ஆசிரியர் பதில்கள்

அக்டோபர் 01-15

கேள்வி : தூக்குத் தண்டனைக்கு எதிரான தமிழர்களின் எழுச்சியை, கோமாளி சோவும், தினமலரும் (டவுட் தனபாலு) கேலி செய்துள்ளனரே?

– சா. கு. சின்னதுரை, சாக்காங்குடி

பதில் : பழைய புராணக் கதை உவமை – சொன்னால்தான் டவுட் தனபாலுக்கும் அவுட்திரி அம்மாஞ்சிக்கும் புரியும் என்பதால் சொல்கிறோம். சிவன் கழுத்து பாம்பு – கதைதான். கருடா சவுக்கியமா? என்று கேட்டது; இருக்கிற இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியம்தான் என்று சொன்னது கருடன் என்ற கதைதான்

கேள்வி : சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இன்னமும் பார்ப்பனர் ஏற்க மறுப்பதேன்? – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : மனுதர்மம்தான் அவாளின் ஒரே சட்டம். பிறகு, அவாள் சமத்துவத்தை ஆதரிப்பாரோ?

கேள்வி : தவறான தகவல்களை, தொடர்ந்து பத்திரிகைகளில் வெளியிட்டு, (குறிப்பாக வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகைகள்) பின் வழக்குரைஞர் நோட்டிஸ் விட்டதும் வருத்தம் தெரிவிக்கும் மஞ்சள் இதழ் ஆசிரியர்களைப் பற்றிய தங்களின் கருத்து என்ன? – ப. தமிழ்முனி, கிழக்குத் தாம்பரம்

பதில் : அந்த வாரம் ஒரு சில நூறு, இருநூறு பிரதிகள் கூடுதலாக விற்றால் போதும், காசுக்கு முன்னால் மானமாவது மண்ணாங்கட்டியாவது. அதிலும் பூணூல்களுக்கு அதைவிட மோசமான தொழில் செய்வதிலும்கூட வெட்கம் கிடையாதே! எனவே, நன்றாக மஞ்சள் குளிக்கின்றன அந்த மாபெரும் இன்வெஸ்டிகேடிவ்கள்!

கேள்வி : மத்திய சட்ட மந்தி(ரி) சல்மான் குர்ஷித், மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் தமிழக சட்டசபைத் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்கிறாரே? – எம். கே. கலைச்செல்வன், சிங்கிபுரம்

பதில் : ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசிகள் எங்கும் உண்டு என்பதையே இந்த வாரண்ட் இல்லாத ஆஜராகும் நிலையைக் காட்டுகிறது! படுதோல்வி என்ற நிலைக்குப் பிறகே காங்கிரசுக்குப் புத்திவரக்கூடும்!

கேள்வி : தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக 72 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த சங்கரலிங்கனாருக்கு இல்லாத விளம்பரம் அன்னா ஹசாரேக்கு மட்டும் ஏன்?  – க. ராசன், நெய்வேலி

பதில் : அப்போதிருந்த எதிர்க்கட்சியும் ஊடகங்களும் அந்த ஜீவனை, தியாகியை கண்டுகொள்ளவே இல்லை. இன்றும் பலருக்கு நினைவே வருவதில்லையே!

கேள்வி : இன்றைய கணினி யுகத்திலும், கல்லூரிகளில் முதுகலை பயிலும் மாணாக்கர் கைகளில் கருப்பு, சிவப்புக் கயிறுகள் காட்சியளிக்கின்றன. அவர்கள் கற்கும் கல்வியால் பெற்ற பயன்தான் என்ன?

– விடுதலை வாசகர் வட்டம், ஊற்றங்கரை

பதில் : மூடத்தனத்தின் முடைநாற்றம்; நாங்கள் கோழைகள் என்று நெற்றியில் பச்சை குத்திக் கொள்வது, கையில் கயிறுகளைக் கட்டிக் கொள்வதைவிட பலமடங்கு மேல். பிரச்சாரம் இளைஞர்களுக்கே அவசியம் தேவை! தேவை!

கேள்வி : தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் தொடர்கதைக்கு முடிவே இல்லையா? – சி. சுவாமிநாதன், ஊற்றங்கரை

பதில் : என்ன செய்வது! நமக்கு வந்த சுயராஜ்யத்தின் சுயரூபம் அது! தமிழ்ச்சாதியே! தமிழ்ச்சாதியே என்று ஓலமிட்டு ஒப்பாரி வைத்து மீனவ சகோதரர்களிடம் நாமும் அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. முதுகெலும்புள்ள மத்திய சர்க்கார் வந்தால் நிலைமை மாறக்கூடும்.

கேள்வி : சுற்றுச்சூழல் பாதுகாக்க, பருவ நிலை மாறுபடாதிருக்க, புவி வெப்பமாவதைத் தடுக்க, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் அசுத்தக் காற்று, காற்று மண்டலத்தில் கலக்காதவாறு எல்லா நாடுகளின் தொழிற்சாலைகளின் கதவுகளையும் மூடினால் என்ன?

–  எம்.ஆர்.பக்கிரிசாமி, மேலசொட்டால்வண்ணம்

பதில் : கதவுகளை மூடுவதைவிட, அசுத்தக்காற்று (கரியமிலவாயு) வெளியேற்றப்படாமல், பூஜ்யமாகும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய சிந்திக்க வேண்டும். ‘Zero Carbon Zone’    என்று நமது தஞ்சை பெரியார்– மணியம்மை பல்கலைக்கழகம் ஆனதை அப்துல் கலாம் அவர்களே நேரில் பார்த்து வியந்து பாராட்டினார்களே. அதுபோன்ற ஆய்வுகளை இணைத்து புதுவழி காணலாம்; காணவேண்டும்.

கேள்வி : மதக் கலவரத் தடுப்பு மசோதாவுக்கு பா.ஜ.க. எதிர்ப்புத் தெரிவிக்கிறதே. அந்தச் சட்டம் வந்தால் தமது கட்சியைத்தான் பாதிக்கும் என்று கருதுகிறதா?

– ஏ.ஜோதி, சோளிங்கர்

பதில் : சிறுபான்மையினருக்கு அதில் பாதுகாப்பு அம்சம் அதிகம் உள்ளதால், பா.ஜ.க. மற்றும் அதன் சுற்றுக்கிரகமான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்வருக்கு அது சங்கடமாகிறது! மாநில உரிமைகளைப் பறிக்கும் பகுதிகளை நீக்கி மாற்றி அமைத்து அதைச் சட்டமாக்கிடலாம்! பொதுமக்கள் விவாதத்திற்கு விடுவது நல்லது.

கேள்வி : சட்டமன்றங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு உள்ளதைப் போல், நாடாளுமன்ற சபாநாயகருக்கு அதிகாரம் இல்லையா? நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதற்குத் தீர்வே இல்லையா? – வ.அழகுவேல், அய்யம்பேட்டை

பதில் : நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகி அவர்களும், மாநிலங்கள் அவைத் தலைவரும் எப்போதும் மிகுந்த தாட்சண்யம் காட்டுபவர்களாகவே உள்ளார்கள். இங்கோ அப்படி ஏதும் இல்லாத நேர் எதிர் நிலையே உள்ளது. இரண்டும் இரண்டு முனைகள். (Extremes) நடுவில் இருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *