– க.அருள்மொழி
‘எல்லாக் குழந்தைகளுமே நாத்திகர்களாகத்தான் பிறக்கிறார்கள்’ என்றார் இங்கர்சால்.
அவர்களை வளர்க்கும்போதுதான் அவர்களுக்கு மதச் சாயம் பூசி கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தி சம்பிரதாயங்களைத் திணித்து ஒரு வட்டத்துக்குள் அடைத்து விடுகிறார்கள். அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படுவ தில்லை.
‘என் பெற்றோர்கள், பெரியவர்கள் சொன்னதாகச் சொல்லி இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நானும் பின்பற்றி வருகிறேன். இப்போது நான் பெரியவன், அதனால் நான் சொல்வதை நீங்கள் கடைபிடியுங்கள்’ என்று அறிவுக்கும் காலத்திற்கும் பொருந்தாத விஷயங்களைச் சொல்லித்தரும் சமூகம் நிகழ்காலத்தில் இருக்கும் அறிவியல் மாற்றத்திற்கு ஏற்ப சிந்தனையைக் கூர் தீட்டிக் கொள்ள வேண்டுமென்று சொல்லித்தரத் தயங்குகிறது.
மனிதன் ஒரு சமூக விலங்கு என்று சொல்வதற்குக் காரணம் அவன் குழுவாக இணைந்து வாழ்கிறான்-, வாழ வேண்டிய கட்டாயத்திலிருக்கிறான் என்பதால்தான்.
அப்படி ஒரு சமூகத்தில் இணைந்து வாழும்போது அந்தச் சமூகத்தின் பழக்க வழக்கம், நாகரிகம், பண்பாடு நடை உடை பாவனைகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு ‘சமூகமயமாக்கல்’ (Socialization) என்று பெயர். உலக மயம், தாராள மயம் என்பது பொருளாதாரத் துறையில் மட்டுமல்லாமல் பண்பாடு கலாச்சாரத்திலும் எதிரொலிக்கிறது- தொழில்நுட்பம், தகவல் தொடர்பு வளர்ந்துவிட்ட காரணத்தால். ஒவ்வொரு சமூகத்திலும் நிறையான அல்லது குறைபாடான பழக்கவழக்கங்கள் உண்டு. ஊடகங்கள் நொடிப்பொழுதில் தகவல் தொடர்புப் பரிமாற்றம் செய்யும் இக்காலத்தில் உலகத்தில் எந்த மூலையிலும் உள்ள மக்களின் நாகரிக பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொண்டு அன்றாட வாழ்வில் பயன்படுத்தும்போது மனிதன் மேலும் நாகரிகமடைகிறான்.
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் ‘சமூகமயமாக்கல்’ என்பதற்குப் பதிலாக ‘மதமயமாக்கல்’ என்ற நடைமுறையே இருந்து வருகிறது. குழந்தை பிறந்ததிலிருந்து இறக்கும் வரைக்கும் எங்கும் எதிலும் மதம், சம்பிரதாயம், சடங்குகள், மதக் குறிகள், வழிபாட்டு முறைகள் இவை பற்றியே அதிகம் பேசப்படுகிறது. -நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் கடவுளுக்குக் கொடுக்கும் மரியாதைகள். இவற்றைக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு உடன் வாழும் மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை, பழகு முறைகள், ஒழுகலாறு பற்றிச் சொல்லித் தரப்படுவதில்லை. அன்றாட வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகள் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க ஒரே வழி அதை நாம் செய்து காட்டுவதுதான்.
சமூகமயமாதலின் மைல் கற்கள்:
சமூக வளர்ச்சியில் எல்லாக் குழந்தைகளும் நிச்சயம் சில படிகளைக் கடந்தாக வேண்டியிருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் தனியாகவே மகிழ்ச்சியுடன் விளையாடுகிறது. பிதற்று மொழி பேசி கை கால்களை உதைத்து அதன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அடுத்ததாக தன்னையொத்த குழந்தைகளுடன் விளையாடும் பருவம். இது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் போட்டியிடவும், முந்திச் செல்லவும், வளைந்து கொடுக்கவும், யார் ‘முதல்’ யார் ‘கடைசி’ என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஏற்ற பருவம். இது மேடு பள்ளம்- தோல்விகள் நிறைந்த வழி.
சகாக்கள் ஒருவரை ஒருவர் விரும்புவதும் வெறுப்பதும் நடக்கும். குழுக்களுள் ஏற்படும் அனுபவங்கள் அவர்களுக்கு நிறையக் கற்றுக் கொடுக்கும்.
சமூகச் செயல் திட்டம்:
பெற்றோர்கள் குறிப்பாக தாய் தன் குழந்தையின் சமூக ஊடாட்டங்களில் தலையிட வேண்டிய நேரம் உள்ளது. குழந்தைகள் அக்கம்பக்கத்துக் குழந்தைகளுடன் விளையாடும்போது அவர்களின் விளையாட்டுத் தோழர்களைத் தேர்ந்தெடுக்க உதவ வேண்டும். பால் வேறுபாடு பிரச்சினையில்லை. அந்த வயதில் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சேர்ந்து விளையாடுவது இயல்பே. அப்போது தாயும் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது அவர்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் உதவும். அல்லது விளையாட்டை முடிக்க வேண்டிய நேரம் பற்றி அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
அடுத்த (வீட்டுப்) படி:
அக்கம் பக்கத்தாருடன் தொடர்பு கொள்ளும் முறையைப் பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அண்டை வீட்டுக்குச் சிறிது நேரம் சென்று வர அனுமதிக்க வேண்டும். இதுவும் வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். குழந்தைகளுடன் தாயும் சேர்ந்து சென்று குறிப்பிட்ட நேரத்தில் திரும்பி வந்துவிட வேண்டும். பின்னர் படிப்படியாக குழந்தையைத் தனியாக அனுப்பி தூரத்திலிருந்து கண்காணிக்க வேண்டும். இதனால் வயதுக்கு ஏற்ப குழந்தையின் சமூக வளர்திறன் மேம்படும்.
குழு விளையாட்டு:
குழந்தைகள் தங்கள் நட்பு வட்டத்தை விரிவுபடுத்தும் காலம் இது. முதலில் சொன்னது போலவே வடிவமைக்கப்பட்ட, தாயின் கண்காணிப்பில் எச்சரிக்கையுடன் உடல்நலம் கெடாமல் பாதுகாக்க வேண்டும். பெற்றோர்கள் புத்தாக்க எண்ணத்துடனும் புதுமையாகவும் குழந்தைகள் விளையாடக் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், வீட்டில் உள்ள வேலைகளைச் செய்யப் பழக்க வேண்டிய பருவம் இது. அவர்களைத் தூண்டும் விதமாக ‘சிற்றுண்டி செய்ய எனக்கு உதவப் போவது யார்?’ அல்லது ‘வண்டியைத் துடைப்பது எப்படி என்று யாருக்குத் தெரியும்?’ என்பது போன்ற கேள்விகள் நிச்சயம் வேலைசெய்யும்.
கெட்ட வார்த்தைகள் தவிர்த்தல்:
குழந்தைகள் சிலநேரம் சுற்றியுள்ளவர்கள் பேசுவதைப் பார்த்து தானும் அதைப்போல பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒவ்வாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதுண்டு. அதன் அர்த்தம் அவர்களுக்குப் புரியாமலும், தெரியாமலே அவர்கள் அந்தச் சொற்களைப் பேசுவதுண்டு. அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது? உறுதியாகவும் உடனடியாகவும் நடவடிக்கை தேவை. தாமதித்தால் பயனற்றுப் போகலாம். கடுமையாகக் கையாள்வதோடு கோபப்படாமலும் செய்ய வேண்டும். அதாவது, வள்ளுவர் சொல்வதுபோல ‘கடிதோச்சி மெல்ல எறிக!’. எடுத்துக்காட்டாக ‘இதுபோன்று பேசுவது நம்மைப் போன்ற குடும்பத்தில் வழக்கமல்ல’. ‘நல்ல குழந்தைகள் என்றால் நல்ல வார்த்தைகள் பேசுபவர்கள் என்றுதானே பொருள்?’ என்பது போன்று சொல்லித் திருத்தலாம். அதே சமயம் அவர்களின் நண்பர்கள் முன்னால் அவர்களை மட்டம் தட்டாமல் பேச வேண்டும்.
முறையற்ற செயல்கள்:
முரட்டுத்தனமாக அல்லது ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும்போது மேற்கண்ட அணுகுமுறையையே கையாள வேண்டும். ஒருவரையொருவர் தள்ளிவிடுதல், முறையற்று முந்திச் செல்லுதல், இடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும்போது ‘இனி விளையாட அனுமதிக்க முடியாது’ அல்லது ‘வீட்டை விட்டு வெளியில் செல்லாதே’ என்பது போன்ற ‘தண்டனைகள்’ போதும்.
ஆசிரியர்களுடன் பழகும் முறை:
எல்லாச் சமூகச் சூழல்களும் நிறைந்த இடம் பள்ளிக்கூடமாகும். வீட்டிலும் வெளியிடத்திலும் அல்லாத புதிய உறவுகளை, பழகுமுறைகளைக் கற்றுக் கொள்ளக் கூடிய இடம். இதையெல்லாம் ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. ஆசிரியர்களிடம் உங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் நடத்தைக் குறைபாடுகள் அல்லது பாராட்டக்கூடிய நடத்தைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். குழந்தை அந்த வகுப்பில் பிரபலமான பிறகு அவர்களுக்கான இருக்கை, விளையாட்டுத் தோழர்கள், போன்றவற்றை ஆசிரியர்கள் முறைப்படுத்துவார்கள். அதோடு, பள்ளியிலி ருந்து வீடு வரை செல்லும்போதும் வரும்போதும் நடந்துகொள்ளும் முறைகளையும் கற்றுத் தருவார்கள். சமூக வளர்ச்சிப் படிநிலையில் வெற்றிகளும் சந்தேகமில்லாமல் பல தோல்விகளும் அனுபவமாகக் கிடைக்கும். பெற்றோர்கள் நம்பிக்கையிழக்காமல் குழந்தைகளின் உடல், அறிவு, சமூக வளர்ச்சிக்கான வழிகளைக் காட்ட வேண்டும்.
வீட்டிலும் ‘முறை’ உண்டு:
வீட்டிலுள்ள ஒவ்வொரு வருக்கும் ‘தனித்திருத்தல்’ (Privacy) அவசியம் என்பதை மற்றவர்கள் உணர வேண்டும். வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அவர்களுக்கான ‘தனி’யிடம் தான் முக்கியம். சிறுவயது முதலே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டிய சில ‘முறை’கள் (Manners):
1. மூடியிருக்கும் கதவைத் தட்டி உள்ளே இருப்பவர்கள் திறக்கும் வரையோ அல்லது உள்ளே வரச் சொல்லும் வரையோ காத்திருக்கவும்.
2. மற்றவர்களுக்கென்று இருக்கும் அலமாரி, பெட்டிகள், மேசை இழுவைகள் போன்றவற்றை அவர்களின் அனுமதியில்லாமல் திறக்கக் கூடாது.
3. மற்றவர்களுக்கு வந்த கடிதத்தையோ அல்லது அவர்களின் நாட்குறிப்பையோ அவர்கள் கேட்டுக் கொண்டாலொழிய படிக்க முற்படாதீர்கள்.
4. உங்கள் வீட்டு உறுப்பினர்களின் தனிப்பட்ட செய்திகளை வெளியாரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
பங்கிட்டுக் கொள்ளல்:
குடும்ப ஒழுங்கு முறையில் முக்கியமானது பங்கிட்டுக் கொள்ளல் ஆகும். ஒரு படுக்கை யறை, டி.வி., தொலைப்பேசி, குளியலறை, கழிப்பறை அல்லது ஒரு மேசை எல்லாவற் றையும் பங்கிட்டுக் கொள்ளலாம். அதே சமயத்தில் வேலையையும் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, பயன்படுத்தியபின் அடுத்தவர்கள் பயன்படுத்தும் வகையில் அவற்றைத் தூய்மையாக வைத்தல் முக்கியமாகும்.
தொலைப்பேசியில் அழைப்பதற்கும் நேரம் காலம் உண்டு. (ராகு காலம் குளிகை காலம் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா?) உணவு நேரத்திலும் காலை 9 .00 மணிக்குள்ளும் இரவு 9.30 மணிக்குப் பிறகும் அழைப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொலைப்பேசியில் தவறான எண்ணை டயல் செய்தால் உடனே வருத்தம் தெரிவியுங்கள். அல்லது அடுத்த முனையில் உள்ளவர் தவறுதலாக உங்கள் எண்ணைக் கூப்பிட்டுவிட்டால் பொறுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு அவர்கள் இல்லாத நேரத்தில் தொலைப்பேசி வந்தால் அவர்களுக்கான செய்தியைப் பெற்று அவர்கள் வந்ததும் மறக்காமல் செய்தியைத் தெரிவிக்கவும்.
உணவிட ஒழுக்கம் (Table Manners):
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு முறையான உணவிடப் பழக்கம் இருக்கும். உங்கள் சொந்த வீட்டிலோ அல்லது விருந்துக்குச் சென்ற இடத்திலோ நினைவில் கொள்ள வேண்டிய செய்திகள். உங்களுக்கு அருகில் இல்லாத ஏதேனும் ஒரு உணவை எடுக்க வேண்டுமானால் நீங்களாக எடுக்க முயற்சி செய்யாதீர்கள்.
அதற்கு அருகில் இருப்பவரை எடுத்துத் தரச் சொல்லுங்கள். உங்கள் உணவு மிகச் சூடாக இருந்தால் சற்றுப் பொறுத்திருங்கள். வாயால் ஊதிச் சாப்பிடாதீர்கள்.
சூடாக உள்ள உணவை வாயில் போட்டுவிட்டால் அதைத் துப்ப வேண்டாம். உடனே தண்ணீரைக் குடிக்கவும்.
வாயில் உணவை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்.
நிமிர்ந்து உட்கார்ந்து கையை வாய்க்கு அருகில் கொண்டு சென்று உண்ணுங்கள். குனிந்து உணவுக்கு அருகில் வாயைக் கொண்டு செல்லாதீர்கள்.
உணவகங்களில் சாப்பிடும்போது சில முறைகளுண்டு:
எதையாவது தவறுதலாகச் சிந்திவிட்டால் மானக்கேடாக நினைக்க வேண்டாம். இது நிகழ்வது இயல்பே. ஓட்டல் பணியாளர்கள் அதைத் தூய்மைப்படுத்திவிடுவார்கள்.
ஸ்பூன் போன்ற உண்ணும் கருவிகளைக் கீழே போட்டுவிட்டால் வேறு கரண்டியைத் தருமாறு பணியாளரிடம் கேளுங்கள்.
உங்களுடைய சுமைப் பைகளை மேசையின் மீது வைக்காதீர்கள்.
உணவு மேசையில் அமர்ந்துகொண்டு தலை வாராதீர்கள்.
அனைவரின் முன்பும் அமர்ந்துகொண்டு குச்சியால் பல்லைச் சுத்தம் செய்யாதீர்கள்.
நாம் மற்றவர்களுக்கு விருந்தளிக்கும்போது நமக்கென்று சில கடமைகள் இருப்பது தெரியும்.
அதே நேரத்தில் நாம் விருந்தினராகச் சென்றிருக்கும்போது சில பொறுப்புகள் இருக்கிறது.
உங்களை அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் செல்லாதீர்கள்.
உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு மேல் தங்காதீர்கள்.
அழைப்புக்காகக் காத்திருக்காதீர்கள். நீங்களாகச் சென்று உதவுங்கள்.
அழைத்தவரின் விருப்பத்தையறியாமல் இரவு தங்க திட்டமிடாதீர்கள்.
அவர்கள் குடும்பப் பழக்கத்திற்காக முகம் சுளிக்காதீர்கள்.
அவர்கள் அதிக வேலை செய்யும்படி நடந்துகொள்ளாதீர்கள். உங்கள் வேலையை நீங்களே செய்துகொள்ளுங்கள்.
அவர்கள் அளித்த விருந்துக்கும் விருந்தோம்பலுக்கும் நன்றி சொல்லுங்கள்.
தெருவில் ‘நடக்கும்’ முறைகள்:
உங்கள் வீட்டிலோ அல்லது நண்பர்களின் வீட்டிலோ இல்லாமல் வெளியில் இருக்கும்போது நீங்கள் பொதுச் சொத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று பொருள்.
உங்களைப் போலவே அதைப் பலரும் பயன்படுத்த வேண்டும் என்று உணருங்கள்.
நண்பர்களோடு சேர்ந்து கூட்டமாக நடக்காதீர்கள். அது அடுத்தவர்களின் வழியை மறிப்பதாகும். நடைபாதையின் நடுவே நின்றுகொண்டு அரட்டை அடிக்காதீர்கள்.
உங்களுக்காக அடுத்தவர்கள் சுற்றிக்கொண்டு போகவேண்டியிருக்கும்.
பார்ப்பதற்கு இளக்காரமாகத் தெரிந்தாலும் அவர்களை ‘முறைத்துப்’ பார்க்காதீர்கள். அல்லது வேடிக்கை காட்டாதீர்கள். தெருவில் குப்பை போடுவது அநாகரிகம் என்பதை உணருங்கள்.
ஏதாவது சுவரின் மேல் அல்லது பொது சொத்துக்கள் (பேருந்து போன்றவை) மீது எழுதாதீர்கள் (கிறுக்காதீர்கள்). பொது இடத்தில் யார்மீதாவது இடித்துவிட்டாலோ அல்லது மிதித்து விட்டாலோ வருத்தம் (Sorry) தெரிவியுங்கள்.
இன்னும் நம் பகுதியில் நடந்துகொள்ளும் ஆனால் நடந்துகொள்ளக் கூடாத முறைகளைப் பற்றித் தெரிந்து திருத்திக் கொள்ளுங்கள். மற்றப் பகுதிகளில் (மற்ற நாடுகளில்) நடைமுறையிலிருக்கும் நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காக அர்த்தமே இல்லாமல் சடங்குகளையும் சாஸ்திரங்களையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நம் சமூகம், உண்மையிலேயே பெரியவர்களான அறிஞர்கள் சொன்ன பண்பாட்டு முறைகளைக் கடைபிடிக்கக் கற்றுத் தருவதில்லை என்பதுதான் உண்மை.
தனக்கும் அடுத்தவர்களுக்கும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நன்னடத்தைதான் சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டியது.
மாறாக,. பண விரயத்தையும் மன விரசத்தையும் ஏற்படுத்தும் சடங்குகளால் ஏற்படுவது சங்கடங்கள்தான்.