தமிழ் இணையக் கல்விக்கழகம்
www.tamilvu.org
தமிழ் மொழியைக் கற்க விரும்புபவர்களுக்கும் தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது தமிழ் இணையக் கல்விக்கழக (Tamil Virtual Academy) இணையதளம். மழலைக் கல்வியில் தொடங்கி சான்றிதழ், பட்டயம் (Diploma), மேற்பட்டயம் (Higher Diploma), பட்டம் (Degree), கல்வித் திட்டங்கள், முதுகலை (Post Graduate) என்ற வகையில் பிரிக்கப்பட்டு, தேர்வுமுறை பகுக்கப்பட்டு கட்டண விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலை நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் விவரங்கள் முகவரியுடன், தொலைப்பேசி எண்களுடன் கொடுக்கப்பட்டு அறிமுகச் சிற்றேடுடன் இடம் பெற்றுள்ளது.
நூலகம் கண்ணுக்கும் சிந்தைக்கும் விருந்தளிப்பதாக அமைந்துள்ளது. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் பகுதியைச் சொடுக்கி அப்படியே படித்து மகிழலாம் அல்லது பதிவிறக்கம் செய்து படிக்கலாம். கலைச்சொல் தொகுப்பு, தமிழ் நூல், அகராதி, கலைக்களஞ்சியம் போன்ற பகுதிகளைப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு தமிழ் ஆர்வலர்களுக்குப் பயனுள்ள பகுதியாகும். உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தமிழ் மொழியையும், தமிழ்மொழியின் தொன்மையையும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் தெரிந்து பயன்பெற உதவும் இணையதளம்.