ஆசிரியரின் ஆய்வுச் சொற்பொழிவு!

Uncategorized

“மனுதர்ம ஆராய்ச்சி’’ 1. மனுதர்மமும் டாக்டர் அம்பேத்கரும், 2. மனுதர்மமும் தந்தை பெரியாரும், 3. மனுநீதி _ ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற தலைப்புகளில் 3.10.2018 முதல் 5.10.2018 வரை மூன்று நாள்கள் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் எம்.ஆர்.இராதா அரங்கத்தில் மாலை வேளைகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆய்வுச் சொற்பொழிவு சிறப்புடன் நடைபெற்றது. மூன்று நாள்களிலும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

ஆசிரியர் ஆய்வுரை

“மனு என்றால் என்ன? வேதங்களை எல்லோராலும் படிக்க முடியாது. அதனால் அதை விளக்கிப் புரியும்படி சொல்கிறோம் என பார்ப்பனர்களால் செய்யப்பட்டதுதான் மனுதர்மம். பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை, ‘மனு’ பிளவாக்கியது. கூடவே இவர்களைத் தாண்டி, ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரையும் உருவாக்கி அவர்களை அடிமைகளாகவே ஆக்கியது. சூத்திரர்களைவிட பெண்களை மிக மோசமான முறையில் சித்தரித்தது மனு. இதையெல்லாம் சகிக்காத புத்தர் 2000ஆண்டுகளுக்கு முன்பே ஆரியத்திற்கு எதிராகவும் மனுநீதிக்கு எதிராகவும் வெடித்து எழுந்தார். அத்தகு புத்தரின் வழிவந்த மார்க்கத்தையும், புத்த விகாரங்களையும் ஆரியர்கள் அரசர்களைக் கைகளில் போட்டுக் கொண்டு நர வேட்டையாடினர். இதையெல்லாம் விரித்தால் காண்டம் காண்டமாக எழுத முடியும்.’’

நம் நாட்டுத் தமிழ் அரசர்கள் மனுவாதி சிந்தனைகளோடுதான் நடந்துகொண்டார்கள். நிலங்களை பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கி இருக்கின்றார்கள். கல்விக் கூடங்கள் கட்டி பார்ப்பனர்களுக்கு மட்டும் வேதம், மனுநீதி, சமஸ்கிருதம் போன்றவற்றை பயிற்றுவித்திருக்கிறார்கள். பார்ப்பனர்கள் உயிர் வாழ நெல், பொன், ஆடை, பசு, அரிசி, உப்பு, மிளகாய் முதற்கொண்டு படியளந்திருக்-கிறார்கள் என்பதை ‘திருமுக்கூடல் கல்வெட்டுகள்’, ‘எண்ணாயிரம் கோயில் கல்வெட்டுகள்’ டாக்டர் அ.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய, “கல்வெட்டில் வாழ்வியல்’ என்ற நூல், அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களின் ‘இந்துமதம் எங்கே போகிறது?’’ என்ற நூல்களை ஆதாரங்களாய்க் காட்டி உரையாற்றினார். எதையும் ஆதாரத்துடன் நூல்களின் பக்கங்கள் உட்பட ஆணித்தரமாக எடுத்துக் கூறியது ஆசிரியர் வீரமணி அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையாய் இருந்தது.

மேலும், கேரள மாநிலத்தில் நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த ஆதிக்க, எல்லை மீறும் அநாகரீக உரிமைகளையும் அவர்கள் பொலி காளைகளாகத் திரிந்து நாயர் மற்றும் சூத்திரப் பெண்களை சீரழித்ததையும் (சி.அச்சுதமேனன் _ கொச்சின் மாநில கையேடு_1910) ஆதாரத்துடன் விவரித்தார்.

தமிழர் தலைவரின் மூன்று நாள் ஆய்வுரை ஆரியத்தின் அக்கிரம ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மத்தின் கொடூரத்தை இந்தத் தலைமுறைக்குச் சொல்லியிருக்கிறது என்பது மட்டும் காலத்தின் கல்வெட்டு!

நிகழ்ச்சி நிறைவு

திருச்சி, சிறுகனூரில் வேகவேகமாகப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கும் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக மூன்று நாள் கூட்டத்திற்கும் நுழைவு நன்கொடையாக ரூபாய் நூறு என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளைச் சார்ந்தோர், இருபால் இளைஞர்கள், இயக்கத் தோழர்கள், பொதுமக்களென திரளானோர் நன்கொடை அளித்து கலந்துகொண்டனர். ஒவ்வொரு நாள் சொற்பொழிவின் முடிவிலும் மடமைகள் மற்றும் ஏமாற்று வித்தை நிறைந்த ‘மனு’ பற்றி மக்கள் அறிந்து தெளிந்து சென்றதைப் பார்க்க முடிந்தது.

– இனியன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *