பண்பாட்டின் அடையாளம் விசுவாசத்தின் மறுவடிவம்

டிசம்பர் 16-31 2018

பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி

இறைவி

4.12.2018 அன்று நிகழ்ந்த விபத்தில் நம் அனைவரையும் மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கி சென்ற நம் பொருளாளர் அம்மா டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் நம் தலைவர் தன் இரங்கல் அறிக்கையில் தெரிவித்தது போல நம் அனைவரின் மிகுந்த பாசத்திற்குரியவர்.

கனிவுடனும் கள்ளமில்லா புன்னகையுடனும் பழகிய அனைவரிடமும் குடும்ப சூழ்நிலை, உடல் நலன் என அக்கறையுடனும் பழகும் பாங்கு அவர்களுக்குரிய சிறப்பியல்புகளாகும்.

1978 ஆம் ஆண்டு முதல் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்று வரக் காரணமானவர்களில் முக்கியமானவர். 2003 ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் 2004 ஆம் ஆண்டு முதல் பெண் துணைப் பொதுச்-செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர்.

தான் வகித்த அரசுப் பணியான மருத்துவ துணை இயக்குனர் பதவியினை நம் தமிழர் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு முழு நேர ஆக்கப் பணிக்கு தம்மை ஒப்படைத்துக் கொண்டார். முழு நேர இயக்கப் பணிக்கு வந்த பின் தமிழகம் முழுவதும் மகளிரணி தொடர் பிரச்சாரங்களில் பங்கேற்றவர்.

2012ஆம் ஆண்டில் கழகத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு மகளிர் அணி, மகளிர் பாசறை போன்ற அமைப்புகளை வழிநடத்தும் பொறுப்-பாளராகவும் சில மாவட்டங்களில் கண்காணிப்பாளராகவும் மிகச் சிறப்பாக பணியாற்றினார்.

2013ஆம் ஆண்டு நமது இயக்க பொருளாளர் ஐயா சாமிதுரை அவர்கள் மறைவிற்குப் பின் இயக்கத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்ட அம்மா அவர்கள் அந்தப் பொறுப்பினை மிகவும் திறம்பட செய்து வந்தார்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் மறைவுற்றார்.

“எங்களது கழகத்தின் ஒப்பற்றச் செல்வமே! எனக்குப் பிறகு இந்த இயக்கத்தினை, அறக்கட்டளையை நம்பிக்கையோடும், நாணயத்தோடும் நடத்திட சரியானவர்கள் இருக்கிறார்கள்; கண்டறிந்து விட்டோம்! என்ற எனது நம்பிக்கையை திடீரென மின்னல் கண்களைப் பறித்ததுபோல ஆக்கி விட்டாயே!

யாருக்கு யார் ஆறுதல் கூறுவது?  அவர்களுக்கா? எனக்கா? புரியவில்லை தவிக்கிறோம்’’ என்ற தமிழர் தலைவரின் ஆற்றாமை வரிகளே அவரின் தியாகத்திற்குச் சான்று. இயக்க வரலாற்றில் நிலைத்து நின்ற நம்மை ஊக்கப்படுத்தும் அவர் நினைவுகள். அம்மையாருக்கு நமது வீர வணக்கங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *