“கன்ஷிராம் கண்ட பெரியார் மேளா’’
‘உண்மை’ (அக்டோபர் 1_15, 2018) இதழில், உலகத் தலைவர் தந்தை பெரியார், மகாத்மா ஜோதிபா பூலே, அண்ணல் அம்பேத்கர், நாராயண குரு, சாகு மகராஜ் போன்ற தன்னலமற்ற தலைவர்களின் சமூகநீதிக் கொள்கையை பின்பற்றிய கன்ஷிராம் அவர்கள் பற்றிய பதிவுகள் அருமை. உத்தரப் பிரதேசத்தில் எளிய மக்களிடம் இவர் ஏற்படுத்திய விழிப்பு சாதனையானது.
‘பகுஜன் சமாஜ் கட்சி’யின் நிறுவனர் கன்ஷிராம் அவர்களின் பெருமுயற்சியால் மாயாவதி முதல்வராக இருந்த நிலையில் உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் ‘பெரியார் மேளா’ எனும் இனிய விழாவினை இமாலய விழாவாக கன்ஷிராம் அவர்கள் தலைமையில் முதல்வர் மாயாவதி நடத்திக் காட்டி உலகையே உற்றுநோக்க வைத்தார் என்பது வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஓர் முக்கிய நிகழ்வாகும்.
– சீதாலட்சுமி, திண்டிவனம்
காக்கப்பட வேண்டிய கருத்துக் கருவூலம்
மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். அறிவுலகச் சிற்பி அய்யா அவர்களின் அட்டைப்படம் தாங்கிய (செப். 16_30) இதழ் படித்தேன்.
இதழிலே இடம் பெற்றிருக்கின்ற கவிதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், அய்யாவின் அறிவுரைகள், வாசகர் கேள்விகளுக்கான தங்களின் பதில்கள் அனைத்துமே ‘உண்மை’ இதழ் பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துக் கருவூலம் என்பதையே உறுதிப்படுத்துகிறது!
‘உண்மை’ வாழ்க! வளர்க! வெல்க!
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
என் நெஞ்சைத் தொட்ட இனிய வரி!
‘உண்மை’ (செப்டம்பர் 16_30) இதழில், “மாநில அரசின் கொள்கை முடிவை ஆளுநர் ஏற்பதுதான் ஒரே வழி!’’ என்ற தலைப்பில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில், இலங்கையைச் சார்ந்த 7 பேர்களுக்கு தண்டனை வழங்கி 27 ஆண்டுகளாக தண்டனையை அனுபவித்து வரும் அவர்களுக்கு, கருணை அடிப்படையில் தமிழக அரசும், எதிர்கட்சிகளும் விடுதலை தர விரும்புவதை, ஆளுநர் ஏற்பதுதான் ஒரே வழி என்பதை ஆசிரியர் அவர்கள் மிக அழகாக தலையங்கம் தீட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.
‘நான் யார்?’ என்ற தலைப்பில்….. பெரியார் கூறியவற்றைப் படித்து நெகிழ்ந்துபோனேன்!
‘மானமும் அறிவும்’, ‘ஓய்வறியாச் சூரியன்!’ கவிதைகள் சிறப்பாய் இருந்தன. “சிந்தை கிளறிய தந்தை பெரியார்!’ தலைப்பில் மஞ்சை வசந்தன் தீட்டிய கவிதை வரி கனல்; “சனாதனம் தகர்த்து, சமத்துவம் உருவாக்கி, சமூகநீதி தந்து, சரித்திரமானவர்’’ என்ற வரி என் நெஞ்சைத் தொட்ட இனிய வரிகள்!
– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பெரியாரின் கொள்கை வெற்றியடைந்தே தீரவேண்டும்!
பெரியாரின் கருத்துகளை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல; உலகம் முழுவதும் அறியச் செய்யும் மாபெரும் இதழ் ‘உண்மை’.
ஒரு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழன் கோயிலில் அர்ச்சனை செய்யக் கூடாதா? அவர்களுக்கான உரிமை ஏன் மறுக்கப்படுகிறது?
எனவே, மான, உரிமைப் பிரச்சனையாக இதைப் போராடி வெற்றிபெற வேண்டும்!
பெரியாரின் கொள்கை வெற்றியடைந்தே தீரவேண்டும்!
– அ.உதயபாரதி, கெருகம்பாக்கம்