[தமிழர் தலைவரின் 75ஆம் பிறந்த நாளின் போது கலைஞர் அளித்த வாழ்த்து]
இன்று தமிழர் தலைவராகப் போற்றப்படும் ஆருயிர் இளவல் வீரமணி அவர்களின்
75ஆவது பிறந்த நாள் பவள விழா டிசம்பர் திங்கள் இரண்டாம் நாள் அன்று கொண்டாடப்–படுகிறது. தம்பி வீரமணி பத்து வயதுச் சிறுவனாக இருந்தபோதே மேடை-யேறிப் பேசத் தொடங்கியவர்; ஆயிரக்கணக்-கானவர் கூடிய மாநாடுகளில் மேசைமீது நிற்க வைத்துப் பேச வைக்கப்பட்டவர். அவரது பேச்சாற்றல் கண்டு அவரைத் திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் எனப் புகழ்ந்தார் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியார் அவர்களோ, அவரது திறமை கண்டு மகிழ்ந்து, பாராட்டி, அவரது உயர்கல்விக்கு உதவி செய்து ஊக்கமளித்துள்ளார்.
பெரியாரின் நேரடி வாரிசு!
இப்படித் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பாராட்டுகளையும், அரவணைப்பையும் மிகச் சிறுவயதிலேயே பெற்று வளர்ந்த திரு. வீரமணி அவர்கள், இன்று தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகளை, அவரது சமுதாயச் சீர்திருத்தக் கோட்பாடுகளை, மகளிர் முன்னேற்றம் நாடும் கல்விச் சிந்தனைகளை, மூடப் பழக்கங்களைச் சாடி, எங்கும் எதிலும் அறிவியல் கண்கொண்டு சிந்திக்கவேண்டும் – செயல்படவேண்டும் எனத் தூண்டும் அறிவியக்க உணர்வுகளை, சாதி, மத வேறுபாடுகள் அகற்றப்படவேண்டும் எனும் சமதர்ம – சமத்துவச் சித்தாந்தங்களைப் பரப்புவதில் – பெரியார் அவர்களின் மிகச் சிறந்த வழித்தோன்றலாக – நேரடி வாரிசாக விளங்குகிறார்; திராவிடர் கழகத்தை, வலிவோடும் பொலிவோடும் வழிநடத்திச் செல்லுவதில் வல்லவராக, தந்தை பெரியார் அவர்களுக்கு என்றும் பெருமை சேர்க்கும் தளகர்த்தராகத் திகழ்கிறார்.
அய்யாவின் அருகிலிருக்கும் வாய்ப்பை அதிகம் பெற்றவர்!
தந்தை பெரியார் அவர்கள் திருச்சி மாநகரில் உருவாக்கிய கல்வி வளாகத்தைக் கட்டிக் காத்து, வளர்த்து வருவதுடன், தஞ்சைக்கு அருகில் வல்லம் என்னுமிடத்தில், மகளிர் பொறியியல் கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்-களுடன் ஒரு புதிய கல்வி வளாகத்தை உருவாக்கி, இன்று அதனை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமாகவும் உயர்த்தியுள்ள திரு. வீரமணி அவர்கள், தந்தை பெரியார் எண்ணிய எண்ணங்களையெல்லாம் நன்கு அறிந்தவர். பெரியார் எண்ணியதைச் செயல்படுத்துவதில் பேரார்வம் கொண்டவர். அதனால்தான், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தை நான் தொடங்கி வைத்து உரையாற்றிய-பொழுது,
என்னுடைய வயதைவிட ஓரிரு வயது, மூன்று, நான்கு வயது வீரமணி அவர்கள் இளையவராக இருக்கலாம். ஆனால், அவர் எங்களைவிட அதிகமாக பெரியாரிடத்திலே பக்கத்திலே இருந்து பழகியவர். ஆனால், நாங்கள் பெரியாரிடத்திலே கற்பதற்காகப் பெற்றிருந்த வாய்ப்பைவிட அதிக வாய்ப்பைப் பெற்றவர் அவர். எந்த ஒரு பிரச்சினையும், அது கடுகளவு பிரச்சினையாக இருந்தாலும், மலை போன்ற பிரச்சினையாக இருந்தாலும், கடல் அளவு பிரச்சினையாக இருந்தாலும், உமி அளவான பிரச்சினையாக இருந்தாலும், அதைப்பற்றி அருகிருந்து விவாதிக்கின்ற அந்த அருமையான வாய்ப்பை எங்களைவிட அதிகக் காலம் – இன்னும் சொல்லப்போனால், அறிஞர் அண்ணாவைவிட அதிகக் காலம் அந்த வாய்ப்பை, அவர் பெற்றிருந்த காரணத்தால்-தான், பெரியாருடைய எண்ணங்களையெல்லாம் நாட்டில், சமுதாயத்தில் செயல்படுத்தவேண்டும் என்று எண்ணுகிறார் – என்று பாராட்டினேன்.
தந்தை பெரியார் அவர்களின் எண்ணப்படி அமைந்த வாரிசு
”ஆருயிர் இளவல்
திரு. வீரமணி அவர்கள்,
தந்தை பெரியார் அவர்கள்
எண்ணியபடி
அமைந்த அவரது வாரிசு ஆவார்.”
ஆருயிர் இளவல் திரு. வீரமணி அவர்கள், தந்தை பெரியார் அவர்கள் எண்ணியபடி அமைந்த அவரது வாரிசு ஆவார். தந்தை பெரியார் அவர்கள் கல்லடியும், சொல்லடியும் தாங்கி, மான அவமானங்களைப் பொருட்-படுத்தாது தமது பகுத்தறிவு கோட்பாடு வெற்றி பெறுவதன் மூலமே, தமிழகத்தில் மனிதன் மனிதனாகத் தன்மானத்துடன் வாழ முடியும் என்று கருதி, அதற்காகவே அல்லும் பகலும், அலுப்பும் சலிப்புமின்றிப் பாடுபட்டார். அப்படிப்பட்ட பெரியார் அவர்களிடம் வாரிசு குறித்துக் கேள்வி எழுந்தபோது, அதற்குப் பதிலாகச் சிவகங்கையில் 10.4.1965 அன்று நடைபெற்ற கூட்டத்தில்,
எனக்குப் பின், எனது புத்தகங்களே வழிகாட்டும். இந்தத் தொண்டும், பிரச்சாரமும் அறிவை மட்டும் சேர்ந்ததல்ல; உணர்ச்சியையும் சேர்ந்தது. அந்தப் பக்குவம் உள்ள ஒருவன் இருந்தால், அவன் அடுத்துத் தலைமை ஏற்க வருவான். அதுவரை யார் என்றால், இந்தப் புத்தகங்கள்தான். வேறு யாரும் வரக்கூடாது என்பதல்ல என் கருத்து. அந்தப் பக்குவம் உள்ளவனிருந்தால் அவன் வருவான். முகமது நபியைப் பார்த்து, உங்களுக்குப் பின் யார்? என்று கேட்டதற்கு, அவர், எனக்குப் பின் வேறு யாருமில்லை என்று கூறிவிட்டார். நான் அப்படிக் கூற விரும்பவில்லை.
அறிவும், உணர்ச்சியும், துணிவும் உள்ள யார் வேண்டுமானாலும் வரலாம்
என்று கூறினார். தந்தை பெரியார் அன்று கூறியபடியே அவர் எண்ணிய அந்த அறிவையும், உணர்ச்சியையும், துணிவையும் கொண்டவராகத் திகழும் அன்பு இளவல் திரு. வீரமணி அவர்கள், இன்று அவரது வாரிசாக விளங்குகிறார்.
புரட்சிக் கவிஞர் அன்றே கண்ட தொண்டு மனம்
திரு. வீரமணி அவர்கள் சமுதாயத் தொண்டு குறித்த பணிகளிலேயே எப்பொழுதும் ஈடுபடுவார். அவர் வீண் பொழுது போக்கை விரும்பாதவர். பிறரைப் போல் நண்பர்களுடன் கூடிப் பேசிக் காலம் கழிக்கும் நடைமுறைகளைக்-கூடச் சிறிதும் நயவாதவர். இத்தகைய குணம் அவருக்குச் சிறுவயது முதலே இயல்பாக அமைந்துவிட்டது. அதனைத் துல்லியமாகக் கண்டு கொண்டவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில், அவருடைய கொள்கைக்கேற்ப, சாதியை எதிர்த்து, எந்தவிதச் சம்பிரதாயச் சடங்கும் இன்றிக் குறிப்பாகத் தாலியில்லாமல், 1958 டிசம்பர் 7 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணிக்குச் சரியான இராகு கால நேரத்தில், திருமதி மோகனா அம்மையாரைத் திரு. வீரமணி தமது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றபொழுது, புரட்சிக்கவிஞர் அவர்கள் வீரமணியைப் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடலில்,
இளமை வளமையை விரும்பும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீர மணியிடம் நேரில் கண்டுள்ளேன்!
பாடிக் கைவீசிப் பலருடன் உலவி
வேடிக்கை வேண்டும் வாடிக் கைதனை
அவன்பாற் காண்கிலேன் அன்றும் இன்றும்!
என்று அன்று பாடியது இன்றும், என்றும்
திரு. வீரமணிக்குப் பொருந்துவதாக அமைந்திருக்-கிறது. அதே எளிமை; அதே துணிவு; அதே தொண்டு மனப்பான்மை இந்த 75ஆம் வயதிலும் அவரிடம் மிளிர்கின்றன.
அரசுக்கு உதவி!
இன்று இட ஒதுக்கீட்டுக் கோட்பாட்டைத் தகர்க்க நினைத்திடும் ஆதிக்கச் சக்திகளை எதிர்ப்பதிலும், தமிழகத்திற்கு வளம்பெருக்கும் திட்டமாக வடிவெடுத்துள்ள – 150 ஆண்டுகாலக் கடுந்தவத்திற்குப் பின், செயல்வடிவம் கொண்டுள்ள சேது சமுத்திரத் திட்டத்தைத் தற்போது எழுந்துள்ள தடைகளை உடைத்து நிறைவேற்றுவதிலும், அவர் தமிழக அரசுக்குப் பெரிதும் உதவி வருகிறார்.
இதயங்கனிந்த வாழ்த்துகள்!
இப்படித் தமது 65 ஆண்டு நீண்டகாலப் பொது வாழ்க்கையின் மூலம், தமிழகத்திற்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் ஆருயிர் இளவல் திரு. வீரமணி அவர்கள் ஆற்றிய பணிகள் என்றும் போற்றத்தக்கவை; புகழத்தக்கவை; அவர், மேலும் பல்லாண்டு காலம் வாழவேண்டும்; தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் மேலும் மேலும் வெற்றி பெற, அவர் உழைப்பும் தொண்டும் என்றும் தொடரவேண்டும் என அவரது 75 ஆம் ஆண்டு பிறந்த நாளில் என் இதயங்கனிந்து வாழ்த்துகிறேன்.
வாழ்க வெல்க வீரமணி!