் அவர்கட்கு

69/1, வார்டுபிளேஸ், கொழும்பு_7.

அன்புள்ள அய்யா,

தங்கள் வீட்டிலுள்ள ஒரு சாயிபாபா படத்திலிருந்து மர்மமாக விபூதி கொட்டுவ-தாய்க் கேள்வியுற்றேன்; இயல்புக்கு மாறான நிகழ்ச்சிகளை ஆராயும் ஆர்வமுள்ளவன் நான். எனவே, இதுபற்றி விசாரித்தறியத் தாங்கள் எனக்கொரு வாய்ப்பளிக்க முடியுமா?

– இப்படிக்குத் தங்கள் உண்மை நாடும்

(ஒ-ம்) ஆப்ரகாம் டி.கோவூர்

அன்புமிக்க அய்யா,

சாயிபாபாவின் படத்திலிருந்து விபூதி பொழிவது உண்மைதான். நீங்கள் இது தொடர்பாக எத்தகைய ஆய்வு மேற்-கொள்வீர்கள்? நம் நண்பரான வெள்ளவத்தை திரு.லால் ஃபெர்னாண்டோ போல எனில், நான் ஒத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அவர் அந்தப் படத்தின் பின்புறம் விபூதிப் பை தொங்குகிறதா எனப் பார்த்தறிய முயன்றார்.

அண்மையில் பெங்களுர் சென்று, சத்திய சாயிபாபாவைத் தரிசித்து ஆசிபெற்று வந்த என் மனைவியின் அந்தரங்க செய்தி இது. முன்னர் நாங்கள் இருவருமே கடவுள் நம்பிக்கை அவ்வளவாகப் பெற்றவர்கள் அல்லர். இப்போது இது எங்களுக்கு நம்பிக்கை மிகுந்த நிகழ்ச்சியாகும். மற்றவர்களை நம்பச் செய்யவோ, திருப்திப்படுத்தவோ, எங்களுக்குத் தேவை-யில்லை. எப்படி இந்த விந்தை நிகழ்கிறது என்று நீங்கள் மெய்யாகவே உணர விரும்பினால், சந்திப்புக்கு முன்னேற்பாடு செய்து, எம்மைச் சந்திக்கலாம், எம் இல்லத்தில்

அன்புள்ள,

(ஒ-ம்) சி.கார்த்திகேசன்

இந்தக் கடிதத்துக்கு நன்றி கூறி, “நீங்கள் மோசடி எண்ணத்தில் இதை நிகழ்த்த மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான், எப்படி நடைபெற முடிகிறது என்று தெரிந்துகொள்ளவே நான் விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பளிக்க வேண்டுகிறேன்’’ என்று மீண்டும் கேட்டேன்.

பதிலாக, “அய்யா, உங்கள் 10.8.1977 கடிதம் வரப் பெற்றேன். தகவலுக்காக மேலும் சில:- பெங்களூர் ஒய்ட் ஃபீல்டில் சத்திய சாயிபாபா ஆசிரம நுழைவாயிலருகே தெருவில் படம் விற்கும் ஒருவரிடம் வாங்கப்பட்டது இது. ஞாபகார்த்தமாக வாங்கி வந்த படத்தை, என் மனைவி தன் உடுப்பு அலமாரியின் கதவில் ஒட்டு வைத்தார். மறுநாள் வியப்பிலாந்து போனோம். கதவைத் திறந்தபோது, காலையில் தரையிலும், கதவினடியிலும் திருநீறு இரைந்து கிடந்தது! தினமும் விழத் தொடங்கிற்று!

“இதற்குப் பதினைந்து நாள் கழித்து, என் மனைவி உடல் நலிவுற்று, மருத்துவ விடுதியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்ற 2, 3 தினங்கழித்து, ஒரு நாள் என் மனைவியின் கனவில் சத்திய சாயிபாபா தோன்றி, “நீ வீட்டிலில்லாதபோது விபூதி விழாது. நீ சென்ற பின் விழும்’’ என்றாராம். என்ன ஆச்சரியம்! அவ்வாறே நடந்தது. எடுக்க எடுக்க மறுநாள் விழுந்து கொண்டேயிருக்கிறது! நான் உங்கள் விசாரிப்புக்கு ஒத்துழைப்பேன். எனினும், எங்களைப் பொறுத்தவரை அந்தப் புனிதப்படம் தெய்வீகம் பெற்றுவிட்டதால், யாரும் தீண்டுவதை அனுமதிக்க மாட்டோம்’’ என்று எழுதியிருந்தார். மீண்டும் என் கடிதம்:-

இரகசியம்

“அன்புள்ள திரு.கார்த்திகேசன்,

13.8.1977 கடிதத்துக்கு நன்றி. நான் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் முன்னதாகப் பதிலெழுத முடியவில்லை. உங்கள் மனைவியின் மனோநிலையில் பயங்கரமான ஒரு நோய் பற்றியிருப்பதை உங்கள் கவனத்துக்கு உடனடியாகக் கொணர வேண்டியே இக்கடிதம் எழுதுகிறேன். அவரது நிலைமையை அலட்சியப்படுத்தினால், அவர் நரம்பியல் ஒழுங்கீனம் என்ற நோய்க்கு இரையாவார். சாயிபாபாவின் படத்திலிருந்து சாம்பல் பொழிவது என்ற செய்தி. நான் பார்த்துள்ள பல நூறு நரம்பு மண்டல இயங்காமை என்ற தத்துவத்தின் பாற்பட்டு, அவரறியாமலே செய்யும் சில நடிவடிக்கைகளின் விளைவாகும். அந்தப் படத்தை உங்கள் மனைவியிடமிருந்து சில நாள் மறைத்து வைத்து, அப்போது அவருடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தால், இந்த அதிசய நிகழ்ச்சியில் அவர் பங்கென்ன என்பதைப் புரிந்துகொள்வீர்கள். இரக்கத்தினாலோ, வீண் அச்சத்தினாலோ, தெய்வநம்பிக்கை கெடுமே என்ற எண்ணத்தினாலோ, இந்த அதிசய நிகழ்ச்சியின் மூலகாரணத்தைக் கண்டறியாமல் ஒதுங்கினால், உங்களது கவனக் குறைவினாலேயே அவரை மனநோயாளியாக்கிய குற்றத்துக்கு ஆளாவீர்கள். உங்களுக்கு என் உதவி தேவையானால் எழுதுங்கள்; இப்பேர்பட்ட நரம்பு மண்டல ஒழுங்கீனங்களை நான் ஏராளம் சரி செய்துள்ளவன். அவரது நோய் இன்னதென நான் உய்த்துணர்ந்து, கண்டுபிடித்துவிட்ட செய்தியை அவரிடம் தெரிவித்தால், விபரீதமான, நேர் முரணான விளைவுகள், அவர்பால் ஏற்படக் கூடும் என்பதால், மறைத்து வைக்கவும்.

தங்கள் நன்றியுள்ள,

(ஒ-ம்) ஆபிரகாம் டி.கோவூர்

பின்னர் கடைசியாக அவரிடமிருந்து வந்த கடிதம்:-

6.9.1977

அன்புள்ள அய்யா,

உங்கள் 28.8.1977 தேதிய கடிதம் கண்டு நான் ஏமாற்றத்துக்கு ஆளாகவில்லை. பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் _ எதோ ஒர் அதிசய தெய்வீக நிகழ்ச்சி குறித்துது உண்மையை ஆராய விரும்புகிறீர்கள் என்ற அளவில் தங்களை நான் வரவேற்கத் தயாராயிருக்கத் தாங்களோ நான்  அழைக்காமலும் இங்கு வந்து என் மனைவியை நேரில் பார்த்து உரையாடாமலும், அவர் ஒரு மனநோயாளி எனக் கற்பனை செய்து, நான் கேட்காதபோதே கருத்து தெரிவித்துள்ளது கண்டு நான் வருந்துகிறேன். இது உங்கள் வேலையல்ல என்பதோடு, பொருத்தம் அற்றது-மாகும். நான் சட்ட வல்லுநரின் உதவியை நாடி, உங்கள் கடிதம் எனக்கு மானக் குறைவு விளைத்துள்ளதால், என்ன செய்வதென எண்ணுகிறேன். ஆகஸ்ட் 28ஆம் நாள் நீங்கள் தொலைபேசியில் என்னை அழைத்து, நீங்கள் மறுநாள் எனக்கு ஒரு கடிதம் அனுப்ப இருப்பதாகவும், அதை என் மனைவிக்குத் தெரியாமல் நான் பிரித்துப் படிக்க வேண்டும் என்று சொன்னது நினைவிருக்கும். இது புதுமையாயிருந்தால், அவ்வாறு உறுதி சொல்ல இயலாதென நான் அப்போதே உங்கள்பால் தெரிவித்தேன். அவ்வாறே நிகழ்ந்தது! ஆகஸ்ட் 30ஆம் நாள் அக்கடிதம் வந்த நேரம் நான் வீட்டிலில்லாததால், எங்கள் வழக்கப்படி எங்களுக்குள் இரகசியம் கிடையாதென்பதால், என் மனையாட்டி அதைப் படித்திருக்கிறார். உங்கள் கடிதம் இருவகையில் அவர் கோபத்தைக் கிளறிவிட்து. முதலாவது, யாரும் கேட்காதபோது மிகவும் தவறான யூகத்தில் என் மனைவி மனநோயாளி என முடிவு கட்டியது; இரண்டாவது, அவருக்குத் தொடக்கத்திலிருந்தே எங்கள் சொந்தச் செயல்களில் நீங்கள் தலையிடுவதும் நான் பதில் எழுதுவதும் அவருக்கு அறவே பிடிக்காதது!

இந்தச் செய்தி தொடர்பாக நீங்கள் எனக்கு எழுதும் போதெல்லாம், இலங்கைப் பகுத்தறிவாளர் சங்கத்தின் சார்பிலேயே எழுதியதால், குறிப்பாக உங்கள் கடைசிக் கடிதத்தையும் மற்றவற்றையும், அச்சங்க உறுப்பினர்கள் பார்வைக்கு வைத்து, ‘இவை சங்கத்தின் பெருமைக்கு உறுதுணைப் புரியக் கூடியவைதாமா?’ என்று தெரிந்துகொள்ளவும்.

தங்கள் நன்றியுள்ள,

(ஒ-ம்) சி.கார்த்திகேசன்.

அவருக்கு என்னுடைய இறுதிக் கடிதம்:-

“8.9.1977

அன்புள்ள அய்யா,

உங்கள் செப்டம்பர் 6ஆம் நாள் மடல் கிடைக்கப் பெற்றேன். சாம்பல் உதிர்க்கும் படத்தைப் பற்றிய அதிசயத்தை நானே நேரில் ஆராயும் தேவை எழவில்லை. ஏனெனில் ஆகஸ்ட் 13ஆம் தேதியிட்ட உங்கள் மடல் முலமாகவே இதற்குக் காரணமானவர் யாரென நான் துப்பறிய முடிந்தது. நான் கேட்டவாறு ஆராய இடமளிக்கும் அறிவு உங்களுக்கு இருந்திருக்குமானால், நீங்களே என்னுடைய மனிதப் பரிவு நோக்கத்தைக் கண்டு கொண்டிருக்கக் கூடும். நான் இரகசியமாக அனுப்பிய கடிதத்தை உங்கள் மனைவி பார்க்க அனுமதித்தே உங்கள் மீதுதான் குற்றமாகும். என் முன்னெச்சரிக்கையை மீறினீர்கள். நான் அவ்வம்மையார் குறித்து எண்ணியது அவருக்கு முதல் கோபம்; இரண்டாவது கோபம் என்னோடு கடிதப் போக்குவரத்து மேற்-கொண்டது என்கிறீர்களே, அதுதான் என் கண்டுபிடிப்பை உறுதி செய்கிறது.

நீங்கள் என்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை நான் வரவேற்பதோடு, அதை விரைவுபடுத்தவும் வேண்டுகிறேன். நான் இறந்தோ அல்லது இயலாமலோ போகுமுன்பு, வழக்குத் தொடுக்கப்பட்டால், அந்தச் சாயிபாபா படம் நீதிமன்றத்திற்கு வந்துவிடும்; உங்கள் மனைவியின் பார்வையை விலக்கி! அப்போது இதுபோல் விபூதி (திருநீறு) விழும் கதையை நம்பும் ஏராளமான மூடநம்பிக்கையாளர் _ இப்பேர்பட்ட மோசடியாளர்கள் _ அல்லது நரம்பு நோயாளர்களின் இரகசிய நடவடிக்கை-களை அறிய முடியும்.

தங்கள் மனைவியாரின் மனநலம் கருதி, இச்செய்தியை நான் இரகசியமாக வைத்திருக்க விழைந்தும், இயலாமல், நீங்களே விரும்-பியவண்ணம் இதனை இலங்கைப் பகுத்தறிவாளர் சங்கத்தின் முன்னிலையல் வெளிப்படுத்திவிட்டேன்.

தங்கள் உண்மையுள்ள,

(ஒ-ம்) ஆபிரகாம் டி.கோவூர்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *