வழக்குரைஞர் சு.குமாரதேவன்
இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் பொற்காலம் வி.பி.சிங் பிரதமராக இருந்த காலமாகும்.
தமிழகத்தின் சமூகநீதித் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு பிற்பட்டோர்க்கான மண்டல் பரிந்துரையினை அமல்படுத்தினார். ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது அவர் ஆற்றிய அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புத-மான உரை இன்று படித்தாலும் அவரின் ஆழ்ந்த சமூகநீதிக்கான புரிதலைத் தெரிந்து கொள்ளலாம்.
மண்டலுக்கெதிரான அத்வானியின் ர(த்)த யாத்திரையை தடுத்து நிறுத்தி மதரீதியான பதட்டத்தைத் தணித்தார்.
சென்னை விமான நிலையத்தின் பெயர்களாக காமராஜர் மற்றும் அண்ணா பெயரைச் சூட்டி அழகு பார்த்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. அவரது நூற்றாண்டை ஆண்டு முழுதும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்ததோடல்லாமல் அவரது நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டார். ‘பாரத ரத்னா’ என்ற விருதுக்கு உண்மையான அர்த்தம் .அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்த-போதுதான் தெரிந்தது. 1989 நாடாளுமன்றத் தேர்தல் சுற்றுப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைகள் வைக்கப்பட்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
அவரது 11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைக்காமல் உண்மையான ஜனநாயகம் மலரச் செய்தார்.
கருப்புப் பணம், ஊழல், வெளிநாட்டில் பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுத்தார். அம்பானி, அமிதாப் பச்சன், வாடியா என்று யாரையும் இவர் ராஜீவ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தபோது விட்டு வைக்கவில்லை. பாதுகாப்பு மந்திரியானபோது போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தார். இதனால் ராஜீவுக்கு இருந்த “விக்ஷீ.சிறீமீணீஸீ” என்ற பிம்பம் சரிந்தது,
எந்தப் பதவியாக இருந்தாலும் தான் கொண்டுள்ள லட்சியத்தை அடையப் பயன்படுத்துவார். இல்லை எனில் விலகி விடுவார்.
தேவகவுடா பிரதமர் பதவி விலகியவுடன் மற்ற தலைவர்கள் மீண்டும் வி.பி.சிங்கை பிரதமராக்க முனைந்தபோது பிடிவாதமாக மறுத்தார். “நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார அதிகாரம், உரிமைகள், சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதைக் கேட்கிறார்களோ, எதைப் பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது. அந்தச் சமூகத் தலைவர்கள் அதிகாரம் பெற்று அதைச் சிறப்பாகப் பயன்படுத்தும்போது என் வரலாற்றுப் பங்களிப்பு முழுமை பெறுகிறது. எனவே பதவி முக்கியமில்லை”என்றார்.
ஆயிரக்கணக்காண டெல்லி குடிசைவாசிகள் அவர்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்-பட்டதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்ப்பட்டது. அது அவர் மரணத்திற்குக் காரணமாகி விட்டது.
தமிழத்தில் உள்ள திராவிடர் இயக்கத் தலைவர்கள் மேலும், தமிழர்கள் மேலும் தனி அன்பைச் செலுத்திய வி.பி.சிங்கின் முழுமையான பெயரான “விஸ்வநாத் பிரதாப் சிங்” என்ற பெயரை பலருக்கு கி.வீரமணி சூட்டி மகிழ்ந்தார்.
அவரது ஓவியங்கள் கவித்துவமானது. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது. “ஒரு துளி வானம் ஒரு துளி கடல்” என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு. வானமும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான்.
வி.பி.சிங் உயிரோடு இருந்த போது அவரது மகன் அஜய் சிங் “செயின்ட் கீட்ஸ்” என்ற தீவில் சொத்து வாங்கியதாக அவதூறு கிளப்பினர். ஆவணங்கள் போலியாகத் தயாரித்தனர். ஆனால் பின்பு அதைத் தயாரித்தவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். தன் மொத்த சொத்துக்களை பூமிதான இயக்கத்திற்குத் தந்த அவரின் மகனா வெளிநாட்டில் உள்ள தீவில் நிலம் வாங்குவார்?
வி.பி.சிங் அரசியலின் அதிசயம்.
எத்தனையோ வட இந்தியத் தலைவர்களை தமிழக மக்கள் அவர்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்தத் தலைவர்களெல்லாம் தமிழர்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதையோ (அ) அவர்கள் எப்படி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதையோ நாம் கண்கூடாக அறிந்ததில்லை. ஆனால் வி.பி.சிங் ஒருவர்தான் தமிழர்களின் இதயத்தோடு மட்டுமல்லாமல் உணர்வு-களோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர்.
பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் போதே “காவிரி நடுவர் மன்றம்” அமைக்க உத்தரவிட்டார். அதன் மூலம் தமிழக விவசாயிகளின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றார்.
ஒருமுறை அவர் பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கர-வாதிகள் என்று புலிகளை வைத்து அரசியல் முகவரி தேடியவர்களின் சார்பில் பத்திரிக்கை-யாளர்கள் சந்திப்பில் புலிகள் பயங்கரவாதிகள் தானே? என்று வினா எழுப்பப்பட்டது. பளிச்சென்று வி.பி.சிங் “யார் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டு முத்திரை குத்த என்னிடம் அந்த ரப்பர் ஸ்டாம்ப் இல்லை” என்று சொன்னார்.
ஈழத்தை அமளிக் காடாக மாற்றி தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை திரும்பப் பெற்றார்.
1989ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 10ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய முன்னணி ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கி தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்தார். ராஜீவ் காலத்தில் இணை, துணை அமைச்சர்களாகத்தான் தமிழர்கள் இருந்தனர். அதிலும் அதிக… தொகுதிகள் தந்தது தமிழகமே.
தமிழர்கள் நாம் நன்றியுடன் நினைவில் கொள்வோம்.
வாழ்க வி.பி.சிங்!