புண்ணியம் கிடைக்கும், மோட்சம் கிடைக்கும், வாழ்வு சிறக்கும், வளம் சேரும் என்று எவனாவது சொல்லிவிட்டால் உடனே முண்டி அடித்துக்கொண்டு கூட்டம் கூடுவது பாமரன் முதல் படித்தவன் வரை எல்லோருக்கும் வழக்கமாகிவிட்டது.
அது எப்படி புண்ணியம் ஆகும்?
எப்படி அது வாழ்வை வளமாக்கும்? ஒருவரும் சிந்திப்பது இல்லை!
புஷ்கரம் என்றால் என்ன?
குரு கிரகம் ஆண்டுக்கு ஒருமுறை ஒவ்வொரு இராசிக்கும் இடம் பெயர்வதாய் சோதிடம் கூறும்.
ஒவ்வொரு நதிக்கும் ஒரு ராசியை வைத்துள்ளான் நம்ம ஆள். கங்கை_மேஷம், நர்மதை_ரிஷிபம், யமுனை_கடகம், கிருஷ்ணா_கன்னி, காவிரி_துலாம் என்று 12 நதிகளுக்கும் 12 ராசிகள். குரு எந்த இராசிக்குச் செல்கிறதோ அந்த இராசிக்குரிய நதிக்கு புஷ்கர விழா. அந்த நதியில் மூழ்கினால் புண்ணியம் என்கிறார்கள்!
தற்போது துலாம் இராசியிலிருந்து குரு விருச்சிக ராச்சிக்குச் செல்வதை வைத்து விருச்சிக இராசிக்கு உரிய நதியான தாமிரபரணிக்கு புஷ்கர விழா.
12 இராசிக்கு குரு சென்று வர 12 ஆண்டுகள் ஆகும். எனவே, 12 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நதிக்கு புஷ்கர விழா வரும். 12 ஜ் 12 = 144 ஆண்டுக்கு ஒருமுறை வருவது மகா புஷ்கர விழா. தற்போது தாமிரபரணிக்கு மகா புஷ்கர விழா.
அக்டோபர் 11 முதல் 22 வரை விழா
இந்த 12 நாள்களும் பிரம்மா தன் கையில் உள்ள அமிர்த கலசத்தை (புஷ்கர கலசம்) குரு பகவானிடம் தருவான். குரு பகவான் அந்தப் பாத்திரத்தில் உள்ள அமிர்தத்தை தாமிரபரணியில் ஊற்றுவார். அமிர்தம் அந்த நதியில் கலந்து ஓடும். அதில் நீராடினால் அந்த அமிர்தம் நம்மைச் சேருமாம்.
அது மட்டுமல்ல; இந்த 12 நாள்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும், சித்தர், மகான்கள், நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள் எனவெல்லாம் தாமிரபரணியில் டேரா (முகாம்) போடுவார்களாம்! எனவே, அங்கு மூழ்கினால், எல்லா பாபமும் தீருமாம். வாழ்வு செழிக்குமாம்!
ஆக, தாமிரபரணிக்குப் போனால் எல்லோரையும் பார்த்துவிடலாம் என்கிறார்கள். இதைவிட பித்தலாட்டம் வேறு உண்டா? சவாலுக்குப் போய்ப் பார்ப்போமா? இருப்பார்களா? அமிர்தம் ஊற்றப்படுவதை பார்க்க முடியுமா? எவ்வளவு பெரிய மோசடி!
வானிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாம் தாமிரபரணிக்கு வந்து கூடுகிறதாம்! அப்படியென்றால் உலகமே இருண்டுவிடுமே! அண்ணாந்து பார்த்தால் எந்த நட்சத்திரமும் இருக்கக் கூடாதே! அண்ணாந்து பார்ப்போமா? இந்த அறிவியல் உலகிலும் எப்படிப்பட்ட பித்தலாட்டங்கள்.
தாமிரபரணி வரலாறு உலகமகா மோசடி
பொதிகைக்கு வந்த அகத்திய முனிவர் கழுத்திலிருந்த தாமரை மலர் மாலை அவிழ்ந்து விழுந்து அழகிய பெண் குழந்தையாகி, நதியாக உருமாறினாளாம். அதுவே தாமிரபரணியாம்.
நதியென்பது மலையிலிருந்து விழும் அருவி நீரின் ஓட்டம் என்பது உண்மை. ஆனால், தாமரை மலர் பெண்ணாகி அது நதியானது என்கிறது ஆர்.எஸ்.எஸ்., இந்து மதக் கூட்டம்!
இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு விழா? இதற்கு ஆயிரக்கணக்கில் கூட்டம்?
அறிவின் பயன் என்ன? பொறியியல் படித்தவன், மருத்துவம் படித்தவன் எல்லாம் வரிசையில் நிற்கிறான். படித்தவனே சிந்திக்கவில்லையென்றால் பாமரன் என்ன செய்வான்? பெரியாரின் தேவை இப்போது புரிகிறதா?
– மஞ்சை வசந்தன்