நூல் மதிப்புரை

டிசம்பர் 1-15 2018

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்- விமர்சனம்

இலக்கியத்தைவிட வரலாறு முக்கியம்.

வரலாற்று இலக்கியம் அதைவிட முக்கியம்!

எஸ்.அழகுசுப்ப்பையா

நூல் :

வேங்கை நங்கூரத்தின்  ஜீன் குறிப்புகள்

ஆசிரியர் : தமிழ்மகன்

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

தொலைபேசி: 91-44-24993448

மின்னஞ்சல் : uyirmai@gmail.com

இணையதளம்: www.uyirmai.com

மின்னஞ்சல்:  natrinaipathippagam@gmail.com

 

படைப்புகள் ஒவ்வொன்றும் காரண காரியத்தோடு  படைக்கப்படுபவைதான். எந்தப் படைப்பும் ஒரு படைப்பாளியால் விருது பெற வேண்டும், புகழடைய வேண்டும், தன்னுடைய மேதாவித்தனத்தைக் காட்ட வேண்டும் என்பவற்றிற்காகப் படைக்கப்படுவதில்லை. அப்படியான நோக்கத்தில் உருவாகும் எதும் இலக்கியப் படைப்பாக நிலைத்து நிற்பது-மில்லை. தான் அறிந்த ஒன்றை, இன்றல்ல இன்னும் பல நூறு ஆண்டுகள் கழித்தும் தான் சார்ந்த சமூகத்திற்குத் தேவையான ஒன்றையை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே ஒவ்வொரு படைப்பும் உருவாகும் நோக்கம்.

தமிழ் என்பது ஒரு மொழிதானே? அதன்மீது தமிழருக்கு ஏன் அத்தனை ஈர்ப்பு? காதல்? தாகம்? அதற்காக ஏன் உயிரை எல்லாம் மாய்த்துக்கொண்டார்கள்? அதன் இளமை தொய்வுறாமல் எப்படி இத்தனை காலம் இயங்கிக்கொண்டிருக்கிறது? இப்படியாக எண்ணற்ற கேள்விகளுக்கு உணர்ச்சிப்பூர்வமாக இல்லாமல், பழம்பெருமை பேச வேண்டும் என்ற உந்துதல் ஏதும் இல்லாமல் அறிவியலும் தர்க்கமும் கலந்து ஆய்வின் அடிப்படையில் விடை தேட முயன்றதன் பலனே ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’. சமூக வரலாற்றை ஒரு புனைவாகப் படைக்கும்போது அது பிந்தைய காலகட்டத்தில் தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும் எழுதுவதற்கு மிக முக்கியமான சான்றாதாரமாக ஒரு பெரிய காப்பகத்துக்கு பாதுகாக்கப்படும் ஆவணமா-கிறது. இன்று நம்மிடம் இருக்கும் தமிழக வரலாறும் பண்பாடும் சங்க செவ்வியல் இலக்கியங்களின்மூலம் கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலானவைதான் இல்லையா?

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் மிஷன் மார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறான் ஃபுயூச்சர் டெக்னாலஜிஸ்ட் மற்றும் நானோ தொழில்நுட்ப விஞ்ஞானி தேவ். எதிர்பாராத விதமாக அவன் சந்திக்கும் சுனாமி விபத்தில் அவனது மூளைக்குள் ஏற்படும் பாதிப்பினால் அவனது நினைவுகள் கனவுகள் வழி இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமாக இரண்டு பகுதிகளாகப் பயணிக்கிறான். அந்தக் கனவு தொடர்ச்சியாக இருப்பதில்லை. ராஜேந்திரச் சோழனின் காலம் வருகிறது. ஜான் வில்பர் என்ற அமெரிக்கன் மற்றும் சரவணன் ஆகியோரின் வாழ்க்கை அந்தக் கனவுகளில் வெளிவருகின்றன. உண்மையில் அவை கனவுகள் என்றே பல நேரங்களில் அவனுக்குப் புலப்படுவதில்லை. அவனாகவே உணர்கின்றான். அவர்கள் எல்லாம் நாம் தான் என எண்ணுகிறான். ஒவ்வொரு நாளும் அவனுக்குள் வரும் ஆள்களின் எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டே செல்கின்றன. அவனது மூளையில் என்ன மாற்றம் ஏற்பட்டது. அவனுக்குள் எழும் கேள்விகளுக்கெல்லாம் என்ன விடை என்பதைச் சொல்லி நிறைவு பெறுகிறது ஒரு நாவல்.

புனைவு எழுத்தில், அறிவியல் செய்திகளில், தமிழ் உணர்வில், வரலாற்றைத் தெரிந்து-கொள்ளும் ஆய்வில் உங்களுக்கு விருப்பம் இருக்கும் என்றால் ஒரு சிறந்த ஆங்கிலப் படத்தைவிடவும் சற்றும் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாத நாவல் இந்த வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள். தமிழ்மகனைத் தெரிந்த அனைவருக்கும் தெரியும் அவரது திராவிடச் சிந்தாந்தப் பின்புலம். தமிழ்மகனின் ஒவ்வொரு படைப்பும் திராவிடத்தின் பின்னணியிலிருந்துதான் வெளிவருகின்றது என்பதை ஏற்றுக்கொள்வோம் என்றால் வெட்டுப்புலி, ஆப்ரேஷன் நோவா வரிசையில் இதை மூன்றாம் பாகமாக வைத்துக்-கொள்ளலாம். அந்த அளவிற்குத் திராவிடச் சிந்தனைகள் உள்ளே நிரம்பிக் கிடக்கின்றன.  கடவுளே என்றான் நம்பிக்கையில்லாமலேயே, என்று கடவுள் நம்பிக்கையை மறுப்பது தொடங்கி, புறக்கணிப்பின் வலி, நமக்கென ஒரு நாடு இல்லை. அரசாங்கம் இல்லை, வேறுமொழி பேசும் தலைவர், வேற்று மனிதர் ஆதிக்கம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியைக் குறிப்பது என்று 1967-க்குப் பிறகு நாடே குட்டிச்சுவராகப் போச்சு என்று இன்றும் திராவிட எதிர்ப்பாளர்கள் பேசிக்-கொள்வதும், ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தன்மையை உணர்ந்து கொள்ளாமல் விமர்சனம் செய்து கொண்டிருப்பதையும் நாவலில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பதிவு-செய்திருக்கிறார். அதேநேரத்தில் தமிழகத்தின் பூர்வ மதமாகக் கருதப்படும் பௌத்தம் எப்படி சைவ மதத்தால் கொஞ்சம் கொஞ்சமாக விளிம்பு நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்பதைப் பற்றியும் விளக்கியுள்ளார். கல்புர்கி, கௌரி லங்கேஷ் வரிசையில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஆவணப்படம் எடுத்த சரவணன் கொலை செய்யப்பட்டான் என்பதன் மூலம் இக்கால அறிவுசார் சமூகம் ஒடுக்கப்-படுவதையும் பதிவுசெய்துள்ளார்.

அரசுமீது, சக மனிதன்மீது, சமூகத்தின்மீது நம்பிக்கையின்மை அதிகரித்து வந்து-கொண்டிருக்கும் காலகட்டம் இது. ஆனால், இன்றுவரை ஏதோவொரு நம்பிக்கையில்தான் ஒவ்வொருவரும் வாழ்க்கையை வாழ்ந்து-கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் மனிதர்கள்மீதும் வாழ்வின்மீதும் நம்பிக்கை ஏற்படுத்தும் வார்த்தைகளை விதைத்துச் செல்கிறார்.

முதலில் தமிழ்மகன் ஒரு பத்திரிகையாளர். அதன்பின்னர்தான் எழுத்தாளர் என்பது இந்த நாவலை நாம் வாசிக்கும்போது அறிந்து-கொள்ளும் மற்றுமொரு விஷயம். ஆம், இன்றைய கால பத்திரிகை சூழலில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் கதையின் ஊடே படைப்புச் சாத்தியமாகப் பதிவுசெய்கிறார்

‘ஜெர்மனியில் வேர் என்கிறார்கள்; தெலுங்கில் எவ்ரு என்கிறார்கள்; தமிழில் யார் என்கிறோம்’ எனத் தமிழின் யார் என்பது திரிந்தது பற்றிக் கூறுகிறார். இதேபோல நெருப்பு, நீர், ஊர், கண், மாடு போன்ற பல சொற்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரே போல பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் சுட்டிச்செல்கிறார். இப்படித் தமிழ் மொழியின் வேர்கள் இந்திய அளவில் உலக அளவில் எங்கெல்லாம் பரவிக்கிடக்கின்றன என்பதை நாவல் முழுவதும் பதிவு செய்துள்ளார். பல்லாயிரம் தமிழ்ச் சொற்கள் கொரிய, ஜப்பானிய, சீனம் உள்ளிட்ட உலக மொழிகளில் எப்படி பரவின என்ற ஆதாரமான சரித்திரக் கேள்வியை அறிவியல் கதையாக மாற்றித் தந்ததுதான் தமிழ்மகனின் படைப்புத் திறமை.

