மஞ்சள் நீராட்டு!
ஆறு.கலைச்செல்வன்
பார்த்திபன் வீடு களை கட்டியிருந்தது. முக்கியமான உறவினர்கள் எல்லாம் முதல் நாள் மாலையே மறுநாள் காலை நடைபெற உள்ள காதணி விழாவிற்கு வர ஆரம்பித்து விட்டார்கள். பார்த்திபனும் அவன் மனைவி கனகாவும் வந்தவர்களை எல்லாம் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.
“தம்பி, பார்த்திபா! நாளைக்கு எத்தனை மணிக்கப்பா விசேஷம்?’’ என வந்திருந்த உறவுக்காரப் பெரியவர் ஒருவர் வினவினார்.
“காலை பத்து மணிக்கு ஆரம்பிச்சுட வேண்டியதுதான். எல்லாம் தயாராயிருக்கு’’ என்று பதில் சொன்னான் பார்த்திபன்.
“காதுகுத்த ஆளெல்லாம் வரச் சொல்லியாச்சா?’’ என்று மீண்டும் கேட்டார் பெரியவர்.
“பத்து மணிக்கு முன்பே அவர் வந்திடுவார். அதே போல மொட்டை அடிக்கவும் ஆள் காலையிலேயே வந்திடுவார்’’ என்றான் பார்த்திபன்.
“கெடா ரெடியா இருக்கா? எப்ப கறி தயாராவும்?’’ என்று கேட்டார் மற்றொரு பெரியவர்.
“மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் பிரியாணி ரெடியாயிடும்’’ என்றான் பார்த்திபன்.
“ஒரு மணியைத் தாண்டாமல் பார்த்துக்கணும். ஏன்னா நெறைய பேருக்கு சுகர் இருக்கும். நேரம் ஆயிட்டா மயக்கம் வந்திடும்’’ என்ற அந்த பெரியவர் தன் வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்துக் கொண்டார்.
பார்த்திபனும் கனகாவும் தங்கள் மகள் பிரியாவுக்கு காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பிரியாவுக்கு ஒரு வயது முடிந்திருந்தது. காதணி விழாவைத் தடபுடலாக நடத்த இருவரும் விரும்பினார்கள். அதற்காக அழைப்பிதழ் எல்லாம் அடித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்தனர். உறவினர்கள் பலர் முதல் நாள் இரவே வந்து விட்டனர். வந்தவர்கள் சும்மாயிராமல் ஏதாவது பேசிக் கொண்டேயிருந்தனர். பலருக்குக் காதணி விழாவைவிட மறுநாள் கிடா வெட்டி பிரியாணி செய்ய உள்ளதிலேயே கவனம் அதிகமாக இருந்தது.
இதையெல்லாம் அமைதியாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் பார்த்திபனின் தந்தை செங்குட்டுவன். அவருக்கு இதுபோன்ற விழாக்கள் எல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. காதணி விழா நடத்துவது தேவையற்றது என்று நினைப்பவர். இருப்பினும் மகனும் மருமகளும் விரும்புவதால் அவர்கள் மகளுக்கு எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்.
சில நாட்களுக்கு முன்பே தந்தைக்கும் மகனுக்கும் இதுகுறித்து விவாதம் நடைபெற்றது.
“காதணி விழா நடத்துவது எல்லோரும் செய்வதுதானே. ஏன் வேணாம்னு சொல்றீங்க. எனக்கு முதல் குழந்தை. அதுவும் பெண் குழந்தை. செய்ஞ்சா என்ன?’’ என்று தந்தையிடம் கேட்டான் பார்த்திபன்.
“எதுக்காக காது குத்த வேணும்?’’ என்று கேட்டார் செங்குட்டுவன்.
“பெண் பிள்ளையாச்சே. காதில் நகைகள் போட்டுக்கொள்ள வேண்டாமா?’’
“பார்த்திபா! பெண்களுக்கு நகைகள் முக்கியமல்ல. கல்வி அறிவுதான் முக்கியம். அதுசரி, இந்தக் காதணி விழாவுக்கு மொத்தமாக எவ்வளவு செலவாகும்?’’
“ரெண்டு லட்ச ரூபா செலவாகும்னு நெனைக்கிறேன்.’’
“அந்தத் தொகையை வங்கியிலோ, அஞ்சலகத்திலோ சேமிச்ச வைச்சா பிரியாவுக்கு அவள் வளர்ந்த பிறகு படிப்புச் செலவுக்கு பயன்படும் அல்லவா?’’
“அதையெல்லாம் பின்னால் பார்த்துக்கலாம். நம்ம ஊரில் எல்லோருமே காதணி விழா நடத்தியிருக்காங்க. நாம மட்டும் செய்யலேண்ணா நல்லாயிருக்காது.’’
“மத்தவங்களுக்காக நாம செய்யக் கூடாது பார்த்திபா. சரி… சரி… உன் மகள். நீ எது வேணும்னாலும் செய்ஞ்சிக்க. ஆனா நான் அதிகமா கலந்துக்க மாட்டேன். வேணாம்னும் சொல்ல மாட்டேன். செலவுக்க பணமும் தரமாட்டேன்.’’
அப்பா இப்படி கூறிய பிறகு பார்த்திபன் வட்டிக்குப் பணம் கடன் வாங்கி செலவு செய்ய முடிவெடுத்தான். தற்போது அதை செய்தும் வருகிறான். மாமனார், நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே நிறைய மொய்ப்பணம் வைப்பார்கள், செலவை சரிகட்டி விடலாம் என நினைத்தான்.
மறுநாள் காதணி விழா ஆர்ப்பாட்டமாகத் தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க குழந்தை பிரியாவை ஊரிலிருக்கும் குலதெய்வக் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே கனகாவின் அண்ணன் மடியில் குழந்தையை உட்கார வைத்தார்கள். கழுத்தில் மாலை அணிவித்தார்கள். பார்த்திபனும் கனகாவும் பக்கத்தில் நின்று கொண்டார்கள். ஒரு பெண் கூர்மையான தங்க வளையத்தை எடுத்துக்-கொண்டு குழந்தை பிரியாவின் காதில் குத்தினாள். குழந்தை அந்த வளாகமே அதிரும்படி கத்தியது. மற்றொரு காதிலும் இவ்வாறு குத்தப்பட்டது. குழந்தையின் அலறல் சத்தத்துக்கிடையே ஆட்டுக்கிடாய் வெட்டப்பட்டு கறி சமைக்கும் வேலை மும்முரமாகத் தொடங்கியது.
விழாவிற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் பிரியாணியை ஒரு கை பார்த்தார்கள். பலர் மொய்ப்பணம் வைத்தார்கள். சிலர் மொய்ப் பணம் வைக்காமல் நைசாக நழுவிச் சென்றார்கள். அப்படிச் சென்றதோடு மட்டுமல்லாமல் சாப்பாடு இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாம் எனக் குறை சொல்லிவிட்டும் சென்றார்கள்.
விழா முடிந்த மறுநாள் பார்த்திபன் வரவு செலவு கணக்குகளைப் பார்த்தான். அவன் எதிர்பார்த்ததைவிட மொய்ப் பணம் குறைவாகவே கிடைத்தது. கடன் தொகை அதிகரித்துவிட்டது. பிடித்தம் போக கையில் வாங்கும் சம்பளமோ மிகவும் குறைவு. எப்படி சமாளிப்பதோ எனக் குழம்பினான். அப்பா கொஞ்சம்கூட பணம் கொடுத்து உதவ-வில்லையே என்ற வருத்தமும் அவனுக்கு இருந்தது. கனகாவும் அதற்குத் தூபம் போட்டாள்.
ஆண்டுகள் உருண்டோடின. பிரியா வளர்ந்து பெரியவளாகிவிட்டாள். பதினான்கு வயது நிறைவு பெற்றுவிட்டது. பிரியாவிற்கு பிறகு கனகா வேறு குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை. இப்போதும் ஒரு பிரச்சனை வந்தது. கனகா மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியே ஆக வேண்டுமென ஒற்றைக் காலில் நின்றாள். பார்த்திபனுக்கும் விருப்பம் இருந்தாலும் பணம் செலவாகுமே என நினைத்துப் பயந்தான். காதணி விழாவிற்கு வாங்கிய கடனையே பல ஆண்டகளாகச் சிறிது சிறிதாக திருப்பிச் செலுத்தி வந்தான். அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் நிறைய வைத்திய செலவுகளும் ஆகிவிட்டன. மஞ்சள் நீராட்டு விழா நடத்தினால் அதற்கும் நிறைய கடன் வாங்க நேரிடுமே என்ற கவலையில் ஆழ்ந்தான் பார்த்திபன்.
பார்த்திபனின் தந்தை செங்குட்டுவன் மஞ்சள் நீராட்டு விழாவை கடுமையாக எதிர்த்தார். அது ஒரு முட்டாள்தனமான செயல் எனச் சாடினார். கனகா மற்றவர்களை விட்டு மாமனாரிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்க முயற்சி செய்தாள்.
“ஏனய்யா! நம்ம வூட்ல கல்யாணம் பண்ணிக்கொடுக்க பொண்ணு இருக்குன்னு மத்தவங்களுக்குத் தெரிய வேணாமா? அதுக்காகத் தானே மஞ்சள் சுத்திப் போடறது! அதப்போயி வேணாம்னு சொல்றீயே!’’ என்று செங்குட்டுவனிடம் பேசினார் பக்கத்து வீட்டுப் பாட்டி.
அதைக்கேட்ட செங்குட்டுவனுக்கு கடுங்கோபம் வந்தது.
“அவ வாழ்க்கையை அமைச்சிக்க அவளுக்குத் தெரியும். அவ வயசுக்கு வந்ததை டமாரம் அடிச்சி ஊர் உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கணும். அவ யாருக்கும் அடிமை இல்லை’’ என்று காட்டமாகப் பேசினார் செங்குட்டுவன்.
இருப்பினும் பார்த்திபனும் கனகாவும் அவர் பேச்சைக் கேட்காமல் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். முன்பு போலவே ஒரு பெருந்-தொகையை கடனாக வாங்கினான் பார்த்திபன்.
“நம்ம ஒரே பிள்ளைக்கு உங்கப்பா எதுவுமே செய்யல. பேத்தி மேல கொஞ்சம்வட பாசம் இல்லை. இவரெல்லாம் ஒரு தாத்தாவா?’’ எனப் பார்த்திபனிடம் பொங்கினாள் கனகா. பார்த்திபனும் அப்பாவிடம் முகம் கொடுத்துப் பேசுவதைத் தவிர்த்தான்.
அனைத்தையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார் செங்குட்டுவன். கனகா சில சமயங்களில் கடுமையான, தகாத வார்த்தை-களைப் பயன்படுத்தியதைக் கண்டும் காணாததுபோல் பொறுமையைக் கடை-பிடித்தார். சில சமயங்களில் அவள் பேசுவதைக் கேட்டு பார்த்திபனும் கடும் கோபம் அடைந்தான்.
இந்நிலையில் ஒரு நாள் திடீரென பிரியா தன் பெற்றோர்களிடம் தனக்கு இந்த விழா வேண்டாம் எனத் தெரிவித்தாள். அவளுக்கு அந்த விழாவும் அதற்கு மற்றவர்கள் சொன்ன காரணமும் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. தாத்தா மனமும் நோகக் கூடாது என விரும்பினாள். ஆனாலும் அவள் பேச்சைக் கேட்காமல் விழாவிற்கு ஏற்பாடு செய்தனர் பார்த்திபனும் கனகாவும்.
நிச்சயித்த நாளில் மஞ்சள் நீராட்டு விழா நடந்து முடிந்தது. வந்திருந்த விருந்தினர்களுக்-கெல்லாம் ஒரு பையில் சீப்பு, கண்ணாடி, ஒரு தட்டு போன்ற பொருட்களையெல்லாம் வைத்துக் கொடுத்தார்கள். வாங்கிச் சென்ற சிலர் பையில் வைத்தத் தட்டு சின்னதாக இருந்ததாகக் குறைபட்டுக் கொண்டனர். சிலர் ஒரு தேங்காயையும் பையில் வைத்திருக்கலாமே என்று சொல்லிச் சென்றனர். அதையெல்லாம் காதில் வாங்கிய கனகா மிகவும் கோபப்-பட்டாள்.
மேலும் சில ஆண்டுகள் கடந்தன. பிரியா பள்ளிப் படிப்பை மிகச் சிறப்பாக முடித்துவிட்டாள். மிகப் பெரிய கல்லூரியில் சேர இடமும் கிடைத்துவிட்டது. விடுதியில் தங்கிப் படிக்க வேண்டும். ஆனால், பார்த்திபன் கையில் சுத்தமாக பணம் இல்லை. மகளை எப்படி படிக்க வைப்பது எனத் தடுமாறினான். செலவுக்குப் பணமில்லையே என கைகளைப் பிசைந்து கொண்டான்.
பார்த்திபனும் கனகாவும் அவர்கள் எண்ணப்படி காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா மட்டுமல்லாமல் எந்த ஒரு பண்டிகை-யையும் ஆடம்பரமாகக் கொண்டாடாமல் விட்டதில்லை. தேவையில்லாத சடங்கு விழாக்களுக்கும், மதப் பண்டிகைகளுக்கெல்லாம் பணத்தை வீணாக்கிவிட்டு முக்கியமான நிகழ்வுக்கு பணமின்றித் தவித்ததை செங்குட்டுவன் உணர்ந்தார்.
செங்குட்டுவன் சிறந்த பகுத்தறிவாளர். பெரியார், அம்பேத்கர், கார்ல்மாக்ஸ் சிந்தனைகளை ஏற்று வாழ்பவர். செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாள் விழாவை அவ்வூரில் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த நாளும் வந்தது. பார்த்திபன் குடும்பம் உட்பட ஊரிலுள்ள அனைவரும் அவ்விழாவில் கலந்து கொண்டனர். செங்குட்டுவன் சிறப்புரை-யாற்றத் தொடங்கினார்.
“சமுதாய சமத்துவம் என்பது ஜாதி ஒழிப்பு மட்டுமல்ல, பெண்ணடிமை ஒழிப்பும் ஆகும்.-
பெண்கள் ஆண்களைப் போல அனைத்து துறையிலும் மேல் வர வேண்டும். அவர்களை வீட்டிற்குள் முடக்கக் கூடாது. பெண்களை ஒரு அலங்காரப் பதுமையாக வளர்க்காமல், அவளைத் தற்காத்துக் கொள்ளும் பயிற்சிகளையும் தரவேண்டும். மஞ்சள் நீர், காதணி விழாக்கள் நடத்துவது பெண்ணை முடமாக்கும் செயல் என்பதோடு வீண் செலவையும் கடன் சுமையையும் அது உண்டாக்கும்.
இதோ என் மகன் குடும்பமே வெட்டிச் செலவால் இன்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. மஞ்சள் நீர், காதணி விழா என்று ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி செலவிட்டுவிட்டு வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். மகளின் படிப்பு செலவிற்கு பணம் இல்லாமல் அவளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் சேர்க்க முடியாத நிலையுள்ளது. வீணான சடங்கு விழாக்களை நடத்தாமலிருந்தால் அந்தப் பணத்தை அவள் படிப்புச் செலவிற்கு பயன்படுத்தியிருக்கலாம்! மற்ற குடும்பம் இப்படி பாதிக்கப்படக் கூடாது என்பதால் இதைச் சுட்டிக் காட்டுகிறேன்’’ என்று கூறியவர், தன் பேத்தியை மேடைக்கு அழைத்தார்.
“உன் காதணிக்கும், மஞ்சள் நீராட்டுக்கும் நான் செலவு செய்யாமல் சேர்த்து வைத்து வங்கியில் போட்ட பணம் தற்போது வட்டியுடன் மூன்று லட்சமாகச் சேர்ந்துள்ளது. இதை உன் படிப்புச் செலவிற்கு வைத்துக் கொள்’’ என்று கூறியபடி பேத்தியிடம் கொடுத்தார்.
ஊர் மக்கள் கைத்தட்டிப் பாராட்டினர்.
“கைத்தட்டுவது முக்கியமல்ல. பெரியார் வழியில் நீங்களும் மூடச் சடங்குகளை ஒழித்து, பெண்கள் உயர்விற்கு செலவு செய்ய வேண்டும். பெரியார் பிறந்த நாளில் இந்த உறுதியை எல்லோரும் ஏற்க வேண்டும்’’ என்றார். பார்த்திபன், கனகா தங்கள் தப்பை உணர்ந்தனர். அதன் அடையாளமாய் அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது!