நெஞ்சில் நிறைந்த பெரியார் பிஞ்சுகள் மாநாடு!

Uncategorized

2018 செப்டம்பர் 29ஆம் தேதி பெரியார் பிஞ்சு மாநாடு திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு திண்டுக்கல்லில் மிகுந்த எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் நடைபெற்றது.

அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சியை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் முன்னிலையில் திறந்து வைத்தார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மனநல மருத்துவர் ஷாலினி, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் கழக முக்கிய பொறுப்பாளர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர் உள்ளிட்டோர் கண்காட்சியைப் பார்வையிட்டு அறிவியல் விளக்கம் பெற்றனர்.

பிஞ்சுகளின் பல்சுவை நிகழ்ச்சி

மாநாட்டு அரங்கில் பெரியார் பிஞ்சுகளின் நடனம், பாடல்கள், கவிதை வாசிப்பு, உரை வீச்சு, தனித்திறன் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் அமர்க்களப்பட்டன.

திருச்சி பெரியார் மணியம்மை மேனிலைப் பள்ளியின் மூன்று மாணவிகள் பேய், பூதம், பிசாசு என்பதெல்லாம் ‘சுத்தப் பொய்! _ மோசடி’ என்று அறிவியல் ரீதியாய் விளக்கமளித்தது பாராட்டும்படி இருந்தது.

பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி அவர்கள் பிஞ்சுகள் மத்தியிலே ஊடுருவி  பல்வேறு தலைப்புகளில் பிஞ்சுகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் வில்லுப்பாட்டு, ஓரங்க நாடகம், நடன நிகழ்ச்சிகள் உற்சாகத்துடன் அரங்கேறின.

பெரியார் 1000 – சிறப்பு வினாடி வினா

சுயமரியாதை, இனவுணர்வு, பகுத்தறிவு, சமூகநீதி என்று நான்கு அணிகள் (ஒவ்வொரு அணியிலும் மூவர்) பங்கேற்க சிறப்பு வினாடி வினா நடைபெற்றது. தந்தை பெரியார் குறித்து திராவிடர் கழக மாநில மாணவர் கழக செயலாளர் தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் கேள்வி கேட்டு வினாடி_வினா நிகழ்வை நெறிப்படுத்தி நடத்தினார். வெற்றி பெற்றவர்களுக்கு ‘இனமுரசு’ சத்யராஜ் அவர்கள் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

பொம்மலாட்டம்

மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு கலை அறப் பேரவை மு.கலைவாணன் (முத்துக்கூத்தன் மகன்) ‘அறிவுக்கொழுந்து அஞ்சலை’ எனும் தலைப்பில் புதுமையான, புரட்சியான, பொம்மலாட்டத்தை நடத்தினார். பகுத்தறிவுக் கருத்துகள் நிரம்பிய இந்தப் பொம்மலாட்டத்தை அனைவரும் கைதட்டி ரசித்துப் பார்த்தனர்.

பிரமிப்பான பெரியார் பிஞ்சுகள் பேரணி

மாலை 5 மணிக்கு மாநாடு நடைபெற்ற நாயுடு மகாஜன சங்க திருமண மண்டபத்தின் வாயிலிலிருந்து பிஞ்சுகள் பேரணி தொடங்கி மணிக்கூண்டு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திறந்தவெளி மாநாடு அரங்கை வந்தடைந்தது. பேரணி மாநாட்டு மேடைக்கு வந்தடைவதற்கு முன்னதாகவே புரபசர் ஈட்டி கணேசன், “மந்திரமா? தந்திரமா?’’ என்னும் தந்திர நிகழ்ச்சிகளை செய்துகாட்டி மந்திரமென்பது தந்திரமே என்று விளக்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, பிஞ்சுகளின் நடனங்கள், ஓரங்க நாடகங்கள், பெரியார் பொன்மொழிகள் கூறல், தமிழ் மற்றும் ஆங்கில உரைகள் நிகழ்ச்சிகள் அற்புதமாக அமைந்தன. பறையிசை மற்றும் வழுக்குக் கம்பத்தில் தலைகீழாக ஏறி இளைஞர்கள் அசத்தினர்.

நூல் வெளியீடு

பேரன் பேத்திகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தாத்தா எழுதிய கடிதங்கள்

(5 தொகுதிகள்), கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய ‘தங்கத் தாத்தா வாழ்க்கையிலே’ என்னும் இருவகை நூல்களை ‘இனமுரசு’ சத்தியராஜ் வெளியிட்டார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அறிமுக உரையாற்றுகையில், “சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை 3.4 விழுக்காடு அளவுக்குத்தான் வழக்குப் பதிவு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இக்கொடுமை 94.6 விழுக்காடு நெருங்கிய உறவினர்களாலேயே நிகழ்கிறது. இச்செயல்களுக்கு வெறும் 29.6 விழுக்காடுதான் தண்டனை கிடைக்கின்றன. இந்தியாவில் ஒரு நிமிடத்தில் ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. இக்குற்றங்கள் சம்பந்தமாக சிலீவீறீபீ லிவீஸீமீ 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்’’ என்ற தகவல்களை தெரிவித்தார்.

‘இனமுரசு’ சத்தியராஜ்

திரைப்பட நடிகர் ‘இனமுரசு’ சத்தியராஜ் அவர்கள் உரையாற்றுகையில், “அமெரிக்காவிலிருந்து வந்த தன் உறவினர் வீட்டுக் குழந்தை கோயிலைக் காட்டி இது என்ன என்று கேட்டதற்கு குழந்தையின் பாட்டி, அது ஒரு கட்டடம். அதற்குள் சாமி சிலை இருக்கிறது. அதனைக் கும்பிட்டு, நாம் விரும்புவதைக் கேட்டால் கொடுக்கும் என்று சொன்னபொழுது, கீலீணீt ணீ யீuஸீஸீஹ்? என்று அக்குழந்தை சிரித்ததையும், அக்குழந்தை, தனக்கு ஒரு பொம்மை வாங்கித் தரும்படி என்னிடம் கேட்டபொழுது அவ்வாறு வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பொம்மையைத் தன் பாட்டியிடம் காட்டி, இந்தப் பொம்மை நான் கேட்டதைக் கொடுக்குமா? என்று கேட்டதையும் எடுத்துச் சொன்னபொழுது சிரிப்பும் கைத்தட்டலும் அடங்க வெகு நேரமானது. மேலும், தனக்கே உரிய பாணியில் மூடநம்பிக்கைகளைச் சாடி நகைச்சுவையாகவும் அதேசமயத்தில் அறிவார்த்தமாகவும் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை:

வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியார் பிஞ்சு மாநாட்டின் பிரகடனத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டு விளக்கவுரையாற்றினார்.

“பிள்ளைகளை சுதந்திரமாக வளர விடுங்கள். பிள்ளைகளிடம் ஜாதியை, மதத்தை, கடவுளைத் திணிக்காதீர்! பிள்ளைகளை பெற்றோர்களோ, ஆசிரியர்களோ அடிக்கக் கூடாது. குழந்தைத் திருமணம், குழந்தைகள் பிச்சை எடுப்பது, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுக்கப்பட வேண்டும்.’’

“இந்தப் பிரகடனம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அய்.நா. சபைக்கு அனுப்பிவைக்கப்படும்’’ என்று ஆசிரியர் அவர்கள் அறிவித்ததும் மக்கள் அலைகடலென எழுந்து நின்று நீண்டநேரம் கையொலி எழுப்பி வரவேற்றனர்.

நிகழ்ச்சி நிறைவு

திண்டுக்கல் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பெரியார் பிஞ்சுகள், மாணவர்கள், கழகத் தோழர்கள், பல்வேறு கட்சி அமைப்புகளைச் சார்ந்தோர் மற்றும் பொதுமக்களென கடல்போல் குவிந்து மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.  பெரியார் பிஞ்சு மாநாடு எதிர்பார்த்ததை விடவும் எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் மிகச் சிறப்பாய் நடந்து முடிந்தது.

– தமிழோவியன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *