தமிழறிஞர்கள் வரிசையில் பேராசிரியர் சி.இலக்குவனார் தனித்தன்மை வாய்ந்தவர். ‘தமிழர் தலைவர்’ எனும் நூலை எழுதிய சாமி.சிதம்பரனாரின் மாணவர் என்பது அசாதாரணமானது. திருக்குறளுக்கு எளிய முறையில் பொழிப்புரையும், தொல்காப் பியத்திற்கு விளக்கத்தை ஆங்கிலத்திலும் எழுதி நம் நெஞ்சங்களில் கோலோச்சியுள்ளார். சங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடுகளில் ஆசிரியராக இருந்தது மட்டுமல்லாமல், ‘திராவிடன் பெடரேஷன்’ என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார்.
திருவாரூரில் தமிழாசிரியராக பணியாற்றிய போது, அவரின் மாணவராகத் திகழ்ந்தவர்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார் என்று ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார் கலைஞர்.
பெரியார் நடத்தய திருக்குறள் மாநாட்டிலும், இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும் தீவிரமான பங்கு கொண்டதால், ஆட்சி மன்றக் குழு இலக்குவனாரை வெளியேற்றியது. இந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வுக்கு பெருநடை பயணத்தாலும் சிறைவாசமும் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனிமைச் சிறையும் பதவி இழப்பும்தான் இவர் பெற்ற பரிசுகள். ‘தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி முதல்வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப் புலமைப் பெற்றிருக்க வேண்டும்.’ ‘தமிழே முதல் மொழியாக இருக்க வேண்டும்.’ ‘தமிழ் பாடத்தில் திருக்குறளுக்கென்றே தனித் தேர்வுத்தாள் இருக்க வேண்டும்’ என்பது இலக்குவனாரின் ஆசை, அவா!
திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தபோதும் திராவிடர் கழகத்தில் பெரும்பங்காற்றியவர்.
(இலக்குவனார் பிறந்த நாள் : 17.11.1909)
– த.மரகதமணி