இயக்க வரலாறான தன்வரலாறு(215)
ஓமந்தூராரின்
உறுதி வாய்ந்த உள்ளம்
– கி. வீரமணி
சென்னை கடற்கரையில் காந்தி சிலை அருகே பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட புரடசிக்கவிஞர் பிறந்த நாள் விழாவான தமிழர் கலை விழா 29, 30.04.1985 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.
இரண்டு நாளும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொண்டார்கள். “இந்தக் கலைவாணன் பொம்மலாட்டம் குழுவினுடைய அரும்பணியினை கொள்கை விளக்கப் பணியினை தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துக்களை, சிற்றூர், பட்டிதொட்டி, குக்கிராமம் இங்கெல்லாம் பரப்புகின்ற வகையில் இந்தக் கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்தக் குழுவின் அரும்பணியாற்றி வருகின்ற முத்துக்கூத்தனுக்கும், அருமைசெல்வன் கலைவாணனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.
இவ்விழாவில் நான் உரையாற்றும்போது, “பார்ப்பனர்கள் என்னை அழிக்க வேண்டும் என்ற பார்ப்பன பெரு உள்ளங்கள் பார்ப்பன மூலவர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று சொன்னால் அவர்கள் அதிலே வெற்றி பெறாமல் போய்விடுவார்களா அல்லது நாங்கள் அந்த வெற்றியைத் தாண்டி வெற்றி பெற்றுவிடுவோமா என்று நான் நினைத்துப் பார்த்ததுண்டு. என்னுடைய இறுதி மூச்சு எத்தனை நாளைக்கு இருக்கும் என்பதைப் பற்றி யாருக்கும் உத்தரவாதம் கிடைக்காது என்பதைப் போல -_ அந்த இறுதி மூச்சு என்னிடமிருந்து பிரிக்கப்படுகின்ற வரையிலே மானத்தையும், அறிவையும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஊட்டுவதற்குத் தந்தை பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியிலே, புரட்சிக்கவிஞர் வழியிலே நின்று நித்தம் நித்தம் உழைப்பேன்’’ என்று உரை ஆற்றினேன். கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக மாநாடு போல் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
4.5.1985 அன்று தொலைக்காட்சியில் இந்தித் திணிப்பைக் கண்டித்து இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை தொலைக்காட்சி நிலையம் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் எனது தலைமையில் நடைபெற்றது. டாக்டர் சந்தோஷம் தொடங்கி வைத்தார். பழ.நெடுமாறன் வாழ்த்துரையாற்றினார்.
தமிழ் ஈழ விடுதலை நிதியளிப்பு மாநாடு வாணியம்பாடியில் புதூர் கண்கார்டிமா மேல்நிலைப்பள்ளி திடலில் 2.5.1985 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியர் அப்துல் ரகுமான் தலைமை வகித்து உரையாற்றினார். பேராசிரியர் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார்கள்.
கவிஞர் குடியரசு அவர்கள் தொடக்க உரையாற்றவும், நாட்றம்பள்ளி அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தி.அன்பழகன், உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், மதுரை ஆதினம் ஆகியோர் பேசினார்கள்.
இறுதியாக நான் சிறப்புரை ஆற்றினேன். ஈழத் தமிழ் அமைப்புக்காக வசூல் செய்த தொகை ரூபாய் அறுபத்தி இரண்டாயிரத்தை பேராசிரியர் அப்துல் ரகுமான் அவர்கள் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களிடம் வழங்கும்பொழுது மக்களின் ஆரவாரக் கைத்தட்டல் மாநாடு அதிரக்கூடிய அளவுக்கு இருந்தது.
புதுவை பெரியார் நகரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, தமிழீழ விடுதலை விளக்கப் பொதுக்கூட்டம் 08.05.1985 அன்று இரவு 7.30 மணிக்கு தந்தை பெரியார் நகர் கலைஞர் வீதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் பொன்முடி, பழனிவேல், முன்னாள் அமைச்சர் பெருமாள் ராஜா, புதுவை மாநில முன்னாள் முதலமைச்சர் டி.இராமச்சந்திரன் ஆகியோர் தந்தை பெரியார் அவர்கள் பற்றியும், அவரது பொது தொண்டு பற்றியும் உரையாற்றினார்கள்.
இறுதியாக நான், தந்தை பெரியார் அவர்களின் சிலையினை திறந்து வைத்து உரையாற்றினேன். என்னுடன் புதுவை மாநில திராவிடர் கழகத் துணைத் தலைவர் (தொழிலாளர் கழகச் செயலாளர்) விஜயன், எப்.டி.பில் தலைவர் தட்சிணாமூர்த்தி, திருப்பத்தூர் ஏ.டி.கோபால் ஆகியோர் உடன் வந்திருந்தார்கள்.
அய்யா அவர்கள் ஒருவர்தான் பொதுமக்கள் தனக்குக் கொடுத்த காலணா, அரையணா காசுகளை எல்லாம் சேர்த்து, இன்றைக்கு இலட்சங்களாக கோடிகளாக ஆக்கி, அது திரும்பவும் பொதுமக்களுக்கே பயன்படும்படி செய்துவிட்டுப் போனவர் உலகிலேயே தந்தை பெரியார் ஒருவர்தான்.
ஆனால், ஆத்திகராக விளங்கிய ரமண மகரிஷி பகவான். அவருடைய சொத்து சம்பந்தமான வழக்கிலே தான் சந்நியாசமே வாங்கவில்லை என்று சொல்லி தன்னுடைய சொத்துகளை அனைத்தும் தன்னுடைய உறவினருக்கே சென்று சேரும்படிச் செய்தார் என்ற பல செய்திகளைக் கூறினேன்.
தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்புக் குழு (டெசோ) இன்று (13.05.1985) சென்னையில் கூடியது. குழுவின் தலைவராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குழுவின் உறுப்பினர்களாக நானும், திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் பழ-.நெடுமாறன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.
தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் குறிக்கோள்கள் வருமாறு:
1 உரிமை பறிக்கப்பட்டு இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு வரும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீர்விற்கு தமிழ் ஈழத் தனிநாடு அமைப்பது தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மையை இந்தியாவின் பிற மாநிலங்களும், உலக நாடுகளும் உணரச் செய்வதற்கும் தக்க ஆதரவு திரட்டுவதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
2. தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு உதவுதல்.
3. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள தமிழர்கள் அனைவருக்கும் உரிய உதவிகள் கிடைக்கச் செய்தல்.
இந்த அமைப்பின் குறிக்கோளில் உடன்பாடு உள்ள பிற அமைப்புகளுடனும், ஆதரவாளர்-களுடனும் தொடர்பு கொண்டு அவர்களையும் அங்கம் வகிக்க முயற்சிகளை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
கரூர் தோட்டக்குறிச்சி கிராமத்தில் நடந்த சாதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கழகத் தோழர்களுடன் 14.05.1985 அன்று மாலை சந்தித்து ஆறுதல் கூறினேன். ஒவ்வொரு வீட்டுத் தாழ்த்தப்பட்ட தாய்மார்கள் அழுதுகொண்டே, சாதிக் கலவரத்தால் நெல்மூட்டைகள், பொருட்கள், வீடுகள் எரிந்து சாம்பலாயிருக்கின்றன. இந்த சாதிக் கலவரம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கவுண்டர்களுக்கும் இடையே நடைபெற்றது. தாழ்த்தப்பட்ட பள்ளர் சமுதாயக்காரர்கள் மேல்ஜாதிக் கவுண்டர் மக்களுக்கு எப்பொழுதும் அடங்கி நடக்க வேண்டியவர்கள். இன்றைக்கு மற்றவர்களைப் போல அவர்களும் உரிமைக் குரல் எழுப்பியதினுடைய விளைவாக இந்த ஜாதிக் கலவரம் ஏற்பட்டுள்ளது என்று கூறி அதைக் கண்டித்தேன்.
வடசென்னையில் கடந்த மாதம் 27ஆம் தேதி என்னைக் கொலைச் செய்ய முயற்சி நடந்தது. இது என் வாழ்க்கை மயிரிழையில் உயிர்தப்பிய விவகாரத்தில், ராயபுரம் கிரேஸ் கார்டனைச் சார்ந்த ரவி என்பவனை போலீசார் கைது செய்தனர். அவனை முதல் குற்றவாளியாக்கி வழக்கு பதிவு செய்யப்-பட்டது. இ.பி.கோ.307ஆவது செக்ஷனின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பிரிவில் வழக்கு தொடரப்பட்டால் ஜாமீனில் வெளியே வரமுடியாது. உயர்நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசேஷ அனுமதியுடன்தான் ஜாமீனில் வரமுடியும்! ஆனால், அந்தக் குற்றவாளி இப்போது சர்வசாதாரணமாக வெளியே வந்துவிட்டான்.
இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சில நபர்கள் இப்போது பகிரங்கமாக வெளியே உலவிக் கொண்டிருக்கிறார்கள். மேலிடத்து அரசியல் தலைவர்களை சரிசெய்து கொண்டிருக்கிறார்கள்.
(17.05.1985 அன்று) கொலைமுயற்சி தொடர்பாக அய்யனார் (வயது 32) என்ற மற்றொரு ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 15ஆம் தேதி நீதிமன்றத்தால் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அய்.ஜி. ஸ்ரீபால் இன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
இது தொடர்பாக ஏற்கனவே, ரவி, ஆனந்தன், மகேஸ் என்ற மூன்று ஆசாமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவி என்ற முதல் குற்றவாளி விடுவிக்கப்பட்டுவிட்டான். இதற்கு காவல்துறை அலட்சியம்தான் காரணம் என்பதை அய்.ஜி. மறுத்தார்.
புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருப்பதாகவும் அய்.ஜி. கூறினார்.
இந்தச் சதியில் சம்பந்தப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வரும் சில நபர்கள் அப்போது வடசென்னை பகுதியில், வெளிப்படையாகவே உலவிக்கொண்டிருந்தார்கள். மேலிடத்து அரசியல் தலைவர்களைப் பார்த்து எல்லாவற்றையும் சரிசெய்து விட்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஆக, ஆளுங்கட்சியின் அனுமதியோடுதான் இக்கொலை முயற்சி என்பது தெளிவாய்த் தெரிந்தது.
இலங்கைத் தமிழர் படும் துயரத்தை, மத்திய _ மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காக திராவிடர் முன்னேற்றக் கழகம் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றது. இதன் உச்சகட்டமாக 17.5.1985 அன்று தி.மு.க. தலைவர் கலைஞர் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழர்களின் மனக்கொதிப்பை மற்றவர்களுக்கு உணர்த்தும் போராட்டம் இது. இதனைக் கண்டித்து நான், காமராஜர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் ப.மாணிக்கம் உள்ளிட்டோர் கலைஞர் கைது குறித்து கண்டித்து இருந்தோம்.
19.05.1985 அன்று நாகர்கோயில் கோட்டாறு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். ‘நம்முடைய மக்களை ஒவ்வொரு ஜாதியாக ஆக்கி தனித்தனியாக பிரித்துவைத்து விட்டார்கள். இந்த ஜாதியினர் இத்தனை அடிக்கு மேல் வரக்கூடாது என்ற ஆக்கி வைத்திருக்கின்றனர். சில ஜாதியினரை குற்றப் பரம்பரையாகவே ஆக்கிவைத்து விட்டான். நம்மைத் தொடக் கூடாத ஜாதியாக, 4ஆம் ஜாதியாக, 5ஆம் ஜாதியாக ஆக்கிவிட்டான்.
இந்தச் சூழ்ச்சிக்கு பெயர்தான் பார்ப்பனியம் என்பது. 97 பேராக இருக்கும் நம்மை 970 பேராகவும், 9,070 பேராகவும் பிரித்து வைத்துவிட்டான்.
ஓமந்தூரார் அவர்கள் முதலமைச்சராக இருக்கின்றார். அப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். அதற்காக ஓமந்தூரார் அவர்கள் டெல்லிக்கு சிதம்பரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரை சிபாரிசு செய்கிறார்.
அதே பதவிக்காக ராஜாஜி அவர்கள் திருவேங்கடாச்சாரி என்பவரைப் போட வேண்டும் என்று சொல்லி நேருவிடத்திலே சென்று சொல்லுகின்றார். ஓமந்தூரார் அவர்கள் யார் சொன்னால் என்ன அவர் காங்கிரஸ் முதலமைச்சர். அப்பொழுது அய்.சி.எஸ். அதிகாரிகளுடைய கண்களில் எல்லாம் விரலை விட்டு ஆட்டியவர்தான் ஓமந்தூரரார் அவர்கள்.
பிரதமராக இருந்த நேரு அவர்கள் ஓமந்தூராரை டில்லிக்கு அழைத்து, சென்னை நீதிமன்றத்திற்கு- நீதிபதியாக திருவேங்கடாச்சாரியாரை போட வேண்டும் என்று ராஜாஜி அவர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? என்று நேரு கேட்டார்.
உடனே, ஓமாந்தூரார் அவர்கள் சென்னைக்கு வந்து நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் நன்றாகத் தெளிவாகப் பார்த்து யோசித்து-தான் நீதிபதி சோமசுந்தரம் அவர்களை சிபாரிசு செய்திருக்கிறேன. நீங்கள் ராஜாஜி சொன்ன திருவேங்கடாச்-சாரியார் அவர்களைப் போடுவதாக இருந்தால் இதோ என் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கடிதம் எழுதினார்.
அதனுடைய விளைவுதான் சிதம்பரத்தைச் சேர்ந்த நாகபூசணம் சோமசுந்தரம் அவர்கள் பார்ப்பனரல்லாத உயர்நீதி மன்ற முதல் தலைமை நீதிபதியாக அன்றைக்கு வந்தார் என்று எடுத்துக் கூறினேன்.
கலைஞர் கைது குறித்த செய்தியை அறிந்தவுடன் தோழர்கள் மரணம் அடைந்-துள்ளது வேதனைக்குரியது என்று 21.5.1985 அன்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை அவரை ஜெயிலில் சந்தித்து உரையாடும்போது வருத்தப்பட்டுக் கூறினேன். சிறையில் தி.மு.க. தலைவர் கலைஞருக்கு ‘முரசொலி’ தரப்பட்டாலும், முரசொலி என்ற தலைப்பு தவிர மற்றதெல்லாம் ‘கருப்புச்சட்டை போட்டுத்தான்’’ தருகிறார்கள். ‘விடுதலை’ ‘தினகரன்’, ‘எதிரொலி’ ஏடுகளை சிறையில் அவருக்குக் கொடுக்கப்பட்டாலும், மற்ற கைதிகள் தமது செலவில்கூட வாங்கிப் படிக்கக் கூடாது. அனுமதி இல்லை. 1983 சிறையில் அனுமதிக்கப்பட்ட பட்டியிலில் ‘விடுதலை’ இருந்தது. ஆனால், அதுவும் பிறகு தடை செய்யப்பட்டது என்று வேதனையுடன் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
சென்னை அசோக் நகரில் பல்லவன் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் 21.05.1985 அன்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
தமிழ்நாட்டில் இருந்து 15 கல் தொலைவில் உள்ள இலங்கையில் தமிழினம் வதைப்படுகிறது. சித்திரவதைக் கொடுமைகளுக்கு எல்லாம் ஆளாகி 80க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறார்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்ப் பெண்கள் சகோதரிகள் எல்லாம் கற்பழிக்கப்படுகிற கொடுமை உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.
இதை எதிர்த்து இங்கே குரல் கொடுக்கிறோம். கட்சிக் கண்ணோட்டம் இதில் இல்லை. 50க்கும் மேற்பட்ட நம்முடைய தமிழ் சகோதரர்களை விட்டே சவக்குழியை தோண்டச் செய்து அந்த குழிகளிலேயே உயிரோடு புதைந்த கொடுமை உலகில் எங்காவது உண்டா? என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள். நம் இரத்தம் எல்லாம் கொதிக்கிறது.
இந்த நிலையில் வதைப்படுவது தமிழன் என்பதால் மத்திய அரசு கேளாக் காதாக உள்ளது. நமது உணர்வுகளைப் பற்றி கவலைப்படாத நிலையில் மத்திய அரசு உள்ளது என்று பல்வேறு சம்பவங்களை எடுத்துக் கூறினேன்.
கீழ்தஞ்சை மாவட்ட சோழங்கநல்லூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு மாநாடு 28.05.1985 அன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது 27.05.1985 அன்று திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநாட்டில் கண்டனம் தெரிவித்து உரையாற்றினேன். பம்பாயில் தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள வடநாட்டுக்காரன் கொல்லப்படுவான் என்று ஒரு அமைப்பின் பிட் நோட்டிஸ் போட்டிருக்கிறார்கள். அதற்காக அவர் கைது செய்யப்பட்டிருப்பாக சொல்லப்படுகிறது. ஈரோட்டில் ‘தினமலர்’ பத்திரிகையை எங்கள் தோழர்கள் எரித்தார்கள் என்று சொல்லி செய்தியை பத்திரிகையில் போடும்போதே கீழே கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தி வருகிறது. அவ்வளவு விரைந்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.
ஆனால், என்னைக் கொலை செய்வேன் என்று இந்த திருவாரூர் பகுதியிலிருந்து பார்ப்பனர்கள் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதற்கு ஏதாவது பார்ப்பனர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? கிடையாது. இது பார்ப்பன தர்மமாக இருப்பதைக் கூறி கண்டன உரை நிகழ்த்தினேன்.
காந்தியாரைக் கொன்றவர்கள், காமராசாரை டில்லியில் கொல்ல, முயன்றவர்கள், அம்பேத்கருக்கு விஷம் வைத்த கெடுமதியாளர்கள் _ ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்தவர்களே, வன்முறையின் வடிவங்களாக ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி தமிழகத்தில் இவற்றை ஒழித்தே தீர்வோம் என்று மாநாட்டில் பிரகடனம் செய்து உரையாற்றினேன்.
28.05.1985 அன்று சென்னை மத்திய சிறையில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து உரையாற்றி வந்தேன். என்னுடன் மதுரை ஆதினகர்த்தார் அவர்களும் உடன் வந்திருந்தார். அப்போது, கலைஞர் அவர்களுடன் சி.டி.தண்டபாணி, செ.கந்தப்பன், துரைமுருகன், கென்னடி ஆகியோரும் இருந்தனர். மேலும், கலைஞர் அவர்களை மத்திய சிறையில் காணவந்த திராவிட முன்னேற்ற கழகத் தலைமை நிலைய செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, செ-.குப்புசாமி, நீலநாராயணன், மாயத்தேவர், சா.கணேசன் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினேன்.
மாலையில், மலேசிய திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 26 தோழர்கள், தோழியர்கள் அடங்கிய குழு மாலை விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்கள்.
மலேசிய திராவிடர் கழகத் தலைவர் ‘திருச்சுடர்’ கே.ஆர்.ராமசாமி அவர்கள் தலைமையில் தமிழகம் வந்துள்ள மலேசிய திராவிடர் கழகத் தோழர்கள் சுமார் ஒரு மாத காலம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். தஞ்சையில் பிரச்சாரப் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்கிறார்கள். அவரை விமான நிலையம் சென்று வரவேற்றேன். உடன் கழகத் தோழர்கள்.
திருவாரூரில் 01.06.1985 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழின எழுச்சிப் பேரணியுடன் அதனையடுத்து கழகப் பொதுக்-கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
குறுகிய கால ஏற்பாடாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை கழகத் தோழர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து வியப்பில் ஆழ்த்தினார்கள். இந்தப் பேரணியில் 70 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பேரணி, தோலி.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் துவங்கியது. நான் பேரணியைப் பார்வையிட்டு, பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
கரூர் வழக்கறிஞர் பி.ஆர்.குப்புசாமி புதல்வி சாந்திக்கும், ஜெயராம் பி.எஸ்.சி.க்கும் திருமணம் 09.06.1985 அன்று கொங்கு திருமண மன்றத்தில் கோவை பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் (மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர்) தலைமையில் நடைபெற்று விழாவிற்கு நான் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன்.
பழனியில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு லட்சம் நிதியளிப்பு விழாவும், பொதுக்கூட்டம் 11.06.1985 இரவு தேரடி திடலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு அர.சவகர் தலைமை வகித்துப் பேசினார். த.பா.பி. பொதுச்செயலாளர் கே.சின்னப்பன் முன்னிலை வகித்தார் சாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நான் மதுரை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு வசூலித்த முதல் தவணைத் தொகை ரூபாய் ஒரு லட்சத்தை என்னிடத்தில் வழங்கினார்கள். நிதி வழங்கும்போது மதுரை ஆதினகர்த்தனர், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.சாய்.பன்னீர்செல்வம், பழனி நகர ஜனதாக் கட்சித் தலைவர் சுந்தரம், நகர திமுக செயலாளர் குமாரசாமி மற்றும் பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் உடன் இருந்தனர்.
நிதியை பெற்றக்கொண்டு நான் உரையாற்றும்போது, “இன்றைக்கு நம்முடைய இளைஞர்கள் நினைத்ததை எதையும் சரியாக செய்து முடிக்கக் கூடியவர்கள் என்ற வகையிலே ஒரு அருமையான திருப்பணியை இங்கே செய்திருக்கின்றார்கள். பழனி என்று சொன்னால் திருப்பணி என்றுதான் சொல்லுவார்கள். அதே கோயிலுக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல. ஈழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வசூல் என்ற பெயராலே அது தெருப்பணியாகி இன்றைக்கு திருப்பணியாக நம்முடைய இளைஞர்கள் மிகச் சிறப்பாக அவையிலே இதை செய்து முடித்திருக்கின்றார்கள். ஈழத் தமிழர்களுக்கு அவர்களால் முடிந்த உதவியை வாரி வழங்கியுள்ளார்கள். பொதுமக்களும் இந்த நிதி அளிப்பிற்கு பெருந்துணையாக இருந்துள்ளனர் என்று குறிப்பிட்டேன்.
நிகழ்ச்சியில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் பலரும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகரின் நடைபாதைகளில் கோயில்களை அமைத்திருப்பவர்கள் அந்த நடைபாதைக் கோயில்களைத் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் போலீஸ் துணையோடு மாநகராட்சியே நடைபாதைக் கோயில்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு.(ப.உ.ச.) ப.உ.சண்முகம் அவர்கள் சட்டப் பேரவையில் தாக்கல் செய்த ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் வரவேற்று 18.06.1985 அன்று “தமிழக அரசின் முடிவுகளை வரவேற்கிறோம்’’ என்ற தலைப்பில் முக்கிய அறிக்கையை எழுதியிருந்தேன். மேலும், பள்ளி நேரங்களை தற்போது சுமார் காலை 10 மணி அளவில் துவங்குவதை மாற்றி 9 மணிக்குத் தொடங்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் திரு.அரங்கநாயகம் அவர்கள் கூறியுள்ளதையும் வரவேற்கிறோம். இதனை காலை 8 மணிக்கே தொடங்க வேண்டும் என்று நமது உறுதியான வேண்டுகோள் ஆகும்! போக்குவரத்து நெரிசலும், மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து தொல்லை இருக்காது’’ என்று குறிப்பிட்டேன்.
(நினைவுகள் நீளும்)