தோழர் வீரமணியின் சேவை – தந்தை பெரியார்

டிசம்பர் 1-15 2018

வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர். எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்-கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளா-விட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது ‘விடுதலை’ ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து, அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை’யை ஒப்படைத்து விட்டேன்.

‘விடுதலை’ பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!

இனி. ‘விடுதலை’க்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள் தான் இருந்து வருவார்.

எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்த பொறுப்பை ஏற்கிறார் என்றால் ‘விடுதலை’யை நான் நிறுத்திவிடப் போவதை அறிந்த சிலர் ‘விடுதலை’ பத்திரிகை காரியாலயத்தையும் அச்சு இயந்திரங்களையும் மாதம் 1க்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்கு கேட்டுக் கொண்டிருந்த நிலையில், அதை வாடகைக்கு கொடுப்பதைவிட நிறுத்திவிடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லோரும் நமக்கு வேண்டுகோளும் அறிவுரையும் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இயக்க நலத்தையே குறியாகக் கொண்டு பொறுப்பேற்க முன்வந்தார்.

ஆகவே, விடுதலையின் 25வது ஆண்டு துவக்கத்தில் லட்ச ரூபாய்களை ‘விடுதலை’ நடப்புக்கு ஆக செலவிட்டு நஷ்டமடைந்த நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும் தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி ‘விடுதலை’யை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதற்கு பொது மக்கள் இல்லாவிட்டாலும், ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், நம் மக்களிடம் எந்தக் குணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நன்றி காட்டுகிற குணம் என்பது பெரிதும் கிடையாது; கிடையவே கிடையாது. அது இல்லாவிட்டாலும் நம்பிக்கைத் துரோகம், செய்யாமலாவது இருப்பது என்பது அரிது. மிக மிக அரிது. ஆதலால் விடுதலைக்குப் பொதுமக்கள் ஆதரவு பெரிதும் இருக்காது என்பதோடு, பல தொல்லைகள் ஏற்பட்டும் வருகிறது என்பதோடு மேலும் வரவும் கூடும். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. இது எனக்கு அனுபவம்.

இயக்கத் தோழர்கட்கு வேண்டுகோள்

ஆனால் இயக்கத் தோழர்களை, எனது இயக்கத்தில் இருந்து மனிதர்கள் ஆகி எனக்கும் இயக்கத்துக்கும் கத்தி தீட்டும், தீட்டி வெளியேறிய தோழர்களைத் தவிர்த்து, மற்ற இன்று இயக்கத்தில் இருக்கும் அதுவும் இயக்கத்தால் தங்கள் நலனுக்கு எந்தவிதப் பலனும் அடையாமல் அவர்களது பணத்தி-லேயே வாழ்ந்து கொண்டு அவரவர்கள் நேரத்தைச் செலவு செய்து கொண்டு பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்து இயக்க வளர்ச்சிக்கு இரவும் பகலும் பாடுபடும் உண்மைத் தொண்டர்களான இயக்கத் தோழர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.

‘விடுதலை’ பத்திரிகை, நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வரவேண்டுமானால், இப்போது இருப்பதை விட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டு ஆக-வேண்டும். இதற்குப் பெரிதும் தஞ்சை மாவட்டத்தையே நம்பி இருக்கிறேன்.

ஓர் ஆண்டுக்குள் மேலும் 5,000 சந்தா பெருகி ஆக வேண்டும். அது 2 மாதத்திற்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இப்போது உடனடியாக 2 மாதத்தில் 2,500 சந்தா அதிகமாகச் சேர்க்கப்பட்டு ஆகவேண்டும்.

இன்று நமது இயக்கம் இதுவரை இருந்த அளவை விட உச்ச நிலையில் இருக்கிறது. இது உண்மை என்பது மெய்ப்பிக்க வேண்டுமானால் இது தான் பரிட்சை. ஆதலால் நான் வீரமணி அவர்களைப் பாராட்டி இந்த முயற்சியோடு இந்த ஆசையோடு, விடுதலையின் 25வது ஆண்டில் அதை மறுபிறவி எடுக்கும்படி அவரிடம் ஒப்புவிக்கிறேன்.

இயக்கத் தோழர்கள் இந்த வேண்டுகோளை நிறைவேற்றி, எங்களைப் பெருமைப்படுத்தி விடுதலையை வாழவைத்து வீரமணி அவர்-களையும் உற்சாகப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நாளை முதலே தோழர்கள் இந்தக் காரியத்தில் இறங்கிச் செயல்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கு ஆக, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மாவட்டத்தில் இத்தனை இத்தனை சந்தா சேர்த்துத் தருகிறோம் என்பதாக எனக்கு உறுதி வார்த்தை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

‘விடுதலை’யின் சேவையை எடுத்து விளம்புங்கள்!

நமது இயக்கம், நமது பத்திரிகை செய்துள்ள பணிகளை மக்களிடம் சொல்லுங்கள். இது மறைந்தால் என்ன ஆகும் என்பதை விளக்குங்கள்.

அதிகாரிகளை, அரசாங்க சிறிய உத்யோகஸ்தர்களை, வியாபாரிகளை விவசாயப் பொது மக்களை தைரியமாய் அணுகுங்கள்; வெட்கப்படாதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் இன உணர்ச்சியையும் சமுதாய நலன் உணர்ச்சியையும் பரீட்சை பார்ப்பதில் நமக்கு கவுரவக் குறைவு நேர்ந்து விடாது.

ஆண்டு மாத காலம் 60 நாட்களில் 2500 சந்தா, தினம் 42 சந்தா, 13 மாவட்டங்களில் 13 மாவட்டத்தில் 100 வட்டங்கள் (தாலுக்காக்கள்) பொதுவாக ஒரு மாவட்டத்திற்கு 200 சந்தாவீதமாகும். இதுகூட நம் கழக முயற்சிக்கு விடுதலை மறுபிறப்புக்கு கைகூடவில்லை என்றால், நம் நிலை என்ன என்பதை தோழர் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டுமென்று வேண்டி, இந்த வேண்டுகோளை விண்ணப்பமாகத் தமிழ்நாட்டு மக்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

–  விடுதலை, 6.6.1964

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *