‘தேசப்பிதா’ என்றழைக்கப்படும் அண்ணல் காந்தியடிகளுக்கு இது 150ஆம் ஆண்டு.
கொன்றவன் யார்?
125 வயது வரை வாழ, தொண்டு செய்ய விரும்பியவர் காந்தியார்! ஆனால், அவர் 1948 ஜனவரி 30 ஆம் தேதி (70 ஆண்டுகளுக்குமுன்) மதவெறியனான நாதுராம் வினாயக் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனரால் (தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவராகி, சுடுவதற்கு கொஞ்ச காலம் முன்பு இந்து மகாசபை’ உறுப்பினராக இருந்தவன் கோட்சே!) சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியதாகும்!
அமைதி காத்த பெரியாரின் வானொலி உரை
காந்தியார் கொலையை அன்று திசை திருப்பி ‘காந்தியைக் கொன்றவன் முசுலீம்’ என்ற ஒரு வதந்தியை திட்டமிட்டே பரப்பி, முசுலீம்கள் பெரிதும் வாழும் ஆம்பூர், வாணியம்பாடி, ஈரோடு, திருவண்ணாமலை போன்ற ஊர்களில் மதக் கலவரங்களைக் கிளப்பி விட்டு, பலரும் தாக்கப்பட்டதைத் தடுக்க, தந்தை பெரியார் அவர்களை வானொலிமூலம் அமைதி காக்க அறிவுரை கூறுமாறு அன்றைய முதலமைச்சர் ஒழுக்க சீலர் ஓமாந்தூர் ஓ.பி.இராமசாமி (ரெட்டியார்) கேட்டுக்கொண்டதை ஏற்று, திருச்சி வானொலியில் பேசினார். அமைதி திரும்பிட அது முக்கிய காரணமாக அமைந்தது!
காந்தியைச் சுட்டுக் கொன்றவர் மராத்திப் பார்ப்பனராகிய கோட்சே என்ற செய்தி கேட்டு, மகராஷ்டிர மாநிலத்தில் பல அக்கிரகாரங்கள் சூறையாடப்பட்டு, பல பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர்! ஆனால், பார்ப்பனரல்லாதார் இயக்கமாகி, சுயமரியாதை இயக்கம் செழித்த திராவிட மண்ணில் அப்படி அக்கிரகாரத்தை நோக்கி வன்முறை வெடிக்கவில்லை; அதற்குக் காரணம் தந்தை பெரியார் என்ற மாமனிதர்தான்!
தமிழ்நாடு அமைதி காத்தது எப்படி?
பல ஊர்களில் ஆத்திரப்பட்டுப் பேசியவர்களைக்கூட, கலைஞர் போன்ற அன்றைய இளைஞர்களின் ஆவேசப் பேச்சுகளைக்கூட கண்டித்துத் தடுத்து, சுட்டவன் பார்ப்பனன் என்று கூறுவதை அதற்குக் காரணமாக அமைந்த மூலம் எது _ அது மதவெறி அல்லவா? அதையெதிர்த்தல்லவா போராடவேண்டும்” என்று கேட்டு (நன்னிலம் அருகில் உள்ள சன்னாசி நல்லூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது), சுட்டது துப்பாக்கிக் குண்டுகள் _ அத்துப்பாக்கியையோ, குண்டுகளையோ தண்டிப்பது சரியா? மாறாக, அதைப் பிடித்த கை _ அதற்குப் பின்னால் ஒளிந்துள்ள சதிவலை இவைகளைப்பற்றி ஆராய்ந்து, அவைகளை மதவெறியை வேரோடும், வேரடி மண்ணோடும் கெல்லி எறியவேண்டும் என்று முயற்சிப்பதுதானே அறிவுடைமை” என்று பேசினார்.
தந்தை பெரியாரின் இரங்கல் செய்தி!
“காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது!
இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது.
இந்தியாவும் பதறி இருக்கும். மதமும், வைதிகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டு கோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் பலமான சதி முயற்சி இருந்தே இருக்கவேண்டும்.
இது மிகமிக வெறுக்கத்தக்கக் காரியமாகும். இவரது காலி ஸ்தானம் (காந்தியின் இழப்பு) எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல், மத இயல், கருத்து வேற்றுமையும், கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்ளுவதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்.
– ஈ.வெ.ரா., ‘குடிஅரசு’ அறிக்கை, 31.1.1948
எவ்வளவு பொறுப்பு வாய்ந்த, பொறுமை பூண்டு, நாட்டைக் கலவர பூமியாகாமல் தடுத்த, தொலை நோக்குடன் கூடிய உண்மைகளை உலாவரச் செய்த, உலகத்திற்கே போதனை செய்த அறிக்கை அந்த சில வரிகளில் பொதிந்துள்ளதல்லவா?
அவர்தாம் பெரியார் _ பார்!
பெரியாரைப் பொறுத்தவரை அவரது தலைவர் 1921 முதல் 1925 வரை காந்தியாரே!
காந்தியாரைப் பெரியார் எதிர்த்ததும் – ஆதரித்ததும்!
காந்தியாரது வர்ணாசிரம நம்பிக்கையும், பார்ப்பன சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு வக்காலத்து வாங்குவதன் தன்மையும் காந்தியாரை பெரியார் கடுமையாக விமர்சிக்கக் காரணங்களாக அன்று அமைந்தன!
ஆனால், காந்தியார் மறைவதற்குமுன் மதச்சார்பின்மை, சமூகநீதி என்ற வகுப்புரிமை இவைகளையெல்லாம்பற்றி தெளிவுபெற்று ஆதரிக்கத் தொடங்கியதால், பார்ப்பனியம் அவரை விட்டு வைக்க விரும்பவில்லை என்பதே மறுக்க முடியாத ஆதாரபூர்வ உண்மையாகும்!
அதனால், நான் முன்பு எதிர்த்த காந்தி வேறு; மறையும்முன் மாறிய காந்தி வேறு” என்று கூறிய தோடு, இந்நாட்டிற்கு காந்தி நாடு _ இந்து மதம் என்றெல்லாம் தனித்தனி மதங்களுக்குப்பதில், காந்தி மதம் என்றுகூட உருவாக்கி, ஒற்றுமையுடன் ஓரணியில் திரளுவோம்” என்றார் பெரியார்!
பெரியாரைப் புரியாதோர் சிலர் ஆகா, இவர் மாறிவிட்டார்! தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்’ என்று அன்று அரைவேக்காட்டு விமர்சனத்தை வைத்தனர்!
அறிவு நாணயத்துடன் எதையும் கூறும் தந்தை பெரியார், மாற்றம் அடைந்தது காந்தியார்; அதற்காக அவரை பலி கொண்டது பார்ப்பனியம் என்று கூறியதில் எது தவறானது?
மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!
150 ஆம் ஆண்டு பிறந்த நாளில், காந்தியார் படத்திற்கு மாலை; சிலைகளுக்கு மாலை என்பதைவிட, எதற்காக காந்தியார் ரத்தம் சிந்தி, உயிரைப் பலி கொடுத்தாரோ, அந்த மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தைக் காப்பதும் அவரது சீலங்களை மதித்து நடப்பதும்தான் அவருக்குச் சூட்டப்படும் மாலைகளில் வாடாத மாலையாகும்!
– கி.வீரமணி
ஆசிரியர்,
‘உண்மை’