இரட்டைமலை சீனிவாசன் அவர்களை இமயமாகக் காட்டியவர் பெரியார்!
– நேயன்
‘குடிஅரசு’, ‘விடுதலை’யில் வந்த இரட்டைமலையார் பற்றிய செய்திகள்
1. ஆதி திராவிடர்களுக்கு உதவி! கமிட்டி சிபாரிசு! திவான்பகதூர் ஸ்ரீனிவாசன் திட்டம். (12.4.1936 ‘குடிஅரசு’)
2. 6.5.1937 சிதம்பரம் அம்மாப்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் திவான்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசன் பேச்சு (23.5.1937 ‘குடிஅரசு’)
3. கவர்னர்களுக்கு விசேஷ அதிகாரம் வேண்டும். தாழ்த்தப்பட்டாருக்குக் கொடுமை செய்த காங்கிரஸ்காரர்கள் திவான்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசன் அறிக்கை. (9.5.1937 ‘குடிஅரசு’)
4. பூனா ஒப்பந்தத்தை ஒழிக்க வெகு சீக்கிரம் கிளர்ச்சி தொடங்கப்படும் என திவான்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசன் கூறுவது நமக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. வெகுசீக்கிரம் தொடங்க வேண்டுமென்று நாம் திவான்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசனைக் கேட்டுக்கொள்கிறோம். (5.5.1937 ‘விடுதலை’)
5. மும்மூர்த்திகள் கண்டனம் (ஜின்னா முகமது யாகூப், திவான்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசன்) (9.5.1937 ‘குடிஅரசு’)
6. நமக்கு உயர்ஜாதி ஹிந்துக்கள், கோயில், குளம், கிணறு, பள்ளி பாதை முதலில் எல்லாவற்றிலும் சமத்துவமான உரிமையளிக்கும் வரை தனித்தொகுதி வேண்டியதென்றும் அதாவது 20 ஆண்டுகட்குத் தனித்தொகுதி வேண்டியதென்றும் கூறியிருக்கிறோம்.
சுயமரியாதைக் கட்சியினர் நமக்காக உண்மையாக உழைத்து வருவதை யான் மனமாரப் போற்றுகிறேன்.
வடாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மாநாட்டில் ராவ்பகதூர் ஆர்.ஸ்ரீனிவாசன் பேச்சு. (29.5.1932 ‘குடிஅரசு’)
7. தீண்டாதவர்களின் உரிமைகள் முழுவதும் சட்டமூலமாக ஏற்பட வேண்டும். ராவ்பகதூர் ஆர்.சீனிவாசன் அவர்கள் கூறுவதுபோல தீண்டாமை என்பதைக் குற்றமாகக் கருதும்படி சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். (2.10.1932 ‘குடிஅரசு’)
8. தாழ்த்தப்பட்டவர்களில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை அளித்தாலும்கூட, உயர்ந்த ஜாதி இந்துக்களின் ஓட்டர்கள் தொகையே அதிகமாக இருக்கும். இந்நிலையில், தாழ்த்தப்பட்டவர்களாலேயே பூர்வாங்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுத் தொகுதியில் நிறுத்தப்படும் நான்கு அபேட்சகர்-களில் யார் உயர்ந்த ஜாதி இந்துக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருக் கிறார்களோ, அவர்கள்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்க முடியும். முற்றும் தாழ்த்தப் பட்டார் உரிமைக்கு அஞ்சாமல் போராடும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. உதாரணமாக ஒரு ஸ்தானத்திற்கு நடைபெற வேண்டிய பூர்வாங்க தேர்தலில், ராவ்பகதூர் சீனிவாசன், டாக்டர் அம்பேத்கர், திரு.வி.அய்.முனிசாமி பிள்ளை, ஒரு வெற்றிவேலு, இன்னுஞ்சிலர் போட்டி போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இவர்களில் முதல் மூவரும், அவ்வகுப்பினரின் மெஜாரிட்டியான ஓட்டர்களால் தெரிந்தெடுக்கப்–படுவார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
நான்காவதாக உள்ள வெற்றிவேலு என்பவரிடம் அச்சமூக மக்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், இந்து சமூகத்தைச் சேர்ந்த பெரிய மிராசுதார்கள், அய்யர், அய்யங்கார்கள் முதலியவர்களின் முயற்சியால் அவர் நான்காவது அபேட்சகராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார் என்ற வைத்துக் கொள்வோம். இவ்வாறு பூர்வாங்கத் தேர்தலில், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் முழு ஆதரவோடும் முதன்மை-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராவ்பகதூர் சீனிவாசன், டாக்டர் அம்பேத்கர், திரு.வி.அய்.முனிசாமி பிள்ளை ஆகியவர்கள் இந்து மிராசுதார்கள், அய்யர், அய்யங்கார்கள் ஆகியவர்களின் சொல்லுக்குத் தாளம் போடும் வெற்றிவேலு ஆகிய நால்வரும் ஒரு ஸ்தானத்திற்குப் போட்டி போடுவார்களானால், இவர்களில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கேட்கின்றோம். பணக்கார மிராசுதார்-களின் சொல்லையும் அய்யர், அய்யங்கார்களின் சொல்லையும் கைகட்டி, வாய்பொத்திக் குனிந்து நின்று கேட்டு அதன்படி நடக்கத் தயாராக இருக்கும் வெற்றிவேலு என்பவரே தேர்ந்-தெடுக்கப்–படுவார் என்பதை யார் மறுக்க முடியும்? ஆகவே, இத்தகைய பிரதிநிதிகளாகவே சட்டசபைக்கு வந்து சேர்வார்களாயின் அவர்களால் அச்சமூகத்திற்கு என்ன நன்மை உண்டாகிவிட முடியும்? இத்தகைய பிரதிநிதி-களின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தால்தான் என்ன? (9.5.1937 ‘குடிஅரசு’)
9. தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாய் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட தலைவர்கள் அத்தனை பேரும் இன்று அழ ஆரம்பித்து விட்டார்கள். தோழர்கள் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ் முதலியவர்கள் எல்லாருமே தங்கள் தவறை உணர்ந்து விட்டார்கள். சாமி சகஜாநந்தம் என்பவரும் அழ ஆரம்பித்துவிட்டார். ஆகவே, தாழ்த்தப்-பட்ட மக்கள் காங்கிரஸ்காரர்களால் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்பது நிதர்சனமாக ஆகிவிட்டது.
தோழர் திவான்பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் இது விஷயமாய் விடுத்த அறிக்கை மற்றொரு பக்கம் பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதை வாசகர்கள் படிக்க விரும்பு-கிறோம். அதில் காணும் முக்கிய விஷயங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்’’ என்பன, இரட்டைமலை சீனிவாசன் பற்றி ஏராளமான செய்திகளை ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகள் வெளியிட்டதோடு, அவர் மறைந்தபோது,
“ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகிய திவான்பகதூர் ஸ்ரீனிவாசன் தம் 86வது வயதில் இன்று பிற்பகல் மரணமடைந்து விட்டார்.
இவர் கோயமுத்தூர் கலாசாலையில் கல்வி பயின்று பின் கணிதத்தில் விசேஷ பயிற்சி பெற்று நிபுணரானார். 1891இல் இவர் பொது வாழ்வில் புகுந்து சென்னை ஆதிதிராவிட ஜன சபையை ஏற்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றுவிப்பதற்காக 1893இல் இவர் ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். 1895இல் டிசம்பரில் ஆதிதிராவிட முதல் தூதுக் கோஷ்டியின் தலைவராக வைசிராயைப் பேட்டி கண்டு பேசினார்.
இவர் 1900இல் லண்டன் சென்று, அங்கிருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் போய், 1904இல் தென்னாப்பிரிக்க யூனியன் காங்கிரஸில் சேர்ந்தார். 16 ஆண்டுக்காலம் அங்கே உத்தியோகம் செய்துவிட்டு கிழக்காப்பிரிக்காவில் 2 ஆண்டுக்காலம் ஓய்வு பெற்றிருந்து 1923இல் இந்தியாவுக்குத் திரும்பினார். பிறகு இவர் சென்னை கவுன்ஸில் சபைக்கு அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். அங்கே இவர் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.
இவர் லண்டனில் நடந்த முதல் வட்ட மேஜை மாநாட்டிலும் 2வது வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்து கொண்டார். இம்மாகாணத்தில் நடந்த ஒடுக்கப்பட்ட வகுப்பின மாநாடுகள் பலவற்றில் இவர் தலைமை வகித்துள்ளார். இவர் தம் சமூக மக்களின் குறைபாடுகளை எடுத்துக்காட்டும் மகஜர்கள் பலவற்றை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார். இவர் மரணமடையும் வரை சென்னை மேல் சட்டசபையின் அங்கத்தினராக இருந்தார்’’ என்று செய்திகள் வெளியிட்டதோடு, ‘ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்’ என்ற அடைமொழியையும் அவருக்கு ‘விடுதலை’ வழங்கியது. (18.9.1945)
மேலும், இரட்டைமலை சீனிவாசன் வெளியிட்ட முக்கிய அறிக்கையையும் ‘குடிஅரசு’ ஏடு வெளியிட்டது. அந்த அளவிற்கு இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு பெரியாரும், இயக்கமும், ‘குடிஅரசு’ ஏடும் முக்கியம் கொடுத்து அவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தன.
“இந்த நாட்டுக்கு எத்தகைய சட்டம் புகுத்தப்பட்டாலும் சரி.. ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்கொள்ளத் தக்கதாயிருக்க வேண்டு-மென்பதுதான் நமது ஆசை… இந்தியாவில் உள்ள பார்ப்பனரல்லாதார் கோரும் சுயராஜ்யம், சுயராஜ்ஜியத்திலும் ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை அடிமை கொள்ளாமலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமலும் இருக்க வேண்டுமென்பதே யாகும்’’ என்ற அறிக்கை இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.இராஜா, என்.சிவராஜ் ஆகியோர் கையொப்பம் இட்டு வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையைக் கண்டித்து அன்றைய விளம்பர மந்திரி வெளியிட்ட அறிக்கைக்கு இரட்டைமலை சீனிவாசன் அளித்துள்ள பதில் 22.10.1939 ‘குடிஅரசு’வில் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையை 25.10.1939 கூடிய நீதிக்கட்சி நிர்வாகக் கமிட்டி ஏற்றுக்கொண்டது.
(தொடரும்…)