சிறுகதை

அக்டோபர் 01-15

வானம் தூரமில்லை

– மீனாட்சி

வீட்டிலிருந்து புறப்படும்போதே மெய்யரசன் இந்த வேலையாவது கிடைத்தால் வீட்டில் பணத்தால் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளித்துவிடலாம் என நினைத்தான். மெய்யரசன் கணினித் துறையில் எம்.இ. பட்டம் பெற்றிருந்தான்.

அவன் படித்த கல்லூரியில் வளாக நேர்காணல் நடத்தப்படவில்லை. எனவே, வேலை தேடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டான். வேலை கிடைக்கும்வரை மாணவர்களுக்கு ஆங்கில மொழிக்கான தனிப்பயிற்சி வகுப்பை ஏற்படுத்தினான். அதன்மூலம் வரும் வருமானத்தில் தன் வாழ்க்கையை ஒவ்வொரு நாளாகக் கடத்தினான்.

பல நிறுவனங்களுக்கு விண்ணப்பங்கள் போட்டபடி இருந்தான். ஒரு நாள் ஒரு நிறுவனத்திலிருந்து நேர்காணலுக்கு வரும்படி அழைப்புக் கடிதம் வந்தது. மெய்யரசனின் அம்மாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த வேலை கிடைச்சிருமா?

கிடைச்சிரும்னுதான் நினைக்கிறேன். என்று சொல்லிவிட்டு, அம்மாவின் கையைப் பிடித்து கையைப் பார்த்த மெய்யரசன், அம்மா… உன் கை இப்படிக் காய்ச்சிப் போய்க் கிடக்குது!

அதுக்கென்ன இப்போ… உனக்கொரு வேலை கிடைச்சா இதெல்லாம் மறைஞ்சு போயிடும்.. போயி உன் வேலையைப் பாரு என்றாள் அவன் கன்னத்தை வருடியவாறு.

அவள்தான் என்ன செய்வாள்? மேல்நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் தன் தம்பி விசயனைப் படிக்க வைக்க வேண்டும் அக்கா செயசித்ராவிற்குப் போடவேண்டிய நகையை இன்னும் போடவில்லை; அவள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள். அப்பா கூலி வேலைக்குச் சென்றாலும் வீட்டு விஷயங்களைப் பார்ப்பது அம்மாதான்.

மெய்யரசன் தன் படிப்பிற்கு வாங்கிய கல்விக் கடன் தொகையைக் கட்ட வேண்டும். இதையெல்லாம் சரிசெய்ய மெய்யரசன் தனக்கு எப்பொழுது வேலை கிடைக்குமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அவனுடைய எண்ணம் ஈடேற இன்னும் பல நாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. மெய்யரசன், தான் செய்துவந்த தனிப்பயிற்சியில் வரும் ஊதியத்தில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவே பற்றாக்குறையாக இருந்தது. அவன் வீட்டிற்கு அருகில் புதியதாகத் திறக்கப்பட்ட ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்ற ஆரம்பித்தான்.

ஒரு நாள் செய்தித்தாளைப் பார்த்தபோது ஒரு மிகப் பெரிய நிறுவனத்திலிருந்து நிருவாக அதிகாரிக்கான வாக் இன் இண்டர்வியூவிற்கு அழைப்பு வந்திருந்தது-.

இந்த வேலைக்கு விண்ணப்பித்தால் நிச்சயம் தனக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்று உறுதியுடன் நம்பினான். அவன் பெற்றிருந்த மதிப்பெண்கள் அவனுக்கு இந்த நம்பிக்கையை அளித்தது.

நேர்காணலுக்கான நாளும் வந்தது. அதற்காக முன்பே தயாராக எடுத்து வைத்திருந்த ஆடையைப் போட்டுக் கொண்டு புறப்பட்டான். நடந்த அனைத்து எழுத்துத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்றான். இனி மீதியுள்ளது நேர்முகத் தேர்வு மட்டுமே. அதற்காகக் காத்திருந்தான். அன்று மாலை அவனை நேர்காணலுக்கு அழைத்தனர். மிகவும் ஆவலுடன் நேர்காணலுக்கான அறைக்குச் சென்றான்.

அங்கு இண்டர்வியூவர்கள் இருவர் அமர்ந்திருந்தனர். அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இருவர்தான் இருக்கிறார்கள். எளிதாக பதில் கூறிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டினான். உள்ளே நுழைந்த மெய்யரசனை நாற்காலியில் அமரும்படிகூட கூறவில்லை. இருந்தபோதும் அதையும் பொருட்படுத்தாமல் நின்றபடியே அவர்களுக்குத் தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்தான்.

அவர்களில் சுமார் அய்ம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் மெய்யரசனைப் பார்த்து, நீயெல்லாம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாமா? என முதலும் கடைசியுமாக வினவினார்.

ஏன்?….. நான் எல்லாத் தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெற்றுள்ளேனே!

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீ… (அவனுடைய ஜாதியையும் கூறி) உன்னால அவாளை எல்லாம் கன்ட்ரோல் பண்ணமுடியாது. இந்தக் கம்பெனியையும் மேலே வளரவைக்க முடியாது. நீ போகலாம்.

மெய்யரசன் விக்கித்துத்தான் போனான். பின் ஏன் என்னை நேர்காணலுக்கு அழைத்தீர்கள் என்று கேட்கக்கூடத் தோன்றாமல் தன்னுடைய சான்றிதழ்களை வாங்கிக் கொண்டு வெளியேறினான்.

வீட்டிற்கு வரும் வழியில் வீட்டிற்குச் செல்ல மனமில்லாமல் ஓர் இடத்தில் அமர்ந்து நடந்த நிகழ்ச்சியை எண்ணி வருத்தம் அடைந்தான்.

அவர்கள் கேட்டிருந்தபடி என் விண்ணப்பத்துடன் என்னுடைய ஜாதிச் சான்றிதழை அனுப்பியிருந்தேன். அதைப் பார்த்தவுடன் என் விண்ணப்பத்தை நிராகரித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, தன்னை அழைத்து அவமானப்படுத்தி விட்டனரே! இந்த ஜாதியில் பிறந்தது என் குற்றமா? நம் நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும் கீழ்ஜாதி மேல்ஜாதி என்னும் வேறுபாடு இன்னும் ஒழியவில்லையே! எல்லாத் தேர்வுகளிலும் முதல்நிலையை அடைந்தும் என்னுடைய பிறப்பைக் காரணம் காட்டி, இந்த வேலையை எனக்குக் கொடுக்க மறுத்தது மட்டுமின்றி, தன்னைக் கேவலப்படுத்தி விட்டார்களே! என்றும் வருத்தப்பட்டான்.

எத்தனையோ தலைவர்கள் ஜாதி வேறுபாட்டைக் களைய பல முயற்சிகளையும், சட்டதிட்டங்களையும் செயல்படுத்திய போதும் இந்த ஜாதிப்பேய் ஒரு சிலரின் மனதைவிட்டு இன்னும் அகலவில்லையே! வேதகாலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் இந்த ஜாதிப் புற்றுநோய் இன்னும் வேர்விட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கு ஒரு விடிவே இல்லையா? நாங்கள் இப்படியே மனநோயாளிகளாக இருந்து சாகவேண்டியதுதானா! வயிற்றுப் பிழைப்பிற்காக அடங்கி அடங்கி செத்துப்போன என் முன்னோர்களின் அடிமை உணர்வு தொடர்ந்து என் இரத்தத்திலும் ஊறித்தான் இருக்கிறதோ! அதனாலதான் என்னால் இண்டர்வியூவரை எதிர்த்துத் துணிவுடன் எதுவும் கேட்க முடியாமல்  போய்விட்டதோ? நான் இவ்வளவு படித்தும் என் குடும்பத்தை நல்ல முறையில் வைத்துக் கொள்ள முடியவில் லையே! இது யார் செய்த குற்றம்? மனிதனின் சுயலாபத்திற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த நிலை எப்பொழுது ஒழியும்? ஒழிந்துவிட்டது என்றார்களே! இது இன்றுவரை நீருபூத்த நெருப்பாகத்தான் உள்ளது. இன்னும் எத்தனை பெரியார் வருவது! இனி வருங்காலம் ஒரு கேள்விக்குறியாகி விட்டதே! என்று பலவாறு எண்ணிக் கொண்டிருந்தவன், தான் உட்கார்ந்தி ருந்த இடத்தின் எதிரே ஒரு வீட்டின் வாசலில் ஒரு குழந்தை தவழ்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தான்.

அக்குழந்தை தன் அருகில் இருக்கும் முருக்கை எடுக்க முயற்சி செய்தது. அதனுடைய அம்மா கொஞ்ச தூரம் தள்ளி நின்றிருந்தாள். அந்த முருக்கை எடுக்கத் தவழ்ந்து கொண்டிருந்த அக்குழந்தை, அருகில் இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயற்சி செய்யும்போது, எழுந்த அக்குழந்தை யால் நிற்க முடியாமல் கீழே விழுந்தது.

அக்குழந்தையைத் தூக்க அதன் அம்மா ஓடி வருவாள் என்று மெய்யரசன் அந்த அம்மாவை நோக்கினான். ஆனால், அந்த அம்மா நின்றிருந்த இடத்தைவிட்டு நகராமல் அக்குழந்தையைப் பார்த்தபடி இருந்தார். அக்குழந்தை மீண்டும் எழுந்து நிற்க முயற்சி செய்தது. இம்முறை அழகாக எழுந்து நின்றது. பின் இலேசாகச் சிரித்தது. அதைப் பார்த்த அக்குழந்தையின் தாய் ஓடி வந்து முருக்கை எடுத்துக் கொடுத்துவிட்டு அக்குழந்தையை வாரி அணைத்து முத்தம் கொடுத்து அதன் உச்சிமுகர்ந்தாள்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த மெய்யரசனுக்குத் தலையில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. நாமே ஒரு சிறிய நிறுவனத்தை நிறுவி நமது அறிவையும் உழைப்பையும் ஈடுபடுத்தி முன்னேறி, நம்மைப் போன்ற நிலையில் இருப்பவர்கள் பலருக்கு வேலை கொடுக்கலாமே, என்னைப் புறக்கணித்தவர்கள் முன்னால் ஜெயித்துக் காட்டுவேன் என்று மனதிடத்துடன்  துள்ளிக் குதித்து எழுந்தான். அக்குழந்தை அவனைப் பார்த்துக் கையசைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *