சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

Uncategorized

நூல்    :  ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?

ஆசிரியர்   :    ப.திருமாவேலன்

வெளியீடு     :   நற்றினை பதிப்பகம்,

                                6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,  திருவல்லிக்கேணி,

  சென்னை – 600005.

                  தொலைபேசி: 044 – 28482818

மின்னஞ்சல்  : natrinaipathippagam@gmail.com

கிடைக்குமிடம்  :  பெரியார் புத்தக நிலையம்,

       சென்னை – 600007.

            போன் : 044 – 2661 8163

அரசியல் அமைப்பும், ஆட்சி அமைப்பும் செல்வவான்களுக்கே சொந்தமாக்கி, அவர்களது நன்மைக்கே அனுகூலமானதாக அமைக்கப் பட்டிருக்கின்றதேயொழிய, பொதுஜன நன்மைக்கு ஏற்றதான பொதுஜன பிரதிநிதித்துவத்திற்கு லாயக்காக அமைக்கப்பட வில்லை என்பது நன்றாய் விளங்கும். குறிப்பாக, தொழிலாளிகள் விஷயம் சிறிதுகூட கவனிக்கப்படவில்லை என்பதும், அவர்களது நன்மைகளையும், முன்னேற்றங்களையும் வேண்டுமென்றே வெகு ஜாக்கிரதையுடன் புறக்கணிக்கப்பட்டு, அழுத்தி வைக்கப் பட்டிருக்கின்றது என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்.

இப்போது அரசாங்க தத்துவப்படி ஆதிதிராவிடர் என்கின்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ள தீண்டாத வகுப்பார்கள் என்பவர்களுக்கும்கூட, சரியானபடி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதாகவும் சொல்வதிற்கில்லை. எப்படியெனில் ‘ஆதிதிரா-விட வகுப்பு’ என்று சொல்லப்பட்ட, மேல்-கண்ட மூன்று வகுப்பார்களிலும் இன்றைய தினம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சுமாருள்ள மக்கள் கிறிஸ்துவ மதத்தை தழுவி இருக்கின்றார்கள். அந்தப்படி அவர்கள் கிருஸ்துவ மதத்தைத் தழுவி இருந்தபோதிலும் தீண்டாமையானது கிருஸ்துவமதத்திலும் இருந்துகொண்டு அங்கு வருகின்றவர்களையும் விலக்கி வைத்து இருக்கின்றது. உதாரணமாக ‘கிறிஸ்துவப் பறையர்கள்’ என்றும், ‘கிறிஸ்துவச் சக்கிலிகள்’ என்றும், மற்றும் இம்மாதிரியாகவே சொல்லப்படுவதுடன், அவர்கள் ஊரைவிட்டும் மற்றும் பல பொது உரிமைகளை விட்டும் விலக்கியே வைக்கப்பட்டிருக்கின்றார்கள். கிறிஸ்துவர்கள் கோவிலிலுங்கூட மேல்கண்ட ஆதிதிராவிடக் கிறிஸ்துவர்கள் அனுமதிக்கப் படாமல் இருக்கின்றார்கள். ஆகவே, இதிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும், தொழிலாளிகளுக்கும் மற்றும் தொழில் காரணமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அரசியலிலும், ஆட்சியிலும் பிரதிநிதித்துவம் இல்லை என்பது உறுதியாகின்றது.

(‘குடிஅரசு’ -29.03.1931)

இந்தியாவில் இன்று இரண்டு வகுப்பார்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சிறிது கூட விவகாரமே இருக்காது என்று கருதுகிறோம்.

அதாவது ஒன்று : பெண் மக்கள்.

இரண்டு : தீண்டப்படாத மக்கள் என்பவர்கள்.

இவ்விரு கூட்டத்தாரும் கல்வியில் 100க்கு ஒருவர் இருவர்கூட படித்தவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லத்தக்கதாகத்தான் இருக்கிறார்கள். செல்வத்திலோ பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. ஏனெனில், சட்டப்படியே பெண்களது வாழ்க்கை என்பது ஆண்களுக்கு அடிமை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். பெண்கள் கற்று இருப்பதும், சொத்து வைத்திருப்பதும் மிக அருமையாகத்-தான் இருக்கும்.

அதுபோலவே, தீண்டப்படாதவர்கள் என்கின்றவர்கள் நிலையும் சமுதாய ஒழுங்குப்-படியே மனிதத்தன்மை அற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் பிறவித் தொழிலாளிகள்; செல்வம் சேர்க்க சந்தர்ப்பமும், சமசுதந்திரமும் இல்லாதவர்கள். சட்ட நிர்பந்தத்தினாலல்லாது படிக்கவோ அரசியல் ஸ்தானம் பெறவோ முடியாதவர்கள். இப்படிப்பட்ட இரு சமூகத்தாரையும் பற்றி அரசாங்கம் கவனித்ததல்லாமல் இதுவரை எந்த ஜனத் தலைவர்களும் பொதுநல ஸ்தாபனங்களும் கவனிக்கவே இல்லை.

சமூகப் புரட்சி ஸ்தாபனமாகிய ‘ஜஸ்டிஸ் கட்சி’ அதாவது பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஒன்று தோன்றி அதன் கிளர்ச்சியின் பயனாகவும் அது பார்ப்பனர்களுக்கும் காங்கிரசுக்கும் எதிராக அரசியலிலும், சமூக இயலிலும் சிறிது ஆதிக்கம் பெற்றதின் பயனாகவுமே இந்த இரு கூட்டத்தாருக்கும் இப்போது சிறிது காலமாய் பல நன்மைகள் ஏற்பட வசதி ஏற்பட்டிருக்கிறது.

அதாவது, பெண்கள் அரசியலில் பங்கு பெறவும், ஓட்டர்களாகவும் ஸ்தானம் பெறவும் நிர்பந்தமாய் சில இடங்களில் படிக்கவும் சௌகரியம் ஏற்பட்டிருக்கிறது.

தீண்டப்படாதவர்கள் என்பவர்களும் அரசியலில் கலந்து கொள்ளவும், ஓட்டர்-களாகவும், கண்டிப்பாய் சிலராவது உத்தியோகம் பெறவும், தெருவில் நடக்கவும், கிணறு, குளம், சாவடி ஆகியவைகளை பயன்படுத்திக்கொள்ளவும், பள்ளியில் சேர்ந்து படிக்கவுமான முதலிய சௌகரியங்களை சட்ட பூர்வமாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவை பெரிதும் சென்னை மாகாணத்தில் மாத்திரமே; அதுவும் ‘ஜஸ்டிஸ் கட்சி’ ஆதிக்கத்தில் இருந்த காரணத்தினாலேயே என்று சொல்லுவோம். இந்த சௌகரியங்களும் மற்ற மாகாணங்களில் சரியாக இல்லை என்பதோடு இனியும் அனேக சௌகரியங்கள் அவர்களுக்காகச் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில், ஏதோ ஒரு சிறு அளவுக்கு பெண்கள் விஷயமாயும், தீண்டப்படாதார்கள் என்பவர்கள் விஷயமாயும் சில சௌகரியங்-களுக்கு மாத்திரம் அதாவது பெண்களுக்கு சொத்துரிமை இருக்கவும், தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு சமூக வாழ்க்கையில் சம சுதந்தரத்துக்கு இடையூறு இருக்கக்கூடாது என்பதற்கு ஆகவும் இரு சட்டங்கள் செய்ய முறையே தோழர்கள் தசமுக் அவர்களாலும், எம்.சி.ராஜா அவர்களாலும், இந்திய சட்டசபைக்கு இரு மசோதாக்கள் கொண்டு-வரப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தார் இவற்றைப்பற்றி பொதுஜன அபிப்பிராயம் கேட்டுவிட்டு இருக்கிறார்கள்.

