இனத்திற்கு எதிரான சூழ்ச்சிகளை சினத்துடன் மோதிச் சிதறச் செய்பவர்!- மஞ்சை வசந்தன்

டிசம்பர் 1-15 2018

மஞ்சை வசந்தன்

 

ஆளுமைகளின் நிலைக்கலன்

தந்தை பெரியார் தேர்ந்து செதுக்கிய ஆளுமை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஆளுமை என்பது ஒரு மனிதனைச் சாதிக்கச் செய்யும், உயர்த்தும். உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஆளுமை பெற்று விளங்குவர். ஆனால், ஆளுமைகள் அனைத்தும் ஒருவரிடமே உள்ளடங்கிய சிறப்பும் வியப்பும் இவரிடம் மட்டுமே!

தன்னைப் பிஞ்சுப் பருவம் முதல் வழக்கமான உணர்வு நாட்டங்கள் வழிச் செலுத்தாமல் தந்தை பெரியாரின் பணிக்கென கட்டுப்படுத்தி, நெறிப்படுத்திக் கொண்டது இவரின் மிகப் பெரும் ஆளுமை. பிஞ்சுப் பருவம், விடலைப் பருவம், வாலிபப் பருவங்களுக்கே உரிய துள்ளல்கள், துருதுருப்புகள், திரிதல்கள், நுகர்தல்கள்; தோழமை, குழுச் சேர்தல், எதிர்பாலின ஈர்ப்பு, அது சார்ந்த உல்லாசம், சல்லாபம் என்று எதிலும் தன்னைச் செலுத்தாது, இத்தனையையும் அப்பருவங்-களிலே அடக்கி ஆளல் என்பது ஆளுமையின் அரிய செயல் ஆகும். அதுவே ஆளுமையின் உச்ச நிலையாகும்!

சட்டம் பயின்று நல்ல வருவாய் ஈட்டி, வளமோடு வாழ வாய்ப்பிருந்தபோதும், தந்தை பெரியார் அழைத்தார் என்றதும் அத்தனை வசதி, உயர்வு, வாய்ப்புகளையும், உதறித் தள்ளிவிட்டு மதிப்பூதியம் கூட வேண்டாம் என்று சொல்லி பொருளாசையைப் புறந்தள்ளும் ஆளுமை எல்லோர்க்கும் இயலுவதன்று. ஆனால், அந்த ஆளுமையும் இவருள் இருந்தது.

அரசியல் ஈர்ப்பு, பதவி நாட்டம், புகழ் வெளிச்சம் ஒருவரை நிலைகுலையச் செய்து தம் வயப்படுத்தும். ஆனால், அந்த ஆசைகளை யெல்லாம் அடக்கி, ஒடுக்கி தொண்டனுக்குத் தொண்டனாய் நின்று தொண்டு செய்யும் உளத் தூய்மை என்ற ஆளுமை உலகில் எவர்க்கும் எளிதில் வந்துவிடாது. ஆனால், அந்த ஆளுமையும் இவருள் அடக்கம்.

இயக்கத் தலைமை, தொண்டர்கள் முழக்கம், பாராட்டு, புகழ்ச்சி என்று ஒவ்வொன்றாய்ச் சேரச் சேர அப்போதைகளில் தள்ளாடும் தலைவர்கள் மத்தியில் தன்னை எச்ச-பலத்திற்கும் ஆட்படுத்தாமல், நிலைகுலையாது ஆளுமை மலையாய் நிலைத்து நிற்கின்ற வல்லமையும் இவரின் தனித் தகுதியும் சிறப்பும் ஆகும்!

கணக்கில்லாது கற்றல், கற்றதை மற்றவர்க்கு எடுத்துரைத்தல், எதிரிகளின் சூழ்ச்சிகளை அறிதல், அவற்றை வியூகம் அமைத்து, வினையாற்றி முறியடித்தல்; நாளெல்லாம் எழுதுதல், பேசுதல், பயணம் செய்தல், அதனால் ஏற்படும் உடல் பாதிப்புகளை உள்ள உறுதியுடன் எதிர்கொள்ளல்; தன் தலைவன் இலக்கை, சிறப்பை பேசுவதே தன் பணியென்று தன்முனைப்பைத் தகர்த்தல் என்று இவையெல்லாம் தனித்தனியே அவருள் அடங்கியிருக்கும் தன்னிகரற்ற ஆளுமைகள்!

எளிமையின் இலக்கணம்:

எளிமை என்பது உடையிலும், உறைவிடத்திலும், உணவிலும் மட்டும் வருவதல்ல. அது வறுமையில்கூட வரும். ஆனால், வாய்ப்புகள் இருந்தும் வசதிகள் இருந்தும் எளிமையாய் இருப்பதே எளிமையாகும்.

தன் மாமனார் தனக்கு அன்புடன் அளித்த மகிழுந்தைக்கூட வேண்டாம் என்று, மாநகரப் பேருந்தில் மக்களோடு மக்களாய்ப் பயணம் செய்தவர் இவர்.

ஆனால், அவர் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடந்ததால் பாதுகாப்பு கருதி தற்போது தனிப்பட்ட முறையில் வாகனத்தில் செல்கிறார்.

மேலும் எளிமை என்பது இவற்றோடு முடிவதல்ல. பழகுவதில் எளிமை, பேசுவதில் எளிமை, காட்சிக்கு எளிமை, அணுக எளிமை என்று அது நீளும். அத்தனை எளிமையும் மொத்தமாய் இவரிடம் இருப்பதை எவரும் அறிவர்.

இயக்கமே குடும்பம்

இவருக்கென்று தனிப்பட்ட முறையில் குடும்பம் இருப்பினும், இவர் அதனுள் என்றும் அடைப்பட்டதில்லை, அத்தோடு மட்டும் சுருக்கிக் கொண்டதும் இல்லை. உலகெங்கும் உள்ள இயக்கத்தவர் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் குடும்பம் இவருடையது.

அத்தனை பேரின் சுகதுக்கங்களிலும் தன்னைப் பிணைத்துக் கொள்பவர். ஒருவருக்குற்றதைத் தனக்குற்றதாகக் கருதும் பேருள்ளம் உடையவர். இந்த அரிய இயல்புதான் அதை ஆயிரம் ஆயிரம் தொண்டர்களையும் இவரிடம் ஈர்ப்பதோட, இணைத்தும் வைத்துள்ளது.

இயக்கத்தவர் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருப்பதோடு, அவர்களது குடும்பத்தைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பவர்.

ஒருவருக்கும் தெரியாமல் உதவுபவர்

உற்றுழி உதவுதல் என்ற இலக்கணத்திற்கு இவரே அடையாளம். இவரால் உரிய காலத்தில் உயர்வு பெற்று வாழ்வு பெற்றோர், உயர்வு பெற்றோர் ஏராளம். ஆனால், எந்த உதவியும் எவருக்கும் தெரியாது செய்வார். அடிமட்ட தொண்டர் முதல் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் வரை அதில் அடக்கம்.

மாற்றாரை மதிக்கும் மாண்பு:

இனத்தின் மீது இணையில்லா பற்றுடையவர் என்றாலும், இன எதிரிகளை அவர் என்றுமே மதிக்கத் தவறியதில்லை. இன எதிரிகளைக் கொள்கை எதிரிகளாக மட்டுமே பார்க்கும் பண்பட்ட பார்வை இவருடையது.

உணர்ச்சி வசப்பட்டு எதிரிகளைச் சாடும் சூழலில்கூட பண்பாடு காக்கும் பக்குவம் உடையவர். தனக்கு பாடை கட்டி ஆரிய பார்ப்பனர்கள் சுமந்தபோதுகூட, பார்ப்பான் சூத்திரன் பாடையைச் சுமப்பது நமக்கு வெற்றிதானே என்று அப்போதுகூட, கொள்கை வெற்றியாக அதைக் கொண்டவர்.

திராவிட இயக்கத்தைக் கடுமையாகச் சாடிய ‘துக்ளக்’ சோவை, பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் சிறப்பித்தவர். அவர் இவரைப் பேட்டி கண்ட போதெல்லாம் இவரின் பண்பில், அன்பில் சிக்குண்டு நெகிழ்ந்த நிகழ்வுகள் பல.

ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரம் இவரின் மாண்பைத் தன் இதழிலே வெளியிட்டுப் பாராட்டியது. தலைமை நிலையில் இருக்கக் கூடியவர்கள் தவறாது பின்பற்ற வேண்டிய அரிய குணம் இவருடையது.

இனத்திற்கு எதிரான சூழ்ச்சியை சினத்தோடு சிதறடிப்பவர்

அதேநேரத்தில் கொள்கை அடிப்படையில் எதிரிகளை எதிர்க்கும்போது சினத்தால் கண்கள் சிவக்க ஆத்திரத்தோடு, ஆவேசத்தோடு அவர்களின் சூழ்ச்சியைச் சாடுவார்; அதை நொறுக்க, வீரத்தோடு போராடுவார் அனைத்திலும் வெற்றியும் பெறுவார்!

அண்ணாவைப் பற்றி அக்காலத்தில் ஒரு கணிப்பு உண்டு _

“அண்ணாதுரை ஆளைப் பார்த்தால்

என்னவோ போல் இருக்குது! – ஆனால்,

அவர் மேடைப் பேச்சு

ஆரியத்தை நொருக்குது!”

என்பார்கள்.

அது ஆசிரியருக்கு பொருந்தும். அடக்கமான சிறிய உருவத்துள் எத்தனை ஆற்றல், எத்தனை எழுச்சி, எத்தனை வீரம், எத்தனை தீரம்! எத்தகு உறுதி!

கொள்கை எதிரிகள் அவரைக் கொல்ல குறிவைத்துத் தாக்கிய நிகழ்வுகளே அதற்குச் சான்று.

”அதேநேரத்தில் கொள்கை அடிப்படையில்

எதிரிகளை எதிர்க்கும்போது சினத்தால்

கண்கள் சிவக்க ஆத்திரத்தோடு,

சாடுவார்; அதை நொறுக்க, வீரத்தோடு

போராடுவார் அனைத்திலும் வெற்றியும் பெறுவார்!”

கொள்கைக்கு ஏற்ற கோவம்:

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பும்போது, மூட நம்பிக்கைகளைச் சாடுகையில் நக்கலும், நையாண்டியும், எள்ளலும், ஏளனமும் மிகுதியாய் இருக்கும். கேட்போரும் கையொலி எழுப்பி குலுங்கிச் சிரிப்பர்.

ஆனால், சமூகநீதிக் கொள்கைகளைப் பேசும்போது, அதுவும் சமூகநீதிக்கு எதிரான சூழ்ச்சிகளைத் தாக்கும்போது செம்புக் கம்பியில் மின்சாரம் பாய்ந்தது போன்றுதான். எதிரிகளால் தாங்க முடியாத சினத்துடன், தீரத்துடன், வீரத்துடன், வேகத்துடன், எழுச்சியுடன், உணர்வுடன் பேசுவார்!

அதேபோல், அரசியல் தலைவர்களுடன் நட்பு கொண்டு ஆதரிப்பதும், எதிர்நிலை வரும்போதும் எதற்கும் அஞ்சாது எதிர்ப்பதும் இவரது சமுதாய அக்கறையின் அழுத்தமான பதிவுகள்!

இந்நிலைப்பாட்டில் இவர் அண்ணாவையும் எதிர்த்திருக்கிறார், கலைஞரையும் எதிர்த்திருக்-கிறார், எம்.ஜி.ஆரையும் எதிர்த்திருக்கிறார். மாறாக, பெரியாரின் இலக்குகளை நிறைவேற்றுபவர் யாராயினும் அவர்களை தூக்கிப் பிடித்து பாராட்டவும் இவர் தயங்கியதில்லை.

69% இடஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பு அளித்த ஜெயலலிதா அவர்களைப் பாராட்டி “சமூகநீதி காத்த வீராங்கனை’’ என்ற பட்டமும் அளித்தார்.

பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று, அரசாணை வெளியிட்டபோதும், பிற்படுத்தப்-பட்டோர் இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தியபோதும் எம்.ஜி.ஆரை தலைமேல் தூக்கிக் கொண்டாடினார். இவரின் இந்த இயல்பை கலைஞர் அவர்களே உளமாறப் பாராட்டியிருக்கிறார்.

திராவிட இனத்தின் திசைகாட்டி

தினந்தோறும் இவர் ‘விடுதலை’யிலும், செய்தியாளர்களிடமும் வெளியிடும் கருத்துகள்தான் திராவிட இனம் செல்லத்தக்க வழியைக் காட்டுகின்றன.

இனத்திற்கு எதிரான எந்தவொரு சிக்கல், சோதனை, ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கு உடனடியாகத் தீர்வை, செல்ல வேண்டிய வழியை உடனே காட்டுகின்ற திசைகாட்டியாய் அவர் இருந்து வருகிறார். இன உணர்வுள்ளவர்கள் எந்த அமைப்பில் இருந்தாலும் இதை ஏற்று செயல்படுகின்றனர். இன்றைய ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் விவாதப் பொருளை இவரே வழங்கி வருகிறார் என்பதே உண்மை!

எதிரிகளின் இருட்டடிப்பு:

எப்படி இனத்தின் உயிர்நாடியாய் ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டிருக்கும் இவரை இன எதிரிகள் மக்களக்குத் தெரியாமல் இருட்டடிப்புச் செய்வதை வாடிக்கையாய் கொண்டுள்ளனர். இவரின் கருத்துக்களை பயன்படுத்திக் கொள்ளும் ஊடகங்கள் இவரின் பேட்டிகள், கருத்துகளை பெரிதாய் வெளியிடுவதில்லை. பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும், இயக்கத்தின் சிறப்புக் கூட்டங்களில் பேசினாலும் அவற்றை அறவே இருட்டடிப்பு செய்கின்றனர். தலைவர்கள் அமர்ந்திருக்கும் படத்தை அச்சிடுகையில் இவரின் படத்தை நீக்கிவிடுகின்றனர்.

தமிழர்களின் தலையாய கடமை

எனவே, எதிரிகளின் இச்சூழ்ச்சிக்கு எதிராய் தமிழர்கள் எதிர்வினையாற்ற வேண்டியது கட்டாயக் கடமையாகும். தமிழர்களின் ஒட்டுமொத்த தலைவராய் நின்று இன்று வழிகாட்டும் இவரின் கருத்துக்களையும், இவரின் போராட்டங்களையும் மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் வழி உடனுக்குடன் கொண்டு செல்ல வேண்டும். அவரின் கருத்துகளுக்கும், போராட்டங்களுக்கும் பெருமளவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவரை நாம் உயர்த்திப் பிடிக்கும் அளவிற்கு இச்சமுதாயம் உயர்வுபெறும் என்பதே உண்மை! இதை இளைஞர்கள் செய்ய வேண்டியது கட்டாயக் கடமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *