சி.பி.அய்.க்கு விலக்கு
சி.பி.அய். அதிகாரிகள் பல்வேறு முக்கியமான வழக்குகளை விசாரித்து வருகிறார்கள். எனவே, விசாரணை விவரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின் படி தருவதற்கு உத்தரவிட்டால்தான் புலன் விசாரணையின் நிலையைத் தெரிந்து கொள்ள முடியும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து சி.பி.அய்.க்கு விலக்கு அளித்தது சட்ட விரோதமானது. அனைத்துத் துறைகளும் தகவல்களைக் கொடுப்பதுபோல் சி.பி.அய்.யும் தகவல்களைக் தர உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் விஜயலட்சமி மனு செய்திருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சி.பி.அய்.க்கு விலக்கு அளித்தது சரியானதுதான். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமனற்ம் விவாதிப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்புக் கூறியுள்ளனர்.
அரிச்சந்திரன் புகட்டிய பாடம்
முதல்ல பசியை ஒழிக்கணும். அப்புறம் தான் ஊழலை ஒழிப்பது. சாப்பிட்டப்புறம்தான் சந்தனம் பூசி, வெத்தலை போட முடியும். சாப்பிடுறதுக்கு முன்னால சந்தனம் பூசலாமா? ஊழலை ஒழிக்கிறேன்னு கிளம்புறது இந்தப் பிரச்னைகள்ல இருந்து திசை திருப்புறதுக்குத் தானோன்னு நினைக்கிறேன்.
ஹரிச்சந்திர மகாராஜா ஒரு பொய் சொல்லாததாலே என்ன பாடுபட வேண்டியிருந்துச்சுன்னு, அந்த நாடகத்தைப் பார்த்துட்டு மக்கள் கண்கலங்கினாங்க. அதைப் பார்த்த ஒருத்தன் சொன்னானாம்: உண்மையைச் சொன்னா என்னா பாடுபட வேண்டியிருக்கு? நான் உண்மையே சொல்ல மாட்டேன்.
சுதந்திரமடைஞ்சு 64 வருஷம் ஆயிடுச்சு. நல்ல காத்துக் கிடைக்கலை. விஷமில்லாத காய்கறிகள் கிடைக்கலை. இதை முதல்ல சரி பண்ணணும்.
– கி.ராஜநாராயணன், எழுத்தாளர் (நன்றி: தினமணி கதிர் 14.8.2011)
செவ்வாய் கிரகத்தில் தோட்டம்
அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் 2030ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்யும் 5 ஆண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
செவ்வாய் கிரகம் செல்லும் விஞ்ஞானி ஒருவருக்கு 3,175 கிலோ உணவு தேவைப்படும் என்பதால் இதற்கான ஆலோசனை செய்யப்பட்டது. அதில், அவர்கள் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி ஓடத்திலேயே ஒரு வீட்டுத் தோட்டம் அமைத்து, காய்கறி மற்றும் கிழங்குகளைப் பயிரிடத் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் விண்வெளி ஓடம் அமைக்கும் ஆய்வு, டெக்சாஸ் மாகாணத்தில் ஹிஸ்டனில் உள்ள டாக்டர் மாயா கூப்பர் நாசா விண்வெளி உணவு சோதனைக் கூடத்தில் நடைபெற்று வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.