இப்படிக் கேட்டு இருப்பதை நாம் தவறு என்றே சொல்லுவோம். ஏனெனில் ஒரு பிரஜையினுடைய சுதந்தரத்துக்கு ஆக மற்றொரு பிரஜையின் அதுவும் அப்பிரஜையுடைய பிறவி எதிரிகளின் சம்மதம் கேட்பதானது ‘போகாத ஊருக்குத் தடம் கேட்பது’ போலவேயாகும். ஒருவருடைய செல்வத்தில் மற்றவர்களுக்கு சுதந்தரம் உண்டாக்கிக் கொடுக்க வேண்டு-மானால் அப்பொழுது மற்றவர்களை கேட்கலாம். அப்படிக்கில்லாமல் ஒரு மனிதனுக்கு மனிதத்தன்மை அளிப்பதைப்பற்றி மற்ற மனிதனை அனுமதி கேட்பது நல்ல எண்ணமென்றோ, நல்ல அரசாட்சியின் தன்மை என்றோ நாம் ஒருநாளும் சொல்லமாட்டோம். தனி உடமை உலகில் மக்கள் யாவரும் ஆணானாலும், பெண்ணானாலும் செல்வம், சொத்து வைத்திருக்கவும், பெறவும் அருகதையுடையவர்களேயாவார்கள். இது இன்றைய உலகில் எல்லா நாட்டிலும் இருந்து வரும் முறையேயாகும். அப்படி இருக்க, இந்தியாவில் மாத்திரம் இப்பொழுதுதான் இந்த விதி கவனிக்கப்படுகிறது. இந்த கால தாமதத்துக்கு பார்ப்பனீயமே காரணமாகும் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

தீண்டப்படாதார் என்பவர்களின் குறைகளும் 1000 வருஷத்துக்கு முன்பே அதாவது இந்து ஆட்சி மனுதர்ம ஆட்சி ஒழிக்கப்பட்டு, முஸ்லீம் ஆட்சி இந்த நாட்டுக்கு வந்த உடனே தீர்ந்திருக்க வேண்டிய விஷயமாகும். அப்படி இருந்தும் முஸ்லீம் ஆட்சியில் தங்கள் மதத்தைப் பெருக்கப் பாடுபட்டார்களே ஒழிய, மனிதத் தன்மை இல்லாத மக்களுக்கு மனிதத் தன்மை சுதந்தரம் அளிக்க அவர்கள் சரியானபடி முயற்சித்திருப்பதாகச் சொல்லுவதற்கில்லை. ஆனால், தங்கள் மதத்தைப் பெருக்கும் விஷயத்தில் கவலை எடுத்ததின் மூலமாவது ஒரு அளவுக்கு பல கோடிக்கணக்கான மக்களின் இழிவும் அசௌகரியமும் ஒழிக்கப்பட்டது பற்றி பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அதன்பின், இங்கிலீஷ் ஆட்சி வந்து 200 வருடங்கள் ஆகியும் இது வரையும் அவர்கள் இவ்விஷயத்தில் கவலை இல்லாமல் இருந்ததையும், நாம் அலட்சியப் புத்தியால் என்றோ நல்ல எண்ணத்தால் என்றோ ஒருநாளும் சொல்ல முடியாது. மதத்தைப் பெருக்கும் விஷயத்திலும் சரியானபடி நடந்து கொண்டார்கள் என்றும் சொல்லமுடியாது. ஏனெனில் 200 வருஷ காலத்துக்கு 50, 60 லட்சம் மக்களே இந்தியாவில் கிறிஸ்தவர்களாகி இருக்கிறார்கள். அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆதலால் பிரிட்டிஷ் ஆட்சி தீண்டாமை ஒழிப்பதில் மத விஷயத்திலோ, மனிதத்தன்மை விஷயத்திலோ இந்தியாவுக்கு செய்த நன்மை மிகமிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் மேல்கண்ட இரு தோழர்களும் கொண்டு வந்திருக்கும், மசோதாக்கள் இரண்டும் இந்திய மக்களால் பொன்னேபோல் போற்றி ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனுடையவும் கடமையாகும். அப்படி இருக்க வழக்கம்போல் பார்ப்பனர்கள் இவ்விஷயத்தில் தங்கள் ஜாதிப்புத்தியைக் காட்ட முன்வந்துவிட்டார்கள். அதாவது, ஊர்கள்தோறும் கூட்டம் கூட்டி எல்லா பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து இவ்விரு மசோதாக்களையும் கண்டித்துத் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்துக்கு அனுப்புகிறார்கள். இது நியாயமா என்று கேட்கின்றோம்?

பார்ப்பனர்கள் தாங்கள்தான் இந்தியாவுக்கு தர்மகர்த்தாக்கள் என்றும், பார்ப்பனர்கள் எல்லோருமே காங்கிரஸ்காரர்கள் தேசபக்தர்கள் என்றும், பார்ப்பனர்கள்தான் மனித சுதந்தரத்துக்கும் தேச விடுதலைக்கும் அன்னிய ஆட்சி ஒழிப்புக்கும் பாடுபடுபவர்கள் என்றும், வகுப்பு உணர்ச்சி இல்லாதவர்கள் என்றும், பார்ப்பனரல்லாத மக்கள் தேசத் துரோகிகள் வகுப்புவாதிகள் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஏழைமக்களுக்கும் பார்ப்பனரல்லா-தார்களே விரோதிகள் என்றும் இதுவரை சொல்லிக்கொண்டு வந்த பார்ப்பனர்கள் இப்பொழுது வெட்கமில்லாமல் தைரியமாய் இம்மாதிரி தோழர்கள் தசமுக் பெண்கள் சொத்துரிமை மசோதாவையும், எம்.சி. ராஜாவின் தீண்டாமை விலக்கு மசோதாவையும் எதிர்த்துக் கண்டிக்கிறார்கள் என்றால் இதைக் கவனிக்கும்படி பொது ஜனங்களை வேண்டு-கிறோம்.

இந்த மசோதாக்களை ஆதரித்தோ, பார்ப்பனர்-களின் இவ்விஷமங்களை கண்டித்தோ இதுவரை ஒரு தேசிய பத்திரிகையாவது, ஒரு காங்கிரஸ்வாதியாவது பேச்சு மூச்சுகூட காட்டவில்லை.

இந்த சிறிய சீர்திருத்தத்துக்கு உடன்படாமல் எதிர்க்கும் இப்பார்ப்பனர்களும், மறைமுகமாய் இவர்களை ஆதரிக்கும் தேசீய பத்திரிகைகளும், காங்கிரஸ்காரர்களும் நாளை இந்தியாவுக்கு “பூரண சுயேச்சை”யோ, ராமராஜ்யமோ வந்துவிட்டால் எப்படி நடந்து கொள்ளுவார்கள் என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

இத்தனை பார்ப்பனர்கள் மீட்டிங்கு கூடி அந்த மசோதாக்களை கண்டிப்பதை காங்கிரஸ்காரர்கள் பார்த்துக்கொண்டு இருந்தும் சிறிதாவது வாய்திறக்கிறார்களா என்பதை நினைக்கும்போது காங்கிரஸ் பார்ப்பனர்களின் ஆயுதம் என்பதும் காங்கிரசிலுள்ள பார்ப்பனரல்லாதார் அப்பார்ப்பனர்களின் குலாம்கள் என்பதும் கல்லின்மேல் எழுத்துப்போல் விளங்க-வில்லையா என்று கேட்கிறோம்.

ஆகவே சுயநல வகுப்பார்களும் வகுப்புவாதி-களும் யார் என்று காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதாரைக் கேட்கின்றோம்.

(‘குடிஅரசு’ 26.07.1936)

ஆதிதிராவிடர் மகாநாடென்று ஒரு மகாநாடு அவசியமா? என்று பல தேச பக்தர்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். அதாவது ஆதிதிராவிடர் என்று ஒரு மனித சமூகம் இருக்க வேண்டியது அவசியமா என்று கேட்கிறேன்.

ஆதிதிராவிட மகாநாடு வேண்டியதில்லை என்று செல்லும் இந்த யேக்கியர்கள் “ஆதிதிராவிடர் என்ற ஒரு சமூகம் இருப்பதாக கதைகளில் கூட யாரும் குறிப்பிடக் கூடாது” என்று எங்காவது சட்டம் செய்தார்களா? எந்தக் கூட்டத்திலாவது தீர்மானம் கெண்டு வந்தார்களா? எந்த ஸ்தாபனத்திலாவது இதை கெள்கையாக புகுத்தினார்களா? என்று கேட்கின்றேன்.

அன்றியும், இப்படிக் கேட்கும் இந்த “தேசபக்தர்களே” பார்ப்பன மகாநாடு, ஆரியர் மகாநாடு, வர்ணாச்சிரமதர்ம மகாநாடு, பிராமண சம்மேளனம் என்றெல்லாம் கூட்டுகிறார்களா இல்லையா? மற்றும் இதுபேன்ற பல ஜாதி மத வகுப்பு மகாநாடுகள் நடப்பதில் கலந்து கெள்ளுகிறார்களா இல்லையா? அப்படியிருக்க ஆதி திராவிட மகாநாடு மாத்திரம் எப்படி அவசியமற்றதாக ஆகிவிடும்?

ஆதிதிராவிட மகாநாடு என்று செல்வதா-லேயே வகுப்பு பிரிவினையும் வகுப்பு உணர்ச்சியும் ஏற்படுகின்றது என்று சிலர் செல்லுகிறார்கள். இந்த யேக்கியர்களுக்கு “பிராமணாள் காப்பி கிளப்பு” “பிராமணாள் ஓட்டல்” “பிராமணர்களுக்கு – பிராமணர்கள் அல்லாதாருக்கு” “இதுவரை பிராமணர் போகலாம், இதுவரையில்தான் மற்றவர்கள் போகலாம்” என்றெல்லாம் விளக்கி பெரிய பெரிய கொட்டை எழுத்தில் கேவிலிலும் தெருவிலும் கிணற்றிலும் எழுதி தெங்கவிட்டு இருப்பதைப் பார்க்கும்பேது அதில் வகுப்புப்-பிரிவும் வகுப்பு உணர்ச்சியும் உண்டாவ-தில்லையா? என்று கேட்கின்றேன். வேறு பல மகாநாடு கூடி ஜாதிபேதமும் உயர்வுதாழ்வும் இருக்க வேண்டும் என்று போர்டு போட்டு, கீழ்ஜாதி_மேல் ஜாதிக்கென்று பிரித்துக்-காட்டியும் நடத்தப்படுகிற கூட்டங்கள், செய்கைகள் ஆகியவைகளை விட ஜாதி பேதம் ஒழிய வேண்டும், ஜாதி உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாதென்று பேசுவதற்கும் தீர்மானிப்பதற்கும் ஒரு மகாநாடு கூட்டினால் அதனால் எந்த தேசீயமும் கெட்டுப் போகாது என்று அவர்களுக்கு உறுதி கூறுகிறேன்.

ஜாதிபேதம் ஒழிவதாலும், மேல்ஜாதி கீழ்ஜாதி ஒழிவதாலும் ஒழியவேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசீயம் கெட்டுப் போகுமானால் – சுயராஜ்யம் வருவது தடை-பட்டுப் பேகுமானால் அப்படிப்பட்ட தேசீயமும் சுயராஜ்யமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல் என்று செல்லுவேன்.

அன்றியும், யாருக்கு வகுப்பு மகாநாடு இருந்தாலும் இல்லா விட்டாலும் ஆதிதிராவிடர்கள் என்கின்ற உங்களுக்கு ஒரு வகுப்பு மகாநாடு மிகமிக அவசியமாகும். ஏனெனில் நீங்கள்தான் இன்று இந்தியாவில் அதிகமான தீண்டக்கூடாத ஜாதியாய் இருக்கிறீர்கள். உங்களைத் தீண்டக்கூடாது என்றும், நீங்கள் கீழ்ஜாதி என்றும் செல்லி நிலைநிறுத்த கூட்டப்படும் மகாநாடுகள் நடக்கும்பேது நீங்கள் அவசியம் இம்மாதிரி ஆதிதிராவிட சமூக மகாநாடுகள் தினம் தினம் கிராமந்தேறும் வீதிதேறும் கூட்டி ஆகவேண்டும்.

இன்று இந்தியாவில் – நம் நாட்டில் ஏதாவது கடுகளவு முற்போக்காவது எந்தத் துறையிலாவது ஏற்பட்டிருக்குமானால், அது இப்படிப்பட்ட சமூக மகாநாடுகள் கூட்டி தங்கள் தங்கள் சமூக குறைகளைச் சொல்லி, பேசி அவைகளுக்கு பரிகார மார்க்கம் தேடியதினாலேயே ஏற்பட்ட முற்போக்காகும்.

ஆகையால், இதை யாரும் வகுப்புவாதம் என்று செல்ல முடியாது. முற்போக்கு வாதம் என்றுதான் யோக்கியர்கள் சொல்லுவார்கள். இந்தியாவின் மதமும் அரசியலும் பெருளாதாரமும் சமூக வாழ்வும் வகுப்பு பேதத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்து வருகிறது. அதனாலேயேதான் சமூகத்தில் சிலர் மேலாகவும் பலர் கீழாகவும் வாழவேண்டியிருப்பதுடன் மக்களுக்கு இவ்விஷயத்தில் சுயமரியாதை உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. வகுப்புபேதமே தான் இந்த நாட்டில் அந்நியர்கள் என்பவர்களுக்கு அரசும் ஆக்கமும் கொடுத்ததே அல்லாமல் இந்த நாட்டு பழங்குடி மக்களுக்கு பலமில்லாததால் அல்ல என்று நான் உறுதியாகச் சொல்லுவேன்.

நாம் ஏதே ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறை கூறுவதற்காக இம்மகாநாடு கூட்டினதாகவும், யாரையோ குறை கூறுவதாகவும் சிலர் பிதற்றுகிறார்கள். நாம் யாவரையும் குறைகூறவில்லை. நம்மைக் குறை கூறுகிறவர்களை வன்மையாய் கண்டித்து புத்தி கற்பிப்பதற்கு ஆகவே கூடி இருக்கின்றோம். “பல நாளாய் இருந்து வரும் கொடுமை நிதானமாகத்தான் போகும், அவசரப்படலாமா?” என்று சிலர் பேசுகிறார்கள். பலநாளாய் இருந்து வரும் கொடுமையை பலநாளாகவே நம் முன்னேர்கள் ஒழிக்கப் பாடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் மொண்ணைக் கத்தியின் மூலம் இந்தக் கொடுமை விருட்சத்தை வெட்ட முயற்சி செய்ததால் அம்மரம் இதுவரை வீழ்த்தப்படவில்லை. அது பலநாளாக வளர்ந்து நன்றாக சேகு ஏறி நட்டத்தில் நிற்பதால் நல்ல சொணை உள்ள _ பதம் உள்ள பாரமான கோடாலியால் வெட்டித்தள்ள வேண்டிய அவசியத்துக்கு வந்து விட்டோம். சிறு சிரங்காய் இருந்தால் ஏதாவது ஒரு களிம்பு துடைத்துவிடலாம். பெரிய சிலந்தி புற்று மாதிரி எழுந்து உடல் சதையை அழுகச்செய்து இரத்தத்தை சீழ் ஆக்குகிறது. ஆதலால் நன்றாய் அறுத்து கரண்டிபேட்டு சீவி காரமுள்ள மருந்து போட்டு கட்டவேண்டியதாகிறது. இதை குற்றம் என்றோ, அவசரம் என்றே யாராவது சென்னால் நம்மால் ஒப்புக்கெள்ள முடியாது.

(ஆம்பூரில் 4.7.1937இல் நடைபெற்ற ஆர்க்காடு மாவட்ட முதலாவது ஆதி திராவிடர் மாநாட்டில் உரை, ‘குடிஅரசு’ 18.7.1937)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *