”பெரியார் பட்டம்” அளித்தவர்கள் பார்வையில்…
வழக்குரைஞர் கிருபா முனுசாமி
(சென்ற இதழின் தொடர்ச்சி…)
“ஜாதியும், தீண்டாமையும் பலமாய் இருந்துவருவதற்கு கடவுளும், மதமும் ஒரு வகையில் காரணம். இனி, அத்தகைய கடவுளை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும்” என்று 1929 சென்னை தீண்டாமை விலக்கு மாநாட்டில் பேசியதோடு, கடவுள் மறுப்பையும், மத எதிர்ப்பையும் திராவிட இயக்க கொள்கைகளாகவே ஆக்கினார்.
“தீண்டாமை என்பது இந்து சமூகத்திலுள்ள சகல ஜாதிகளையும் பிடித்த நோய்; தீண்டாமை ஒழிய வேண்டுமானால், பார்ப்பனியம் ஒழிய வேண்டும்” என்று 1931 விருதுநகர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல், பார்ப்பனர்களோடு சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களைக் கண்டிக்கவும் பெரியார் தவறவில்லை. “பறையன் என்ற இழிவு நீங்காமல் உங்களது சூத்திர இழிவை நீங்கள் போக்கிக் கொள்ள முடியாது” என்று இடித்துரைத்தார் பெரியார். “எவனாவது உயர் ஜாதி என சொல்லிக்கொண்டு குறுக்கே வந்தால் அவனை அடித்து விரட்டுங்கள்” என்று பட்டியலினத்தவரிடமும் கூறினார்.
“மனித உரிமைகளைப் பெற அரசு தடையையும் மீறுவோம்; தாழ்த்தப்பட்டோரை ஒதுக்கி வைப்போர் திராவிடர் இயக்கத்தின் எதிரிகள்’’ என்று திருமங்கலத்தில் உரை-யாற்றினார்.
“ஜாதிகளை ஒழிப்பதே திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. நம் இயக்கமும், பழங்குடி மக்களும் நகமும், சதையும் போல’’ என்று திருச்சி மான்பிடிமங்கலத்தில் பேசினார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்-படும் கொடுமைகளைக் கடுமையாக எதிர்த்து வந்த பெரியார், இவற்றை வெறும் தீர்மானங்-களோடும், உரைகளோடும் நிறுத்திக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பிற்கான போராட்டங்களாக முன்னெடுத்து அவரும், அவரது தொண்டர்களும் சிறைசெல்லவும் தயங்கவில்லை.
ஒருபுறம் அரசியலமைப்பில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனித்தொகுதியே அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 1931 சேலம் ஆதிதிரா-விட மாநாட்டில் பேசியும், செயல்பட்டும் வந்த பெரியார், எம்.சி.இராஜா போன்ற ஆதிதிராவிட தலைவர்களே டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக பூனா ஒப்பந்தத்தை ஆதரித்தபோதிலும், அம்பேத்கரின் சமூகநீதி பாதையில் மிகவும் உறுதுணையாக இருந்தார்.
“ஒரு காந்தியாருடைய உயிரைவிட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் உமது கையில் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்” என்று ஐரோப்பாவிலிருந்து டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு பெரியார் தந்தி அனுப்பியதே இதற்கு ஆதாரமாகவும், சமூகநீதியின் மீதான பெரியாரின் தீர்க்கமான பார்வையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.
கல்வி – வேலைவாய்ப்பு – மொழி:
ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு, அரசியல் சமூக உரிமைகளோடு சேர்த்து, உரிமை மீட்பையையும் ஒரு இயக்கமாக கட்டமைக்கிறார் தந்தை பெரியார். அதென்ன உரிமை மீட்பு என்றால், சமஸ்கிருதம் மற்றும் இந்தி திணிப்பால் ஒழிக்கப்பட்டுவரும் தமிழ் மொழியையும், தமிழ் அடையாளத்தையும் மீட்பது, ஜாதிய தீண்டாமை காரணமாக கல்வி மறுக்கப்பட்டு அதன் விளைவாக வேலைவாய்ப்-பின்மை ஆகியவற்றிற்கு எதிராக கல்வி கொள்கைகள் என நம்மிடமிருந்து பறிக்கப்-பட்ட உரிமைகளை மீட்க பல போராட்டங்களையும் முன்னெடுத்தார் தந்தை பெரியார் அவர்கள்.
1920ஆம் ஆண்டிற்கு முன்பு பார்ப்பனர் அல்லாத மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. கல்லூரிகளில் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதும், ஓரிருவரே வெற்றி பெறுவதும் என்ற நிலை இருந்தது. பொது பணியிடங்களிலும் பார்ப்பனர்-களே ஆதிக்கம் செலுத்தினர். எனவே, எல்லாச் சமூகத்தினரும் ஏற்றம்பெறும் வகையில், மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு உத்தியோகங்களை வழங்க வேண்டும்” என்ற வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை ஒன்றை அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பானகல் அரசர் பிறப்பித்தார். மேற்குறிப்-பிட்ட ஆணை, 1921-இல் வந்திருந்தாலும், செயல்-படுத்தும் அதிகாரிகளாகப் பார்ப்பனர்களே இருந்தமையால் அது நடைமுறைப்படுத்தப் படாமல் இருந்தது.
பானகல் அரசர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் ஞானியார் அடிகள் தமிழவேள் உமாமகேஸ்வரனார்
அதோடு மட்டுமில்லாமல், வருணாசிரமக் கொள்கையை பார்ப்பனரல்லாதோர் மீது கட்டாயப்படுத்தும் விதமாக, சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணித்து வந்த பார்ப்பனர்கள், தமிழ்வழி கல்வியை முற்றிலுமாக மறுத்ததோடு, நமது கல்வி உரிமையை மறுக்க பலவித சூழ்ச்சிகளையும் செய்தனர். அதற்கு திருவையாறு தமிழ்கல்லூரியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
திருவையாறு தமிழ் கல்லூரியை பற்றி நாம் அறிந்திருப்போம். இன்று அது, கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும், ஒரு காலத்தில் வெறும் சமஸ்கிருதக் கல்லூரியாக மட்டும் இருந்தது என்பதை நம்மில் பலர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தான் கொடுத்துள்ள இடமும், பணமும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று மன்னர் தன் உயிலில் எழுதி வைத்திருப்-பதால் அங்கு அம்மொழி மட்டுமே கற்பிக்கப்-படுவதாக கூறியிருக்கின்றனர்.
தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையும், செல்வகேசவராய முதலியாரும், மன்னர் ஏன் அவ்வாறு எழுதினார் என்று அவரது உயிலை படிக்க முயற்சித்தனர். அதுமுழுக்க முழுக்க வடமொழியில் எழுதப்பட்டிருந்ததால், அவர்களால் படித்தறிய இயலவில்லை. தமிழும், வடமொழியும் நன்கறிந்த புலியூர் ஞானியார் அடிகளிடம் அதனைக் கொடுத்து கேட்ட பொழுது, உயிலைப் படித்த ஞானியார் சிரித்து விட்டு கூறினாராம், இடமும், நிதியும் கல்விப் பயன்பாட்டிற்கு மட்டுமே என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, சமஸ்கிருதத்திற்கு மட்டும் என்று கூறப்படவில்லை என்று.
அதற்கும் பார்ப்பனர்கள் விடை கூறினர். என்ன தெரியுமா? கல்வி என்றால் சமஸ்கிருதம், சமஸ்கிருதம் என்றால் கல்வி. இதில் உங்களுக்கு என்ன குழப்பம் என்று. தமிழ்வேளும், செல்வகேசவராயரும் அடங்கா சினம் கொண்டு இச்செய்தியை சர். ஏ.டி.பன்னீர்செல்வத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். பின் அவரது முயற்சியால் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி தமிழும் அங்கு படாமாகியது. பிறகு படிப்படியாக, பல்வேறு தமிழ் படிப்புகளைக் கொண்ட தமிழ்க் கல்லூரி ஆயிற்று.
ஆக, பார்ப்பனர்களின் இத்தகைய சூழ்ச்சி-களை முறியடிக்க, நீதிக்கட்சி ஆட்சியால் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த, கல்வி தொடர்பான தீர்மானங்கள் பலவற்றையும் தனது மாநாடுகளில் கொண்டுவந்த வண்ணமே இருந்தார் பெரியார். இந்தியாவின் வருங்காலத்து அரசியல் திட்ட அமைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையை வற்புறுத்திய-தோடு, பார்ப்பனரல்லாத மாணவர்கள் என்று மட்டுமில்லாமல், தாழ்த்தப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்குப் புத்தகம், உடை, உணவு முதலியவற்றை இலவசமாக வழங்கி மற்ற வகுப்பு சிறுவர்களைப் போலவே உயர்த்த வேண்டும், உயர்கல்விக்கு வகுப்புவாரி விகிதப்படி மாணவர்-களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், காலியாகும் பணியிடங்களை நிரப்பும் போது, தாழ்த்தப்-பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றினார்.
கட்டாயத் தாய்மொழி வழிக் கல்வி, வேண்டுமானால் பொது மொழியாக ஆட்சி மொழியை கற்பிக்கலாம், இரு பாலருக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி போன்ற தீர்மானங்-களும் அடுத்தடுத்த சுயமரியாதை மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன.
(தொடரும்…)