தந்தை பெரியாரின் பிளாட்டோ!

டிசம்பர் 1-15 2018

                                                 வழக்கறிஞர் ம.வீ.கனிமொழி

ஆசிரியர் என்றால் பள்ளி ஆசிரியர் என்று நினைத்துக் கொண்டிருந்த சிறுவயதைத்தாண்டி, அவர் ‘விடுதலை’ ஆசிரியர் என்று புரிந்து கொண்ட பதின்ம வயதினைத் தாண்டி, திராவிடர் இயக்கத்தில் உள்ள கொள்கை குடும்பத்தினர் அனைவருக்கும், தமிழ்நாட்டின் வளமையான எதிர்காலத்திற்கும் அவர்தான் என்றென்றும் ஆசிரியர் என்று புரிந்து கொண்ட முப்பதுகளின் நடுப்பகுதி வரை எப்போதும் எங்களைப் போன்றவர்களுக்கு ஆசிரியரின் உழைப்பும் பணியும் வியப்பினை அளிப்பதோடு நெகிழ்ச்சியையும் அளித்தே வந்திருக்கின்றன. அந்த நெகிழ்ச்சி தரும் அன்பில் இருந்தே இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்!

                                                            சாக்ரடீஸ்   பிளாட்டோ

தந்தை பெரியார் எனும் புரட்சிகர அணுகுண்டை தன் ஒவ்வொரு அணுவிலும் கொண்டு, தினமும் இன எதிரிகளை நோக்கி திராவிடர் எழுச்சியை கட்டியெழுப்பும் பெரும்பணியைத் தன் தோள்மேல் ஏற்று நடந்திடும் அரும்பணி ஆசிரியரின் பணி.  இந்தப் பணியின் தன்மையை ஆசிரியர் அவர்களே அய்யாவின் அடிச்சுவட்டில் (முதல் பாகம்) அவர் எழுத்துகளில், என்னவென்று எழுதுகின்றார்கள் தெரியுமா?!

“மக்கள்தம் நோய்போக்கும் மாமருந்து தந்தை பெரியார் அவர்கள்; நான் அதை மக்களிடம் கொண்டு செல்லும் மருந்தாளுநன். மருந்தை மாற்றிட மருந்தாளுநரால் முடியுமா? மருந்தின் அடியொற்றியே தானே மருந்தாளுநன் கடமை ஆற்றிட முடியும்?” அந்த வகையில், அய்யா அவர்கள் விட்டுச் சென்ற பணியினை முடிக்க, எந்தவித சலிப்பிற்கும் இடம் தராமல், ஓய்வில்லாமல் இன்று வரை உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்களுக்கு அகவை 86!! 86 வயதில், 76 ஆண்டுகள் பொதுவாழ்வில்தான் ஆசிரியர் அவர்கள் கழித்திருக்கின்றார்கள்.  பொதுவாழ்க்கை என்பது மலர்ப்படுக்கை அல்ல, முட்களின் பாதை; முட்களில் நடக்கும் வலியோடு வஞ்சனையும், சூழ்ச்சிகளும் அதிகரித்து நிலைகுலையச் செய்யும் பல நேரங்களில்! இந்தப் பாதையில் துணிந்து செல்ல ஆசிரியர் ஏற்றுக் கொண்டார் என்பது எளிதான செய்தி இல்லை. இந்த இடத்தில் தந்தை பெரியாரின் வரிகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாள்களுக்குள் மாதம் 1-க்கு ரூ..200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலைமை அடைந்து விட்டார். அவரது இயக்கம் சம்மந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தை பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழு நேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.”

எண்ணிப் பாருங்கள்!!

தனக்கு வளமான வாழ்க்கை காத்திருந்தும் இந்தப் பாதையை தந்தை பெரியாரின் கட்டளைக்கிணங்க ஆசிரியர் அவர்கள் ஏற்றுக் கொண்டார். பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன்  அழகிரி அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கை முழக்கத்தின் வீச்சினை பற்றிக் குறிப்பிடும்போது,

“ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால், எங்கள் தலைவர் பெரியார் இராமசாமியின் கொள்கை அண்ட பிண்ட சராசரங்களையும் தாண்டி அதற்கப்பாலும் பாயும்’’ என்று அரிமாவாக மேடைகளில் முழங்குவார்களாம். அந்த அடிப்படையில் தந்தை பெரியாரின் கொள்கைகளை, தந்தையின் பகுத்தறிவுச்  சுடரை இந்தியத் துணைக்கண்டம் தாண்டிச்சென்று ஏற்றிய பெருமை ஆசிரியர் அவர்களை மட்டுமே சாரும். ஆசிரியரின் வாழ்க்கையை நாம் உற்று நோக்குகின்றபோது, அங்கே தமிழ்நாட்டின் வரலாறும்  உள்ளடக்கம் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

தமிழ்நாட்டில் மட்டும் 69% இடஒதுக்கீடு இன்றளவும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது என்றால், அதற்குக் காரணம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 31_சி பிரிவின்கீழ் மாநில அரசே சட்டப் பேரவையில் சட்டமியற்றி, நாடாளுமன்றத்தில் ஒப்புதலையும் பெற்று 9ஆவது அட்டவணையில் சேர்த்தால், அந்தச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் நினைத்தாலும் கைவைக்க முடியாது என்ற  சட்ட நகலைத் தயாரித்து கொடுத்த  ஆசிரியரின் சட்ட அறிவு.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் சட்டத் திருத்தத்தை தந்தை பெரியார் தன் வாழ்நாளில் கடுமையான போராட்டங்கள் மூலம் நடத்திக்காட்டினார் என்று வரலாறு பதியும்போது, மறக்காமல் 76ஆவது சட்டத் திருத்தத்தை ஆசிரியர் வீரமணி, தந்தை பெரியாரின் மாணாக்கர் பார்ப்பனர்களைக் கொண்டே பார்ப்பனச் சூழ்ச்சியை முறியடித்து  பணி முடித்தார் என்றும் பதித்துக் கொள்ளும்.   அதுமட்டுமல்ல சமூகநீதிக் கொடியை வடக்கில் பறக்கவிட்ட பெருமை, தந்தை பெரியாரை வடமாநிலங்களில்  கொண்டுச் சேர்த்த பெருமை, மண்டல் பரிந்துரையை அமுல்படுத்த விபி.சிங் அவர்களுக்கு துணை நின்ற உறுதி என அனைத்தும்  ஆசிரியர் அவர்களின் சிறப்பே!

“சமூக நீதிக் களத்திலே பார் சாதனை மகுடம் பொறித்து விட்டார்; விந்திய மலையின் வடக்கில்கூட வீரமணிக்கே ஜிந்தாபாத்” என கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் அருமையாக ஆசிரியரின் பணிகளைப்  படம் பிடித்து தன் கவிதையில்  எழுதினார்கள்.

எப்போதும் தமிழ் இனத்தைப் பற்றிய சிந்தனை கொண்டு, இந்த இனத்திற்கு ஆரியத்தால் ஆபத்து வரும் போதெல்லாம் அதைத் தடுத்து, ஆரியத்தைத் துரத்தும் துணிவும் ஆசிரியருக்கு எப்படி வாய்க்கப் பெற்றது என்று தந்தை பெரியார் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், கூறும்போது, “தந்தை பெரியார் அவர்களிடத்தில் வீரமணி பெற்ற சரியான பயிற்சியும், அதனால் அவர் பெற்ற உறுதியும், வழக்கறிஞர் என்ற நிலையில் உள்ள ஆற்றலும், திராவிடர் கழகத்தினைச் சரியாக வழிநடத்தும் சக்தியை அவருக்கு அளித்துள்ளன’’ என்று சரியாகப் படம் பிடித்து காட்டுகின்றார். ஒரு பக்கம் இயக்கப் பணிகள், மறுபக்கம் எழுத்துப் பணிகள், தந்தை பெரியார் எழுத்துகளை காலவாரியாக தொகுத்தளிக்கும் பணி, கல்விப் பணிகள் என்று கடுமையான பணிச்சுமை ஆசிரியர் அவர்களை அழுத்தும்போதும், துவளாது நடைபோடும் பாங்கினைப் பார்க்கின்ற நமக்கெல்லாம் ஆசிரியர் எவ்வளவு பெரிய உந்து சக்தியாக, தூண்டுகோலாக விளங்குகின்றார்கள் என்பதை நாம் அறிவோம். இன்றைக்கு இத்துணை பணிகளுக்கிடையேயும் தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் ஒவ்வொரு ஆண்டும் புதுப் பொலிவுடன், சிறப்பாக வெளிவருகின்றதே? அந்தப் பணியை ஆசிரியர் எப்போது துவங்கினார் என்று தெரியுமா? 1963ஆம் ஆண்டு!!

அதற்கு முன் ஆசிரியர் சா.குருசாமி அவர்கள் நான்கு அணா விலையில் தந்தை பெரியார் பிறந்த நாளை ஒட்டி ஒரு மலர் வெளியிட்டிருந்தார் என்றாலும், ஆசிரியர் அவர்கள் எட்டணா விலையில் மலர் வெளியிட முடிவு செய்து, பல அறிஞர்களிடம், தலைவர்களிடம் அய்யாவின் தொண்டினைப் பற்றிக் கட்டுரைகள் வாங்கி, அதோடு அய்யா அவர்களின் கருத்துச் சிந்தனையையும் சேர்த்து மிகச் சிறப்பாக வெளியிட்டார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள்கூட ஒருமுறை மலரைப் பார்த்துவிட்டு, “நமக்கெல்லாம் தராத சுதந்திரத்தினை வீரமணிக்கு ஏராளம் தந்துள்ளார் அய்யா. அதனால்தான் ‘விடுதலை மலர்’ அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது. ஆச்சரியமாகத்தான் உள்ளது. வீரமணி காலம் ரொம்ப மாறிய காலமாகி விட்டது!’’ என்று நகைச்சுவை ததும்ப கூறினார்கள் என்று, ஆசிரியர் அவர்களே அய்யாவின் அடிச்சுவட்டில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

1963ஆம் ஆண்டு தொடங்கி 1973இல் அய்யா மறைகின்ற வரை,  தந்தை பெரியார் அவர்களே அந்த மலரினை வாசித்து மகிழ்ந்திருக்-கின்றார்கள். நினைக்கும்போதே பூரிப்பாக இருக்கின்றது அல்லவா? அந்தப் பணியை இன்று வரை ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதே நம் பூரிப்பிற்கு காரணம். அதுமட்டுமா? இன்று மிடுக்குடன் தோற்றமளிக்கும் எம்.ஆர்.இராதா மன்றம், மிகச் சிறப்பாக புதுப்பிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தபடுவது ஆசிரியர் அவர்கள் காலத்தில்தானே? இந்த மன்றம் ஏன் எழுந்தது என்ற வரலாற்றை நாம் அறிவோம்.

கிறித்துவர்கள் நடத்தும் மண்டபம் ஒன்றில் இவர்கள் கடவுள் மறுப்பளர்கள் என்று காரணத்தால் மறைமுகமாக நமக்கு இடம் தர மறுத்துவிட்டபோது, கட்டப்பட்டதே இந்த அரங்கம். அதன் திறப்பு விழாவில் தந்தை பெரியார் அவர்கள், “இந்த மன்றத்தைப் பொறுத்தவரை, இது எப்போதும் எல்லாத் தரப்பினருக்கும் கொடுக்கப்படும் ஒரு பொது மன்றமாகவே இருந்துவரும்; இருந்து வர வேண்டும் என்பதே எனது எண்ணம்’’ என்று கூறியதை, இன்றளவும் கடைபிடித்து வருகின்றவர் நம் ஆசிரியர் அவர்கள்.

தஞ்சை மாநகரில் தந்தை பெரியாரின் நூற்றாண்டு நிறைவு விழா  1979ஆம் ஆண்டு மூன்று நாட்கள் வெகுசிறப்பாக நடத்தப்-பட்டது. அந்த விழாவின் இரண்டாம் நாளில் தவக்குடி குன்றக்குடி அடிகளார், குவைத் செல்லபெருமாள் அளித்த பொன்னாடை-யையும், தங்க மெடலையும் ஆசிரியர் அவர்களுக்கு அணிவித்தார்கள்.  அந்த விழாவில் ஆசிரியர் அவர்களின் உரை மிகுந்த நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆசிரியரின் நினைவு இடுக்குகளில்கூட “பெரியார்” எனும் அந்த பெரும் தத்துவம் மட்டுமே என்றும் நிறைந்து இருக்கின்றது என்பதை பறைசாற்றுவதாகவே அந்த உரை அமைந்தது.

“நான் தந்தை பெரியாரின் அடிமையாக வாழ்நாள் முழுவதும் இருந்துவிட்டவன். என் நெஞ்சத்திலே என்றென்றும் அய்யா அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். ‘சபலத்திற்கு ஆளாகாதே’ என்று என்னை எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். வழக்கம்போல இந்தத் தங்க மெடலையும், நாம் துவங்க இருக்கும் மகளிர் பாலிடெக்னிக்கிற்கு வழங்க நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். ஒரே ஒரு வேண்டுகோள். இந்த மெடலுக்கு நடுவே இருக்கும் அய்யாவின் உருவம் பதிக்கப்பட்ட கல்லை மட்டும் எனக்கு நினைவாக வழங்க வேண்டும்’’ என்று உரையாற்றினார்கள்.

இன்று இத்துணை ஆண்டுகள் கழித்தும் ஆசிரியரின் இந்த உரையை படிக்கின்ற யாருக்கும், தந்தை பெரியார் மீது ஆசிரியரின் கொள்கைப் பிடிப்பும், பாசமும், அன்பும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கும்! “அய்யாவின் அடிச்சுவட்டில்’’ என்பவை வெறும் வாய்ச் சொற்கள் அல்ல, அவை உள்ளத்தின் உறுதியில் இருந்து எழுந்த சொற்கள் என்பதை ஆசிரியர் செய்யும் ஒவ்வொரு செயலிலும், எழுத்திலும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

நெருக்கடிக் காலங்களிலும்  இயக்கத்தினை – இயக்கப் பணிகளை தொய்வின்றி நடத்திக் காட்டியவர். 2015ஆம் ஆண்டு தாலி அகற்றும் போராட்டத்திற்கு உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தபோதும், அதை மேல்முறையீடு சென்று தடுக்க சூழ்ச்சிகள் நடந்தபோது, அண்ணல் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளில் மிகச்  சிறப்பாக எழுச்சியோடு நடத்திக் காட்டிய கொள்கைக்குன்று ஆசிரியர்.

படிக்கும்நேரத்திலும் பார்ப்பனர் கோட்டையை

இடிக்கும் நேரம் எட்டுப்பங் கதிகம்!!

விட்டே னாபார் தமிழரின் பகைவரைக்

கட்டாயம் தொலைப் பேனெனக் கழறும்

எட்டாம் பாத்தாண் டாசிரி யர்க்கொரு

சட்டாம் பிள்ளை என்னத் தகுந்தோன்!!

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஆசிரியரின் கொள்கைத் தீரத்தை நமக்கு நயம்பட கவிவரிகளில் விளக்குகின்றார்.

இன்றைக்கு தமிழ்நாடு விஷப் பாம்புகளிடம் சிக்கிக் கொண்டு இருக்கும் காலம் என்றாலும் நமக்கெல்லாம் தன்னம்பிக்கை கொடுப்பது ஆசிரியரின் வழிநடத்தல் தானே? கிரேக்கத்தில் மட்டுமல்ல; சாக்ரடீஸ்க்கு ஒரு பிளாட்டோ, எங்கள் தமிழ்நாட்டிலும் உண்டு; தந்தை பெரியாருக்கு ஆசிரியர் வீரமணி அவர்கள்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *