‘உரிமை காவலர்’

Uncategorized

கான்சிராம்

பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்றுவித்த கான்சிராம் வடநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராய் விளங்கியவர்.

மத்திய அரசில் பணி புரிந்த இவர் அரசுப் பதவியை உதறித் தள்ளிவிட்டு, 1981ஆம் ஆண்டில் சோஷித் சமாஜ் சங்கர்ஸ் ஸமிதி என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கினார். அதுதான் பிற்காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியாகப் பரிணாமம் பெற்றது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மையான வெகு மக்கள்! அவர்களின் கைகளில்தான் நாட்டின் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் அடிநாதம்!

இந்தக் கொள்கையைப் பரப்புரை செய்வதற்காக இந்தியா முழுமையும் சைக்கிள் பேரணியை நடத்தினார். கோசிமா, கார்கிஸ், பூரி, போர்பந்தர் ஆகிய இடங்களிலிருந்து இத்தகைய சைக்கிள் பேரணிகள் நடத்தப்பட்டதுண்டு.

1988இல் தந்தை பெரியார் பிறந்த நாளில் (செப்டம்பர் 17இல்) குமரிமுனையிலிருந்து புறப்பட்ட அந்த சைக்கிள் பயணத்தை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி உத்தரப்பிரதேசத்தின் தலைநகரமான லக்னோவில் மூன்று நாட்கள் பெரியார் மேளாவை மண்ணும், விண்ணும் துகள்கிளப்ப நடத்திக் காட்டி – இந்தியாவையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க செய்தார்.

தமிழ்நாட்டிலிருந்து தனி ரயில் மூலம் லக்னோ சென்று திராவிடர் கழகக் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இந்த அதிர்விலிருந்து மக்களைத் திசை திருப்பிட ஆர்.எஸ்.எஸின் பின்னணியில் ஆயுத வியாபாரி சந்தராசாமியின் ஏற்பாட்டில் பிள்ளையார் பால் குடித்தார் என்ற ஒரு கட்டுக் கதையை நாடெங்கும் பரப்பினார்கள்.

பெரியாருக்கு ஏன் விழா என்று செய்தியாளர்கள் கான்ஷிராம் அவர்களிடம் கேட்டனர் (லக்னோ 17.9.1995).

அவர் தமது பதிலில் “மகாத்மா பாபூலே, சாகு மகராஜ், நாராயணகுரு, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்த்துப் பாடுபட்டார்கள். ஆனால் பெரியார் ராமசாமி அவர்களால்தான் பார்ப்பன ஆதிக்கம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்தித்தது” என்று கூறினாரே!

திராவிடர் கழக மாநாடுகளில் முழங்கியவர். அவரது உரையை திராவிடர் கழகம் “இமயத்தில் பெரியார்’’ எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டது.

“மனுவாதிகளை செருப்பாலடியுங்கள்’’ என்பதுதான் பி.எஸ்.பி.யின் முழக்கமாக இருந்தது. சாதிய அமைப்பு முறையை ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார் என்று ஆர்.எஸ்.எஸின் ஆலோசகரான திருவாளர் எஸ். குருமூர்த்தி ‘தினமணி’யில் (17.5.2007) எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *