சிறுகதை- பக்தியும் பாழும்

நவம்பர் 16-30

பக்தியும் பாழும்!

ஆறு.கலைச்செல்வன்

“அம்மா மாடித் தோட்டம்னா என்னம்மா?’’ என்று அம்மா தீபாவிடம் கேட்டாள் அனிதா.

ஆறாம் வகுப்பு படிக்கும் அனிதாவுக்கு மாடித் தோட்டம் பற்றி அறிய ஆவல் ஏற்பட்டது. அதுபற்றி தெரிந்து கொள்ளத்தான்  அம்மாவிடம் கேட்டாள்.

“மாடி வீடு உள்ளவங்க மாடியில் தோட்டம் அமைச்சு காய்கறியெல்லாம் பயிரிடுவாங்க’’ என்று மகளுக்கு பதில் கூறினார் தீபா.

“எப்படியம்மா, மாடியில்தான் மண் இருக்காதே’’ மீண்டும் கேட்டாள் அனிதா.

“மாடியில் தொட்டிகளை வைச்சி அதில் மண்ணுக்குப் பதிலா எடை குறைச்சலா உள்ள மண் புழு உரம், மக்கிய தேங்காய் நார் கம்போஸ்டை போடுவாங்க. அதில் நாம் அடிக்கடி பயன்-படுத்துகிற மல்லி, வெங்காயம், கீரைகள், மிளகாய் போன்ற செடிகளைப் பயிரிடலாம்’’ என்று விளக்கினார் அம்மா.

“ம், நம்ம வீடு மாடி வீடு இல்லை. இருந்தா நாமும் மாடித் தோட்டம் போடலாம்’’ என்று பெருமூச்ச விட்டபடி வருத்தத்துடன் சொன்னாள் அனிதா.

மாடிவீடு கட்டும் அளவிற்கு அப்பாவிடம் பணம் இல்லை-யென்றாலும் வீட்டிற்குப் பின்புறம் சிறிய அளவிலான தோட்டம் இருந்தது. அதில் காய்கறிச் செடிகளைப் பயிரிடலாம் என நினைத்தாள் அனிதா. அதுபற்றி அம்மா-விடமும் கேட்டாள்.

“அம்மா, நம்ம வீட்டுக்குப் பின்னாடி தோட்டம் இருக்கே. அதில் காய்கறிச் செடிகள் பயிரிடலாமல்லவா! ஏம்மா அதை அப்படியே எதுவும் செய்யாம போட்டு வச்சிருக்க’’ என்று வருத்தமாகக் கேட்டாள் அனிதா.

“அதுவா, அது உங்கப்-பாவுக்கும் உன் சித்தப்பாவுக்கும் இடையே அந்த தோட்டத்தை எடுத்துக் கொள்வதில் பிரச்சனை. அதனால ரெண்டு பேருமே போட்டி போட்டுகிட்டு அதை பயன்படுத்தாம அப்படியே போட்டு வச்சிருக்காங்க. நாம்ப ஏதாவது செய்யப் போனா உன்னோட சித்தப்பா வந்து தடுப்பாரு’’ என்று தன் கணவனுக்கும், கணவனின் தம்பிக்கும் உள்ள சண்டையை கோடிட்டுக் காட்டினார் அம்மா தீபா.

“நான் சித்தப்பாகிட்ட பேசி காய்கறிச் செடி பயிரிட சம்மதிக்க வச்சுடுறேன்’’ என்று சொன்ன அனிதா அம்மாவிடம் மீண்டும் பேசத் தொடங்கினாள்.

“அம்மா, நம்ம வூட்டுக்கு பின்னாடிதானே அம்மா தோட்டம் இருக்கு. அதைப் பயன்படுத்த சித்தப்பா ஏன் தடை பண்ணணும்?’’ எனக் கேட்டாள்.

“நம்ம வூட்டுக்கு பின்னாடி இருந்தாலும் உன் சித்தப்பா அது தன்னோட பங்குன்னு சொல்லிகிட்டு இருக்கார்’’ என்றார் அம்மா தீபா.

“அண்ணன் தம்பிக்குள்ள இப்படியெல்லாமா செய்ஞ்சிப்பாங்க’’ என்று ஆச்சரியத்துடன் கேட்ட அனிதா.

“அம்மா, அம்மா நம்ம தோட்டத்தில் எலுமிச்சம் கன்று இருக்கு பாத்தியா?’’ என வினவினாள்.

“ஆமாம் அனிதா. நானும் பார்த்தேன். நல்லா வளர்ந்துகிட்டு இருக்கு.’’

“எலுமிச்சம் பழத்தை என்னம்மா செய்யலாம்? நான் தெருவில பாத்தேன். சில பேருங்க கார் சக்கரத்தில் எலுமிச்சம் பழத்தை வைச்சி நசுக்குறாங்களே! அதுக்குத்தான் அந்தப் பழம் பயன்படுதா அம்மா?-’’

“அது ஒரு தப்பான செயல் அனிதா. எலுமிச்சம் பழம் மருத்துவ குணம் கொண்ட ஒரு நல்ல உணவுப் பொருள்’’ என்று கூறிய தீபா எலுமிச்சம் பழத்தின் நன்மைகள் பற்றி மகளிடம் விவரித்தார்.

“எலுமிச்சம் பழச்சாற்றை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும். தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும். இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். தோல் நோய்கள் நீங்கும். கூந்தலுக்கும் நல்லது. பொடுகு நீங்கும்….’’

“அம்மா, அம்மா,  கொஞ்சம் மூச்ச விட்டுக்கம்மா. எலுமிச்சம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?’’ என்ற வியப்புடன் கேட்டாள் அனிதா.

“இன்னும் கேள் அனிதா. இதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால்கூட எலுமிச்சம் சாறு அந்த அடைப்பை நீக்குமாம்’’.

“அப்படியா அம்மா! எலுமிச்சம் பழம் மட்டும் போதுமா அம்மா’’

“நான் படிச்சதை சொல்றேன் கேளு. ஒரு கிண்ணம் எலுமிச்சம் சாறு, இஞ்சிச்சாறு, பூண்டுச் சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் இவைகள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு சூடாக்கணும். அதை பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு  தினம் ஒரு ஸ்பூன் இரவில் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய் அடைப்பெல்லாம் நீங்குமாம்’’ என்ற சொல்லி முடித்தார் அம்மா.

“அப்புறம் ஏம்மா சில பேர் எலுமிச்சம் பழத்தை கார் சக்கரத்தில் வச்சி நசுக்குறாங்க? சில கோயில்களில் சூலங்களில் எலுமிச்சம் பழத்தை குத்தி வைச்சிருக்காங்களே, அது ஏம்மா? எல்லா ஊர்லேயும், எல்லா நாட்டிலேயும் இப்படித்தான் செய்வாங்களா?’’

“இல்லையடி அனிதா. நம்ம நாட்டில் மட்டும்தான் இப்படியெல்£ம் செய்யறாங்க. எல்லாம் மூடத்தனம் முட்டாள்தனம்.’’

“அம்மா, சாமிக்கு தேன் அபிஷேகம் செய்யறாங்களே, என்று மீண்டும்அம்மாவைக் கிளறினாள் அனிதா.’’

“அதுவும் மகா முட்டாள்தனம்தான். தேன் உடனடி சக்தியளிக்கக் கூடியது. இதயத்தையும், ஈரலையும் பலப்படுத்தும். உடல் பருமனையும் தொப்பையையும் குறைக்கும். குரல் வளம் பெருகும். கண் பார்வை அதிகரிக்கும். சளி, இருமல், காச நோய் குணமாகும்’’ என்று தேனின் பயனைக் கூறினார் அம்மா.

மறுநாளே அனிதா வீட்டுத் தோட்டத்-திற்குள் சென்று அங்கிருந்த புல் பூண்டுகளை-யெல்லாம் அகற்றினாள். மண் வெட்டியால் தோட்டத்தைக் கொத்தி சில பாத்திகளை அமைத்தாள். எலுமிச்சிசைக் கன்றைச் சுற்றிக் கொத்தி குப்பை எருவைத் தெளித்து தண்ணீர் ஊற்றினாள். கீரை விதைகளை வாங்கி வந்து தெளித்தாள். பூசணி விதைகளை பாத்திகளில் ஊன்றினாள்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த அவளது சிற்றப்பா வடிவேல் ஏதும் சொல்ல முடியாமல் திகைத்தார். “சின்னப்பெண் இவளை நான் எப்படி கண்டிப்பது?’’ என்று நினைத்தபடி சென்றுவிட்டார்.

சில நாட்களில் அவள் போட்ட விதைகள் அனைத்தும் நன்கு முளைத்தன.

பூசணிச் செடி நன்கு வளர்ந்து படர ஆரம்பித்தது. ஒரு நாள் அனிதா அம்மா தீபாவுடன் அருகில் இருந்த நகருக்குச் சென்றபோது அங்கு சிலர் தங்கள் கடைகளுக்கு முன்னால் பூசணிக்காயைப் போட்டு உடைத்தது கண்டு அதிர்ச்சியடைந்தாள். அம்மாவிடம் அதுபற்றி கேட்டாள்.

“அம்மா, பூசணிக்காயை ரோட்டில் போட்டு உடைக்கிறார்களே. இதுக்குத்தான் பூசணிக்காய் பயன்படுதா?’’ என்ற கேட்டாள்.

“இதுவும் மூடத்தனம்தான் அனிதா. பூசிணைக்காயும் ஒரு அரிய உணவுப் பொருள்தான். நான்தான் உனக்கு பூசணிக்காய் குழம்பு வைச்சி கொடுத்திருக்கேனே! மறந்துட்டியா?’’ என்று கூறிய தீபா பூசணிக்காயைப் பற்றி மகளிடம் எடுத்துச் சொன்னாள்.

“அல்சர் நோய்க்கு பூசணிச் சாறு கண்கண்ட மருந்து அனிதா.

தினமும் பூசணிச் சாறோடு தேனையும் கலந்து காலை வேளையில் குடிச்சி வந்தால் வயத்திலே உள்ள புழுக்கள் எல்லாம் வெளியேறிவிடும். தொற்று நோய்களும் வராது.’’

இப்போது இடைமறித்த அனிதா, “ஏம்மா, நீ எனக்கு தினமும் பூசணிச் சாறு கொடுக்கல’’ என்றாள்.

“பூசணிக்காய் கிடைச்சப்போ நான் உனக்கு கொடுத்திருக்கேன். இப்ப நீயே பூசணிச் செடி வளர்த்துகிட்டு இருக்க. அதில காய் காய்ச்சா உனக்கு செய்ஞ்சி தரேன்’’ என்று பதில் சொன்னார் அம்மா.

“சரி, வேற என்னம்மா பயன்?’’

“சொல்றேன் கேள். பூசணியில் நீர்ச்சத்து அதிகம். உடல் சூடு தணியும். தினம் சாறு குடித்து வந்தால் உடல் எடை குறையும். கெட்ட நீர் வெளியேறும். அதோடு மட்டுமல்லாமல் இரத்த சுத்திக்கும் இது பயன்படும். வலிப்பு நோய் நீங்கும். நீரிழிவு, நுரையீரல் நோய், ஜலதோஷம், நெஞ்சுச் சளி, வாந்தி, தலைசுற்றல் எல்லாத்துக்குமே பூசணி கண்கண்ட மருந்து’’ என்றார் அம்மா.

“அம்மா, இப்படிப் பயன்படுற பூசணிக்காயை நடுத்தெருவில் போட்டு உடைக்கிறவங்களைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு’’ என்று வெறுப்புடன் கூறினாள் அனிதா.

“நம்மைப் போன்றவங்க நல்லாயிருக்கக் கூடாது என்பதற்காகவே சிலர் செய்த திட்டமிட்ட சதி இது’’ என்று பதில் சொன்ன அம்மா அதுபற்றி பிறகு மேலும் கூறுவதாகக் கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.

சில மாதங்களில் பூசணிக் கொடியில் நிறைய காய்கள் காய்த்தன. எலுமிச்சைச் செடியில் காய்கள் காய்த்துத் தொங்கின. அவைகளைப் பார்த்துப் பரவசமடைமந்தாள் அனிதா.

இந்நிலையில் ஒரு நாள் அனிதாவின் சிற்றப்பா வடிவேல் தோட்டத்திற்குள் நுழைந்து பழுத்திருந்த சில எலுமிச்சம் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தார். அவர்  பூசணிக்காயையும் பறிக்கச் சென்றபோது அங்கு ஓடிவந்த அனிதா,

“சிற்றப்பா ஏன் அதை பறிக்கிறீங்க?’’ என பதற்றத்துடன் வினவினாள்.

“பூஜை செய்யணும். அதுக்காகப் பறிக்கிறேன். திருஷ்டிப் பூசணிக்காய் கட்டணும். உடைக்கவும் வேணும். பூசை செய்ய எலுமிச்சம் பழம் வேணும். ஏன், நான் பறிக்கக் கூடாதா?’’ என்று கேட்டார் சிற்றப்பா.

அப்போதுதான் வடிவேலுவை உற்றுப் பார்த்தாள் அனிதா. அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். நிற்கவே தடுமாறினார்.

“சிற்றப்பா, உங்க உடம்புக்கு என்ன? ஏன் சோர்வா இருக்கீங்க?’’ என வினவினாள்.

வடிவேல் தனக்கிருக்கும் நோய்களைப் பற்றிக் கூறினார். அந்த நோய்கள் அனைத்தும் எலுமிச்சை, பூசணிக் காய்களால் தீரும் என அம்மா சொன்ன நோய்களாகவே இருந்தன.

“அதுக்காக என்ன செய்யப் போறீங்க சிற்றப்பா?’’

“சாமிக்கு பூசை செய்யப் போறேன்’’

“அதெல்லாம் வேணாம் சிற்றப்பா. ஆஸ்பத்திரிக்கு போறதா சொன்ன சரி. ஆனா, ஆஸ்பத்திரிக்கு போகாம பூசை செய்யப் போறதா சொல்றது சரியில்லை. நான் சொல்றதைக் கேளுங்க’’ என்று சொன்ன அனிதா வீட்டிற்குள் -ஓடி அம்மா சொன்னவாறு எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து சிற்றப்பாவிடம் கொடுத்து குடிக்கச் செய்தாள். அவரும் வாங்கி மறுக்காமல் குடித்தார்.

இவ்வாறு ஒரு மாதம் விடாமல் எலுமிச்சம் சாறு, பூசணிச் சாறு என்று சிற்றப்பாவுக்குக் கொடுத்துக் குடிக்கச் செய்தாள். நாள்தோறும் அவரைப் படுக்கையிலிருந்து எழுப்பி அன்புடன் குடிக்கக் கொடுத்தது அவருக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் மிகவும் தெளிவாகக் காணப்பட்டார். நோய்கள் நீங்கியதை உணர்ந்தார்.

“ஒரு நாள் அவர் அனிதாவை தோட்டத்தில் பார்த்தார். வாஞ்சையுடன் அவளை அழைத்தார்.

“சிற்றப்பா, எப்படி இருக்கீங்க சிற்றப்பா?’’ எனக் கேட்டாள்.

“நல்லா இருக்கேன் அனிதா. உன்னோட அன்பால நான் இப்ப நல்லாயிருக்கேன். நீ கொடுத்த எலுமிச்சச் சாறு, பூசணிச் சாறு மட்டும் வேலை செய்யல, உன்னோட அன்பும் பரிவும் எனக்கு உற்சாகமூட்டி நோயை விரட்டிடுச்சி. இனிமே பூசை பக்கம் போக மாட்டேன். எலுமிச்சை, பூசணியை வீணாக்க மாட்டேன். திருஷ்டி பரிகாரம் எல்லாம் வேணாம்’’ என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் வடிவேல்.

“ரொம்ப சந்தோஷம் சிற்றப்பா. இன்னும் எலுமிச்சம் பழம், பூசணிக்காய் பறிச்சித் தர்றேன். எடுத்துக்கிட்டுப் போங்க’’ என்றாள் அனிதா.

“சரிம்மா. அனிதா, இன்னொரு விஷயம்’’ என்றார் வடிவேல்.

“என்ன சிற்றப்பா?’’ எனக் கேட்டாள் அனிதா.

“இந்தத் தோட்டத்தை இனிமே நீயே வச்சிக்க. இது உனக்கே சொந்தம். என் அண்ணன் கிட்டடேயும் சொல்லிடுறேன். பங்கு கேட்க மாட்டேன். சரிதானே’’ என அன்புடன் சொன்னார் வடிவேல்.

அனிதாவின் முகம் மலர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *