எச்சரிக்கை மணியை அச்சமின்றி ஒலிக்கும் வீரம்- தீக்கதிர் அ.குமரேசன்

டிசம்பர் 1-15 2018

தீக்கதிர் அ. குமரேசன்

பெரியார் வாழ்ந்த காலத்தில் வாழத் தொடங்கி-விட்டேன் என்றாலும் அவரோடு பயணித்தவன் அல்ல நான். சொல்லப்போனால் அவரை அருகிலிருந்து மட்டுமல்ல, தொலைவிலிருந்து கூட கவனித்திராதவன். என்னைப் பொறுத்தவரையில் அவர் கடவுள் இல்லையென்று சொல்லிக்-கொண்டிருந்தவர் அவ்வளவுதான். எப்போது கடவுளென ஒன்றுமில்லை என்பதை அறிந்து, அதை நானும் வெளியே சொல்லத் தொடங்கினேனோ அப்போதுதான் பெரியாரை நெருங்கலானேன். ஆம், நான் பெரியாரைப் படித்துப் பகுத்தறிவாளனாகவில்லை, பகுத்தறிவாளனானதால் பெரியாரைப் படித்தேன். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போய் மொட்டை போட்டுக் கொண்டிருந்தவன் அப்படியே இருந்திருப்பேனானால் பெரியாரைப் படித்திருக்க மாட்டேன், அவர் கடவுள் இல்லை என்று சொன்னதோடு நின்றவரல்ல என்பதைப் புரிந்து கொண்டிருக்க மாட்டேன். இன்று வரையில் பெரியாரை நிந்திக்கிறவர்களின் உண்மையான கோபம் அவர் கடவுளை எதிர்த்தவர் என்பதல்ல என்று தெரிந்துகொண்டிருக்க மாட்டேன். அவர் மதத்தை எதிர்த்தவர், சாதிப் பாகுபாட்டை எதிர்த்தவர், ஆலயங்கள் உள்ளிட்ட அதிகார பீடங்களில் ஆதிக்கவாதிகளுக்கான பாரம்பரிய இட ஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்தவர், பெண்ணை ஒடுக்கும் ஆணாதிக்கத்தை எதிர்த்தவர், இதற்கெல்லாம் காரணமாக்கப்–பட்ட தலைவிதித் தத்துவத்தை எதிர்த்தவர், தலைவிதியை முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்கான சோதிடத்தை எதிர்த்தவர், மனித உரிமைகள் மீதான ஒடுக்கு முறையை எதிர்த்தவர், இதையெல்லாம் தெரிந்து கொள்ள விடாமல் கல்வி மறுக்கப்பட்டதை எதிர்த்தவர் என்பதுதான் அவர்களுடைய நிந்தனைக்குக் காரணம் எனத் தெளிந்திருக்க மாட்டேன்.

இந்தத் தெளிவுகளுக்குப் பிறகு, பெரியாரை நேரில் சந்தித்துப் பழகவில்லையே, தம் காலத்தில் முன்னுக்கு வந்த பிரச்சனைகளை அவர் எப்படிக் கையாண்டார் என்று பார்க்கவில்லையே என்ற  ஏக்கம் என்னைத் தொற்றியது. அந்த ஏக்கத்தைப் பெரிதும் போக்கியவர் ஆசிரியர் கி. வீரமணி என்றால் மிகையில்லை. மதவெறிக் கூட்டத்தின் அனைத்திந்திய அரசியல் சூதுகள், அதைத் தட்டிக்கேட்கவும் துணியாத மாநில அடிமைத்தனங்கள், மக்களைத் தாக்கும் நடவடிக்கைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வன்மங்கள், சமூகநீதியைப் புதைகுழிக்கு அனுப்பும் தந்திரங்கள், பெண்ணை நுகர்பொருளாக வைத்திருக்கும் கீழ்மைகள், இட ஒதுக்கீட்டு நியாயங்களை ஏளனம் செய்யும் கார்ப்பரேட்மய வேட்டைகள், மனுவின் கள்ளச்சிரிப்புக்குத் தொண்டு செய்யும் ஜாதி ஆணவக்கொலைகள், மறைந்திருந்து பாயும்  இந்தி/சமஸ்கிருதத் திணிப்புகள், சம்புகன்களின் கழுத்தை அறுத்த வாள்களின் அவதாரமாக அனிதாக்களின் கழுத்தை இறுக்கும் உயர்கல்வி நுழைவுத்தேர்வுக் கயிறுகள் இடைவெளியின்றி என்னென்னவோ பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றை இன்று பெரியார் எப்படிக் கையாளுவார் என்பதை ஆசிரியரின் இடையறாத தலையீடுகளில் பார்க்கிறேன்.

இன்றைய நிலவரத்தில்

சொல்லப்போனால், பெரியார் காலத்தில் நிலவியதை விடவும் இன்றைய நிலவரங்கள் கடுமையானவை, சிக்கலானவை, நுட்பமானவை. எடுத்துக்காட்டாக, அன்று இல்லாத கார்ப்பரேட் -அரசு -ஆர்எஸ்எஸ் கூட்டு இன்று தலைதூக்கி ஆடிக்கொண்டிருக்கிறது. மூட நம்பிக்கைகள் நவீன வடிவமெடுத்திருக்கின்றன. ஜாதி ஆணவம் அமைப்புகளாகவே வடிவம் பெறுகிறது. பெரிய ஆலயங்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்புப் பலகைகள் மங்கிக்கொண்டிருக்கும் நிலையில் எளிய மக்களுடைய தெருவோரக் கோவில்களின் குடமுழுக்கு விழாக்களில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்கின்றன. பெண்கள் தங்கள் புழக்க வசதிக்கேற்ப அணியும் ஆடைகளைக் காரணம் காட்டி வன்புணர்வுக் குற்றங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. பெரியாரும் பல்வேறு தடைகள், தாக்குதல்களை எதிர்கொண்டார் என்றாலும் அவற்றை மீறி சுயமரியாதை, பகுத்தறிவு, பாலின சமத்துவம் பற்றிய சிந்தனைகளை மக்களிடையே பரப்ப முடிந்தது. ஏற்கிறார்களோ இல்லையோ அவர் என்ன சொல்கிறார் என்று கேட்கிற மனநிலை மக்களிடையே இருந்தது.

இன்றோ, கிளறிவிடப்படும் மதவாத உணர்வுகள், தூண்டிவிடப்படும் ஜாதிய போதைகள், புதிய தொழில்நுட்பங்களோடு புகட்டப்படும் கடவுள் கருத்துகள், அவற்றைக் கெட்டிப்படுத்தும் வாழ்வாதார உறுதியற்ற அவநம்பிக்கைச் சூழல்கள் என்று மக்கள் அணியணியாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். மாற்றுச் சிந்தனைகளைக் காதுகொடுத்துக் கேட்கவும் நேரமற்றவர்களாகப் பணத்தைத் தேடவும் தக்கவைக்கவும் மக்கள். குறிப்பாக இளைய தலைமுறைகள் _ விரட்டப் படுகிறார்கள். இந்தச் சூழலில், மாற்றத்திற்காகக் களம் காண்கிறவர்களின் உணர்வுச் சுடரைத் தூண்டிவிடுகிற, அணையவிடாமல் அணைத்துக் கொள்கிற, நம்பிக்கை தந்து உடன்வருகிற தோழமையாகத் திகழ்கிறவர் ஆசிரியர். களம் காண்கிறவர்களில் கறுப்புக் கொடி பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல, செங்கொடி உயர்த்துகிறவர்கள், நீலக்கொடி நிமிர்த்து-கிறவர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள். அரசியல் இயக்கங்களோடு, பெண்ணுரிமைக் குழுக்கள், கலை இலக்கிய அமைப்புகள், ஊடகச் சுதந்திர மேடைகள் உள்ளிட்டவையும் களத்திற்கு வருகிறார்கள்  ஆசிரியரின் வழிகாட்டலும், துணைவருதலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு. அந்த எதிர்பார்ப்பு பொய்ப்பதில்லை. சமுதாயப் பணிகளில் ஈடுபடுவதில் நான் வீரமணியிடமிருந்து உந்துதல் பெறுகிறேன், என்று மண்டல் அறிக்கை செயலாக்க நாயகர் வி.பி.சிங் சொன்னார். அதே உந்துதல் இவர்களுக்கும் கிடைக்கிறது.

ஒரு பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் என்ற முறையிலும் விமர்சனக் கண்ணோட்டத்துடன்தான் திராவிடர் கழகத் தலைவரை அணுகிவந்திருக்கிறேன். அவர் மேற்கொண்ட அரசியல் நிலைப்பாடுகளை வரவேற்றது போலவே விமர்சித்தும் எழுதியிருக்கிறேன். தன்னை விமர்சிப்பவர்கள் சொல்வதற்கு மதிப்பளித்துச் செவிமடுக்கிற பண்பைக் கொண்டிருந்தவர் பெரியார். அவரிடமிருந்து இவர் மரபுரிமையாக எடுத்துக்கொண்டது இந்தப் பண்பு. அரசியல் களத்தில் கடுமையான வேறுபாடுகளோடு நின்ற நாட்களிலும், செய்தியாளராகப் பெரியார் திடலுக்கு வந்தபோதெல்லாம் மாறாத அன்போடு, நான் கேட்கிற கேள்விகளுக்கான அங்கீகாரத்தோடு, ‘தீக்கதிர்’ ஏட்டின் பிரதிநிதி என்ற மதிப்போடு என்னை வரவேற்றவர் ஆசிரியர். இந்தக் கட்டுரையில் நான் ஒரு பத்திரிகையாளராக வீரமணி என்று குறிப்பிடுவதா, அல்லது ஒரு தோழராக ஆசிரியர் என்று குறிப்பிடுவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. அந்தக் குழப்பம் எப்படி நீங்கியது என்பது சுவையான புதிர். கட்டுரையின் வேறொரு இடத்தில் அந்தப் புதிரை விடுவிக்கிறேன்.

வீசிய கேள்விகள்

ஒருமுறை, செய்தியாளர் சந்திப்பின்போது, “திராவிடர் கழகம் இடஒதுக்கீடு போராட்டத்தோடு மட்டும் சுருங்கிவிட்டதாகத் தெரிகிறதே… பகுத்தறிவு, பாலின சமத்துவம், அறிவியல் கண்ணோட்டம் போன்ற பரப்புரை இயக்கங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டனவா’’ என்று கேட்டேன். ஆசிரியர் அந்தக் கேள்வியைத் தவிர்க்க முயலவுமில்லை, நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள், என்பதான பதில்களையும் கூறவில்லை. “நீங்கள் இப்படிக் கேட்பதற்குத் தோதான நிலைமை ஏற்பட்டிருப்பது உண்மைதான். இன்றைய நிலையில் இடஒதுக்கீடு உரிமை மீது வலிமையான தாக்குதல்கள் தொடுக்கப்-படுவதாலும், அதை எப்படியாவது ஒழித்துக்-கட்டி விடவேண்டும் என்று சில சக்திகள் தீவிரமாகச் செயல்படுவதாலும் திராவிடர் கழகம் அதைப் பாதுகாக்கிற, உறுதிப்படுத்துகிற போராட்டத்திற்கு இயல்பாகவே முன்னுரிமை அளிக்கிறது. அதற்காக மற்ற இயக்கங்களை ஒதுக்கிவிடவில்லை. இதோ பாருங்கள் எங்களின் அடுத்த மாநாட்டு நிகழ்ச்சி நிரல் என்று கூறி ஒரு பெரிய அழைப்பிதழைக் கொடுத்தார். அதில் நான் சுட்டிக்காட்டியவையும் வேறு சில பிரச்சனைகளும் முக்கியத் தலைப்புகளாக விவாதிக்கப்பட இருப்பது பற்றிய தகவல்கள் இருந்தன. சென்னையில் சில நாட்களில் நடத்தத்திட்டமிட்டிருந்த அறிவியல் சார்ந்த நிகழ்ச்சி பற்றிய தகவலையும் தெரிவித்தார்.

மற்றொரு சந்திப்பின்போது, “இட ஒதுக்கீட்டு நியாயங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது தனியார் மயமாக்கல். அதற்கு எதிரான போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்துமா? அந்தப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொள்ளுமா?’’ என்று கேட்டேன். “எங்கள் இயக்கங்களில் இது பற்றி விரிவாகப் பேசுவோம். இடதுசாரிகள் இந்தப் போராட்டத்தை நடத்துவதை வரவேற்கிறோம். இனிவரும் காலத்தில் அந்தப் போராட்டக் களத்திலும் நாங்கள் முனைப்போடு பங்கேற்போம்’’ என்றார். அத்துடன், “இது ஒரு தனி இயக்கத்தால் மட்டும் நடைபெறக் கூடியதல்ல. இனி இதுபோன்ற பிரச்சனைகளிலாவது இயக்கங்களுக்கிடையே ஒரு கூட்டுச் செயல்பாடு கட்டாயமாகத் தேவைப்படுகிறது’’ என்றும் கூறினார்.

இத்தகைய கேள்விகளைக் கேட்டாலும், மறுபடி மறுபடி பெரியார் திடலிலிருந்து செய்தியாளர் சந்திப்புகளுக்கான அழைப்பு எனக்கு வரும். “கண்டிப்பா வந்துடுங்க. உங்களுக்குத் தகவல் போயிடுச்சான்னு ஆசிரியர் குறிப்பாக் கேட்டாரு’’ என்று விடுதலை செய்தியாளர் ஸ்ரீதர் என்னிடம் சொல்வார். திடலுக்கு வந்தபின் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாசத்தோடு கைகுலுக்கி வரவேற்றுப் புதிய புத்தகங்களைத் தருவார்.

பெரியார் திடலின் மணியம்மை அரங்கில் மாதந்தோறும் கூடுகிற சமூக ஊடகச் செயல்பாட்டாளர் குழு கூட்டங்களில், “கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்லி அவர்கள் நம்மை நோக்கித் திரும்புவதைத் தடுக்க வேண்டுமா?’’ என்று கேட்டிருக்கிறேன். சிலவகை இனப் பெருமை வாதங்கள் இறுதியாக இந்துத்துவவாதிகளின் செயல்திட்டத்திற்கு சாதகமாகிவிடும் என்ற கவலையை வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆயினும் அந்தக் கூட்டங்களில் நான் தவறாது பங்கேற்பதில் தோழர்கள் பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார், தளபதி பாண்டியன் இருவரும் கறாராக இருக்கிறார்கள். ஆசிரியரின் முழு ஒப்புதலுடன்தான் அந்தக் கறார்த்தனம் என்பதை நான் அறிவேன்.

வேறுபாடுகளைத் தாண்டிய நேசத்துடன் பழகுவது இவரது சிறப்புத் தகுதி என்று ஊடக உலக நண்பர்கள் பலரும் கூறியிருக்கிறார்கள். ஒரு நண்பர், “பார்ப்பனர்கள் அவரை எதிரி போலப் பார்க்கிறார்கள். தங்களை வெறுக்கிற ஒருவராக நினைக்கிறார்கள். ஆனால் பிராமணக் குடும்பங்களில் பிறந்த பலரும் அவருக்கு நல்ல நண்பர்கள். அவரோடு பழகினால்தான் அவர், சக மனிதர்களைத் தாழ்வாகக் கருதுகிற பார்ப்பனிய சித்தாந்தத்தைத்தான் எதிர்க்கிறார், பார்ப்பன மக்களை அல்ல என்பது புரியும்’’ என்றார்.

கருத்துரிமைக்காக

‘தி இந்து’ பத்திரிகைக் குழுமத்தின் தலைவர் என்.ராம் அத்தகைய ஒரு நண்பர்தான். பெரியார் திடலில் இவர் தலைமையில் நடந்த நிகழ்வுகளில் அவர் பங்கேற்றிருக்கிறார். அப்படியான இரண்டு நிகழ்வுகளில் நானும் பேசியிருக்கிறேன். முதல் நிகழ்வு, கர்நாடகத்தில் பகுத்தறிவுச் சிந்தனையாளரான பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த நினைவேந்தல் கூட்டம். இரண்டாவது நிகழ்வு, ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், நீதிமன்றத்தில் அவர் மீதான தேசத்துரோகப் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதைப் பாராட்டியும் நடந்த விழா. இரண்டுமே கருத்துச் சுதந்திரப் பாதுகாப்போடு தொடர்புடைய நிகழ்வுகள்.

தனிப்பட்ட உணர்வு சார்ந்த அனுபவம் ஒன்றையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பெரியார் திடலின் நடிகவேள் எம்.ஆர். ராதா அரங்க நிகழ்வுகளில் ஒரு செய்தியாளராகப் பல முறை கலந்து கொண்டிருக்கிறேன். சில குறிப்பிட்ட தலைப்புகளில் உரையரங்குகள் நடக்கிறபோது, எனக்கும் சில சிந்தனைகள் பிறக்குமல்லவா, அவற்றை அந்த அரங்கிலேயே வெளிப்படுத்த இயலாமல் போகிறதே என்ற எண்ணம் ஏற்படும். அந்தச் சிந்தனைகளைப் பிறகு எழுத்தாக்கியிருக்கிறேன் என்றாலும் மேடைப் பங்கேற்பு இல்லாதது ஒரு சிறு மனக்குறையாக இருக்கவே செய்தது. அதைப்போக்கிய முதல் நிகழ்வு, கௌரி லங்கேஷ் நினைவேந்தலுக்காக என்றாலும், அது அடையாளப்படுத்தியது கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டமே என்பதால் கூடுதல் நெகிழ்ச்சியோடு கலந்து கொண்டேன்.

உரை நிகழ்ச்சிகளில் இவரிடம் நான் காணும் ஒரு தனித்துவம்: பேசுகிற அவையையே ஒரு நீதிமன்றமாகக் கருதி, உரிய நூல்களை ஆதாரமாகக் காட்டி, அவற்றில் குறிப்பிட்ட பத்திகளை வாசித்துத் தனது வாதத்தை நிறுவுவது. நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டச் சிக்கல்கள், சட்டத்துக்கு மாறான நடவடிக்கைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறபோது அவரிடம் நிச்சயமாக இந்திய அரசமைப்பு சாசனம் இருக்கும்.

அதே வேளையில் அந்த உரைகள் உணர்ச்சியற்ற பதிவுகளாக இருப்பதில்லை. சமூக அக்கறை சார்ந்த சீற்றம், வாழ்க்கையின் அழகு பற்றிய ரசனை, வேடிக்கை முரண்கள் குறித்த நையாண்டி எல்லாமே கலந்திருக்கும். அண்ணா அறிவாலய வளாகத்தின் கலைஞர் அரங்கில் அவர் தலைமையில் நடைபெற்ற, மதவெறிக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆசிரியருக்கு முன் பேசிய பேராயர் எஸ்ரா.சற்குணம், தன்னிடம் உள்ள செல்போன் தொடர்பாகக் குறிப்பிட்டார். பின்னர் உரையாற்றிய ஆசிரியர், “அதென்னவோ இப்போதெல்லாம் சாமியார்களிடம்தான் செல்போன் இருக்கிறது’’ என்றார். அரங்கில் எழுந்த சிரிப்பலை ஓய்வதற்குச் சில நிமிடங்கள் ஆனது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் அர்ச்சகர் சங்கரராமன் கொலை-வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கராச்சாரியின் செல்போன் உரையாடல்கள் பற்றிய பரபரப்புச் செய்திகள் வந்து கொண்டிருந்த நேரம் அது.

அரசியலும் வாழ்வியலும்

கீதையின் மறுபக்கம், பெரியார் ஆயிரம் _ வினா விடை, நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?, மனித நேயமும் நாகரிகமும் போன்ற அவரது ஏராளமான புத்தகங்கள் அவற்றின் தலைப்புகளே காட்டுவது போல ஆழமான அரசியல், சமூக, பண்பாட்டுத்தளப் பிரச்சனைகளை விவாதிக்கின்றன. வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைத் தொகுப்புகள், அன்றாட வாழ்க்கையின் எளிய அனுபவங்களிலிருந்து சமூகவியலைப் புரியவைக்க முயல்கின்றன. அரசியலும் வாழ்வியலும் வேறு வேறாக இருக்க வேண்டியதில்லை என்றும் கற்பிக்கின்றன. அப்படியொரு கட்டுரையில், எனது பேரக் குழந்தையின் ஆளுமை பற்றி நான் எழுதியிருந்த முகநூல் பதிவை எடுத்துப்போட்டுப் பேசியிருப்பார். அந்த எதிர்பாராப் பெருமிதத்தோடு, முகநூல் பதிவுகளையும் கூர்மையாகக் கவனிக்கிற அவரது நவீன ஊடகச் செயல்பாட்டு அக்கறையை எண்ணி வியப்பும் அடைந்தேன். விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, ஆங்கிலத்தில் வெளியாகும் தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் பொறுப்பை நிறைவேற்றிக்கொண்டே, இப்படி சமூக ஊடகங்களையும் உற்று நோக்குகிற இவரை, வாசிக்கிறவர்களுக்கு வழி காட்டியாகவும் திகழ்கிறவரை ஆசிரியர் என விளிப்பதில் எனக்கிருந்த குழப்பம் நீங்கியது.

அணுகுமுறைப் பக்குவம்

மாற்றுக் கருத்துடையவர்களிடம் நட்புப் பாராட்டுவது போலவே, தோழமையோடு இருப்பவர்களிடம் காணும் குறைகளையும் பக்குவமாகச் சுட்டிக்காட்டுகிற பாங்கையும் கவனித்திருக்கிறேன். எடுத்துக்காட்டாக, திராவிடர் கழகத்தைத் தனது தாயகமாகக் கருதியவரான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் மருத்துவமனையில் மரணத்தின் சவாலை எதிர்கொண்டிருந்த போது, உடன்பிறப்புகள் பலரும் கலங்கிப் போனவர்களாக வழிபாடு, பூசை என்று இறங்கினார்கள். அது கலைஞரின் கொள்கைக்கு எதிரானது என்று எடுத்துரைத்து அப்படிச் செய்ய வேண்டாம் என உரிமையோடு வேண்டுகோள் விடுத்தார் ஆசிரியர்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கிறார். தோழர் பினராயி விஜயன் தலைமையிலான இன்றைய இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு அனைத்துச் சாதியினரும் ஆலய அர்ச்சகராவதற்கான சட்டத்தைச் செயல்படுத்தியபோது, சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் செயல்படுத்துவதில் உறுதியாக நிற்கிறபோது மனம் திறந்து பாராட்டுகிறார்.

திராவிடர் கழகம் திடீரென தலித் இயக்கத்தோடு நெருக்கமாகச் செயல்படுவதாகச் சிலர் விமர்சித்தார்கள். தலித் விடுதலை இயக்கமும் திராவிடர் கழக இயக்கமும் இயற்கையான கூட்டாளி என்று சொல்லி அந்த விமர்சனங்கள் பொருத்தமற்றவை என்று உணர்த்தினார்.

மூவண்ணம்

தலித் விடுதலையை, தீண்டாமை ஒழிப்பை, ஜாதி அழிப்பை உறுதிப்படுத்தாமல் சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியாது. அந்தப் புரிதலின் தெளிவுடன்தான் இன்று கறுப்பு நீலம் சிவப்பு என்ற இயற்கையான கூட்டின் வரலாற்றுத் தேவை உணரப்படுகிறது. இந்தக் கூட்டில் கறுப்பையும் சிவப்பையும் நீலம் இணைக்கிறதா, அல்லது நீலத்தையும் சிவப்பையும் கறுப்பு இணைக்கிறதா, அல்லது கறுப்பையும் நீலத்தையும் சிவப்பு இணைக்கிறதா என்ற கேள்விக்கே இடமில்லை. நாட்டின் கொடியில் உள்ள மூவண்ணமும் அசோகச் சக்கரமும் சொல்கிற செய்தி நிலைபெற வேண்டுமானால், இந்த மூவண்ணம் சமமாக நடைபோட்டாக வேண்டும்.

வேறொரு கோணத்தில் யோசிக்கிறபோது, கறுப்பின் பிரதிநிதியாக ஆசிரியர் சந்தித்த அவசரநிலை ஆட்சிக்கால சிறைவாசம், வேறு பல வழக்குகளில் எதிர்கொண்ட சிறைக்கூடம், புனையப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகள், கைது நடவடிக்கைகள் அத்தனையின் இறுதி விளைச்சல் இந்தக் கூட்டுதான் என்று தோன்றுகிறது. நீலம், சிவப்பு தோழமைகள் கண்ட போராட்டங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றின் இறுதி விளைச்சலாகவும் இந்தக் கூட்டு பரிணமித்துள்ளது. இதன் பரிமாணத்தில் ஒரு தலைப்புள்ளியாய், சமுதாய மாற்றத்திற்காகப் போராடுடகிறவர்களைக் கைகுலுக்க வைக்கிற இடத்தில் இருக்கிறார் ஆசிரியர்.