கீழடிக்கு மறுப்புத் தெரிவித்து குஜராத்தில் அகழ்வாய்க்கு அனுமதி அளித்திருப்பது, ராஜீவ் காந்தி படுகொலையைப் பின்னியுள்ள மர்மங்கள் என எல்லாமே தமிழுக்கு எதிராக திரும்பிய தருணங்களை கதாபாத்திரங்கள் வாயிலாகப் பேசவிட்டிருக்கிறார். நம் கண் முன்னே நகர்ந்துபோன காலத்தைக் கட்டுடைக்கிற கதையாக இதைக் கொண்டாடலாம்.

இது மட்டுமல்லாமல் தமிழ் மொழியில் காணப்படும் இலக்கணக்கூறுகளை ஒரு மொழியியல் ஆய்வாளனைக் காட்டிலும் மிக எளிமையாக விளக்கிச் செல்கிறார்.

நாவலில் கரிகாலச்சோழன், திருவள்ளுவர், பிசிராந்தையார், மருதன், நம்பி எனப் பல கதாபாத்திரங்கள் கி.மு.3017, 2008, கி.பி.507, 1924, 2006, 2017 என பல காலகட்டங்களில் வந்துபோகின்றன. எல்லாப் பாத்திரங்களும் தமிழின் தொன்மையை, தமிழ் ஏன் பூர்வ-மொழியாக இருக்கிறது என்பதையும் விளக்கிச்செல்கின்றன. நாவலில் ஹரப்பா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் எனப் பல்வேறு நாகரிகங்களில் திராவிடத்திற்கான கூறுகள் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவற்றை-யெல்லாம் ஆதாரப்பூர்வமாக சரியான அளவில் தொகுத்துக் கொடுத்துக்கொண்டே சொல்கிறார். தமிழ்மகன் மிகவும் மென்மை-யானவர்தான். ஆனால், தன்னுடைய கருத்தைத் தன் எழுத்தின் வழியாகக் கடத்தும்போது அது எப்படி இவ்வளவு காத்திரமாக வெளிவருகிறது என்பதை பெரிய ஆச்சர்யத்தோடு பார்க்க வைத்துள்ளார். எவ்வளவு அழுத்தமாக தன் எழுத்தின் வழி ஒரு கட்டத்தில் நாவலில் இருக்கிறோமா தமிழ்மொழி பற்றிய கல்வெட்டு, செப்பேடுகளின் தரவுகளை வாசித்துக்-கொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் தோன்றும் அளவு அடர்த்தியாக இருக்கிறது அவரது எழுத்து. இந்த அதீத தரவுகள்தான் இந்த நாவலில் இருக்கும் ஒரு சிக்கலும்கூட. ஆனால் தமிழ்மகன் வார்த்தையில் இலக்கியத்தை-விட வரலாறு முக்கியம். வரலாற்று இலக்கியம் அதைவிட முக்கியம் என்பதை மனதில் இருத்திக்கொண்டோமானால் அந்தத் தரவுகளின் தேவையின் நியாயம் நமக்குப் புரியும். தன் நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக அலையும் தேவ் என்ற தமிழ்மகன் வெண்ணிக்குயத்தார் வேங்கை நங்கூரத்தில் எழுதிய குறிப்பின் மற்றொரு பகுதியைச் செவ்வாய் கிரகத்தில் இரண்டாம் பாகத்தில் தேடிச் சொல்வதற்குமுன், நாவலாசிரியராக, திராவிட அரசியல்வாதியாக, புனைவெழுத்-தாளாராக, மொழியியல் அறிஞராக, வரலாற்று ஆய்வாளராக, எதிர்காலவியல் விஞ்ஞானியாக, மனித மனங்களை உணர்ந்த சக மனிதனாக என ஒரே நேரத்தில் பல மனிதனாக இருக்கும் விசித்திரமான அவரின் மூளையை ஒரு முறை மல்டிலேயெர் எஸ்.எஸ்.டி ஸ்கேனர், நியூரோ ட்ரான்ஸ்மிஷன் ஸ்கேனர் மூலம் ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *