ஜாதி, தீண்டாமையை ஒழிக்கின்ற நோக்கில் 1957ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கின்ற பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்து, பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்போராட்டத்தில் பங்கேற்றனர். மூவாயிரம் பேருக்குமேல் கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் வரை தண்டனை அளிக்கப் பெற்றனர். அப்போராட்டத்தில் உயிர்நீத்த சுயமரியாதைச் சுடரொளிகளை நினைவுகூரும் வகையில் சுயமரியாதைச் சுடரொளி நாள், ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு எழுச்சியுடன் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 26.11.2018 மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாநாட்டின் அறிமுக உரையாற்றினார்.
மேனாள் மத்திய அமைச்சர் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தலைவர்களின் எழுச்சிமிக்க உரையைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டு சிறப்ரை நிறைவுரையாற்றினார்.
வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் இணைப்புரை வழங்கினார்கள். மாநாட்டின் முடிவில் சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை நன்றி கூறினார்.
சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைக்கப்பட்டு ஜாதி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் கூற, அவரைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.