கோவி.லெனின்
அது 1980களின் நடுப்பகுதி. திருவாரூர் நகரத்தில் அண்ணா சிலை அருகே திராவிடர் கழகப் பொதுக்கூட்டம். தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகத் தாய்த் தமிழகத்தில் பெரும் ஆதரவு நிலவிய காலகட்டம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க, எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் செயல்-பாடுகளுக்கு சற்றும் குறைவின்றியும், உளப்பூர்வமாகவும் திராவிடர் கழகம் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கான ஆதரவை பொதுக்கூட்டங்கள்_ஊர்வலங்கள் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த வகையில், ஈழ மக்களின் நலன் காக்க ஆயிரம் நெல் மூட்டைகள் வழங்கும் நிகழ்வுடன் அந்தப் பொதுக்கூட்டம் நடந்தது.
ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை என்றால் அன்றைய கீழத்தஞ்சை மாவட்டத்தில் கட்சி எல்லைகளைக் கடந்து மக்கள் திரண்டு வருவார்கள். பெரிய பெரிய புத்தகங்கள், நாளிதழ் நறுக்குகள், பழைய ஆவணங்களின் நகல்கள் என அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துக்-காட்டி அவர் பேசுவதை ஆத்திகர்_நாத்திகர் வேறுபாடின்றி அனைவரும் ரசித்துப் பாராட்டுவர்.
“இது எங்களுக்குப் பெரியார் கொடுத்த அறிவு. அய்யாவின் தொண்டர்கள் ஆதாரத்துடன்-தான் பேசுவார்கள்’’ எனத் தன் பேச்சிடையே குறிப்பிடுவது ஆசிரியரின் வழக்கம். அன்றைய பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில், ஈழ விடுதலைக்கு நிதி அளிக்க விரும்பும் பொதுமக்கள், மேடைக்கு வந்து நிதி தரலாம் என்றும், மேடைக்கருகே விற்பனையாகும் திராவிடர் கழக வெளியீடுகளை வாங்குபவர்கள் அந்தப் புத்தகத்தில் ஆசிரியரின் கையெழுத்தைப் பெறலாம் என்றும் அறிவித்தார்கள்.
ஆயிரம் நெல் மூட்டைகளை கழகத் தோழர்கள் திரட்டியிருந்தாலும், பொதுக்கூட்ட நேரத்திலும் திரட்டுகின்ற நிதி, ஈழமக்களுக்கு கூடுதல் உதவியாக இருக்கும் என்பது அந்த அறிவிப்பின் நோக்கம். நிதி வழங்கும் பொது-மக்களிடமும் தமிழுணர்வும் தமிழீழ உரிமை வேட்கையும் பெருகும் என்பதும் அந்த அறிவிப்பின் உள்ளடக்கம். எந்த ஒரு செயலை மேற்கொண்டாலும் மக்களின் மனதில் அது முழுமையாகப் பதிந்து, அவர்களும் அதில் முழுமையாக ஈடுபடும் அளவில் கொள்கைப் பார்வையைக் கொண்டு சேர்க்கும் பெரியாரின் வழிமுறை இது.
சமுதாயச் சிக்கல்களை தந்தை பெரியார் என்ற நுண்ணாடி வழியே உற்று நோக்கி, எவை களையப்படவேண்டும், எவை மீட்டெடுக்கப்பட வேண்டும், புதிதாக என்ன செய்யவேண்டும் என்கிற தெளிவுடனும் திடமுடனும் செயல்படுகின்ற பார்வை ஆசிரியருக்கு உண்டு.
அன்றைய பொதுக்கூட்ட அறிவிப்பிலும் அந்தப் பார்வை வெளிப்பட்டது. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவனான நானும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறேன். நிதி தரும் அளவுக்கு என் கால்சட்டைப்பையில் பணம் இல்லை. ஆனால், ஒரு ரூபாய் விலையில் விற்கப்படும் கழக வெளியீட்டினை வாங்கக்கூடிய நிலை இருந்தது. நிதி அளிப்பவர்கள் பெரிய வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். கையில் சிறு வெளியீட்டுடன் நானும் வரிசையில் நின்றேன். மேடையேறி, ஆசிரியரிடம் அதைக் கொடுத்தேன். தலை உயர்த்திப் பார்த்து, புன்னகைத்து, கையெழுத்திட்டார்.
மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது, “நேற்று நீ வீரமணிகிட்ட ஆட்டோகிராஃப் வாங்குனீல்ல….’’ என ஆச்சரியத்துடன் கேட்டார்கள் சக மாணவர்கள். அவர்களும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள் என்பதை அப்போதுதான் அறிந்தேன். திராவிட இயக்கம் குறித்த மாறுபட்ட கருத்து கொண்ட மாணவர்களும்கூட ஆசிரியரின் கருத்துகளைக் கேட்க வந்திருந்தார்கள் என்பதில்தான் அவரது மானுடப் பற்றும், அயராத உழைப்பும் அவை ஏற்படுத்திய தாக்கமும் வெளிப்பட்டன!
ஈழ விடுதலைக்கான நிதியாக ஆயிரம் நெல் மூட்டைகள் வழங்கிய பொதுக்கூட்டம் நடந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்த நிலையில், ஈழ மண்ணே இல்லாதபடி செய்திட வேண்டும் என்ற இனவெறியுடன் இலங்கை ராணுவம் 2009ஆம் ஆண்டு கொடூரத் தாக்குல் நடத்தி, கொத்துக்குண்டுகள் வீசி, தமிழர்களை இனஅழிப்பு செய்து கொண்டிருந்த 2009ஆம் ஆண்டு.
ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பேட்டி எடுக்கச் சொல்லியிருந்தார் நக்கீரன் இதழின் இணையாசிரியர். அன்று மாலையே அச்சுக்கு அனுப்ப வேண்டிய அவசரத்துடனான பேட்டி அது. பெரியார் திடலைத் தொடர்பு கொண்டேன். “ஆசிரியர் இங்குதான் இருக்கிறார். உடனே வாருங்கள்’’ என்று பதில் வந்தது.
நேர்காணலுக்கான முன் தயாரிப்பு எதுவுமில்லை. பதிவுக் கருவிகள்கூட முழுமையாக இல்லை. திடல்தான் இருக்கிறதே.. பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்துடன் வந்துவிட்டேன். பெரியார் வலைக்காட்சி அலுவலகத்தில் ஆசிரியருடன் நேர்காணல். நக்கீரன் இதழில் பேட்டி வெளியானபிறகு, வலைக்காட்சியிலும் காணொலியாகப் பதிவு செய்யலாம் என்ற நோக்கில், வீடியோ பதிவாகவே அந்தப் பேட்டி எடுக்கப்பட்டது.
தமிழக அரசியல் களத்தில், யுத்தக் கொடூரங்களிலிருந்து ஈழமக்களை மீட்பது குறித்த தீர்வுகளைவிட, ஈழப்பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் இவர் துரோகியா, அவர் துரோகியா என்ற விவாதங்களே மிகுந்திருந்த நேரம் அது. ஒருவரையொருவர் சாடாமல் எந்தக் கருத்தும் வெளிப்படாது என்கிற நிலைமை. ஆசிரியருடனான நேர்காணலில் இந்தச் சிக்கலை முன்வைத்து கேள்வி எழுப்பினேன்.
பழிசுமத்தும் அரசியல் பதில்கள் அவரிட-மிருந்து வெளிப்படவில்லை. யுத்தக் கள நிலவரத்தையும் அதன் போக்கையும் நன்கு உணர்ந்திருந்த அவர், “இலங்கை அரசுக்கு சர்வதேச அளவிலான உதவிகள் கிடைத்து வருவதால், ஈழ மக்கள் மீதான கொடூரத் தாக்குதல் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதும், சர்வதேச அழுத்தத்தின் மூலம் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதுமே தலையாயக் கடமை’’ என்றார். அதுமட்டுமின்றி, “இதற்காக தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதில் பல்துறை வல்லுநர்கள் இடம்பெற்று, அவர்கள் இங்குள்ள வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளை சந்தித்து ஈழ நிலவரம் குறித்தும் போர் நிறுத்தம் குறித்தும் மனு அளிப்பார்கள்’’ என்றார்.
ஈழத்தமிழர்கள் தன்மானத்துடனும் உரிமை-களுடனும் வாழ்வதற்கான தொலைநோக்குத் திட்டம் மானமிகு ஆசிரியரின் கையில் இருந்தது. அதற்கான குழுவை முன்னின்று வழிநடத்தும் பொறுப்பையும் ஆசிரியர் மேற்கொண்டிருந்தார். அன்றைய சூழலில் அந்த செயல்பாடும் விமர்சிக்கப்பட்டது. துரோக முத்திரை குத்தப்பட்டது. ஆனால், 2009 மே மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட நிலைமை என்ன?
முன்னெச்சரிக்கையாக ஆசிரியர் என்ன சொன்னாரோ_செய்தாரோ அதைத்தான் 2009க்குப் பிறகு பல தலைவர்களும், புதிதாக உருவான அமைப்பினரும் செய்தார்கள். சர்வதேச அரங்குகளுக்கு ஈழ இனப்படுகொலை கொண்டு செல்லப்பட்டது. இன்னும்கூட அது முழுமை பெறவில்லை_தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், சர்வதேச அழுத்தமே இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்கும் என்பதை ஈழப் பிரச்சினையில் அக்கறையுள்ள அனைத்து அமைப்பினரும் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் முன்பாக, யுத்த கொடூரம் நடைபெற்ற 2009ஆண்டின் தொடக்கத்திலேயே தொலைநோக்குப் பார்வையுடன் இதனை முன்மொழிந்து_முன்னெடுத்தவர் ஆசிரியர்.
காலம் தன்னை அறிந்து, சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியரின் தோள்களில், மேலும் மேலும் பாரம் ஏறிக்-கொண்டே இருக்கிறது. மதவெறி சக்திகள்_ஜாதி ஆணவப் படுகொலைகள்_ உண்பதில் தொடங்கி உடுப்பது வரையிலான பாசிசப் பார்வைகள் உள்ளிட்ட அனைத்தையும் முறியடிக்க வேண்டிய காலம் இது. பெரியாரின் வயதையும் கடந்து ஆசிரியர் நூறாண்டுக்கு மேல் வாழட்டும்; சமுதாய அநீதிகளை வீழ்த்தட்டும்!