அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?(29)

Uncategorized

சூரியன் நதியில் மூழ்க முடியுமா?

வித்யுத்கேசி என்னும் ராக்ஷசனின் மகன் சுகேசி. இவன் பிரகலாதனைப் போல் தெய்வபக்தியும், தர்மபுத்தியும் பெற்று இருந்தான். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து, அவரிடம் விண்ணில் பறக்கக்கூடிய நகரமும், பகைவரால் மரணம் ஏற்படாதவாறும், யாராலும் வெல்ல முடியாதவாறும் வரங்கள் பெற்றான்.

அந்தப் பறக்கும் நகரத்தின் உதவியால் எங்கும் பறந்து சென்று வந்த சுகேசி ஒரு சமயம் மகதநாட்டுக் காடுகளில் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களைக் கண்டு தரிசித்தான். அவர்களை வணங்கி இகபர லோகங்களில் நன்மையும், மகிழ்ச்சியும் அளிக்கவல்ல தர்மங்களைக் கூறுமாறு கேட்டான். அவர்களிடம் கேட்டறிந்தவாறு அகிம்சை, சத்தியம், திருடாமை, சாந்தம், தானம் ஆகிய பரம தர்மங்களுடன் நாட்டைத் தர்ம நியாயங்களின்படி ஆண்டுவந்தான். சூரியனும், சந்திரனும் அந்நகரைவிட்டு அகலாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.

இதனால் பகல், இரவு வேறுபாடின்றி எங்கும் குழப்பம் நிலவியது. இதனால் ஒளி விவகாரத்தில் சூரியன், சந்திரன்களிடையே தகராறும் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சூரியன் விண்ணிலிருந்து அந்த நகரத்தைக் கீழே வீழ்த்தினான். அதனால் கோபம் கொண்ட சிவபெருமான் சூரியனை நெற்றிக் கண்ணால் நோக்க, அவன் விண்ணிலிருந்து கீழே விழும் நிலையில் அவன் தேரில் இருந்த முனிவர்களும், தேவர்களும், மற்றும் தபோதனர்களான ரிஷிகள் வரண, அசி நதிகள் நடுவிலுள்ள வாரணாசியில் விழும் என்றனர்.

சூரியன் வரண, அசி நதிகளில் பலமுறை மூழ்கித் தாபத்தை தீர்த்துக் கொள்ள முயன்றான். ரதத்தில் இருந்த ரிஷிகள் பிரம்மாவிடம் முறையிட்டனர். சூரியன் இல்லாவிட்டால் காலமாற்றமே இருக்காது. அவன் சர்வகர்ம சாக்ஷி. எனவே அவனை மறுபடியும் ரதத்தில் அமரச் செய்யுமாறு வேண்டினர். கருணாமூர்த்தியான சிவபெருமான் அவர்கள் கோரியபடியே சூரியனைத் தூக்கித் தேரில் அமரச் செய்தார். பரமன் மூன்றாவது கண்ணால் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் இப்படியும், அப்படியும் சூரியன் ஆடுவானானான். அதனால் காசியில் சூரியனுக்கு லோலார்க்கன் (ஆடுபவன்) என்ற பெயர் ஏற்பட்டது. சுகேசியையும் அவன் நகரத்துடன் விண்ணில் நிறுத்தினார் என்கிறது இந்து மதம். சூரியன் ஒரு நெருப்புப் பந்து. 9 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்போதே இப்படி கொளுத்துகிறது. அப்படிப்பட்ட சூரியன் நதியில் மூழ்கியது. ஒரு நகரத்தில் சென்று தங்கியது என்பதைப் போன்ற மூடக் கருத்து இருக்க முடியுமா? பூமியைப் போல பல மடங்கு பெரியது சூரியன். அப்படிப்பட்ட சூரியன் நதியில் மூழ்க முடியுமா? இப்படிப்பட்ட மடமைக் கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

மனிதன் எருமைக்குப் பிறக்க முடியுமா?

ரம்பன், கரம்பன் என்ற அரக்கர்கள் சகோதரர்கள். அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. எனவே, இருவரும் தவம் செய்ய முனைந்தனர்.

கரம்பன் நீரினுள் தவம் செய்ய இந்திரனால் கொல்லப்பட்டான். இதைக் கேள்விப்பட்ட ரம்பன் கடுமையாகத் தவம் செய்யலானான். நெடுநாட்கள் ஆனதால் தன் தலையை வெட்டி அக்னியில் சேர்க்க முற்பட அக்கினி பகவான் அவன் முன் தோன்ற “ஒருவரைக் கொல்வது பாவம்; அதைவிடத் தற்கொலை மகாபாவம். உனக்கென்ன வேண்டும் கேள். நான் தருகிறேன்’’ என்றான். ரம்பன் “மூவுலகையும் வென்று ஆளத்தக்க ஒரு மகன் வேண்டும். அவன் மிக்க பலசாலியாகவும், மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாதவாறும் இருக்க வேண்டும். காற்றைப் போல் கடுகிச் செல்லக்கூடிய அஸ்திரங்களை எய்வதில் வல்லவனாகவும் இருக்க வேண்டும்’’ என்று வரம் கேட்க, அக்கினியும் அவ்வரத்தை அளித்தான்.

குபேரனுடைய தோழர்களாகிய யக்ஷர்களின் இருப்பிடத்திற்கு ரம்பன் சென்றான். அங்கு பெண் எருமை ஒன்றைக் கண்டு மோகித்து அதை மணந்து தன் இருப்பிடம் வந்தடைந்தான். இதனால் தானவர்கள் அவனை ஒதுக்கி வைத்தனர். எனவே, ரம்பன் தன் மனைவியுடன் யக்ஷர்கள் நாடடைந்தனர். அங்கு ரம்பன், பெண் எருமைக்கு ஓர் அழகிய மகன் பிறந்தான். அவன் பெயர் மகிஷாசுரன் (மகிஷா-எருமை).

மகிஷாசுரன் தாயாகிய பெண் எருமையை, மற்றொரு எருமை தாக்கியது. அதைக் காக்கச் சென்ற ரம்பன் எருமையால் கொல்லப்பட்டான். பெண் எருமையும் ரம்பனுடன் தீக்குளித்து இறந்தது. பிணங்கள் எரியும்போது வெளிப்பட்ட தீப்பிழம்பிலிருந்து ரக்தவிஜன் என்ற பயங்கர அரக்கன் தோன்றினான். அவன் மகிஷாசுரனைத் தன் தலைவனாக ஏற்று மற்றவர்களை எல்லாம் கொன்றழித்தான் என்கிறது இந்துமதம். மனிதனுக்கும் எருமைக்கும் மனிதன் பிறப்பானா? இது அறிவியலுக்கு முரண் அல்லவா? இப்படிக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையானதாகும்?

மலையின் உயரம் குறையுமா?

“ஒரு சமயம் நாரதர் விந்திய மலையிடம், மேரு மலை அதைவிட உயர்ந்தது என்று கூறிட, விந்தியமலை வானளாவ ஓங்கி விண்ணைத் தொட்டுக் கொண்டு சூரிய கதிரைத் தடைசெய்தது. சூரியன் அகஸ்தியரை அடைந்து இதற்கொரு நிவாரணம் அளிக்க வேண்டினான். அகஸ்தியர் முதியோன் வடிவில் விந்திய மலை எதிரில் தோன்றி தான் தீர்த்தமாடத் தென்திசை செல்லவிருப்பதாகவும், விந்திய மலையைத் தாண்டும் சக்தி தனக்கு இல்லை என்றும், எனவே தாழ்ந்து வழிவிட வேண்டினார். மற்றும் தான் திரும்பி வரும் வரை தாழ்ந்தே இருக்குமாறு வேண்ட மலை தாழ்ந்து வழிவிட்டது. பின்னர் அகஸ்தியர் திரும்பி வரவில்லை. தாழ்ந்த மலையும் உயரவில்லை. இவ்வாறு விந்திய மலையின் கர்வத்தை அகஸ்தியர் அடக்கினார்’’ என்று இந்துமதம் கூறுகிறது. மலையின் உயரத்தை மலையே குறைத்துக் கொள்வது என்பது மடமைக் கருத்தல்லவா? இப்படிக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படை என்பது வேடிக்கையல்லவா?

கலச நீரைக் குடித்தால் கருத்தரிக்குமா?

சுகுஸ்தன் வமிசத் தோன்றல் யுவனாச்வன். அவனுக்கு புத்திர பாக்கியம் இன்மையால் மகரிஷிகள் ஒரு புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஜபிக்கப்பட்ட தூயநீர் நிறைந்த கலசத்தை யாகவேதியின் நடுவே வைத்து உறங்கிவிட்டனர். அந்தத் தீர்த்தம் யுவனாச்வனின் மனைவி உட்கொள்வதற்காக வைக்கப்பட்டது.

ஆனால், அந்த இரவில் யுவனாச்வனுக்கு நீர் வேட்கை அதிகமாக அவன் அந்தக் கலச நிரின் விவரம் தெரியாமல் குடித்துவிட, அவன் வயிற்றில் கரு வளர, அந்தக் குழந்தை தன் வலக்கட்டை விரலால் அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவர அவன் மாண்டுவிட்டான். அதற்கு பாலூட்ட இந்திரன் தன் பவித்திர விரலை குழந்தையின் வாயில் வைக்க அதிலிருந்து பெருகிய அமிருதத்தைப் பருகி குழந்தை வளர்ந்து ‘மாந்தாதா’ என்ற பெயரில் உலகை ஆட்சி புரிந்தது என்று இந்துமதம் கூறுகிறது. வாயால் குடிக்கப்படும் எதுவும் இரைப்பைக்குச் செல்லும். கருப்பைக்குச் செல்லாது. மேலும் ஆணுக்கு கருப்பை இல்லை. அப்படியிருக்க கரு எப்படி உருவாகும்? இப்படி அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

வயதான கிழவன் மீண்டும் வாலிபனாக முடியுமா?

சசிபிந்து என்பவரின் பெண் இந்துமதியை மாந்தாதா மணந்து கொண்டு புருகுஸ்தன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற மூன்று பிள்ளைகளையும் பல பெண்களையும் பெற்றெடுத்தான்.

‘ரிக்’ வேதமறிந்த சௌபரி என்ற முனிவர் நீரில் பன்னிரண்டு ஆண்டு காலம் தவம் செய்து வந்தார். அப்போது, ஆங்கொரு மிகப்பெரிய மீன் அதன் குழந்தை, குட்டிகளுடன் விளையாடி மகிழ்வது கண்டு தானும் அவ்வாறு இல்லறத்தில் மகிழ்ச்சி கொள்ள விழைந்தார். அவர் தவத்தைவிட்டு வெளிவந்து, மாந்தாதாவை அணுகி அவருடைய பெண்களில் ஒருத்தியை தனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டினார்.

இந்த இக்கட்டான நிலையில் உபாயம் ஒன்றை அறிந்த மன்னன் சுயம்வர மூலமே பெண்கள் திருமணம் நடப்பதைச் சுட்டிக்காட்ட, முனிவர் தன்னை அந்தப்புரத்தில் விடுமாறும், அவன் பெண்களில் யார் அவரை மணக்க விரும்புகிறாளோ அவளைக் கொடுக்கவும், அப்படி யாருமே விரும்பவில்லையாயின் தான் அம்முயற்சியை விட்டு வெளியேறுவதாகவும் கூறினான். எனவே, முனிவரை அந்தப்புரம் அழைத்துச் செல்லுமாறு சேவகனிடம் கூறினான் மன்னன்.

முனிவரோ தன் உருவை ஓர் அழகிய இளைஞனாக மாற்றிக் கொள்ள, அரச குமாரிகள் அனைவருமே அவரை விரும்ப மாந்தாதா தன் புத்திரிகள் அனைவரையும் முனிவருக்குத் திருமணம் செய்து வைத்தான் என்று சொல்கிறது இந்துமதம். வயதான உடல் மேலும் முதிர்ச்சியடையுமே தவிர மீண்டும் இளமை வராது. இதுதான் அறிவியல். ஆனால், வயதான கிழவன் மீண்டும் வாலிபனானான் என்று கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்?

(சொடுக்குவோம்…)

– சிகரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *