இயக்க வரலாறான தன்வரலாறு(216)
இடஒதுக்கீட்டைக் காக்க மாநில மாநாடுகள்
கி. வீரமணி
27.06.1985 அன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க மேட்டூருக்கு சென்றேன். நான் அங்கு செல்லுவதற்கு முன்பே, என்மீது, “வெடிகுண்டு வீசுவோம், வீரமணியைக் கொல்வோம்’’ என்று கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனால், திட்டமிட்டபடி மாலையில் திராவிடர் கழகம் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் ஊர்வலத்தில் நடைபெற்றது. தமிழ் நாடு பிராமணா சங்கத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் நான் மேட்டூரில் பேசக் கூடாது என்று காவல் துறையினரிடம் மனு கொடுத்திருந்தனர்.
03.07.1985 அன்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் “கலைஞருக்கு நமது வேண்டுகோள்’’ என்ற தலைப்பில் முக்கியமான அறிக்கையை எழுதியிருந்தேன். அதில், நமது பெருமதிப்-பிற்குரிய கலைஞர் அவர்கள் அரூருக்கு அருகிலுள்ள எருமையான்பட்டி என்ற ஒரு கிராமத்தில் சுயமரியாதைத் திருமணம் ஒன்றுக்குத் தலைமை தாங்கி 27.06.1985 அன்று பேசிய பேச்சை ‘முரசொலி’ ஏட்டில் நான் படித்தேன். வெளியூர்களில் உள்ள பல கழகத் தோழர்களும் படித்து என்னிடம் தங்களது கருத்துகளை வாதித்தார்கள்.
திருமண நிகழ்ச்சி உரையில் கடவுள் பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களது கொள்கை விளக்கம் பற்றி பேசியுள்ளார்கள். அப்போது, “பெரியார் அவர்கள் கடவுள் இல்லை’’ என்று நாட்டில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில் அண்ணா அவர்கள், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று சொன்னது ஒரு சமரச ஏற்பாடு. ‘பெரியார் கடவுளே இல்லை’ என்ற சொன்னதற்குக் காரணம், ‘இல்லை’ என்று சொன்னால்தான் ஒன்றையாவது ஒத்துக்கொள்வான். ஆயிரக்-கணக்கான கடவுள்களைக் காட்டி அழுது கொண்டிருக்கின்ற இந்தச் சமுதாயத்தில் ஒன்றாவது நாங்கள் வைத்துக் கொள்ளக் கூடாதா என்று பேரம் பேசவாவது வருவான் என்பதற்காகத்தான்’’ என்று குறிப்பிட்டுள்ளர்கள்.
தந்தை பெரியார் அவர்கள், “கடவுள் இல்லை; இல்லவே இல்லை’’ என்று அழுத்தந்திருத்தமாகப் பேசி, தன்னுடைய ஒவ்வொரு சிலையின் கீழும் கடவுள் மறுப்பு வாசகங்களைக் கட்டாயம் போட வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்கள். தனது சிலையின் முக்கியத்துவமே அதுதான் என்றார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
தந்தை பெரியார் அவர்களையே பார்க்காத, அவர்களைப் பற்றியே கேள்விப் பட்டிராத, அவர்தம் தொண்டின் பெருமைகளையே அறியாத ஓர் இளைய தலைமுறை இளைஞர்கள் இன்று வந்துள்ள நிலையில் தந்தை பெரியார் அவர்கள் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டுமானால், இளைய தலைமுறை சரியான பார்வை பெற வேண்டியது அவசியம். அந்த நிலையில் கடவுள் கருத்துப் பற்றி தந்தை பெரியார் ஒரு பேரத்திற்காகத்தான் கடவுள் இல்லை என்று கூறினார்; உண்மையில் கடவுள் இல்லை என்பது அவரது கருத்து அல்ல என்பதுபோல கலைஞர் போன்ற தந்தை பெரியார் அவர்களது பள்ளியின் தலை மாணாக்கர்கள் பேசினால், அது தந்தை பெரியார் அவர்களைப் பற்றி உண்மையான படப்பிடிப்பாக இல்லாமல் ஆகிவிடும். தவறான மதிப்பீட்டை உருவாக்கிவிடும் என்பதால், அருள்கூர்ந்து அவர்கள் எழுதும்போதோ (‘குங்குமத்தில் ஏற்கனவே ஒருமுறை நெஞ்சுக்கு நீதியில் கடவுள் பிரச்சினையில் இப்படி கருத்து எழுதப்பட்டிருக்கிறது) பேசும்போதோ, தந்தை பெரியார் அவர்கள் கருத்தினை விளக்கும் வகையில் இத்தகைய முறையில் விளக்கம் கூற வேண்டாம் என்று அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.
இதே விளக்கத்தினை 1971ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பகுத்தறிவாளர்கள் கழக மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் முன்னிலையில் முதல்வராக இருந்தபோது கலைஞர் கூற, அதைக் கேட்ட தந்தை பெரியார் அவர்கள் அப்போதே மேடையிலேயே அதைக் கலைஞரிடமே மறுத்துக் கூறியதையும் கலைஞர் அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இக்காட்சி நாம் எல்லோருடைய நினைவிலும் பசுமையாக இருக்கும் ஒன்றாகும்.
கலைஞர் கழக மாநாட்டுக்கு வருகை தந்தபோது, பெரியார் தற்காப்பு இளைஞர் அணியினர் அணிவகுப்பு மரியாதையுடன் மாநாட்டு மேடைக்கு அழைத்துச் சென்றபோது எடுத்த படம்; பொதுச்செயலாளர் அவர்களும் உடன் வருகிறார். (13.7.1985)
கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களது கடவுள் மறுப்புப் பிரச்சாரம் பற்றிக் கூறுகையில், இந்த விளக்கத்தினைத் தருவது விரும்பத்தக்கதல்ல. அய்யா அவர்களே மறுத்த நிலையில் அதைக் கூறுவது சரியல்ல என்பதை மெத்தப் பணிவன்புடன் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்’’ என்று அந்த அறிக்கையில் மேலும் விளக்கி, தி.மு.க., தி.க. கருத்து வேறுபாடு என்று கூறி இதில் அரசியல் லாபம் காண சிலபேர் எண்ணிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.
மாநாட்டில் நடந்த படத்திறப்புகள் (1) புரட்சிக்கவிஞர் படத்தை பேராசிரியர் ராமநாதனும் (2) நடிகவேல் எம்.ஆர்.ராதா படத்தை கவிஞர் முகவை ராஜமாணிக்கமும் (3) ஜாதி ஒழிப்பு வீரர்கள் படத்தை பிரச்சார அணி செயலாளர் செல்வேந்திரனும் (4) தமிழ் ஈழம், படத்தை உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தனும் (5) ஆஞ்சா நெஞ்சன் அழகிரி படத்தை – எம்.கே.டி. சுப்பிரமணியமும் (காமராசர் காங்கிரஸ் கட்சி செயலாளர்) திறந்து வைத்தபோது எடுத்த படம்
05.07.1985 அன்று சைதாப்-பேட்டை தேரடி திடலில் நடந்த மாநாட்டு விளக்க பொதுக்-கூட்டத்தில் கலந்து-கொண்டு, குஜராத் முதல்வர் சோலங்கி சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக நின்றதை உணர்ச்சியோடு சுட்டிக்காட்டி உரையாற்றினேன்.
“குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் சோலங்கி ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். ‘வீக்’ (Week) வாரப் பத்திரிகை சோலங்கியைப் பற்றி எழுதும்போது ‘Solanki was following foot steps of Periyar’ என்று எழுதியது. (சோலங்கி பெரியார் பாதையை பின்பற்றிக்கொண்டிருக்கிறார்) குஜராத் காந்தியார் பிறந்த மாநிலம். அங்கே இப்போது காந்தியார் வெளியே போய்விட்டார், பெரியார் புகுந்துவிட்டார்.
தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் செய்ததைப் போல பார்ப்பனரே இல்லாத ஓர் அமைச்சரவை அமைத்துக் காட்டியிருப்பவர் சோலங்கி. அது மட்டுமல்ல. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையே அந்த மாநிலத்தின் போலீஸ் அமைச்சராக அவர் நியமித்திருக்கிறார்.
அவரைப் பணியை விட்டு, பதவியை விட்டு அனுப்ப வேண்டும் என்று சொல்லக்கூடிய உரிமை ஓட்டுப் போட்ட மக்களுக்குத்தான் உண்டு! ஆனால், பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும் அவரை விரட்டப் பார்க்கிறார்கள். இதேபோன்று அநியாயங்கள் பார்ப்பன _ பனியா ஆளும் வர்க்கம் நினைத்ததைச் செய்கிறது என்று கூட்டத்தில் எடுத்துக் கூறினேன்.
தந்தை பெரியார் அவர்களின் பேரன்பிற்குப் பாத்திரமானவரும், ‘விடுதலை’ நாளிதழில் 1946_1947ஆம் ஆண்டுகளில் துணையாசிரி-யராகப் பணியாற்றிவருமான திருவாளர் பூ.கணேசன் அவர்கள் தமது 65ஆவது வயதில் 11.07.1985 மறைந்தார் என்பதை அறிந்தவுடன் முக்கிய இரங்கல் செய்தியை குடும்பத்தாருடன் தொலைபேசி மூலம் வருத்தம் தெரிவித்துக்கொண்டேன்.
மறைந்த கணேசன் அவர்களின் தந்தையார் திருவாளர் சு.பூவராகவன் அவர்கள் ஓய்வு பெற்ற மாவட்ட ஆவணப் பதிவாளர் ஆவார்கள்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்க காலந்-தொட்டு தந்தை பெரியார் கொள்கைகளை அரசுப் பணியில் இருந்து கொண்டே பரப்பிய இவர்களது தந்தையார் திருவாளர் பூவராகவன், அண்ணாவின் ‘சந்திரோதயம்’ நாடகத்தை முன்னின்று நடத்தினார்.
வடார்க்காடு மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கே.கே.சின்னராசு அவர்களது கே.கே.சி மாளிகையை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கும் விழா 24.06.1985 அன்று சோலையார்-பேட்டையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்புவாய்ந்த நிகழ்ச்சியில் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கே.கே.சின்னராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கே.கே.சின்னராசு அவர்கள் கே.கே.சி மாளிகையினுடைய பத்திரத்தை பல்லாயிரக்-கணக்கான மக்களுடைய கைத்தட்டலுக்கு இடையே பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திறகு என்னிடத்தில் வழங்கினார்கள்.
இந்த கே.கே.சி மாளிகை பத்திரத்தில் முதன்முதலில் எழுதப்பட்டுள்ள வாசகம் “கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை’’, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்ற வாசகம் எழுதிய பின்புதான் பத்திரம் தொடர்ந்து எழுதப்பட்டிருந்தது.
வடார்க்காடு மாவட்ட தி.க. செயலாளர் கே.கே.சின்னராஜ் அவர்களுக்கு உரிமையான கே.கே.சி. மாளிகையை இயக்கத்துக்கு நன்கொடையாக கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கினார். 24.6.1985 அன்று சோலையார்பேட்டையில் இந்த நன்கொடை வழங்கும் விழா நடைபெற்றது. மாளிகையின் தோற்றத்தை படத்தில் காணலாம்.
தந்தை பெரியார் படத்தை நாதமுனி, அன்னை மணியம்மையார் படத்தை மீரா ஜெகதீசன், புரட்சிக்கவிஞர் படத்தை எல்.பெருமாள், பேரறிஞர் அண்ணா படத்தை சின்னதுரை அவர்களும், என்னுடைய படத்தை துரைசாமி, பார்த்தசாரதி படத்தை கே.கே.சி.அழகிரி, கே.கே.தங்கவேல் படத்தை சம்பந்தம், சண்முகசுந்தரம் படத்தை தாஸ், அம்பேத்கர் படத்தை பாலகிருஷ்ணன், எம்.பெருமாள் படத்தை நரசிம்மன், ஜெயராமன் படத்தை ராஜி, கே.கே.சின்னராசு அவர்களது படத்தை ஏ.டி.கோபால் ஆகியோரும் திறந்து வைத்தார்கள்.
விழாவில் நான் இணைப்புரையாக, கே.கே.சி அவர்கள், தான் மட்டும் இந்தக் கொள்கையில் இருந்தால் போதாது என்று தன்னுடய குழந்தை குட்டிகள் என்று சொல்லுவார்களே அதைப்-போல இந்தக் குடும்பம் முழுவதையும் இந்த இயக்கத்திலே ஈடுபடுத்தி வைத்திருக்கின்றார்கள் என்று சொன்னால் அதுதான் இந்த இயக்கத்தினுடைய தன்மை. அவருடைய தொண்டு தன்னோடு மட்டும்தான் இருக்க வேண்டும் என்று எண்ணாமல் அவருக்குப் பிறகும் அவருடைய தொண்டினை இந்தச் சமுதாயம் பெறவேண்டும் என்று சொல்லி இந்த கட்டிடத்தையே தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு அளித்துள்ளார்கள்.
ஒரு மனிதன் பிறருக்குப் பயன்படக்கூடிய அளவுக்குப் பணியாற்றுகின்றவன் எவனோ அவன்தான் சிறப்பானவன் என்று அந்த விழாவில் உரையாற்றினேன். மேலும் பேசுகையில் இந்த இயக்கத்திற்காக ஒரு கட்டடத்தைத் தொண்டுள்ளத்தோடு அளித்திருக்-கிறார்கள். அவர் அளித்த அருட்கொடையை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக பெருமகிழ்ச்சி-யோடு ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று எனது உரையில் நன்றியுடன் குறிப்பிட்டேன்.
கழகத் துணைப் பொதுச் செயலாளராக இருந்து கழகத்தின் பொருளாளராக வளர உயர்ந்து தோன்றாத் துணையாக இருந்த வழக்கறிஞர் சாமிதுரை _ சரோஜா தம்பதியின் மகள் செல்வி தமிழரசிக்கும், மங்கலம்பேட்டை குழந்தை வேல் சின்னம்மாள் ஆகியோரது செல்வன் தமிழரசனுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் விழா 29.06.1985 அன்று காலை 9.30 மணிக்கு கள்ளக்குறிச்சிக்கு அருகிலுள்ள தியாகதுருகத்தில் என் தலைமையில் நடைபெற்றது.
13, 14.07.1985 ஆகிய தேதிகளில் கழக மாநில மாநாடு மற்றும் இடஒதுக்கீடு பாதுகாப்பு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாடு துவங்குவதற்கு முதல் நாளே இதன் வெற்றிக்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்து-விட்டன. நமது கழகக் குடும்பங்கள் தமிழ் மான உணர்வு படைத்தோர் அனைவரும் கட்சி எல்லைக்கு அப்பாற்பட்டு வந்து திரள வேண்டும் என்று வேண்டிக் கொண்டதற்-கிணங்க, சென்னைக் கருங்கடல் என்று கண்டோர் வியக்கத்தக்க வண்ணமும் தமிழுணர்வு உள்ள அத்துணைப் பேர்களது சங்கமக் கடல். அந்தக் கருங்கடல் பெரியார் திடல் முழுவதும் நிரம்பி வழிந்ததால் பொதுவானவர்கள் பலரும் பாராட்டினார்கள், வியந்தனர், நம்பிக்கை கொண்டனர்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் சீருடை அணிந்த தற்காப்புப் படை அணிவகுத்து இருந்தது. மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர், பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, கருநாடக மாநில தி.க. மகளிர் அணி அமைப்பாளர் சொர்ணாம்மாள் எம்.ஏ. அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்து உரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் வருகை தந்து மாநாட்டில் கலந்து-கொண்டார். மாநாட்டில் அன்னை நாகம்மையார் உருவப் படத்தை ஈரோடு சுப்பையாவும், அஞ்சாநெஞ்சன் அழகிரி படத்தை காமராஜ் காங்கிரஸ் செயலாளர் எம்.கே.டி.சுப்பிரமணியமும், புரட்சிக்கவிஞர் படத்தை பெரியார் பேருரையாளர் பேராசிரியர் புலவர் இராமநாதனும், நடிகவேள் எம்.ஆர்.இராதா படத்தை கவிஞர் முகவை இராசமாணிக்கமும், அன்னை மணியம்மையார் படத்தை வழக்கறிஞர் சிவகங்கை சண்முகநாதனும், சுதந்திர தமிழ் ஈழ படத்தை கவிஞர் காசி.ஆனந்தனும், பேரறிஞர் அண்ணா படத்தை மதுரை ஆதீனகர்த்தரும் திறந்து வைத்து உரையாற்றினர்.
மாநாட்டில் தாலி அகற்றுதல் நிகழ்ச்சியும், வேம்பையன் அவர்கள் தமது துணைவியார் சுசிலா அணிந்திருந்த பவுன் தாலியை கழற்றி, தமிழன் குரலாக ஒலிக்கும் விடுதலையின் வளர்ச்சிக்கு நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்கள். அதுபோல மு.கங்காதரன் அவர்களின் துணைவியார் அவர்களும் தமது தாலியை அகற்றிக் கொண்டார்.
தொடர்ந்து நான் மேடையில் ஒரு குழந்தைக்கு ‘விடுதலை மணி’ என்று பெயர் சூட்டினேன். தொடர்ந்து லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழினத் தொண்டருமான வீரசிங்கம், தோழர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு பயனாடை அணிவித்துப் பாராட்டினோம்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் அவர்களும், மேடையில் மூத்த உறுப்பினர்களுக்கு இயக்கத்தின் மத்திய நிர்வாகக் குழு மூத்த உறுப்பினர்களாக இருப்பவர்களும், வழிகாட்டியாக இருப்பவர்களுமான இயக்க வீரர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் தூக்குமேடை நாடகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதல் நாள் மாநாட்டில் தலைமை உரையை நிகழ்த்தினேன். அப்போது தந்தை பெரியார் அவர்கள் மறைவுச் செய்தி கேட்டு ஆரியர் கூத்தாடி மகிழ்ந்து, சிற்சில இடங்களில் பாயாசம் சாப்பிட்டவர்கள் உண்டு. பெரியார் என்ற மாமலை சாய்ந்துவிட்டது. இனிமேல் நாம் அச்சமின்றி நாம் ஆதிக்கபுரியில் அமர்ந்து ஆட்சி செலுத்தலாம் என்று அவசரக் கணக்கு போட்டது. அந்தக் கணக்கு ஒரு தப்புக் கணக்கு என்பதை இன்று நாடே கண்டு ஒப்புக்-கொள்ளும் நிலை ஏற்பட்டது. தான் வாழ்ந்த காலத்தில் தமிழகத்திலும், ஒரு சில தென்னாட்டு மாநிலங்களில் மட்டுமே தந்தை பெரியார் வாழ்ந்தார் என்ற நிலைமை மாறி இப்போது தந்தை பெரியார் வடமாநிலங்களுக்கும் சென்றுவிட்டார்.
“தந்தை பெரியார் ஒரு தனி மனிதர் அல்ல. ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்’’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர்கள் மறைந்த உண்மை அகிலத்திற்கெல்லாம் புலனாகிறது.
தந்தை பெரியார் அவர்களுடைய வருமுன்னர் சொல்லும் அறிவும், வருமுன்னர்க் காக்கும் செயலும் அவரை உலகின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு பெரும் சிந்தனையாளராக உயர்த்திக் காட்டுகிறது. இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சினைக்கு பிரிட்டிஷ்-காரர்கள் இந்த நாட்டில் இருக்கும்போதே ஒரு தீர்வு ஏற்படாவிட்டால் இனி எதிர்காலத்தில் ஜனநாயகம் (Democracy) இந்த நாட்டில் மலராது, பார்ப்பன நாயகம் (Brahminocracy) தான் வரும் என்றார். அதைத்தானே கடந்த காலத்திலும் இன்றும் நாம் கண்டு வருகிறோம் என்று எடுத்துக்காட்டி உரையாற்றினேன்.
முதல் நாள் மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தில் இதுவரையிலே அய்ம்பதுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் வந்திருக்கின்றன என்றாலும்கூட, முதல் திருத்தம் தந்தை பெரியாரால், அண்ணாவால், நாம் நடத்திய போராட்டத்தால்தான் உருவாக்கப்பட்டது என்கிற வரலாற்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் சமுதாயத்திலே இடஒதுக்கீடு தேவை. அது எந்த அடிப்படையிலே என்றால் பொருளாதார அடிப்படையிலே அல்ல, சமூக அடிப்படையில் கல்வி அடிப்படையில் Socially and Educationally என்ற சொற்றொடரோடு அந்த அரசியல் சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சட்டத்திலே முதன்முதலாக ஏறியதை மறந்துவிடக் கூடாது’’ என்று கூறினார்கள்.
தூக்குமேடை நாடகத்தில் எம்.ஆர்.ராதாரவி தோன்றும்
ஒரு காட்சி (13.7.1985 மாநாட்டில்)
முதல் நாள் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் அரசு பணிகளில் மகளிர்க்கு 50 சதவீத இடஒதுக்கீடு, இளைய சமுதாயமே! ஆபாச போதைகளிலிருந்து விடுபட மாற்று ஏற்பாடுகள், காலில் விழும் பழக்கத்தை ஒழித்திடுக, தீக்குளிப்பை கைவிடுக, ஜாதி மதக் கலவரங்களை ஒடுக்க நடவடிக்கை, ஜாதி ஒழிய கலப்பு மணம், இந்தி திணிப்பை ஒழிக்கப் போராட்டம், மாநிலப் பட்டியலில் கல்வி உள்ளிட்ட தீர்மானங்கள் அவற்றுள் அடங்கும்.
இரண்டாவது நாள் நடைபெற்ற இடஒதுக்கீடு காப்பு மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீடு 18 சதவீதத்திற்கும் அதிகமாக தருக, பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கும் குறையாது காப்பீர், மண்டல் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்-படுத்தும். இடஒதுக்கீடு சட்டத்தை மேலும் விரிவுபடுத்துவீர் உள்ளிட்ட தீர்மானங்-களிலும் ஜாதி சான்றிதழ், மாணவருக்கு உதவித் தொகை, மாணவர் வருகைப் பதிவு, உள்ளிட்டவைகளில் தமிழக அரசு மனிதாபிமானத்தோடு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்று இந்த மாநாடு தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தது, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சமூகநீதி வரலாற்றில் இம்மாநாடு மிகுந்த பலன் தந்த மாநாடாகும்.
(நினைவுகள் நீளும்)