எனது நம்பிக்கைக்கும் தோழமைக்கும் உரியவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்ற விருப்பத்தையே என் வாழ்த்தாக்குவது என் வழக்கம். ஆசிரியரிடம் நான் எதிர்பார்ப்பது என்ன? இந்தியச் சூழலில், தமிழகக் களத்தில், அடிப்படையான பொருளாதார சமத்துவம், சமூக சமத்துவம், பாலின சமத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டும் போராட்டத்தில், வேறு சொற்களில் சொல்வதானால் வர்க்க-வர்ணப் போராட்டத்தில் ஒரு ஈர்ப்பு விசையாய் ஆசிரியரின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பார்ப்பனிய சித்தாந்த எதிர்ப்புக்கு சற்றும் குறையாததாக, ஒதுக்கப்பட்ட மக்களைக் கடுமையாக ஒடுக்குகிற, ஜாதி வேலிக்குக் காதலர்களின் குருதியைத் தாரைவார்க்கிற இடைநிலைப் பிரிவுகளின் ஜாதிய ஆணவத்தைத் தகர்க்கிற கடமையை நிறைவேற்றச் செய்வதிலும் ஆசிரியரின் செயல்முனைப்பு தேவையாகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு நாடகத்திற்குச் சென்றிருந்தேன். நாடக/திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தலைமையிலான குழுவினர் நடித்த நாடகம் அது. அந்த நாடகத்தில் மணி என்றொரு கதாபாத்திரம். திடீரென்று கதாநாயகனான மகேந்திரன், என்னப்பா வெறும் மணிதானா? வீரமெல்லாம் அவ்வளவுதானா, என்று கேட்பார். அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கத் தயங்காதவரான ஆசிரியர், அப்போது 69 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பைத் தொடர்ந்து அரசுக்கு ஆதரவாக நின்றார். இடஒதுக்கீடு அதிகரிப்பின் மீதான ஆத்திரம் மகேந்திரனை நாடகத்தில் திடீர்ச்செருகலாக இப்படியொரு வசனத்தைப் பேசவைத்தது.

இன்றைக்கும் கூட மகேந்திரன்களும் ராஜாக்களும் ஆசிரியரைத் தாக்கித் தங்களைப் பெரிய ஆளாகக் கவனிக்க வைப்பதற்கான வசனங்களைப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்துக் கடவுள்களை அவமதித்துவிட்டார் என்று கூறி அந்த மக்களை ஆசிரியருக்கு எதிராகக் குவிக்க முயல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய உண்மையான கோபம் கடவுளை மறுப்பதால் வந்ததல்ல; இல்லாத கடவுளுக்கு எதுவும் ஆகிவிடாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கடவுளைச் சாக்கிட்டு அவர்கள் கட்ட விரும்புகிற பார்ப்பனிய மேலாதிக்கத்தையும், பெண்ணைச் சிறுமைப்படுத்தும் ஆணாதிக்கத்தையும், சிறுபான்மை மக்களை ஓரங்கட்டும் மதவெறியையும், இவற்றால் ஆதாயமடையும் கார்ப்பரேட் சுரண்டலையும் ஆசிரியர் தோலுரித்துக் காட்டுவதால்தான் இந்த ஆத்திரம். மக்களைக் கூறுபோடும் அபாயங்கள் பற்றி எச்சரிக்கும் மணி, அச்சமற்ற வீர முழக்கமாய் ஒலித்துக் கொண்டிருக்க, சமூகநீதிக்கும் சமநீதிக்குமான இயக்கம் சரியான தடத்தில் செல்கிறது என்பதற்கு இவர்களின் ஆத்திரம்தான் சான்று. அந்தத் தடத்தில் இணைந்து வர உறுதியளிக்கிறோம் தோழர் ஆசிரியர் அவர்களுக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *