எதிர்க்கட்சிகள் இணைந்தால் மோடி ஆட்சி முடிவுக்கு வரும்!
கே. ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரட்டுவது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யை உறுதியாய் வீழ்த்தும் அல்லவா?
பாவலன், தேனி
ப. மக்கள் ஏற்கனவே தயாராகி விட்டார்கள்; தலைவர்கள் இணைப்பு _ ஒருங்கிணைப்பு எல்லா மாநிலங்களிலும் ஓரணியாக அமைந்தால், நிச்சயம் மோடி ஆட்சி காணாமற் போகும் _அவர் எவ்வளவு வித்தைகள் செய்தாலும்கூட!
கே. உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் பிறகும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேர் விடுவிக்கப்படாதது மத்திய அரசின் அழுத்தத்தால் தானே?
இன்பன், மதுரை
ப. அதிலென்ன சந்தேகம்? தமிழக ஆளுநர்தானே கோப்புகள் மீது அமர்ந்து அவற்றை வெளியே கிளப்பாமல் இருக்கிறார்! துணிவுடன் கேட்கும் அரசு மாநிலத்தில் இல்லை எனபது அதைவிடத் துயரமானது!
கே. உலகிலேயே மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய்படேல் சிலை (597 அடி) திறக்கும் அளவிற்கு படேல் மீது பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு அப்படியென்ன பற்று?
கலைமணி, திருவள்ளூர்
ப. யார் யார் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை எதிர்த்தார்களோ, அவர்களை-யெல்லாம் ஏதோ நெருக்கமானாவர்கள் போல் காட்டி, வரலாற்றை திரிபுவாதம் செய்வதற்குத்தான். அம்பேத்கர் நினைவு நாள் _ காந்தியார் 150ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் _ பட்டேல் சிலை திறப்பு – இத்தியாதி எல்லாம்!
கே. பெரியாரின் கைத்தடியை ஏந்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ‘தளபதி’ மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது எதைக் காட்டுகிறது?
கவின், நாகர்கோவில்
ப. அவருக்குள்ள கொள்கை உறுதியையும் தெளிவையும் காட்டுகிறது!
கே. சமீபகாலமாக பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கும், ஆசிரியை மாணவர்-களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகரித்து வருவது எதைக்காட்டுகிறது?
அறிவழகி, சென்னை
ப. நாட்டில் கீழ்த்தரப் போக்குகள் _ பாலியல் தூண்டுதல் _ வக்கிரங்கள் பற்றி இளையர்களை வீணடிக்கும் திரைப்படம் போன்றவற்றோடு, தொலைக்காட்சி, ஊடகங்கள் தாக்கமும் ஒரு முக்கியக் காரணம்.
கே. காந்தியடிகளுக்குத் தராத சிறப்பை பா.ஜ.க. அரசு படேலுக்குத் தருவதின் நோக்கம் என்ன?
நெய்வேலி க.தியாகராசன்
ப. மூன்றாம் கேள்விக்கான பதிலில் இதற்கும் பதில் உள்ளது!
கே. காந்தியாரின் எளிமைக்கும், பெரியாரின் எளிமைக்கும் உள்ள வேறுபாடு என்ன?
சீர்காழி கு.நா.இராமண்ணா
ப. “காந்தியாரின் எளிமைக்கு ஏராளமான ஏற்பாடுகள் என்ற விலை கொடுக்க வேண்டியிருந்தது நாங்கள்’’ என்று கவிக்குயில் சரோஜினி (நாயுடு) கூறியுள்ளார். தந்தை பெரியாரின் எளிமை _ விளம்பரத்திற்கு அப்பாற்பட்ட இயல்பான சிக்கனமான எளிமை!
கே. ‘விடுதலை’ தலையங்கம், தங்களின் அறிக்கை போன்றவற்றை மட்டுமாவது ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து ‘இணைய ‘விடுதலை’யில் வெளியிட்டால் வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பயன்பெறுவார்கள் அல்லவா?
அயன்ஸ்டின் விஜய் , சோழங்குறிச்சி
ப. நல்ல யோசனை _ அதனைச் செய்ய மேலும் சில ஏற்பாடுகளைச் செய்யலாம்! செய்ய வேண்டும்! நன்றி!
கே. தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்த அவரது தொடக்க நாள் தோழர்களான எஸ்.இராமநாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், கோவை அய்யாமுத்து, ஊ.பு.அ.சவுந்திரப்பாண்டியனார், ஜீவானந்தம், நாகை முருகேசன் போன்றவர்கள் பின்னாட்களில் எப்போதாவது தந்தை பெரியாரைச் சந்தித்தார்களா?
வேலவன், பெரம்பூர்
ப. சந்தித்தது மாத்திரம் அல்ல. அவ்வப்போது அய்யாவிடம் மாறுபட்டது சரியல்ல என்ற உணர்வையும் யதார்த்தையும் உணரவும் செய்தனர்! நாகைத் தோழர் கே.முருகேசன் எப்போதும் இறுதிவரை பெரியார் திடலோடும் தொடர்பில் இருந்தார் என்பது முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்று.