நூல்: ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே
அவர் பெரியாரா?
ஆசிரியர் : ப.திருமாவேலன்
வெளியீடு : நற்றினை பதிப்பகம்,6/84, மல்லன் பொன்னப்பன் தெரு, திருவல்லிக்கேணி,
சென்னனை – 600005.
தொலைபேசி: 044 – 28482818
மின்னஞ்சல்: natrinaipathippagam@gmail.com
கிடைக்குமிடம் : பெரியார் புத்தக நிலையம்,
சென்னை – 600007.
போன் : 044 – 2661 8163
பக்கம் : 382 விலை: ரூ.300/-
நான் யார்?
என்ன சொல்கிறார்கள் இவர்கள்?
பெரியார் சமூக சீர்திருத்தவாதி இல்லையாம், சமூக சீர்திருத்தவாதியாக ஆக முயற்சித்தவராம். அவரை மாமனிதராக ஏற்க மாட்டாராம் ஒருவர். மனிதராகவே ஏற்க மாட்டாராம் இன்னொருவர். பொறாமை கொண்டவர் என்கிறார் மற்றொருவர். அடுத்தவர் அறிவைத் திருடியவர் என்றும் சொல்கிறார்கள். அவரிடம் சாதிப் புத்திதான் இருந்தது என்றும், அதுவே அவரிடம் எல்லா சூழலிலும் வெளிப்பட்டது என்றும் எழுதுகிறார்கள். ஒரு ஜமீன்தார், சாதி செல்வாக்கால் ‘பெரியார்’ ஆக்கப்பட்டார் என்கிறார்கள். உண்மையில் ‘பெரியார்’ யார்?
இதோ அவரது வாக்குமூலங்கள்…
1. ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன்.
சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்.
2. மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும் மக்களைப் பகுத்தறிவு வாதிகளாக ஆக்க வேண்டுமென்பதிலும் எனக்கு 1925_ஆம் ஆண்டு முதல் உறுதியான எண்ணமும் ஆசையும் உண்டு. இதற்குக் காரணம், ஆத்திகத்தினால் (கடவுள், மத நம்பிக்கை ஆதிக்கத்தால்) தான் இந்த நாட்டில் சாதி (பார்ப்பான் ‘பிராமணனாய்’ வாழ்வதும்) அரசியல், மத ஆதிக்கத்தில் பார்ப்பான் இருந்து கொண்டு சமுதாய வளர்ச்சியையும், அறிவு (விஞ்ஞான) வளர்ச்சியையும் தடை செய்து கொண்டு இருக்கிறான் என்பதும் எனது உறுதியான எண்ணம். நான் எந்த ஸ்தாபனம் வைத்திருந்தாலும் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் யாரோடு சேர்ந்தாலும் யாரை விரோதித்தாலும் அவற்றிற்கெல்லாம் இதுவே காரணம். (17.9.1967)
3. நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது, சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். சாதி அமைப்பு என்பது ‘கடவுள், மதம்’ மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகிறவன்.
4. உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இவற்றில் எது மீதி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது. ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். (17.9.1971)
5. நான் எந்த மதத்திற்கும் விரோதிதான். மதங்கள் இந்த நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும். அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கருத்துடையவன். இதை நான் 1926இல் சொல்லியிருக்கிறேன். ‘குடிஅரசில்’ எழுதியிருக்கிறேன். 1926இல் ‘நான் இந்துவாய் இறக்கப் போவதில்லை’ என்று கூட்டத்தில் சபதம் செய்துமிருக்கிறேன். 1922இல் நான் இந்துமத சாஸ்திரங்களைக் கொளுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேடையிலேயே பேசினேன். 1927இல் மனுதர்மம் முதலிய சாஸ்திரங்களைக் கொளுத்தினேன். (31.5.1936)
6. … இப்படிப் பார்ப்பனர்களும் பார்ப்பனர்களின் கூலிகளும், காலிகளும் கல்லெறிவதோ காலித்தனம் செய்வதோ என் பொது வாழ்வில் புதிதல்லவே! இங்கு கூட்டத்தில் ஓர் மூலையில் கல் போட்டான். தோழர்களே! நான் கல்லடி வாங்கி இருக்கிறேன்! அழுகிய முட்டையால் அடிப்பார்கள்! மலத்தை வாரி அடிப்பார்கள்! இதுகள் என்ன… செருப்படியே வாங்கியிருக்கிறேன். (1.2.1973)
7. எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்பமாகும். கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்பதோடு இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்களும் எழுதி வைத்திருக்கிறார்கள் என்ற போதிலும் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும் தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன். காரணம், என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படையிலேயே நான் கை வைப்பதனால்தான். (31.12.1994)
8. நான் செய்துவந்த தொண்டும் செய்து வருகின்ற தொண்டும் நீங்கள் அறிந்ததேயாகும். அத்தொண்டு யாருக்காக என்பதும் அதனால் நான் ஏதாவது நன்மை, சுயநலம், அடைந்தேனா என்பதும் உங்களுக்குத் தெரியும். எனது நலத்தை, செல்வத்தை, செல்வாக்கை, பொதுநலத் தொண்டுக்குக் கொடுத்தேனா அல்லது எனது பொதுநலத் தொண்டால் எனது நலத்தை, செல்வாக்கைக் பெருக்கிக் கொண்டேனா என்பதும் உங்களுக்குத் தெரியும். (19.7.1972)
9. இராஜாஜி அவர்களும், இரு கவர்னர்களும், இரு கவர்னர் ஜெனரல்களும் வேண்டியும் கேட்டுக் கொண்டும் மந்திரிப் பதவியை வெறுத்தவன் நான். தவிர, எந்தப் பதவியையும் நான் விரும்பியவன் அல்லன்.
10. ஜஸ்டிஸ் கட்சியை நான் ஆதரிப்பதைக் கண்டு நீங்கள் வயிற்றெரிச்சல் படுவதில் பயனொன்றுமில்லை. அது தைரியமாய் வகுப்பு நியாயத்தையும், வகுப்பு உத்தியோகங்களையும், உயர்வு தாழ்வுகளையும் ஒழிக்கச் சட்டம் செய்வதையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அமல்படுத்துவதையும் கொள்கையாய்க் கொண்டு வேலை செய்து வருகின்றது. அதன் பயனாய் இன்று இந்த நாட்டில் எல்லாச் சாதியினரும் உத்தியோகம் அனுபவிக்கிறார்கள். (‘பகுத்தறிவு’ – 21.10.1934)
11. மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும், சகோதரத்துவமும் தோன்ற வேண்டும். ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் அகல வேண்டும். உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும் எண்ணம் உதிக்க வேண்டும். வகுப்புச் சண்டைகள் மறைய வேண்டும். மேற்சொன்ன கொள்கைகளைப் பரவச் செய்வதற்காக நாம் உழைக்கும் காலத்தில் நம்மைத் தாக்குபவர்களுடைய வார்த்தைகளையாவது செய்கைகளையாவது நாம் சிறிதளவும் பயமின்றி, சிநேகிதர் _ விரோதி என்கிற வித்தியாசமில்லாமல் யாவரையும் கண்டிக்க நாம் பயப்படப் போவதில்லை. (‘குடிஅரசு’ – 9.4.1933)
12. நமக்கு இரத்தத்தைப் பற்றித்தான் கவலை. வேற்றுமையில்லாத மனித சமுதாயம் வேண்டுமென்பதுதான் நமது குறிக்கோளே ஒழிய, வேற்றுமை பாராட்டி யாரையேனும் ஒதுக்கி வைக்க வேண்டுமென்பதல்ல நமது குறிக்கோள். (‘விடுதலை’ – 5.10.1948)
13. திராவிடர் கழகம் என்னுடைய தலைமைக்கு வந்தபிறகு நான் துணிவாகவே மூன்று கொள்கைகளைச் சொல்லிக்கொண்டு வந்து இருக்கின்றேன்.
முதலாவது கொள்கை, இந்த நாட்டிலே இருக்கிற மனித சமுதாயத்திலே உள்ள உயர்வு தாழ்வு, அதற்கு ஆதாரமான வருணாசிரம தர்மம், அதை ஆதரிக்கின்ற மதம், சாஸ்திரம், புராணங்கள், இவைகளினால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஆகியவை ஒழிய வேண்டும் என்பது முதல் கொள்கையாகும்.
இரண்டாவது கொள்கை, எங்களுடைய நாடு விடுதலை அடைய வேண்டும் என்பதுதான்.
மூன்றாவதாக, இந்த இரண்டு காரியமும் ஆகிறவரையில் நம்முடைய சமுதாயத்திலே வருணாசிரம முறைப்படி வகுத்துள்ள வகுப்பு மக்கள் (பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர்) விகிதப்படி வகுப்பு உரிமை தரப்பட வேண்டும். நாம் இப்பொழுது சர்க்கார் கணக்குப்படி இந்துக்கள் என்ற கூட்டத்திலே மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறோம்.
இந்த மூன்றையும் வைத்துக் கொண்டாலும் சரி, பார்பப்னர் அல்லாதார் யாவரும் ஒன்றே என்று வைத்துக் கொண்டாலும் சரி, அவரவர்களுடைய விகிதாச்சாரப்படி அவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும். பார்ப்பனர்கள் அவர்கள் எண்ணிக்கைப்படி 100க்கு இரண்டே முக்கால் எடுத்துக் கொள்ளட்டும். எங்களுக்கு மீதி விகிதாச்சாரப்படி _ கிட்டத்தட்ட 75, 80 சதவிகிதம் கொடுத்துவிட வேண்டும். பஞ்சமர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் சுமார் 15 விகிதம் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிரித்து, அந்த விகிதப்படிக்கே கொடுத்துவிட வேண்டும். அந்தந்த சாதியை எடுத்துக் கொண்டாலும் நாம் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. அந்தப்படியான நிலைமை நமக்கு ஏற்பட வேண்டும்.
நமக்கு ஆகவேண்டியது எல்லாம் இந்த மூன்று கொள்கைகள் வெற்றியடைய வேண்டுமென்பதேயாகும். (‘விடுதலை’- 1.3.1951)
14. சாதி ஒழிப்புக்காக நமது கழகம் ஏன் அகில இந்திய ரீதியில் பாடுபடக் கூடாது என்று கேட்கப்படுகிறது. அகில இந்திய ரீதியில் சாதி ஒழிப்பு என்பது சுலபத்தில் சாத்தியமாயிராது. ஏனெனில் நம்மவர்களைப் போல் பெரும்பாலோருக்குள்ள மான உணர்ச்சி வடநாட்டவருக்கு இல்லை. அவர்கள் யாரும் சூத்திரன் என்பதற்காகவோ, பஞ்சமன் என்பதற்காகவோ, தாசிமகன் என்பதற்காகவோ வெட்கப்படுவது இல்லை. இந்து மதத்தை அவர்கள் நம்மைப் போல் வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. மாறாக அதைப் பெருமையாகவே கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்நாட்டு மக்களோ ஆதிகாலந்தொட்டே சாதி பேதங்களை _ வருணாசிரம தர்மத்தை எதிர்த்திருக்கிறார்கள். எனவே, சாதி ஒழிப்பு நம் நாட்டில் சாத்தியமாயிருப்பது போல் வடநாட்டில் சாத்தியமாயிராது. எந்தச் சீர்திருத்தக் கருத்தும் வடநாட்டவருக்குச் சுலபத்தில் புரியவும் புரியாது. எனவேதான், தோழர் அம்பேத்கர் அவர்களால் கொண்டு வரப்படும் ‘இந்துச் சட்ட மசோதா’ அங்கு பலமான எதிர்ப்புக்குள்ளாக வேண்டி இருக்கிறது. இதை எல்லாம் உணர்ந்துதான், நாம் நம் கழக முயற்சியை நம் திராவிட நாட்டோடு நிறுத்திக் கொண்டிருக்கிறோம். (‘விடுதலை’ – 22.2.1950)
15. எனது கவலை, இலட்சியம் யாதெனில் அன்னியன் என்றால் வெள்ளையன், பனியா, மூல்தானி, மார்வாடி, காஷ்மீரி, குஜராத்தி ஆகிய இவர்கள் ஆதிக்கத்திலிருந்து அதாவது ஆரிய ஆதிக்கத்திலிருந்து விலகுவதும், பிரிட்டிஷ்காரன், அமெரிக்கன், ரஷ்யன் மேற்கண்ட மார்வாடி, பனியா, பார்ப்பனன், மேல்லோகத்தான் என்பவன் எவனும் நம்மைச் சுரண்டக் கூடாது என்பதும் ஆகும்.
16. பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் நானும் நெடு நாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல, பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். (‘விடுதலை’ – 22.2.1959)
17. என்னைப் பொறுத்தவரையில் என்னைப் பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டிருந்தபோதிலும் எனது முடிவான இலட்சியம் _ அதாவது எனது எண்ணம் ஈடேறுமானால் அது உச்ச ஸ்தானம் பெற்ற உயரிய கூட்டுறவு வாழ்க்கை முறையாகத்தானிருக்கும். (‘குடிஅரசு’ _ 12.11.1933)
18. நான் ஒரு உண்மைச் சமதர்மவாதியென்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். (‘விடுதலை’ – 15.12.1969)
19. என் வாழ்நாளில் தமிழர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகிற காட்டுமிராண்டித்தனமான ‘கடவுள் _ சமய’ப் பற்றும் பெரும் அளவுக்கு இருந்துவரும் ‘இழிநிலை’யும் ஆகியவைகளில் கடுகளவாவது குறைந்தாலும் நான் வெற்றி பெற்றவனாவேன். (‘விடுதலை’ – 30.7.1956)
20. என் ‘பொதுநலக் கிளர்ச்சி வியாபாரம்’ எல்லாம் ‘குறைந்த செலவில்’ (தியாகத்தில்) பொது இலாபம் (வெற்றி) என்ற கொள்கையைக் கொண்டது. (‘விடுதலை’ – 2.8.1956)
21. எனது சமுதாயத் தொண்டின் முதலானதும் முக்கியமானதுமான சாதி ஒழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் சாதியைக் காப்பாற்றப் பிறந்து, சாதியைக் காப்பற்றிவிட்டுச் செத்ததேயாகும். (‘விடுதலை’ – 4.8.1956)
22. என் பிறவி காரணமாக என் இன இழிவுக்குக் காரணமாக இருக்கும் சாதியை ஒழிப்பதும் என் இன மக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடைய தாய்நாடான தமிழ்நாட்டைப் பனியா _ பார்ப்பனர்களின் அடிமைத் தளைகளிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழவைக்க வழி செய்வதுமான தனித் தமிழ்நாடு பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும். (‘விடுதலை’ – 15.12.1957)
23. ஓய்வு ஒழிச்சல் இன்றி, சோம்பல் கழிப்பிணித்தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுதல்கள், தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு எனக்குச் சரி என்று பட்டதையும் தேவை என்று பட்டதையும் செய்தேன். அதுவும் ஒளிவுமறைவு இல்லாமல் செய்துவந்தேன். வாழ்வில், செயலில் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனாலும் அதையே ஒரு படிப்பினையாகக் கொண்டு முயற்சியில் சளைக்காமல் நடந்துகொண்டுதான் வருகிறேன். நான் ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும், அநாவசியமான மனிதனாய் இருந்துவரவில்லை என்பதும் எனக்கு ஒரு ஆறுதல் தரத்தக்க விஷயமாய் இருந்து வருகிறது. (பிறந்த நாள் மலர்: 17.9.1964)
24. எனக்கேதாவது குறை, கவலை இருக்குமானால் அது மக்களிடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும் எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான். (பிறந்த நாள் மலர்: 17.9.1966)
25. என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமையுண்டு ஆனால் என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு. (தமிழர் தலைவர்: பக். 21)
26. திராவிடர்களிடையே எனக்குக் கெட்ட பேர் வளர்கிறது என்று கூடச் சிலர் சொன்னார்கள். உணர்ச்சிக்கு இடமில்லாத, மானத்தைப் பற்றிக் கவலைப்படாத, திராவிட மக்களிடையில் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற கவலை எனக்குச் சிறிதுமில்லை. அப்படிப் போலி நல்ல பெயரின் மீது என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை. திராவிட மக்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும்; அதில் முதன்மையாய் இழிவு நீங்க வேண்டும் என்கிற ஆசையும் கவலையும் தவிர, வேறு ஒன்றுமே எனக்குக் கவலையாக இல்லை. எனக்கு வேறு அடைய வேண்டிய சாதனமும் இல்லை. இன்று திராவிடனுக்கு உள்ள இழிவு என்னவென்றால் அவன் சூத்திரனாயிருக்க வேண்டியிருக்கும். ‘இந்து’வாக இருப்பதைத் தவிர வேறில்லை. (தமிழர் தலைவர்: பக். 22)
27. இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என் மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள். பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மானவாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண்டிருப்பதால், எனக்கு எக்கேடு வருவதானாலும் மனக்குறையின்றி, நிறைமனதுடன் அனுபவிப்பேன் _ சாவேன் என்பதை உண்மையாய் வேளியிடுகிறேன். (தமிழர் தலைவர்: பக்.22)
28. சூத்திரன் என்கிற பட்டம் இழிவு என்று கருதுகிறவர்களுக்குத்தான் நான் இந்த யோசனை சொல்கிறேனே ஒழிய, சூத்திரப் பட்டத்தைப் பற்றிக் கவலையில்லை என்பவர்களுக்கு இதைச் சொல்லவில்லை. (தமிழர் தலைவர்: பக்.26)
29. வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்லுவார்கள்; 1.றிலீஹ்sவீநீவீணீஸீ’s நீuக்ஷீமீ, 2.ஷிuக்ஷீரீமீஷீஸீ’s நீuக்ஷீமீ. அதாவது, மருந்து கொடுத்து வியாதியைக் குணப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து, நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை.
என்னைப் பொறுத்தவரையில் நான், நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல.
நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக் கூடாது என்று கருதி, அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன். எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டும் என்பதுதான்.
நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல, 2000, 3000 வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டும் என்றால் சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். (தமிழர் தலைவர்: பக்.26)
30. நான் ஏன் எவனையும் மனுசனாகக் கருதுவதில்லை என்னைத் தவிர, எவன் நமக்காகப் பாடுபட்டான்? எவன் நான் சூத்திரனாக, தேவடியாள் மகனாக இருக்கிறேன், நாலாஞ்சாதியாக இருக்கிறேன்னு எவன் வெட்கப்பட்டான்? சொல்லுங்க. (17.9.1968 – பெரியார் சிந்தனைத் திரட்டு – 2, பக்.34)
31. எனக்கு என்னுடைய நாட்டை எவன் ஆண்டாளும் சரி, நான் எழுதினேனே, பாகிஸ்தான் நம்மை ஆண்டாளும் சரி வரவேற்கிறேன்னு. ஆனா ஜாதி ஒழியணும். நான் மனுஷனாகணும். அவ்வளவுதான். (1.12.1968 – பெரியார் சிந்தனைத் திரட்டு – 2, பக்.93)
32. எதிரியை அடக்கணும், அவனை ஒழிக்கணும் என்றால் நாம் அவனை வெறுக்கணும். கூண்டோடு நம்மை அவன் ஒழித்தாலும் சரியென்று துணிந்து இறங்கினால்தானே அவன் பயப்படுவான். (‘விடுதலை’ – 27.1.1954)
33. இந்த இயக்கமானது இன்றைய தினம் பார்ப்பனரையும், மதத்தையும், சாமியையும், பண்டிதர்களையும் எடுத்துக்காட்டிக் கொண்டு மக்களைப் பரிகாசம் செய்து கொண்டிருப்பது போலவே என்றைக்கும் இருக்குமென்றோ, அல்லது இவைகள் ஒழிந்தவுடன் இவ்வியக்கத்திற்கு வேலையில்லாமல் போயிடுமென்றோ யாரும் கருதிவிடக் கூடாது.
மேற்சொன்னவைகளின் ஆதிக்கங்கள் ஒழிவதோடு, ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறது என்கிற தன்மை இருக்கும் வரையிலும், ஒருவன் தினம் ஒருவேளைக் கஞ்சிக்கு வழியின்றிப் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் 5 வேளை சாப்பிட்டுவிட்டு வயிற்றைத் தடவிக் கொண்டு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிறதுமான தன்மை இருக்கின்ற வரையிலும், ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல் திண்டாடுவதும் மற்றொருவன் வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதான தன்மை இருக்கின்ற வரையிலும், பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுவதையும் தங்களது சுயவாழ்வுக்கே என்று எண்ணிக் கொண்டிருக்கிற வரையிலும் சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும். மேற்கண்ட தன்மைகள் ஒழியும் வரை இவ்வியக்கத்தையும் ஒழிக்க யாராலும் முடியாது. (‘குடிஅரசு’ – 9.1.1927)
33. நான் பிறக்கிறதற்கு முன்னேயே தேவடியாள் மக்கள் நீங்கள்; நான் பிறக்கிறதற்கு முன்னேயே சூத்திரர்கள் நீங்கள் _ நான்காவது சாதி நீங்கள். இப்போது நாளைக்குச் சாகப் போகிறேன் _ சூத்திரனாய் விட்டுவிட்டுத்தானே சாகிறேன்? அப்புறம் என்ன என்னுடைய தொண்டு? சிந்திக்கணும் நீங்கள்? கொஞ்சம் கவலையோடு சிந்திக்கணும்! நானும் போய்விட்டேன் (என்றால்) அப்புறம் இதைப்பற்றி பேசுவதற்கு ஆள் எங்கே? யார் வருவார்? வந்தால் இவ்வளவுக்குக்கூட விட்டுக் கொண்டிருக்க மாட்டானே. அரசாங்கம் இவ்வளவு பேசவிட மாட்டானே. நானாக இருக்கிறதினாலே கொஞ்சம் சும்மா இருக்கிறான். இன்னொருவன் பேச ஆரம்பித்தால் ஒழித்துப் போடுகிறான். (4.11.1973)