‘உண்மை’ என்றுமே
உண்மையின் பக்கமே!
மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். அறிவுக்கு உரமூட்டும் உண்மைச் செய்திகளை பக்கங்கள்தோறும் வழங்கியிருக்கும் நவம்பர்
(1-15) ‘உண்மை’ இதழ் படித்தேன். மாதங்கள் தோறும் பண்டிகைகள், கோயில்கள் தோறும் உண்டியல்கள், இவைகளைத் தவிர வீடுகள்தோறும் விழாக்கள், விழாக்கள் அனைத்தும் மதத்தைச் சார்ந்தது. அதனால் பார்ப்பனியக் காட்டில் பண மழை. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை பார்ப்பனியம் எதிர்ப்பதற்குக் காரணமே இதனால் தான். தலையங்கம் இதனை ஆணித்தரமாக தெளிவுபடுத்துகிறது. தீபாவளி பற்றிய அய்யாவின் கட்டுரை, பண்டிகையின் ஆபாச, அலங்கோலத்தை அப்படியே தோலுரித்துக் காட்டுகிறது. தமிழர் சிந்தித்தால் என்றுமே தலைகுனிவு ஏற்படாது.
அய்யப்பன் கோயில் விவகாரமே போதும். கடவுளின் பெயரால் மனிதன் நடத்தும் கேலிக்கூத்துகளை விளக்க, ‘கடவுள் இல்லை’ என்பதை அய்யாவைவிட இன்று செயல் வாயிலாக மெய்ப்பித்துக் கொண்டிருப்பவர்கள் ஆன்மிக வாதிகளே! சிலை கடத்தல் ஒன்றே போதும்! ‘கடவுள் இல்லை’ என்பதை விளக்க! சிறுவனின் கேள்வி, அனைவரையுமே சிந்திக்கத் தூண்டுகிறது.
‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ தங்களின் தூய தொண்டறத்தின் சிறப்புக்கோர் சிறந்த எடுத்துக்காட்டு! ‘அவர் ஏன் பெரியார்?’ என்ற கேள்விக்கான பதிலை அய்யாவின் மனிதநேய செயல்களே விடை தருகிறது!
தாலியில்லாத் திருமணங்களை ஊரே நடத்திக் கொண்டிருப்பது அய்யாவின் அய்யா உழைப்பிற்குக் கிடைத்த வெற்றியே! மற்றும் கேள்வி-பதில் பகுதியில் கேள்விக்கான தங்களின் சிறப்பான சிந்திக்க வைக்கும் விடைகள், கவிதைகள் அனைத்தும் ‘உண்மை’ இதழின் சிறப்புமிக்க சொல்லோவியங்கள்! தலித்துகளுக்காக, அய்யாவின் உண்மையான தொண்டறத்தை ‘எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை’ கட்டுரை உறுதிப்படுத்துகிறது. ‘உண்மை’ என்றுமே உண்மையின் பக்கமே!
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
வெல்க பெரியாரின் புகழ்!
நவம்பர் 16-30 ‘உண்மை’ இதழில் 1948ஆம் ஆண்டுதான் முதன்முதலில் என்.சோமசுந்தரம் என்ற பார்ப்பனரல்லாத ஒருவர் நீதிபதி ஆனார் என்ற செய்தியை, உங்களுக்கு தெரியுமா? என்ற நற்செய்தி மூலம் தெரிந்துகொண்டேன்.
தமிழ் மொழியைக் காக்க நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில், அன்று பங்கேற்ற, வீராங்கனை மீனாம்பாள் சிவராஜ் நினைவு நாளை அவரது படத்துடன் இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துரைத்த விதம் அருமை!
‘இழிவு செய்பவை இந்துப் பண்டிகைகளே!’ என்ற தலைப்பில் இளைய பெரியார் எழுதிய தலையங்கம் அருமை! திராவிட இனத்தை இழிவுபடுத்தும், ஆரியப் பண்டிகைகளின் பெயர்களை நீண்ட பட்டியலிட்டு, நம் மீது அவர்கள் திணித்த விதத்தைப் படித்தபோது, தமிழினமே தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வது போல் அமைந்திருந்தது அப்பண்டிகை!
மருத்துவப் பகுதியில், “கற்பூரவல்லி கைகண்ட மருந்து!’ என்ற தலைப்பில் வெளிவந்த செய்தியினைப் படித்தேன். கற்பூரவல்லியில் இத்தனை மருத்துவ குணங்களா? படித்தேன்! வியந்தேன்!
மஞ்சை வசந்தன் எழுதிய தப்புச் செடிகள் கவிதை கற்கண்டாய் இனித்தது.
வாசகர்களின் கேள்விக்கு, ஆசிரியரின் பதில்கள் அத்தனையும் முத்துக்கள்!
“ஜனநாயகக் காவலர் வி.பி.சிங்!’ என்ற தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தீட்டிய கட்டுரை தித்திக்கும் தேனமுதே! வி.பி.சிங் பிரதமராக இருந்த காலம் இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் பொற்காலம் என்பதை, எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாத ஒன்றுதான்! மேலும் சென்னை விமான நிலையத்தின் பெயர்களாக, காமராஜர்
மற்றும் அண்ணா பெயர்களைச் சூட்டி அவர் அழகு பார்த்தார் என்ற வரியினைப் படித்தபோது, என் நெஞ்சமெல்லாம் இனித்தது. வெல்க வி.பி.சிங் புகழ்!
அன்புடன்,
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி