முனைவர் வா. நேரு
மாநில தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
‘பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடிந்த நிகழ்வு’ _அவ்வளவு எளிதான நிகழ்வு அல்ல. இரத்தமும் சதையுமாய் ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத்தின் கருப்பு மெழுகு-வர்த்திகளின் தியாகத்தால் விளைந்த விளைச்சல் அது. “நமக்குத்தானடி அந்தப் போர்ப்படை, நம்மை அந்தப் போர்ப்படைக்கு ஒப்படை” என களம் நோக்கி வந்த காளைகளால் விளைந்த விளைச்சல் அது. அந்தப் போர்ப்படையில் பள்ளி மாணவனாய், தான் படித்த காலத்தி-லேயே இணைந்தவர்தான் இன்றைய தன்மான இயக்கத்தின் தலைமகன், திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
என்ன கிடைக்கும் எனக்கு என அரசியலுக்கு வந்தவர்களல்ல, ‘படிக்காதே என்று சொல்கிறான், நம்மைத் தெருவிலே நடக்காதே என்று சொல்கிறான், நான் மந்திரம் சொல்லாமல் திருமணத்தை முடிக்காதே என்று சொல்கிறான், அவன் சொல்லும் மந்திரத்தில் நம்மை இழிவு படுத்துகிறான்’ எனத் தந்தை பெரியார் மேடைகளில் சொல்லச்சொல்ல, அதனைக் கேட்டு வெகுண்டெழுந்த இளைஞர் கூட்டம், மாணவர் கூட்டம் .’ஜாதி என்னும் தாழ்ந்த படி, நமக்கெல்லாம் தள்ளுபடி ‘ என திரண்டது மட்டுமல்ல, ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தினை எதிர்த்துச் சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கில் சிறையேகிய கூட்டம். ஒரு வாரத்திற்கு முன்புதான் நவம்பர் 26 முடிந்திருக்கின்றது. ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தினை எரித்துச் சிறையேகிய தியாகத் தழும்புகளின் கறுப்பு மெழுகுவர்த்திகளை நினைவில் கொள்ளும் நாள் சென்ற வாரம்தான் கடந்திருக்கின்றது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தொண்டர்கள் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாதவர்கள், இனமானத்தை மீட்பதற்காக தன்மானத்தையும் இழப்பதற்குத் தயாராக இருப்பவர்கள். தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின்னால், நூற்றாண்டு விழா நாம் கொண்டாட இருக்கும் அன்னை மணியம்மையாருக்குப் பின்னால், ஆரியத்தின் சூழ்ச்சிதனை, தமிழர்கள் ‘எரி முன்னர் வைத்தூறு போலக் கெட்டுவிடக் கூடாது’ என்பதற்காக ‘வருமுன்னர்க் காப்பவராய்-‘ தமிழகம் எங்கும் சுற்றி சுற்றி வரும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்க்கை என்பது முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை முறை.
ஒன்பது வயதில் மேடையில் ஏறத் தொடங்கி, 02.12.2018_ல் 86 வயதினைத் தொடும் தமிழர் தலைவரின் பொது வாழ்க்கை வயது 75. பொது வாழ்க்கையில் மட்டும் 75 ஆண்டுகள். இந்த 75 ஆண்டுகள் பொது வாழ்க்கை என்பது பூப்போன்ற வாழ்க்கையா இல்லை, இல்லை, போர்ப்படையில் இருக்கும் சிப்பாயின் வாழ்க்கை ஆரம்ப கட்டங்களில்! பின்பு போர்ப்படையினை நடத்திச்செல்லும் தளபதிகளில் ஒருவராய், இன்றைக்கு போர்ப்படையின் தலைவராய், வாழ்க்கை முழுவதும் போராட்ட வாழ்க்கைதான் அவருக்கு. கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் சிலர்தான், கண்ணுக்குத் தெரியாத இரட்டை நாக்கு உடைய, இரட்டை செயல் உடைய கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர். அய்யாவின் கருத்தினை ஏற்ற அந்த நாள் முதல் இந்த 86_ஆம் ஆண்டின் பிறந்த நாள் வரை அவருடைய வாழ்க்கை முறை என்பது முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை முறை.
நன்றாக மேடைகளில் பேசக்கூடிய பேச்சாளர்கள், இன்றைக்கு தாங்கள் பேச வரவேண்டுமென்றால், இந்த ஊருக்கு வரவேண்டும் என்றால் இந்த விடுதியில் அறை போடவேண்டும், இந்தந்த வசதிகள் செய்து தரவேண்டும் என்று கேட்கக் கூடியதை நாம் அறிவோம். தந்தை பெரியாரின் தொண்டர்கள், தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் ஊருக்கு ஒருவர் இருவர். அவர்கள் ஊரினை எதிர்த்து, உறவுகளை எதிர்த்து, ஜாதித் திமிரினை எதிர்த்து களத்திலே நிற்பவர்கள். அந்தத் தோழர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலே போய்ப் பேசவேண்டும். ஊர் ஊராய் அய்யா ஆசிரியர் அவர்கள் போய்ப் பேசியிருக்கின்றார். கிடைக்கின்ற பேருந்துகளை பிடித்து, வாகனங்களைப் பிடித்து எப்படி நாடோடிகள் ஓடிக்கொண்டே இருப்பார்களோ அப்படி ஒரு ஓட்டத்தை அய்யா ஓடியிருக்கின்றார், ஓடிக் கொண்டிருக்கின்றார். மறைந்த மதுரை வழக்கறிஞர் அண்ணன் கி.மகேந்திரன் அவர்கள் அடிக்கடி ஆசிரியர் அவர்களின் பயணங்களைப் பற்றிச் சொல்வார். ஆசிரியர் அவர்களை பொதுக்கூட்டம் முடிந்த பின்பு எப்படிப்பட்ட வாகனங்களில் எல்லாம் அனுப்பி வைப்பார்கள் என்று. நாங்கள் ஒருமுறை மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தோம் என்றார். கலைஞர் அவர்களோடு மாட்டு வண்டியில் மொளைக்கம்பை பிடித்துக்-கொண்டு சென்ற இடங்களை எல்லாம் ஆசிரியர் அவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்-றோம். நடையாய், தோழர்களின் மிதி வண்டிகளின் பின்புறம் அமர்ந்து, மாட்டு வண்டியில், சைக்கிள் ரிக்சாக்களில், கார்களில், புகைவண்டியில், ஆகாய விமானங்களில் என பயணங்களில் எத்தனை வகையுண்டோ அத்தனை வகைகளிலும் கடந்த 75 ஆண்டுகளாய் பயணம் செய்து கொண்டே இருக்கின்றார் அய்யா ஆசிரியர்.
இயக்கத்தின் ஆரம்ப கட்டங்களில், முடி திருத்தகங்களே (சலூன்) நமது இயக்க சிறப்புப் பேச்சாளர்களின் இரவு தங்கும் விடுதியாக இருந்திருக்கின்றன. இன்றைக்கு போல அன்றைக்கு விடுதிகள் இல்லை. பெரும்பாலும் ஆறுகள்தான். ஆறுகளில் குளித்துவிட்டு, தங்களது துணிகளைத் துவைத்து காயப் போட்டுவிட்டு பின்பு தோழர்கள் தங்கச் சொல்லும் இடங்களில் தங்கி, இரவு பிரச்சாரம் செய்துவிட்டு பின்பு கிடைக்கும் வாகனத்தில் ஏறி அடுத்த ஊர்ப்பயணம் என்றுதான் ஆசிரியர் அவர்களின் பிரச்சாரப்பயணம் ஆரம்ப கட்டங்களில் இருந்திருக்கின்றது. அன்றைக்குச் சாலைகள் மட்டுமல்ல, சமூகமே மிகக் கரடுமுரடாக, காட்டுமிராண்டித்தனம் அதிகமாக இருந்த காலம். அந்தச் சமூகத்தினை திருத்திடப் புறப்பட்ட தந்தை பெரியாரின் தலை மாணாக்கராய் வலம் வந்தவர், வந்து கொண்டிருப்பவர் அய்யா ஆசிரியர் அவர்கள். அவரின் வாழ்க்கை முறை என்பது முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறை, இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டிய, அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை முறை.
தமிழகத்திற்குள் கணினி வந்ததே 1990_களுக்குப் பிறகுதான்… 2000_க்குப் பிறகுதான் மின்னஞ்சல்… 2010_க்குப் பின்தான் முகநூல் (பேஸ்புக்), கட்செவி (வாட்சப்) போன்றவைகள் எல்லாம். இப்போதே நமது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உண்மையைப் புரியவைக்க படாதபாடு படவேண்டியிருக்கிறது. இந்த வசதிகள் எல்லாம் இல்லாத காலம்… பத்திரிக்கைச் செய்திகளை மட்டுமே மக்கள் வாசித்த காலம்… வானொலிச் செய்திகளை மட்டுமே மக்கள் கேட்ட காலம்… வானொலியும் பத்திரிக்கைகளும் பெரும்பாலும் பார்ப்பனர்கள் கைகளில் இருந்த காலம்… உண்மையை உரக்க சொல்வதற்காக தந்தை பெரியார் ஊர் ஊராய் அலைந்த காலம்… அவரின் ஈடு இணையற்ற தன்னலமற்ற சுற்றுப்பயணம், நமது கண்களில் கண்ணீரை வரவழைக்கும். தனது மாணவர் பருவம் முதல் தந்தை பெரியாருக்குப் பின்னால், தந்தை பெரியாரின் தத்துவத்திற்காக சுற்றுப்பயணம் செய்ய ஆரம்பித்தவர் அய்யா ஆசிரியர் அவர்கள். அவரின் சுற்றுப்பயணம் 75 ஆண்டுகளைத் தொட்டிருக்கின்றது. அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்க்கை முறை ஒரு நாடோடியைப் போன்ற வாழ்க்கை முறை!
சென்ற 18.11.2018 அன்று திண்டுக்கல்லில், திண்டுக்கல் மண்டலத் தலைவர் அண்ணன் வீரபாண்டியன் அவர்கள் வீட்டுத் திருமணம். பெண் வீட்டாரின் விருப்பத்திற்கு ஏற்ப காலையில் 8 மணிக்குத் திருமணம். காலையில் 7.30 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்த அய்யா ஆசிரியர் அவர்கள் திருமண வீட்டிற்கு காலை சரியாக 7.55க்கெல்லாம் வந்து விட்டார். திருமண வீட்டில் முன்னாள் அமைச்சர் திரு. இ.பெரியசாமி அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் மற்றும் பலர் உரையாற்ற, அய்யா ஆசிரியர் அவர்கள் வாழ்க்கை இணை ஏற்பு விழாவிற்கு தலைமை தாங்கி, மணமக்களை உறுதிமொழி ஏற்றுக்கொள்ளச் சொல்லி, வாழ்க்கை இணை ஏற்பு விழாவை நடத்தி வைத்தார்கள். விழா முடிய காலை 9.45 மணி ஆனது. அதுவரை அய்யா ஆசிரியர் அவர்கள் காலை உணவை உண்ணவில்லை. மண வீட்டார் காலை உணவினைக் கட்டித்தர, அதனை வேனில் ஏற்றிக் கொண்டு, திண்டுக்கல்லைத் தாண்டி வந்தவுடன், ரோட்டோரத்தில் அய்யா ஆசிரியரின் வண்டி நிறுத்தப்பட்டது. காலை உணவை ரோட்டின் ஓரத்தில் வேனுக்குள் இருந்தபடியே சாப்பிட்டார். மாலையில் திருச்சியில் புத்தக வெளியீட்டு விழா, அதற்கு இடையில் நிகழ்ச்சிகள். அடுத்தடுத்த நிகழ்வுகள் என நேரம் அழுத்த, ஓடுகின்ற வண்டியினை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி சாப்பிட ஆரம்பித்தார். அப்பொழுது ஆசிரியர் சொன்னார், “நாடோடி வாழ்க்கை, நடுரோட்டில் சாப்பாடு இதுதான் எனது வாழ்க்கை.’’ அருகில் இருந்த எங்களுக்கு நினைவுகள் ஓடின. எத்தனை வருடங்களாக இந்த நாடோடி வாழ்க்கை… 9 வயதில் தொடங்கி இன்று வரை ஓட்டம், ஓட்டமாக அவர் ஓடிக்கொண்டே இருப்பதற்கு என்ன அடிப்படை?
புகழ்பெற்ற எழுத்தாளர் ராகுல் சாங்கிருத்யாயன் “ஊர் சுற்றிப் புராணம்” என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கின்றார். அந்தப் புத்தகத்தில் ஊர் சுற்றியாய் (நாடோடியாய்) இருப்பதன் அவசியம் பற்றியும் அதனால் விளையும் நன்மைகள் பற்றியும் நிறைய எழுதியிருப்பார். அதில் “ஊர்சுற்றி பற்றற்றவனாக இருப்பான்; ஆனால் அதே சமயத்தில் அவன் உள்ளத்தில் மானிட சமுதாயத்தின்பால் அபாரமான அன்பு நிறைந்திருக்கும். அதுவே அவனுடைய உள்ளத்தில் கணக்கற்ற நினைவுகளைச் சேர்த்துவிடும். தற்காலிகமாக அமையும் ஒரு சில நட்புகள் ஊர்சுற்றியின் நினைவுகளில் நீங்கா இடத்தைப் பெற்றுவிடுகின்றன. உதவி செய்தவர்களை, மகிழ்ச்சியும் நிம்மதியும் அளித்தவர்களைத் தன் உள்ளத்தில் நினைவாகத் தேக்கி வைத்துக் கொள்கிறான் ஒரு நல்ல ஊர்சுற்றி” எனக் குறிப்பிடுகின்றார். எனக்கு அந்தப் புத்தகத்தைப் படித்தபோது அய்யா ஆசிரியர் அவர்களின் நினைவுதான் வந்தது. தந்தை பெரியாரின் தொண்டர்கள் துறவி-களுக்கும் மேலானவர்கள், துறவிகளுக்கு கூட சொர்க்கம் போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். எங்களுக்கு அதுவும் இல்லை” என்பார் ஆசிரியர் மேடைகளில்.
‘போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், எனது பணி தந்தை பெரியாரின் பணி முடிப்பதே’ என உற்சாகம் கொப்பளிக்க அவர் ஒவ்வோர் இடமாக முக்கால் நூற்றாண்டாகச் சுற்றியடிக்கும் சூறாவளியாய் சுற்றிக்கொண்டே இருக்கின்றார். “சோம்பலும், சலிப்பும் தற்கொலைக்குச் சமம்” என்னும் தந்தை பெரியாரின் அறிவுரையைப் படித்த தோழர்கள் கூட சில நேரங்களில் சோர்வுறும் நேரத்தில் அய்யா ஆசிரியர் அவர்களை நேரில் பார்த்தால், அவரது உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்து தங்களுக்கு ஒரு புது வேகம் கிடைத்த பாணியில் பணியாற்றுவதைப் பார்க்க முடிகின்றது.
பொதுவாழ்வில் அய்யா முக்கால் நூற்றாண்டைத் தாண்டியிருக்கின்றார். பொது வாழ்வில் நூற்றாண்டையும் அய்யா ஆசிரியர் அவர்கள் தாண்டுவார். தாண்ட வேண்டும் இன்னும் தமிழினம் தலை நிமிர…! கூகுள் தேடுபொறித் தளத்தில் நாம் எந்த விளக்கம் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் விளக்கம் வருவதைப் போல, திராவிட இயக்கத்தின் கூகுள் தேடுபொறித் தளமாய் அய்யா ஆசிரியர் இருக்கின்றார். எத்தனை எத்தனை செய்திகள், எத்தனை எத்தனை குறிப்புகள்… அய்யாவின் அடிச்சுவட்டில் ஆறாம் பாகம் வெளிவரப் போகின்றது. இயக்கத்திற்-காகப் பாடுபட்டவர்கள், இன்னல் பட்டவர்கள், இயக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, உழைப்பால், உணர்வால், பொருளால், உதவிய பெருமக்கள் அத்தனை பேரின் பெயர்களையும் ஊர்களையும் தாங்கி வரும் வரலாறு அல்லவா_ ‘அய்யாவின் அடிச்-சுவட்டில்’ புத்தகங்கள்….! தன் வரலாறும், இயக்க வரலாறும் வெவ்வேறு அல்ல, இயக்க வரலாற்றின் பகுதிதான் என் வரலாறு என்று சொல்லும் விதமாக அய்யாவின் அடிச்சுவட்டில் பாகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. படித்துக் கொண்டிருக்கின்றோம்.
நாடோடி வாழ்க்கையில் அவர் சேகரித்த செல்வங்களாய் எத்தனை எத்தனை புத்தகங்கள்? அத்தனையும் பெரியார் திடல் நூலகத்தில் தேனாய் ஓரிடத்தில் இருக்கின்றன. அவரின் நாடோடி வாழ்க்கையில் எத்தனை எத்தனை அனுபவங்கள்? அத்தனையும் அனுபவச் சோலைக் களஞ்சியமாய் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொகுப்பாய் நம் கைகளில் தவழ்கின்றன. மருத்துவம், உளவியல், பகுத்தறிவு, மேதைகளின், அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு எனப் பல பூக்கள் பூக்கும் பூஞ்சோலையாய் நமக்கு கிடைக்க காரணம் இந்த நாடோடி வாழ்க்கைதானே…. பயணம் செல்லும் நேரத்திலேயே படிப்பதும், குறிப்புகளை எடுப்பதும், எழுதுவதும், எழுதுவதை அய்யா அனுப்பிட விடுதலையில் அது உலகம் முழுவதும் பரவுவதும் இந்த நாடோடி வாழ்க்கை முறையில்தானே!
பெரியாரியல் இயக்கத்திற்காக ‘நாடோடி வாழ்க்கை, நடுரோட்டில் சாப்பாடு’ என ஓடிக் கொண்டிருக்கும் அய்யா ஆசிரியர் அவர்களால் பயன்பெற்ற நாமெல்லாம் நன்றி சொல்வது அய்யா ஆசிரியர் அவர்களுக்கு மட்டுமல்ல, அய்யாவின் இயக்க ஓட்டத்திற்கு எந்த விதத் தடையும் இல்லாமல், குடும்பத்தினை நிர்வகித்து அவருக்கும் உதவியாய், இயக்கத்திற்கும் உதவியாய் அன்று முதல் இன்றுவரை இருக்கும் அம்மையார் மோகனா அவர்களுக்கும் சேர்த்துதான் நன்றி நன்றி என்று சொல்கின்றோம்.
பகுத்தறிவு எழுத்துகளின் நடமாடும் தொகுப்பு அய்யா ஆசிரியர் அவர்கள்… பகுத்தறிவு எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் முன்னத்தி ஏர் அய்யா ஆசிரியர் அவர்கள். அவராலும் அவரது பயணத்தாலும் விளைந்த பயனும், இன்னும் விளையப்போகும் பயனும் எண்ணிலடங்கா…. அவரின் தொண்டர்கள் நாம் என்பதில் நாம் கொள்ளும் மகிழ்ச்சி அளவற்றது… அவர் வழி நாம் நடக்கின்றோம் என்பது மிக்க மகிழ்ச்சியை நமக்களிப்பது. தொடரட்டும் அய்யாவின் நாடோடி வாழ்க்கை முறை… நாமும் தொடர்வோம் அவரது வழிமுறையை, வாழ்க்கை முறையை…
வாழ்க! வாழ்க! வாழ்கவே அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்….