”பெரியார் பட்டம்” அளித்தவர்கள் பார்வையில்…
வழக்குரைஞர் கிருபா முனுசாமி
(சென்ற இதழின் தொடர்ச்சி…)
பெண்ணுரிமை:
பொது சமூக _ கல்வி நிலை இவ்வா-றென்றால், அக்காலத்தில் பெண்களின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய பகுத்தறிவு இயக்கத்தில், ஜாதி ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மத ஒழிப்பு போன்ற பல பணிகள் இருந்தாலும், பெண்ணுரிமைப் பணிகளுக்கு என்றுமே முன்னுரிமை வழங்கப்-பட்டு வந்தது.
1910_1911ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் ஆடவர் கல்லூரிகளில் பயின்ற பெண்கள் 30 பேர். சென்னை மாகாணம் என்பது தமிழகம், கேரளம், ஆந்திரம், கன்னடம் ஆகிய நான்கு பகுதிகளும் அடங்கியதாகும். இதில்,
மாநிலக் கல்லுரியில் பயின்ற பெண்கள் _ 17, கள்ளிக்கோட்டை ஜமாரின் கல்லூரி _ 4, கள்ளிக்கோட்டை ஜெர்மன் மிஷினரி கல்லூரி _2, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி _ 1, ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி _ 1. மொத்தம் _ 25.
எப்படி தேடிப் பார்த்தாலும், இங்கும் 25 பேர் பற்றிய கணக்கே கிடைக்கின்றது. எனவே தான், பெண்களின் கல்வி விகித சூழ்நிலையைக் கண்டு, முதல் சுயமரியாதை மாநாட்டிற்கு முன்பிருந்தேகூட பெண்களின் கல்வி, வேலை-வாய்ப்பு ஆகிய உரிமைகளை வலியுறுத்தி தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார் தந்தை பெரியார்.
பிறப்பால் ஆண், பெண் என்ற பால் பேதம் ஒழிக்கப்பட வேண்டும்; எல்லா பொது பள்ளிக் கூடங்களிலும், ஆண்_-பெண், உயர்வு_-தாழ்வு வித்தியாசமில்லாமல் இருபாலருக்கும் ஆரம்பக் கட்டாய இலவச தாய்மொழி வழிக் கல்வி; பெண்களின் கல்வியை 11 வயதிலேயே நிறுத்தி விடாமல், முதலில் 16 வயது வரையிலும் பள்ளிக்குச் செல்லவிட வேண்டுமென்றும், பின்பு 30 வயது வரை படிக்க வைக்க வேண்டுமென்றும்; ஆண்களுக்கு நிகரான எந்தத் தொழிலையும் பெண்களும் மேற்கொள்ள சமஉரிமையும், நேரமும் கொடுக்கப்பட வேண்டும்; பள்ளிக்கூட ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு அதிக இடம்; ஆரம்பக் கல்வி ஆசிரியர் பணியிடங்கள் முழுவதிலும் பெண்களையே நியமிக்க வேண்டும்; பெண்களை மருத்துவத் தொழிலுக்கு, ஆசிரியர் தொழிலுக்கு மட்டும் தற்பொழுது எடுப்பது போதாது, காவல் துறையிலும் இராணுவத்திலும் சேர்க்க வேண்டும்; சங்கத்திற்கு போதிய பண உதவி பெற்று, படித்த பெண்களை சம்பளத்திற்கு அமர்த்தி, சிற்றூர்-களில் உள்ள படிக்காத, விழிப்புணர்வு இல்லாத பெண்களுக்கு கல்வியைக் கற்பிப்பதுடன், நமது இயக்கக் கொள்கைகளையும் கற்பிக்க வேண்டும் என முதல் சுயமரியாதை மாநாட்டிலும், அடுத்தடுத்த சுயமரியாதை, மகளிர், இளைஞர் மாநாட்டிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன. இவற்றிற்கெல்லாம் தடையாக இருக்கின்றவைகளை போக்கும் வகையிலும், பெண்கள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு மக்களிடம் பரப்பட்ட கருத்துகளை காண்போம்,
“பெண்களின் திருமண வயது 16 ஆகவும், ஆண்களின் திருமண வயது 19 ஆகவும் சட்டப்படி நிர்ணயிக்க வேண்டும்; ஜாதி, -மத பேதமின்றி தங்கள் இணையரைத் தேர்ந்-தெடுக்கும் உரிமை; வாழ விருப்பமில்லாதவர்-களின் விவாகரத்து உரிமை; கைம்பெண்கள் மறுமணம்; அதற்கேற்ற சட்டங்களை இயற்ற வேண்டும்.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சொத்து மற்றும் வாரிசு உரிமை; பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன் இறந்து போனால், அக்கணவனுக்கு உள்ள சகல உரிமைகளும், சொத்துக்களும் அவனது மனைவி முழு சுதந்திரத்துடன் அனுபவிக்கும் உரிமை; ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் குழந்தை-களின் காப்பு நிலை, அதாவது கார்டியன் உரிமை மற்றும் தத்தெடுக்கும் உரிமை, குழந்தைத் திருமணத்தை தடை செய்யும் சாரதா சட்டத்தை எல்லாப் பகுதிகளிலும் அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; எதிர்கால வாழ்க்கையை உணர்ந்துகொள்ள முடியாத சிறுமிகளை கடவுளின் பேரால் பொட்டுக்கட்டி, பொருளுக்காக நிர்பந்தக் காதலில் ஈடுபடுத்தும் அநாகரிகமான பழக்கத்தை ஒழிக்க வேண்டும்; சிறுவயதுப் பெண் குழந்தைகளை பொதுவில் ஆடவும், பாடவும் விட்டு பொருள் சம்பாதிக்க தேவடியாள்களாக தயாரிக்கும் வழக்கத்தை கண்டிப்பதோடு, இந்திய சட்டசபையில் திரு.ஜெயகர் கொண்டு வந்திருக்கும் பொட்டுக் கட்டும் வழக்கத்திற்கு எதிரான மசோதாவையும், சென்னை சட்டசபையில், டாக்டர் முத்துலட்சுமி கொண்டுவந்த மசோதாவையும் முழுமனதாக ஆதரித்து, அவை சீக்கிரம் சட்டமாக ஆக்கப்பட வேண்டுமென்றும் வேண்டுகிறது; தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்; விபச்சார விடுதிகளை ஒழிக்க வேண்டும்’’ ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றியதோடு, “இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதா-யிருந்தால், மறுமண விருப்பம் கொண்ட கைம்பெண்களையே திருமணம் செய்ய வேண்டும்; விபச்சாரத்திற்கு அடிப்படையாய் அர்த்தமற்ற முறையில் கட்டப்பட்ட பொட்டுக்களை அறுத்தெறிந்து விட்டு வரும் சகோதரிகளை ஆதரித்து திருமணம் செய்து-கொள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்ற அறைக்கூவலையும் விடுத்தார்.
பெண்களின் சமத்துவ_அரசியல் உரிமை-களையும் வலியுறுத்தி வந்த நிலையில், அவர்களுக்காக போராடி வீட்டை விட்டு வெளியேறும், வெளியேற்றப்படும் பெண்களுக்கு பாதுகாப்பாக தங்க ‘பெண்கள் நிலையம்’ ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்றார். இன்றைய காலத்தில், வீட்டை விட்டு வெளியில் வருவதோ, கிடைத்த அடிப்படைக் கல்வியைக் கொண்டு வேலை தேடிக்கொள்வதோ, பெண்களுக்கான தங்குமிடங்களோ எளிமையாக இருந்தாலும், இவற்றையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காலத்தில், 3 வயது குழந்தைகளும் விதவைகளாக ஆக்கப்பட்ட 1920_30களில் இவற்றையெல்லாம் தந்தை பெரியார் பேசினார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.
பெண்களின் சமத்துவ உரிமைகளையும், பெண் கல்வியையும், விடுதலையையும், பெண்களுக்கான பாதுகாப்பு மய்யத்தையும், அதே 1938ஆம் ஆண்டு தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில் இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்ற ஆண்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படும்போது, “ஆண்கள் சிறை சென்றதைப் பாராட்டிவிட்டால் நீங்கள் வீரப் பெண்மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறைசென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்?” என்று பேசி, பெண்களை போராடத் தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறைக்கும் செல்கிறார் பெரியார்.
இவற்றையெல்லாம் செய்துவந்த பெரியார், பெண் விடுதலைக்கு தடையாக இருப்பவை-களை தகர்க்கும் வகையில், கர்ப்பத் தடையையும், கருத்தடை சாதனப் பயன்பாட்டையும் எப்போதும் வற்புறுத்தி வந்திருக்கிறார்.
இன்றைய அறிவியல், மருத்துவ ஆராய்ச்சி-களிலும்கூட பெண்களின் கர்ப்பப்பை தொடர்-பான, மாதவிடாய் வலி ஆகியவற்றிற்கு கருத்தடைச் சாதனமே சிறந்த நிவாரணமாக கையாளப்-படுகிறது. மேற்கத்திய நாடுகளில், இளம் பெண்களுக்கும்கூட இது பொருத்தப்-படும். இதனைப் பொருத்திய ஒரு ஆண்டிற்-குள்ளாகவே பெண்களின் மாதவிடாய் முற்றிலுமாக நின்றுவிடும். ஒரு வேளை, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், அதனை எடுத்துவிட்டு, பிள்ளைப் பேறுக்கு பிறகு மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். இதைத்தான் அன்றே கர்ப்பப்பையை அறுத்தெறியுங்கள் என்றார் தந்தை பெரியார். அறுத்தெறியுங்கள் என்றால் அதை அப்படியே பொருள்கொள்ளக் கூடாது. பெண்களின் சுதந்திர வாழ்வுரிமையை முழுமையாக அனுபவிக்க தடையாக இருக்கும் கர்ப்பப்பை தொடர்பான இன்னல்களையும், தொல்லை- களையும் அறுத்தெறியுங்கள் என்று பொருள். புதுமைகளை வரவேற்பதிலும், விஞ்ஞானத்தை ஒரு தொலைநோக்குப் பார்வையிலிருந்து முன்னுணர்ந்து, நவீன அறிவியல் கண்டு-பிடிப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும், அவற்றை மக்களிடம் வலியுறுத்துவதிலும் முதல் நபராக இருந்தார் பெரியார்.
ஆனால், இந்தியாவில், ‘கற்பு’ என்ற மூடத்தனத்தின் காரணமாக, திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு கருத்தடை சாதனத்தை பொருத்துவதில்லை. இதையும் பெரியார் விட்டு வைக்கவில்லை. பெண் விடுதலை வேண்டு-மானால், “ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான கற்புமுறை வேண்டும்” என்கிறார்.
பெரியார் இன்றிருந்திருந்தால், “கன்னிப் பெண்களும் கருத்தடை சாதனத்தின் பயனைப் பெற்று, வலி இல்லாத, கட்டுப்பாடுகள் இல்லாத முழுமையாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருப்பார். இதை இனிவரும் உலகின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்! (தொடரும்…)