அந்தோ கொடுமை! அய்யப்ப சாமிக்கு வேண்டுதல் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக, மகர விளக்கு வெளிச்சத்தைக் காண என்று தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பெருகுகிறது என்பது, இந்த அறிவியல் யுகத்தில் பெருமைப்படக் கூடியது அல்ல; வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது மோசடி என்பது முன்பே வெளியான உண்மை.
இங்கே தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு, மூலைக்குமூலை, (பெரும்பாலும்) வீட்டுக்கு வீடு சாமிகளும், கடவுள்களுக்குக் கோயில்களும் உள்ளன. திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. குறைந்த பட்சம் மாதம் ஒருமுறையாவது குறிப்பிட்ட ஊர்களில் பக்தி வியாபாரம் – கடவுளின் பெயரால் சுரண்டல் பிசினஸ் செழிப்பாக நடைபெறுகிறது!
இந்நாட்டில் உள்ள ஊடகங்களும் இந்த பக்தி போதைகளை ஊக்குவித்து, அந்த மூடநம்பிக்கைகளைப் பெருக்குவதன் மூலம் தங்கள் வியாபாரத்தைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்ளுகிறார்கள்.
நாய் விற்ற காசு குரைக்காது!
கருவாடு விற்ற காசு நாறாதே!
அதுபோல மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சில ஏடுகளும், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இந்த பக்தி மூடநம்பிக்கையை – ஓர் ஊரில் நடப்பதை நேரடி ஒளிபரப்பு பொதிகை மற்றும் வானொலி ஒலி பரப்பு என்று அரசின் மதச் சார்பின்மையை, ஊடகங்கள் அக்கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு அநியாயமாய் இப்படி மக்களை அறியாமைப் படுகுழியில் தள்ளுவார்களா?
ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற பார்ப்பன இந்துமதவெறி அமைப்புகள், புதுப்புதுப் பண்டிகைகளைத் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து மக்களுக்குப் பக்தி போதையை ஊட்டுவது – இந்த மதபோதை மது போதையை விடக் கொடுமை.
எப்படி எனில், குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பது பழமொழி. அது தெளியும் சில மணி நேரங்களில்! ஆனால் மத போதை, பக்தி போதை என்பது, அபின், கஞ்சா, சாராயம் மற்றும் பல போதை வஸ்துக்களைவிட மிகவும் கொடுமையானது.
அவை உடலைக் கெடுக்கின்றன. மூடநம்பிக்கை, பக்தி போதையோ மனித மூளையையே விலங்கிட்டு செயல்படாததாக ஆக்குகின்றது! ஈரோட்டு மருந்துதான் ஒரே மருந்து.
திடீர் என அனுமன் ஜெயந்தி என்று குரங்குக்குக் கோயில் கட்டி – வேண்டுமென்றே எங்கு பார்த்தாலும் பெரும் சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து சட்ட விரோதமாக எவ்வித அனுமதியும் பெறாமல், பல அடி உயரத்திற்கு குரங்கு – அனுமார் நிற்கும் சிலை பொம்மையை வைத்து, உண்டியல் வியாபாரத்தைச் செழித்தோங்கச் செய்கின்றனர்.
இவற்றை நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைகள் அனுமதிக்கவே கூடாது; யாராவது தனியார் இப்படி பக்திச் சுரண்டல் பிசினசைத் துவக்குவதைக் கண்காணித்து, அதை அறநிலையப் பாதுகாப்புத் துறை தடுக்க வேண்டும்.
கார்ல்மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள், (இந்தியாவைப் பற்றியவை) இந்தியாவில் குரங்கைக் கடவுளாகக் கும்பிடும் கொடுமையைக் கண்டித்துள்ளார் என்பதை ஏனோ நமது மார்க்சிஸ்ட் தோழர்களும் மறந்துவிடுகிறார்கள்!
கேரளத்து அய்யப்பசாமி வரலாறோ ஆபாசம்! அருவருப்பு நிறைந்தது! ஹரிபுர புத்திரா என்று கோஷம் கொடுத்துக் கொண்டே அங்கே அசல் காட்டுமிராண்டிகள் போல தங்கள் உருவங்களை மாற்றிக்கொண்டு மெத்தப்படித்த மேதாவிகள், பதவியாளர்கள், ஏன் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் உள்பட பலரும் செல்வது – அவர்களது மனம் தங்களது அநீதி, அக்கிரம – லஞ்ச வாழ்க்கையை பம்பா நதி என்ற அந்த நீரோடையில் கழுவிவிட்டு வர விரும்புகிறார்கள் போலும்!
ஹரி என்றால் விஷ்ணு (ஆண் கடவுள்); அரன் என்றால் சிவன். ஹரிஅர புத்திரன் என்றால், என்ன பொருள்? மகாவிஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்தவன் அய்யப்பன் என்றால், ஆணும் ஆணும் கூடி பிள்ளை பெற முடியுமா? எந்த எந்த பக்தி போதையாளனும் யோசிப்பதில்லையே! மகா மகா வெட்கக்கேடு, சரியா?
சாமியே சரணம் என்று கூவிக் கூவி அழைத்து பல நாள் திருமுடி, இருமுடி என்று எல்லா முடியையும் கட்டி, அய்யப்பசாமி யாத்திரை செல்லும் கிரேடுவாரி பக்தர்கள் கன்னிசாமி, குருசாமி, பெரியசாமி என்ற பல ரக பக்திகோடிகள் அங்கு சென்று பத்திரமாகத் திரும்புகிறார்களா?
2011, ஜனவரி- 14-ஆம் தேதி நடந்த கோரமான விபத்து நமது நெஞ்சைப் பிளப்பதுபோல உள்ளது!
சுமார் 115 பக்தர்கள் இந்த விபத்தினால் இறந்துள்ளனர். சடலங்களை அடையாளம் காணுவது கூட எளியதாக இல்லை. இடுக்கி பகுதியில், வண்டிப் பெரியார் பகுதியில் இப்படி ஒரு வரலாறு காணாத விபத்து நடந்து பல உயிர்கள் பலியாகியுள்ளன; சிலரே பிழைத்துப் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
கருணையே வடிவான கடவுள் அவனின்றி ஓரணுவும் அசையாது, எல்லாம் அவன் செயல்? என்பதெல்லாம் வெறும் புருடா – பொய் மூட்டைகள் என்பது இப்போதாவது புரிய வேண்டாமா?
தமிழ்நாட்டிலிருந்து சென்று இறந்த பக்தர்கள் எண்ணிக்கை 40அய்த் தாண்டும் கொடுமையை நினைத்து மிகவும் துன்பப்படுகிறோம், துயரப்படுகிறோம் – மனிதநேயமான அடிப்படையில்!
இது தவிர்க்கப்பட்டிருக்கலாமே – இந்த மூடநம்பிக்கை யில்லாமல் இருந்தால்.
தமிழக முதல் அமைச்சர் மானமிகு கலைஞர், உடனே வருவாய்த் துறை அமைச்சர் திரு. அய். பெரியசாமி அவர்களை அழைத்து குமுளி பகுதிக்கு அவர்களது சடலங்களைத் தத்தம் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும், மருத்துவமனையில் உள்ளோருக்கு மருத்துவச் சிகிச்சையை முடுக்கவும் ஆணையிட்டு விரைந்து செயல்பட வைத்துள்ளார்கள் என்பது மிகவும் ஆறுதல் அளிப்பதாகும்!
இறந்தவர்களுக்குத் தலா ஒரு லட்சம் தொகையை அளித்துள்ளார்கள்.
கடவுளை மற ; – மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் கோட்பாட்டை அவர்தம் குருகுல சீடர் மிக்க மனிதநேயத்துடன் ஆட்சியின் மூலம் தனது கடமையை வழுவாது செய்கிறார்.
இழப்புக்காக நாம் வருந்துகிறோம், வேதனைப் படுகிறோம். பக்தர்களின் உயிர் என்றாலும் மனிதர்கள் உயிர்தானே? அவர்தம் குடும்பங்களின் கதறல்கள் நம் உள்ளத்தில் ரத்தக் கண்ணீரை அல்லவா வரவழைக்கிறது?
மூடநம்பிக்கை இப்படி ஆண்டுதோறும் பலி வாங்கியும் மக்கள் புத்தி பெறாமல், மீண்டும் குடிகாரன் – குடிப் பழக்கத்திற்கே அடிமையாவது போல் ஆகிறார்களே என்ற வேதனை நம்மை வாட்டுகிறது!
காளஹஸ்தி கோயில் கோபுரம் இடிந்து விழுந்து நொறுங்குகிறது; அக்கோயிலில் விண்வெளி ராக்கெட் விடும் விஞ்ஞானி போய் வேண்டுதல் செய்து விட்ட ராக்கெட் விண்கலம் கடலில் சுக்கல் நூறாகி விழுந்து நொறுங்கியதுதானே மிச்சம்?
திருப்பதி வெங்கடாஜலபதி, குருவாயூரப்பன், காளஹஸ்தி கடவுள் என்ற கூட்டணியால் கடுகளவு பலனாவது ஏற்பட்டதா?
விஞ்ஞானிகளே இவ்வளவு மூடநம்பிக்கையாளர் களாகி அரசின் மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடந்தால், சாதாரண அய்யப்பப் பக்தன்பற்றிச் சொல்லவே வேண்டாம்! கறுப்பு வெள்ளிக்கிழமைகள் இனி நடக்கக் கூடாது.
எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இனியாவது பக்தி மூடநம்பிக்கை யாளர்களே, கடவுள்களுக்கு எந்தச் சக்தியும் கிடையாது என்பதைப் புரிந்து புத்தி கொள்முதல் செய்யுங்கள்!
– கி. வீரமணி