வழக்குரைஞர் கிருபா முனுச்சாமி
(சென்ற இதழின் தொடர்ச்சி…)
சுயமரியாதை திருமணம்:
தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதன் ஒரு படியாக, ஆண்_பெண் இருபாலரின் சரிநிகரான உரிமைகளையும், சுதந்திரங்களையும் பாதுகாக்கும் வகையில், தாலி இல்லாத ஜாதி, -மத மறுப்பு சுயமரியாதை திருமணங்களை வலியுறுத்தினார்.
இன்று ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற பற்பல நாடுகளில் நண்பர்களாக வாழும் முறையே பெரிதும் காணப்படுகிறது. அதுபோல, நம் நாட்டிலும், “திருமணம் செய்து கொள்ளாமலேயே நண்பர்களாக வாழும் முறை வரவேண்டும்’’ என்றார்.
1928-இல் அருப்புக்கோட்டை சுக்கிலநத்தத்தில் நடந்த சுயமரியாதை திருமணப் புரட்சியை அதன் தொடக்கமாகவே பார்க்கிறேன். அச்சிற்றூரில் சுயமரியாதை நெறியில் வளர்ந்த அரங்கசாமி ரெட்டியார் பார்ப்பனரை விடுத்து பெரியாரை கொண்டு திருமணம் செய்து கொள்ள விரும்பினார். பெரியாரும் சம்மதிக்க, அரங்கசாமிக்கும், நாகம்மாள் மற்றும் இரத்தினம்மாள் ஆகியோருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை அறிந்த ஆவல்-சூரன்பட்டியை சேர்ந்த கோபால்சாமி ரெட்டியாரும் பெரியார் முன்னிலையில் சுயமரியாதைத் திருமணம் செய்துக்கொள்ள விரும்பினார். முதல் திருமண மேடையிலேயே இரண்டாவது திருமணமும் முடிவாயிற்று.
காலை முதல் திருமணத்தையும், முற்பகல் 11 மணிக்கு இரண்டாவது திருமணத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மாரி ரெட்டியார், சுயமரியாதைத் திருமணத்தின் நடை-முறையையும், சிறப்பையும் கண்டுணர்ந்து அதேநாளில் பார்பனரைக் கொண்டு செய்வதாய் இருந்த அவரது திருமணத்தை நிறுத்தி, அதே மேடையில் பகல் 12 மணிக்கு மூன்றாவது சுயமரியாதைத் திருமணமாக செய்துகொண்டார்.
இதன் நீட்சியாக நாடு முழுவதும், கடல் கடந்தும் சடங்குகளை நீக்கி, பார்ப்பனர்கள் நீக்கி நம்மவர்களைக் கொண்டு திருமணங்களை செய்விக்க உறுதிபூண்டனர்.
குடும்பக் கட்டுப்பாடும் சுயமரியாதைத் திருமணமும்!
இந்தியாவின் மக்கள் தொகை பிரச்சினை தான் மிகப் பெரிய வளர்ச்சிக்கான முட்டுக்-கட்டைப் பிரச்சினையாக இருந்து வருகிறது. எத்தனை ஆயிரம் கோடிகள் செலவிட்டு ஒன்பது அய்ந்தாண்டு திட்டங்களை நிறைவேற்றினாலும் பெருகி வரும் மக்கள் தொகை (Malthus theory of population) மிகப் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும், மகளிர் உரிமை வளர்ச்சிக்கும் இடையூறாகவும் உள்ளதால், தந்தை பெரியார் அவர்கள் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ‘கர்ப்ப ஆட்சி’ என்பதை குடும்பக் கட்டுப்பாட்டை தனது ‘குடிஅரசு’ வார ஏட்டின் மூலம் பரப்பியதோடு “கர்ப்ப ஆட்சி அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல்’’ நூல்களைப் பாமர மக்களிடையேயும் படித்த மக்களிடையேயும் பிரச்சாரம் மூலம் பரவச் செய்ததோடு, ஒவ்வொரு சுயமரியாதைத் திருமணத்தின் போது, குடும்பத்தில் ‘வசவசவென’ பிள்ளைகளைப் பெறாதீர் என்று அறிவுரை கூறத் தவறியதே இல்லை.
சமூக _ அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகள் மட்டு-மில்லாமல், அன்றைய காலகட்டத்தில் பெண்கள் குறித்த சிந்தனை பெரியாரைத் தவிர வேறு எந்தத் தலைவருக்கும் தென்னகத்தில் இருந்ததில்லை. ஜாதியைக் குறித்து பேசும் போதெல்லாம், பெண்ணடிமைத்தனம் இருப்பதே ஜாதியை காப்பாற்றத்தான் என்று அம்பேத்கர் பேசி வந்திருந்தாலும், தென்னாட்டைப் பொறுத்தவரை, ஜாதியும், பெண்ணடிமைத்தனமும் குறித்த பன்முகப்பட்ட பார்வையோ, அதன் ஊடறுத்தன்மை குறித்த நுணுக்கமான அறிவோ, பெரியாரைத் தவிர வேறு எவருக்கும் இருக்கவில்லை என்பதே உண்மை.
பார்ப்பனரல்லாதார் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பல்வேறு சமூக நீதி உரிமை-களையும், பெண் விடுதலையோடு ஒரு சேர முன்னிறுத்தி வந்ததே பெரியாரின் தனிச் சிறப்பாக இருந்தது.
இதன் காரணமாகவே, அன்றைய தினம் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் கூடிய பெண்களெல்லாம் அவர்மீது கொண்ட அன்பிற்காக, அவருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கினர்.
(நிறைவு)