வறுமையிலும் வாகை சூடிய பெண்!
தமிழகத்தில் ஈரோட்டில் காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் நிவேதா. கரும்பு விவசாயத்தில் கிடைக்கும் சிறு வருவாயைக் கொண்டு வாழ்வு நடத்த வேண்டிய வறுமைக் குடும்பம். என்றாலும், சளைக்காது முயன்று சாதனைகள் பல புரிந்துள்ளார். பெண்ணால் முடியும் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.
சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடி வருபவர். இதுவரை தேசிய அளவில் 34 தங்கப் பதக்கங்-களை வென்றுள்ளார். இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் நிவேதா கூறுகையில், “11ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் விளையாடி வருகிறேன். என் விருப்பத்தை அப்பாவிடம் கூறியபோது மிகவும் மகிழ்ந்தார். உற்சாகத்துடன் கோவை ரைஃபிள் கிளப்பில் சேர்த்துவிட்டார். பிஸ்டல், ரைபிள், ஷார்ட்கன் என துப்பாக்கி சுடுதலில் மூன்று பிரிவுகள் உள்ளன.அப்பா ஷார்ட் கன் பிரிவில் விளையாடிவர். நானும் ஷார்ட் கன் பிரிவிலேயே கவனம் செலுத்தி வருகிறேன். நான் உபயோகப்படுத்தும் துப்பாக்கியே 5 லட்சம் ரூபாய். தமிழகத்தில் ஷார்ட் கன் பயிற்சிக்கான கிளப்புகளே இல்லை. எனவே, ஐதராபாத் சென்று இரண்டு வருட பயிற்சி எடுத்து வந்தேன். இப்போது திருச்சியில் ஷார்ட் கன் பயிற்சியை துவங்கியிருக்கிறார்கள்’’ என கூறும் நிவேதா. இந்திய அளவில் பள்ளிகளுக்கிடை-யேயான முதல் போட்டியில் 12ஆம் இடம்தான் பிடித்துள்ளார்.
தோல்விகளால் துவளாமல் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு அதே ஆண்டில் டெல்லியில் நடந்த அடுத்தடுத்த தேசிய அளவிலான போட்டிகளில் 2 தங்கம், 3 வெண்கலப் பதக்கங்கள் வென்ற அசத்தினார்.
சாதனைகள்
1. 2012ஆம் ஆண்டு முதல் இப்போது வரை தேசிய அளவிலான போட்டிகளில் 34 தங்கப் பதக்கம், 20 வெள்ளிப் பதக்கம், 16 வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளார்.
2. இத்தாலியில் நடந்த ஜூனியர் வேர்ல்டு கப் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு 12ஆவது இடம்பிடித்தார்.
3. 2017ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் 5ஆவது இடம் வந்தார். அதில் இரண்டு புதிய ரெக்கார்டு பிரேக்குகளும் செய்துள்ளார்.
4. கடந்த வருடம் மாஸ்கோவில் உலகின் முன்னணி வீரர்கள் கலந்துகொண்ட, ஒலிம்பிக் போட்டிக்கு முன்னோட்டமான வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் 5ஆம் இடம் வந்து இந்தியாவிற்கு புதிய நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.
“என்னுடைய அப்பா நேந்திர சிகாமணி துப்பாக்கி சுடுதலில் ஸ்டேட் லெவல் பிளேயர். என்னுடைய குருவும், துப்பாக்கி சுடுதலில் என் பயிற்சியாளரும் அப்பாதான்’’ என பெருமிதம் கொள்கிறார்.
“2015ஆம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழகத்திற்கு 1 தங்கம், 1 வெண்கலம் வென்று கொடுத்தேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா என்னை ஊக்கப்படுத்தி 7 லட்சம் ரொக்கப் பரிச அளித்தார். சர்வதேசப் போட்டிகளுக்கு மத்திய அரசே செலவு செய்து அனுப்பி வைக்கிறது. தேசிய அளவிலான போட்டிகளுக்கு மாநில அரசிடமிருந்து போதிய நிதி உதவி கிடைக்கப் பெற அரசு வழி செய்ய வேண்டும்’’ என ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
தகவல்: சந்தோஷ்