இந்துமதம் என்ற பெயரில் ஆரிய பார்ப்பன சனாதன ஆதிக்கத்தை நிலைநாட்டி, நாட்டில் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற பாசிசக் கொள்கையை நடைமுறைப்-படுத்தத் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தன்னை சமூக சேவைக்கான அமைப்பாகப் புனைவேடம் போட்டு, அரசியல் சார்பற்றதாகக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அதன் முதன்மை இலக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றித் தன் திட்டங்களைச் செயல்படுத்துவதே!
அதன் அடிப்படையில் அது தன் பினாமி அமைப்புகளை உருவாக்கி, அவற்றை அரசியலில் ஈடுபடுத்தியது. ஜனசங், பா.ஜ.க. போன்றவை அப்படி வந்தவையே.
பலமுறை அரசியலில் படுதோல்வி கண்டாலும், விடாமுயற்சியாக வியூகங்களை மாற்றி மாற்றித் தேர்தல்களைச் சந்தித்த அந்த அமைப்பு 2014ஆம் ஆண்டு மோடி என்ற நபரை அனைத்து வல்லமையும் உடைய சாதனை மனிதராகச் சித்தரித்து, அவர் குஜராத்தில், மிகப் பெரிய சாதனைகளைச் செய்துவிட்டதாகப் பொய்யான பிரச்சாரங்களைச் செய்து, ஊடகங்களின் உதவியோடு ஊதிப் பெருக்கி, மதவாதத்தை முன்னிறுத்தாது ‘வளர்ச்சி’ என்ற இலக்கை இளைஞர்கள் மத்தியில் முன்னிறுத்தி ஏமாற்றி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது.
மனித நேயங்கொண்ட, சமூகநீதிக்குப் போராடும், மதச்சார்பற்ற கட்சிகள், இயக்கங்கள், மக்கள் எல்லோரும் அதிர்ந்தனர். அச்சப்-பட்டனர். அவர்கள் அதிர்ச்சி அடைந்தது-போலவும், அச்சப்பட்டதற்கு ஏற்பவும், மோடியின் தலைமையிலான மத்திய ஆட்சி பதவியேற்ற நாளிலிருந்தே பாசிசப் பாதையில் செல்லத் தொடங்கியது.
அடித்தட்டு மக்களின் வாழ்வை வளர்ச்சியைக் கருத்திலும், இலக்கிலும், செயலிலும் கொள்ளாமல், ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தையும், கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, அதையே இலக்காகவும் ஆக்கி, நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் அராஜகம், அநீதி, படுகொலை, பொருளாதாரச் சீரழிவு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலைத் தகர்ப்பு, விவசாயிகளுக்கு எதிரான விரோதச் செயல்கள், கல்வியைக் காவி மயமாக்கல், வர்ணாஸ்ரம தர்மத்தின் அடிப்படையில் குலக்கல்வி முறை என்று அடுக்கடுக்கான அநியாயங்களைச் செய்துள்ளனர்.
நீதிமன்றங்கள், நிதித்துறையின் முதுகெலும்பான ரிசர்வ் வங்கி, இராணுவம், தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத் துறை, மத்திய அமலாக்கத் துறை, வருமான வரித்துறை என்று அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்களைப் புகுத்தி, தங்கள் விருப்பப்படி செயல்படச்செய்து அவற்ரைத் தங்கள் பாசிசத் திட்டங்களை நிறைவேற்றினர்.
மக்கள் கொதிப்பும் எதிர்ப்பும்
1. விவசாயிகளா? கார்ப்பரேட்டுகளா?
2. மத ஆதிக்கமா? மதச்சார்பின்மையா?
3. ஒற்றைக் கலாச்சாரமா? பன்மைக் கலாச்சாரமா?
4. ஜாதி ஆதிக்கமா? சமூக நீதியா?
என்ற கேள்விகளும் அது சார்ந்த எதிர்ப்பும் கொதிப்பும் மக்கள் மத்தியில் நாடெங்கும் நாளுக்கு நாள் வளர்ந்து கொழுந்துவிட்டு எரிந்தன!
தமிழகத்தில் உச்சம்:
அதன் உச்சகட்ட வெளிப்பாடு பெரியார் மண்ணான தமிழகத்தில், பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் உச்சம் பெற்றது. தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று எத்தனையோ முயற்சிகளை பி.ஜே.பி.யும் ஆர்.எஸ்.எஸ்.ம் மேற்கொண்டும், சதித் திட்டங்கள் தீட்டியும், சூழ்ச்சிகள், பிரித்தாளல், விரட்டல், உருட்டல் எல்லாம் செய்தும் பயனற்றுப் போகவே, அ.இ.அ.தி.மு.க.வை உடைத்து அதன்வழி உள்புக தனது அதிகாரம் முழுமையையும் பி.ஜே.பி. அரசு தொடர்ந்து செலுத்தியது.
அ.தி.மு.க. தலைவர்களின் கோழைத் தனத்தாலும், கொள்கையற்ற நிலையாலும், பி.ஜே.பி.யின் எடுபிடிகளாய் இருந்து தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்து தங்களைக் காத்துக் கொள்ளும் முனைப்பிலும் தமிழகத்தை அடகுவைத்த அவலம். இதனால் பி.ஜே.பி. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைத் தன் கையில் எடுக்க முடிந்ததே தவிரதமிழகத்தில் காலூன்றும் முயற்சி கைக்கூடவில்லை.
மற்ற மாநிலங்களிலும் மக்கள் எதிர்ப்புப் பரவியது
தமிழகத்தில் ஏற்பட்ட விழிப்பு திராவிட மாநிலங்களிலும் பரவியது. கேரளாவில் பி.ஜே.பி.க்கு பெருத்த அடி, கர்நாடகத்தில் காங்கிரசும் குமாரசாமியும் கைகோர்க்க கனத்த அடி, சந்திரபாபு நாயுடு எதிர்ப்பால் இடிமேல் இடி, தெலுங்கானாவிலும் சந்திரசேகர ராவ் புறக்கணிப்பு என பி.«-ஜ.பி. தென்னிந்தியாவில் ஒரு தீண்டத்தகாத கட்சியாக மாறியது. பி.ஜே.பி தலைவர்கள் என்னென்ன வித்தைகளையோ காட்டிப் பார்த்தும் அவர்களின் எதிர்பார்ப்பு கைக்கூடவில்லை.
அடித்தட்டு மக்களுக்கு எதிரான ஆட்சி
மத்தியில் நடைபெறும் பி.ஜே.பி ஆட்சி அனைத்து வகையிலும், ஏழை, எளிய, பாட்டாளி மக்களுக்கும், சிறு, குறு வணிகர்களுக்கும், விவசாயிகளுக்கும் படித்து வேலை தேடும் இளைஞர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில் செயல்பட்டதால் எல்லோரும் வெறுத்தனர்.
வளர்ச்சி வரும், வருவாய் வரும், வாழ்வு வரும், உயர்வு வரும் என்று வாக்களித்த மக்கள் வெறுத்து, வேகம் கொண்டனர். இதனால் பி.ஜே.பி பிரதமர் மோடியின் கவர்ச்சியும், எதிர்பார்ப்பும் சரிந்து வீழ்ந்தது.
பிரித்தாளும் சூழ்ச்சியும் மதவெறித் தூண்டலும்
ஜாதி, மதம் என்ற சமுதாயத்திற்கு கேடு தரும் கருவிகளைத் தங்களின் தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்தி, சில வட மாநிலங்களில் வெற்றி பெற்ற பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் ஆட்கள், மற்ற இடங்களில் அதை வைத்து வெல்ல முடியாது ஏமாந்தனர்.
கேரளாவில் மதம், கடவுள் இவற்றைக் கையில் எடுத்து அரசியல் ஆதாயம் பெற முயன்றனர். ஆனால், மக்களின் வெறுப்பிற்கு முன் இந்த வித்தைகள் வீணாகிப் போன நிலையில், 5 மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன.
அய்ந்து மாநிலத் தேர்தல்
அய்ந்து மாநிலத் தேர்தல் அறிவிக்கப் பட்டதில் இருந்தே அவை மாநிலத் தேர்தல்களாக கருதப்படாமல், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவே கணக்கில் கொள்ளப்பட்டு களம் இறங்கின கட்சிகள்.
நடப்பது மாநிலங்களுக்கான தேர்தலானாலும், அது மத்திய பி.ஜே.பி. ஆட்சியை எடை போடுகின்ற தேர்தலாகவே அனைவராலும் எதிர்பார்க்கப்பபட்டது. மோடி ஓடி, ஓடி, கத்திக்கத்தி பிரச்சாரம் செய்தார். இராகுல்காந்தி மக்களின் பிரச்சினைகளை, பி.ஜே.பி.யின் ஊழல்களை, மதவெறி செயல்பாடுகளை, பாசிச செயல்திட்டங்களை, விவசாயிகளுக்கு எதிரான செயல்பாடுகளை ஆரவாரம் இல்லாமல் அக்கறையோடு எடுத்தக் கூறிப் பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும், வாக்குப் பதிவிற்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளும் பி.ஜே.பி.யின் வீழ்ச்சியை முன்கூட்டியே அறிவித்தன. ஆரிய சனாதனக் கூட்டம் அதிர்ச்சி அடைந்தது. மதச் சார்பின்மையைப் பின்பற்றும் கட்சிகள் மகிழ்ச்சியுடன் தேர்தல் முடிவை எதிர்பார்த்தனர்.
மதவெறி சக்திகளுக்கு மக்கள் தந்த மரண அடி!
11.12.2018 காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே
பி.«-ஜ.பி.யின் தோல்வி உறுதிசெய்யப்பட்டது. அய்ந்து மாநிலங்களிலும் பி.ஜே.பி.யையும் பிரதமர் மோடியையும் மக்கள் வெறுத்து ஒதுக்கியது தெளிவாய்த் தெரிந்தது.
இதோ தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தான் – 200
மத்தியப் பிரதேசம் – 230
சத்தீஸ்கர் – 90
மிசோரம் – 40
தெலுங்கானா- 119
மதச் சார்பற்ற அணியினர் மனதில் கொள்ள வேண்டியவை
அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளுக்கு தோல்வியைத் தந்து வெறுப்பைக் காட்டிய மக்கள், மதச் சார்பற்ற அணிக்கும் அறிவிக்க வேண்டிய செய்தியை அறிவித்துள்ளனர். மதச் சார்பற்ற கட்சிகள் தங்களுக்குள் ஒற்றுமையாய் இருந்தால் பி.ஜே.பி.யே இல்லாத நிலையை உருவாக்கலாம். உங்களிடையே ஒற்றுமை குறைய குறைய அது பி.«-ஜ.பி.யின் வெற்றிக்கு வழிசெய்யும் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்திலும், இராஜஸ்தானிலும் காங்கிரசோடு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கைகோர்த்திருந்தால் பி.ஜே.பி.யை படுதோல்வி அடையச் செய்திருக்கலாம். எனவே, இனிவரும் நாடாளுமன்றத் தேர்தலில் இத்தவற்றைத் திருத்தி வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.
காங்கிரசு கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி இணையாமல் தனித்துப் போட்டியிட்டதால், மத்திய பிரதேசத்தில் 23 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 7 தொகுதிகளிலும் காங்கிரசு வெற்றி பறிபோனது. இனியாவது இந்நிலையை பகுஜன் கட்சித் தலைவர் மாயாவதி தவிர்ப்பது நல்லது _ தவிர்க்கப்படவும் வேண்டும்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அறிக்கையை தலைவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்
‘‘…ஒட்டுமொத்தமாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி பேதங்களை மறந்து நமக்குள் இருக்கக்கூடிய சிறு சிறு பிரச்சினைகள், மனஸ்தாபங்கள் எதுவாக இருந்தாலும், அவைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மத்தியிலே ஒரு பாசிச ஆட்சி, மதவெறி பிடித்திருக்கக் கூடிய ஓர் ஆட்சி; மோடி தலைமையில் நடந்துகொண்டிருப்பதை நாம் உணர்ந்து பார்த்து அந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் முழுமையாக ஒரு ‘மெகா’ கூட்டணி அமைத்து நாம் போராடவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய கருத்துகளை இந்த அறிவார்ந்த அவை முன்பு வைக்கிறேன்’’ என்று ரத்தினச் சுருக்கமாகப் பேசியுள்ளார்.
மானமிகு சுயமரியாதைக்காரரான நமது இனமானத் தலைவர் கலைஞர் மறையவில்லை; அவரால் செதுக்கப்பட்டு அரசியல் களத்தில் போராட்ட தளபதியாக உள்ள நமது சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் மூலம் தொடர்கிறார்; திராவிடம் அனைத்திந்தியாவிற்கும் _ மதவெறித் தீயை மூட்டிவரும் பாசிச நெருப்பை அணைக்க வழிகாட்டியாக இருக்கிறது என்பதை எண்ணி தாய்க் கழகம் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறது _ வாழ்த்துகிறது!
மூன்று முக்கிய முழக்கங்கள்!
முக்கிய சமூகநீதிக் கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடிக் கட்சி, பா.ஜ.க.வை விட்டு வெளியேறியுள்ள குஷ்வாகாவின் கட்சியும் இந்த அணியில் இணையவேண்டும். பா.ஜ.க.வின் கீழிறக்கம் (Count Down) தொடங்கிவிட்டது.
இந்த அணியின் மூன்று முக்கிய ஒலி முழக்கங்கள் வருமாறு:
1. பாசிச மதவெறி ஆட்சியை அகற்றுவோம்!
2. ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்!
3. அனைவரும் இதற்காக ஓரணியில் நிற்போம் _ திரளுவோம்!
‘‘வெற்றி நமதே!’’
கட்சி நலன்களுக்காக மட்டுமல்ல, மக்கள் நலன்களுக்காக, இந்திய நாட்டின் மதச்சார்பின்மை, சமூகநீதி, மாநில உரிமைகள் நிலைபெற, பாசிசமும், மதவெறியும், சனாதனமும் அறவே ஒழிக்கப்பட இந்திய அளவில் மதச்சார்பற்ற தலைவர்கள் இவற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் களம் காண வேண்டும்.
பிரிந்து நின்ற தோற்பதை விட விட்டுக் கொடுத்து அதிகம் வென்று பி.ஜே.பி.யை தோற்கடிப்பதே சரியான முடிவாகும்! மக்கள் அதையே எதிர்பார்க்கிறார்கள். மதச்சார்பற்ற அணி வெல்ல ஒன்றுசேர்வோம், வென்றே தீர்வோம்!