ஒரு கோப்பைத் தேநீர்!
ஒரு பெண்ணை இன்னொரு பெண்தான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதை இந்தக் குறும்படம் மனதைத் தொடுகின்ற காட்சிகளால் விவரிக்கின்றது. ஒரு பெண் குற்றவாளியை ஒரு பெண் காவலர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது இருவருக்குள்ளும் நடைபெறுகின்ற உரையாடல் தான் கதைக்களம்.
குற்றவாளிப் பெண், “ஏட்டம்மா, உன்னை அக்கான்னு கூப்பிடறேனே’’ _ என்று சொல்லும்போது, உறவுகளுக்கு ஏங்குகின்ற பெண்ணுக்கு பின்னுள்ள மொத்த சோகமும் நமக்குள் பரவிவிடுகின்றது. ஏட்டம்மா இறுதிவரையில் அந்தக் குற்றவாளிப் பெண்ணின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். வழியில் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கு வலி ஏற்படுகிறது. ஏட்டம்மா தானாகவே அவளுக்கு எல்லா வழியிலும் உதவுகிறார்.
“நல்ல வேளை நீ வந்தே. இதே ஆம்பள போலீசா இருந்தா ஓவறா கிண்டல் பண்ணி இருப்பாங்க’’ என்று சொல்லும்போது ஏட்டம்மா இளகி விடுகிறார். இறுதியில் தன்னை ‘அக்கா’ என்று அழைப்பதற்கு சம்மதித்து விடுகிறார். குற்றவாளி மீது கரிசனம் ஏற்பட்டு, அவளுக்கு, “ஒரு கோப்பைத் தேநீர்’’ வாங்கிக் கொடுக்கிறார். பிறகு, “நீ ஏன் திருடினே?’’ _ என்று கேட்கிறார். அதற்கு அந்த இளம்பெண், “நீங்க ஏன் போலீஸ் ஆனீங்க?’’ என்று எதிர்கேள்வி கேட்கிறார். இரண்டு பக்கமும் பதில் இல்லை.
கதை, திரைக்கதையை எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். 9:25 நிமிடம் ஓடும் இந்தக் குறும்படத்தின் உரையாடல் கவனத்தை ஈர்க்கிறது.
– உடுமலை வடிவேல்