Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அய்யாவின் அடிச்சுவட்டில்….. இயக்க வரலாறான தன்வரலாறு (212)

மதவெறிக்கு மற்றுமோர் பலி

ஈழத் தமிழரின் மிகத் துயரமான காலகட்டத்தில் தமிழின விரோதியாக நடந்துகொண்ட திரு.வெங்கட்ராமன் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்ததைக் கண்டிக்கும் வகையில் உலகெங்குமுள்ள தமிழர்களின் அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையிலும், அவர் துணைக் குடியரசுத் தலைவர் பதவி ஏற்று முதன்முதலாக தமிழகம் வரும்போது, திராவிடர் கழக பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் கறுப்புக் கொடி காட்டுவது என செயற்குழுவில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

அந்தக் கறுப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்பும் தோழர்கள் உடனடியாகப் பெயர்ப் பட்டியலைக் குவிக்குமாறும் இச்செயற்குழு ஒரு மனதாகக் கேட்டுக்கொண்டது.

செயற்குழுவின் முடிவுப்படி அறப்போராட்டம் கட்டுப்பாட்டுடன் 07.09.1984 அன்று, அவர் வரும்போது நடைபெறும் என்பதை விளக்கி,  “வெங்கட்ராமனுக்கு கருப்புக் கொடி ஏன்?’’ என்று தலைப்பிட்டு 1.9.1984 அன்று விடுத்த அறிக்கை மூலமும் விளக்கியிருந்தேன்.

அதன்படி 07.09.1984 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஆர்.வெங்கட்ராமன் செல்ல இருந்த பாதையில் கிண்டி புகைவண்டி நிலையம் அருகே கழகத் தோழர்கள் குவிய ஆரம்பித்தனர். சாலையின் ஓரத்தில் நீண்ட வரிசையில் அணிவகுத்து கருப்புக் கொடிகளை உயர்த்திப் பிடித்து உணர்ச்சி முழக்கங்களை எழுப்பினர். அப்போது, “தமிழனைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடோம்’’, “தமிழினத் தலைவர்களை அவமதித்த வெங்கட்ராமனே திரும்பிப் போ!’’ என்ற முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே 1000க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் சாரைசாரையாக கைது செய்யப்பட்டனர். நானும் கைது ஆகி வண்டியில் ஏற்றப்பட்டேன். ஏராளமான போலீசாரும், ரிசர்வ் போலீசாரும் ஏற்பாடு செய்து எம்.ஜி.ஆர் அரசு அவசர அவசரமாக எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டார்கள். வழக்கறிஞர் கோ.சாமிதுரை, அமைப்புச் செயலாளர் சேதுபதி உள்ளிட்டோர் ஏராளமான தோழர்கள், தோழியர்கள் கைதாகி சிறை சென்றனர்.

28.09.1984 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான கழகத் தோழர்கள் உடன், நான், ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அங்கிருந்து நாகர்கோயிலுக்கு வாகனங்கள் பின்தொடர ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டேன். வடசேரியில் கழகக் கொடியை ஏற்றிவைத்து கடவுள் மறுப்புக் கல்வெட்டைத் திறந்து வைத்துவிட்டு, மாலை 4 மணிக்கு திட்டுவிளை என்ற இடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மணமக்கள் பிரான்சிஸ் _ லீலா ஆகியோர் திருமணத்தை தலைமை தாங்கி நடத்திவைத்தேன். இரவு 7 மணிக்கு நாகர்கோயில் ரோட்டரி கிளப் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு, கோட்டாறு ரயிலடி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

29.09.1984 அன்று பகல் 3.30 மணிக்கு சிவகங்கை சென்று திரு.சண்முகநாதன்_ராமலக்குமி அவர்களது இல்லத்திற்கு ‘பெரியார் இல்லம்’ என்ற பெயர் சூட்டி திறந்து வைத்ததோடு,  மதுரையில் துவக்கப்பெற்ற கழக இளைஞரணி பயிற்சி முகாமில் கலந்துகொண்டு சுமார் ஒன்றரை மணிநேரம் கழக வரலாறு குறித்து வகுப்பு நடத்திவிட்டு, பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு சுயமரியாதை சுடரொளி மறைந்த சிவகங்கை இராமச்சந்திரன் (சேர்வை) அவர்களது நூற்றாண்டு விழா, மறைந்த சுயமரியாதைச் சுடரொளி திரு.ராமசுப்பிரமணியம் அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவு நாள், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் வழக்கறிஞர் மானமிகு ஆர்.சண்முகநாதன் அவர்களது மணிவிழா ஆகிய முப்பெரும் விழாக்களில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

300 கோடி ரூபாயை புகழூர் காகித ஆலைக்கு தமிழ்நாடு அரசு செலவழித்து _ அதனை மலையாளி பார்ப்பனர், தமிழரல்லாத பிறருக்கு  வேலைவாய்ப்பு, உற்பத்தி ஆகிய அனைத்து துறைகளிலும் “தாரை’’ வார்த்ததைக்  கண்டித்து 01.10.1984 கரூரில் அய்யா விழாவும் இணைந்து நடத்தப்பட்ட, அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்ட மாபெரும் இன எழுச்சி கூட்டத்தில் உரையாற்றினேன்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 03.10.1984 அன்று கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி இல்லத்திற்கு முன்பாக கழகக் கொடியை ஏற்றி வைத்தபின்,

மதியம் குறிஞ்சிப்பாடியில் கடலூர் மாவட்டம் தி.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களது பாட்டி பட்டு அம்மாள் அவர்கள் இயற்கை எய்தியதை ஒட்டி அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினேன். என்னுடன் கழக துணைப் பொதுச் செயலாளர் சாமிதுரை, நடிகர் காகா இராதாகிருஷ்ணன், கடலூர் மாவட்ட தி.க. தலைவர் புலவர் சிங்கவேலார், மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் துரை.சந்திரசேகரன், மாவட்ட கழகத் துணைத் தலைவர் மஜித் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

அன்று, விழுப்புரத்தில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் இரவு 7 மணிக்கு ரயிலடி திடலில் துவங்கியது. ஊர்வலத்தில் என்னை அலங்கரிக்கப்-பட்ட வாகனத்தில் அழைத்து-வந்தனர். ஊர்வலம் விழுப்புரம் நகர தி.க. பொருளாளர் சைமன் அவர்களது தலைமையில் புறப்பட்டது. ஊர்வலத்தில் பேராசிரியர் பொன்முடி தலைமையில் ஏராளமான இளைஞர்கள் கொள்கை முழக்கமிட்டுச் சென்றனர்.

05.10.1984 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த அய்யா, அண்ணா விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

05.10.1984 அன்று ‘விடுதலை’யில் தென் மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களிலும் கடந்த 10 நாட்கள் சுற்றுப் பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பியவுடன் “கண்டறியாத எழுச்சி கண்டேன்’’ என்ற தலைப்பில் சுற்றுப் பயணத்தைக் குறித்து எழுதியிருந்தேன். காரணம், அந்த அளவிற்கு பயனுள்ள எழுச்சிப் பயணமாக அது அமைந்ததுதான்.

6.10.1984 அன்று இரவு தமிழக முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கட்கு திடீரென ஆஸ்த்துமா காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனை யொன்றில் சேர்க்கப்பட்டதை அறிந்து சுற்றுப் பயணத்தில் இருந்தவாறே மருத்துவமனைக்கு அவர் விரைவில் முழுநலம் அடைய வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்து திராவிடர் கழகத்தின் சார்பில் கனத்த இதயத்தோடு தந்திச் செய்தி அனுப்பினேன்.

07.10.1984 அன்று மன்னையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நான், நாகப்பட்டினத்தில் 08.10.1984 அன்று நடைபெற்ற கீழத்தஞ்சை மாவட்ட திராவிட விவசாயத் தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினேன். மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. “உணவு உற்பத்தியில் தமிழகத்தின் முதுகெலும்பாக உள்ள விவசாய தொழிலாளர்கள் வாழ்க்கைத் தரத்தில் எல்லா வகையிலும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வடைய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளையும் விவசாய தொழிலாளர்-களுக்கும் அளிக்க ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்தத் திராவிட விவசாய தொழிலாளர் மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது’’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தந்தை பெரியார் அவர்களின் பெருந்-தொண்டர் சுயமரியாதை வீரர் ஆம்பூர் பெருமாள் அவர்களது திருவுருவப் படத்திறப்பு விழா நிகழ்ச்சி 14.10.1984 அன்று காலை 10.30 மணி அளவில் பெருமாள் அவர்களது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. நான் பெருமாள் அவர்களது திருவுருவப் படத்தைத் திறந்துவைத்து அவரது பெருமைகளையும் தொண்டையும் சிறப்பான அளவுக்கு எடுத்துக் கூறினேன்.

அன்று இரவு 7.30 மணி அளவில் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியின் ஆற்காடு சாலையில் தந்தை பெரியார் 106ஆவது ஆண்டு பிறந்த தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் நான் கலந்துகொண்டு, அடித்தட்டு மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, ஆட்சி அதிகாரங்களில் வரவேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்பாட்டின் அவசியம் பற்றியும் விளக்கி சிறப்புரையாற்றினேன்.

மறுநாள், திருப்பத்தூரில் பன்னீர்செல்வம் புனிதவதி திருமணத்தில் நான் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தேன். “திருமணத்திலே சொந்தத் தாயையே விதவை என்று சொல்லி தன்னுடைய மகன் திருமணத்திற்கே வரமுடியாத நிலை இந்த நாட்டில் இருக்கின்றது. சொந்தத் தாய்மொழியும் நம்முடைய திருமணத்திலே வரமுடியாத நிலை இருக்கின்றது. ஆகவேதான் தந்தை பெரியார் அவர்கள் இந்த எண்ணங்களையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்’’ என்று எடுத்துக்காட்டிப் பேசினேன்.

அன்று தர்மபுரி மாவட்டம், பெங்களூர் ஆகிய இடங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அறிந்து பிரச்சாரத்தை இரத்து செய்துவிட்டு சென்னைக்கு வந்து மருத்துவமனை சென்று அமைச்சர் பெருமக்களிடமும், மருத்துவக் குழுவினரிடமும் எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றி விசாரித்தேன்.

தமிழ்நாட்டின் பிரபல ஆடிட்டர்களில் ஒருவராகிய திரு.பி.பக்தவத்சலு (நாயுடு) அவர்கள் 20.10.1984 அன்று காலமானார் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். ‘பி.பி.நாயுடு அண்ட் கோ’ என்ற பெயரில் இயங்கும் இந்த ஆடிட் பணிமனையால் பலன் பெற்று பயிற்சி பெற்று செல்வோர் ஏராளம். அத்தகையவரின் இறப்புக் குறித்து 23.10.1984 அன்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

தந்தை பெரியார் அறக்கட்டளையான பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்-குரிய ஆடிட்டராகப் பொறுப்பேற்ற அவரும் அவரது ஒரே மகன் ஆடிட்டர் திரு.சுரேந்தர் அவர்களும் இதன் மீது போடப்பட்ட சிக்கலுக்கான நிலைமைகளை எல்லாம் வருமானத் வரித்துறையில் சமாளிக்க உதவி செய்வதை தாம் மட்டுமல்லாமல் தமிழ்நாடே அதற்காக நன்றி செலுத்தியது என்பது நினைவு கூறத்தக்கதாகும் என்று அந்த இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

பால் கமிஷன் அறிக்கையை வெளியிட்டது தொடர்பாக கலைஞர் நீதிமன்றத்திற்கு வர மறுத்த நிலையில் அரசாங்கமே கலைஞருக்கு இலவச வழக்கறிஞர் நியமித்து வாதாடும் என்று முடிவெடுத்தது சட்டவிரோதமானது என்று நான் சென்னை எழும்பூர் நகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கு 20.10.1984 அன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி திரு.மாணிக்கம் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அந்தத் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் திருமதி பத்மினி ஜே.துரை வாதிடுவதற்கு கால அவகாசம் கேட்டார்.

என் சார்பில் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட வேண்டிய வாதங்கள் எழுத்து மூலமாகவே நீதிமன்றத்தில் அன்று அளிக்கப்-பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடியும்வரை பால் கமிஷன் வழக்கில் கலைஞர் நீதிமன்றம் வரத் தேவையில்லை என்றும், அதுவரை அரசு சாட்சியங்களையும் விசாரிக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மறுநாள் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் அவர்களின் புதல்வி ஆனந்திக்கும் _ மோகன் குமாருக்கும் மயிலை இராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்த வாழ்க்கை ஒப்பந்த விழா நிகழ்ச்சிகள் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. விழாவில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் பெருந்-தொண்டர் பழம்பெரும் சுயமரியாதை வீரர் முன்னாள் நகர தி.க. பொறுப்பாளர் மாணிக்கவாசகம் அவர்கள் இயற்கை எய்தியதை ஒட்டி 28.10.1984 அன்று மதியம் பாபநாசத்தில் காஞ்சிமேடு தெருவில் வசித்த மாணிக்கவாசகனார் அவர்களது இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினேன். தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டைக்கு அருகிலுள்ள வழத்தூரில் நடந்த காயிதேமில்லத் விழாவில் நான் கலந்து கொண்டு வந்தபொழுது வழத்தூரில் இரவு 9.10 மணிக்கு கழகக் கொடியினை ஏற்றிவைத்து சிறிதுநேரம் உரையாற்றினேன்.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தமிழக அரசு செய்திருந்த விளம்பரத்தில் இடஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தது. அதோடு ஒவ்வொரு பிரிவுக்கும் எத்தனை சப் இன்ஸ்பெக்டர் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

இதனை நான் சுட்டிக்காட்டி _ டைரக்டர் ஜெனரலுக்கு கடந்த 10.10.1984 அன்று கடிதம் ஒன்று எழுதியிருந்தேன். இதற்கு பதிலாக தமிழக அரசின் உள்துறை செயலாளர்

திரு. டி.வி.வெங்கட்ராமன் அய்.ஏ.எஸ் அவர்களிடமிருந்து 29.10.1984 அன்று தேதியிட்டு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் இந்தத் தேர்¢வில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதமும் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் என்று உறுதியளித்து பதில் எழுதியிருந்தார். கருப்புச் சட்டைக்காரர்கள் கண்காணிப்பில் கெட்டிக்காரர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறியச் செய்தோம்.

ஆந்திரா மாநிலத்து செகந்திராபாத் நகரின் ஒய்.எம்.சி.ஏ.யில் 30.10.1984 அன்று மாலை நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

“வடபுலத்தில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பேசினாலும், தென்புலத்திலே தந்தை பெரியார் பேசினாலும்,, அம்பேத்கர் மராட்டிய மொழியிலே பேசினாலும், தந்தை பெரியார் அவர்கள் தமிழ் மொழியிலே பேசினாலும் இரண்டும் தாழ்த்தப்பட்ட, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுந்த குரல்கள்’’ என்று குறிப்பிட்டேன்.

மறுநாள், 31.10.1984 அன்று காலை 9 மணி அளவில் உலகையே உலுக்கிய அதிர்ச்சிதரக்கூடிய செய்தி வந்தது. இந்தியப் பிரதமராக இருந்த திருமதி இந்திராகாந்தி அவர்கள் அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்திதான் அது!

இதனைக் கண்டித்து, ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் “காட்டுமிராண்டித்தனம்; நாகரீகமற்ற செயல்’’ என்றும் அறிக்கை எழுதினேன். நான் அன்று அய்தராபாத்தில் இருந்தேன். இந்தச் செய்தியைக் கேட்டவுடன் தாங்கமுடியாத அதிர்ச்சி அடைந்தேன். அரசியல் நாகரிகத்திற்கு அப்பாற்பட்டு இந்தக் காட்டுமிரண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவைகளை பொது வாழ்க்கையில் அனுமதிக்க முடியாது’’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்ததோடு,

01.11.1984 அன்று ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் “மதவெறிக்கு மற்றுமோர் பலி!’’ என்ற தலைப்பில் இரங்கல் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தேன். காந்தியாரைக் கொன்ற அதே மதவெறிதான் இந்திரா-காந்தியையும் கொன்றுள்ளது. இதனை ஓர் எச்சரிக்கையாகக் கொண்டு இனிமேலும் மதவெறிக்கு பலியாகாதவண்ணம் புதிய பார்வை தேவையாகும்! என்று குறிப்பிட்டிருந்தேன்.

அன்று இரவு 7.30 மணிக்கு ‘தமிழக தலைவர்கள் அஞ்சலி’ என்று தலைப்பில் நான், கழகத்தின் சார்பில் தொலைக்காட்சியில் உரையாற்றினேன். ‘பெண்ணால் முடியுமா?’ என்பதை ‘தன்னால் முடியும்!’ என்று உலகுக்குக் காட்டி, ஏழைகளுக்கும், சமுதாயத்தின் அடித்தள மக்களுக்காக தன்னுடைய ஆட்சியை நான் திருப்புவேன் என்பதற்காக வங்கிகளை நாட்டுடைமையாக்கிய  மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற புதுமையான சமுதாயம் காண்பதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இந்திய வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று எடுத்துக் கூறினேன்.

06.11.1984 அன்று தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா கொள்கைகளில் அழுத்தமான ஈடுபாடு கொண்டு எதற்கும் அஞ்சாமல் கொள்கைகளை துணிவுடன் எடுத்துச் சொல்லி வந்த மதுரை மாநகரத்தின் முதல் மேயர் சுயமரியாதை வீரர் மதுரை முத்து அவர்கள் மறைவு குறித்து இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். கழகத்தின் சார்பில் இறுதி மரியாதையை செலுத்தினேன்.

06.11.1984 அன்று ‘விடுதலை’யில் நமது இயக்கத்திலிருந்து ஒதுங்கி நின்றவர்கள் ‘பிரிந்தவர் கூடுவோம்’  என்ற தலைப்பில் விலகிச் சென்றவர்கள், வேறுபட்டு நின்றவர்-களில் யார் யாருக்கு நல்லெண்ணமும் பொதுநல மனப்பான்மையும், இனமான உணர்வும் உண்மையாக உள்ளதோ அப்படிப்பட்டவர்கள் நம் இயக்கத்தில் மீண்டும் தங்களை இணைத்துக்கொண்டு கழகத் கடமைகளை கட்டுப்பாட்டுடன் ஆற்ற முன்வர அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டேன்.

அதனை ஏற்று முதுபெரும் தொண்டரான மானமிகு சிதம்பரம் கு.கிருட்டிணசாமி அவர்களும், கே.நமசிவாயம், டி.கே.மூர்த்தி உள்ளிட்ட கழகத் தோழர்கள் தொடர்ந்து தங்கள் தலைமையின் கீழ் பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். என்று கடிதம் மூலம் தெரிவித்து நம்மோடு மீண்டும் இணைந்தார்கள்.

07.11.1984 அன்று என்னுடைய அண்ணன் கடலூர் கி.தண்டபாணி அவர்களது மகன் த.தேசிங்குராசனுக்கும் புதுச்சேரி முத்துக்குமாரசாமி மகள் சாந்தி ஆகியோருக்கும் அண்ணன் மகள் த.வளர்மதி, பண்ருட்டி கே.இராஜரத்தினம் மகன் ராஜா ஆகியோருக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா காலை 9.30 மணி அளவில் வைசியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் நான் அனைவரையும் வரவேற்று உரையாற்றினேன்.

திருமணத்தில் புதுவை மாநில முன்னாள் முதல்வர் தெ.இராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்கள். திராவிடர் கழகப் பொருளாளர் திருமணத்திற்கு முன்னிலை வகித்தார்.

தி.மு.க. மாநில விவசாய பிரிவு செயலாளர் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, தென்னார்க்காடு மாவட்ட தி.மு.க. செயலாளர் செஞ்சி ந.இராமச்சந்திரன், விழுப்புரம் பழனியப்பன் எம்.எல்.ஏ., சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெ.குழந்தைவேல், அ.இ.அ.தி.மு.க. எல்.எல்.ஏ. சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

                                                (நினைவுகள் நீளும்…)

– கி. வீரமணி